இந்த பரபரப்பான லண்டன் மாநகரம் தனக்கு சரிப்படாது என்று முடிவுக்கு வந்துவிட்டது டிராகுலா பிரபு. அதனால்தான் மண் நிரப்பப்பட்ட தன்னுடைய கடைசிப் பெட்டியுடன் தப்பிக்க முயற்சி செய்கிறது.
அதனைத் தப்பிக்க விடக்கூடாது. எப்படியும் பின்தொடர வேண்டும். ஒரு மன நிறைவான விஷயம் என்னவென்றால் இப்போது அது பயணிக்கும் கப்பல் அத்தனை விரைவாக கரையை நெருங்கி விடாது. கப்பல் கரையை நெருங்கும்மட்டும் அதனால் தப்பித்துவிட முடியாது” என்றார் ஹென்சிங்.
டிரான்சில்வேனியாவுக்குத் திரும்பிச் செல்வதுதான் டிராகுலா பிரபுவின் நோக்கம் என்பதில் அவர்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அது டான்யூப் நதி வழியாகவா அல்லது கருங்கடல் வழியாகவா என்பதை அவர்களால் யூகிக்க முடியவில்லை.
முந்தைய இரவுப் பொழுதில் கருங்கடல் வழியாகப் பயணம் செய்யும் கப்பல்கள் எத்தனை புறப்பட்டுள்ளன என்பதை விசாரித்தனர்.
விசாரித்தபோது “சரினா காதரைன்’ என்ற ஒரேயொரு கப்பல் மட்டும் கருங்கடல் வழியாகப் பயணம் கிளம்பியுள்ளது என்ற தகவல் அவர்களுக்குக் கிடைத்தது.
அதில்தான் டிராகுலா பிரபு பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது உறுதியாயிற்று. அதனை மேலும் உறுதிப் படுத்திக் கொள்ள டூலிவார்ஃபை அடைந்து அங்கிருந்த துறைமுக அதிகாரிகளிடம் விசாரித்தனர்.
அவர்களிடம் பணத்தைக் கொடுத்து விசாரித்தபோது, முந்தைய நாள் மதியத்துக்குப் பிறகு உயரமான மெலிந்த மனிதன் ஜொலிக்கும் கண்கள், நீண்டு வளர்ந்த மூக்கு, பளபளக்கும் பற்களுடன் வந்திருந்தார். கறுப்பு உடை அணிந்திருந்தார் என்று கூறினர்.
பிரம்மாண்டமான பெட்டி ஒன்றை குதிரை வண்டியிலிருந்து பல கூலிக்காரர்களின் உதவியுடன் இறக்கி கப்பலில் ஏற்றினாராம்.
அந்தப் பெட்டியைக் கப்பலில் எங்கே வைப்பது என்பது தொடர்பாக கப்பல் கேப்டனிடம் நீண்ட வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டாராம். பின்னர் அவர் விருப்பப்படியே கேப்டன் ஒப்புக் கொண்டாராம்.
கப்பலின் கீழ்த்தளத்தில் பெட்டியைப் பத்திரப்படுத்தியிருந் ததைப் பார்த்தபின்தான் திருப்தியுடன் கப்பலின் மேல்தளத்திற்குச் சென்றாராம் அவர்.
பனிமூட்டம் காரணமாக அங்கு நின்றிருந்த மனிதரை அதன்பிறகு வேறு யாரும் பார்க்கவில்லையாம். அவர் காணாமல் போனதைப் பற்றி யாரும் பொருட்படுத்தியதாகவோ தேடியதாகவோ தெரியவில்லை.
டிராகுலா பிரபு ஏறித் தப்பிக்க முயன்ற சரினா காதரைன் என்ற கப்பல் தேம்ஸ் நதியைக் கடந்துவிட்ட செய்தி ஹென்சிங் மற்றும் நண்பர்களுக்குக் கிடைத்தது.
அந்தக் கப்பல் மிகுந்த விரைவாகப் பயணம் செய்தால்கூட குறைந்தபட்சம் வார்னாவை அடைய மூன்றுவார காலமாகும். அந்த டிராகுலா பிரபு என்னதான் சக்தியைப் பிரயோகப்படுத்தினாலும் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் வேண்டுமானால் முன்னதாகப் போய்ச் சேரமுடியும். ஆக எப்படிப் பார்த்தாலும் இரண்டு வார காலம் அவர்களுக்கு அனுகூலமாக இருந்தது.
“அந்தக் கப்பல் அங்கு போய்ச் சேர்வதற்கு ஒருநாள் முன்னதாக நாம் அங்கு சென்று சேர்வதுதான் நல்லது. மேலும் பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் நமக்குப் போதுமான கால அவகாசம் உள்ளது. எல்லாவிதமான ஆயுதங்களையும் கொண்டு செல்ல வேண்டும்.”
அப்போது க்வின்செ கூறினார்: “நாம் செல்லவிருக்கும் நாடு ஓநாய்கள் பூமி என்று கூறுகிறார்களே… அப்படியானால் வின்செஸ்டர் துப்பாக்கியை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.”
“மிகவும் சரி. அவ்வாறே செய்யலாம். எவ்வளவு சீக்கிரம் நம்மால் அங்கு போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போவதுதான் நல்லது என்பது என் கருத்து” என்றார் ஹென்சிங்.
அதற்கு மறுநாள் விடிகாலைப் பொழுதுக்கு முன்பாக மினாவை ஹென்சிங் மயக்கத்திலாழ்த்திய நிலையில் பல விவரங்கள் கிடைத்தன.
டிராகுலா பிரபு அவளிடம் ஏற்படுத்திய காயவடு இருக்கும் வரையில் பிரபுவின் கட்டளைப்படி நடக்க வேண்டியவள் அவள். அவள் மூலமாக எதிரிகளின் நடமாட்டத்தையும் நடவடிக்கைகளை யும் டிராகுலா பிரபுவினால் தெரிந்துகொள்ள முடியும்.
மறுநாளே வார்னாவுக்குப் பயணம் செல்லத் தீர்மானித்தனர்.
அப்போது மாரீஸ், “நாம் அங்கே போய் முதலில் என்ன செய்ய வேண்டும்” என்று சந்தேகம் கேட்டார்.
“அந்தக் கப்பலில் நாம் முதலில் நுழைவோம். அந்தப் பெட்டியை கண்டுபிடித்து அதன்மீது காட்டு ரோஜாவின் கொம்பை வைப்போம். அந்தக் கொம்பு அங்கு உள்ளவரை எந்த ஒன்றும் அதிலிருந்து வெளியேற முடியாது.” என்றார் ஹென்சிங்.
பயணத்திற்கான பொருட்கள் சிலவற்றை வாங்குவதற்காக அப்பொழுது ஹென்சிங் புறப்பட்டார்.
டிராகுலா வேட்டைக்காக மினா, ஹார்க்கர் உள்பட எல்லாரும் ஆயத்தமாகிவிட்டனர். பாரீஸ் நகருக்கு அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி இரவில் வந்து சேர்ந்துவிட்டனர்.
மறுநாள் காலை ஐந்து மணியளவில் அவர்கள் வார்னாவை அடைந்தனர். அங்கு ஓய்வு எடுக்கும் நேரத்தில் ஹென்சிங் திரும்பவும் மினாவை மயக்கத்தில் ஆழ்த்தினார்.
அந்தக் கப்பலிலிருந்து இறங்கி டிராகுலா பிரபு வேறு பாதையில் பயணம் செய்துகொண்டிருக்கும் தகவலை மினா மூலம் அறிந்தார். புரூத், செரீத் என்ற இரண்மு நதிகளில் ஏதோ ஒன்றின் மூலம் டிராகுலா பிரபு தனது கோட்டையை நோக்கிப் பயணம் செய்திருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.
மூடப்படாத படகில் டிராகுலா பிரபு பெட்டிக்குள் கிடப்பதாகத் தோன்றியது. பசுக்கள் மற்றும் கால்நடைகளின் குரல்கள் கேட்பதாக மினா குறிப்பிட்டதால் கரைப்பகுதியை அந்தப் படகு நெருங்கி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.
“டிராகுலா பிரபுவின் பயணப் பாதையைத் தெரிந்து கொண்டோம். பகல் நேரத்தில் தண்ணீரில் அந்த டிராகுலாவைப் பிடித்துவிட்டால் நமது வேலை சுலபமாகிவிடும். பெட்டியைச் சுமந்து செல்லும் படகில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வரும் என்ற காரணத்தால் படகிலிருந்து டிராகுலா பிரபு அத்தனை சீக்கிரம் வெளியே வரமாட்டார்.
படகோட்டிகளுக்கு விஷயம் தெரிந்தால் அவர்கள் பெட்டியை ஆற்றுக்குள் தள்ளிவிட்டுவிடுவார்கள். பெட்டி தண்ணீருக்குள் மூழ்கிவிட்டாலும் டிராகுலா பிரபு அழிந்துபோய்விட வேண்டியதுதான். எனவே அந்த டிராகுலா பெட்டியை விட்டு எந்தக் காரணம் கொண்டும் வெளியே வரமுடியாது” என்றார் ஹென்சிங்.
அதன்பிறகு யார் யார் என்ன பணி மேற்கொள்ள வேண்டும் என்பதைத் திட்டமிட்டனர்.
“ஜோனாதன் வேகமாகப் பயணம் செய்யும் நீராவிப் படகில் டிராகுலாவைப் பின்தொடரட்டும். மாரீஸும் செர்வாண்ட்டும் குதிரைகள் மீதேறி ஆற்றங்கரை ஓரமாகவே ரோந்து சுற்றி வரட்டும். நானும் மேடம் மினாவும் எதிரியின் பகுதிக்குள் நேரடியாகப் போய்விடுகிறோம்” என்றார் ஹென்சிங்.
சொன்னபடியே ஜோனாதன் செல்ல வேண்டிய நீராவிப்படகு வந்து சேர்ந்தது. மாரீஸும் டாக்டர் செர்வாண்ட்டும் பயணம் செய்யத் தேவையான குதிரைகளும் வந்து சேர்ந்தன.
ஹென்சிங்கும் மினாவும் வெரஸ்ட்ரா நகர் செல்லும் ரயிலில் புறப்படத் தயாராயினர். அங்கிருந்து குதிரை வண்டி அமர்த்தி பயணம் செய்யலாம் என முடிவெடுத்திருந்தனர்.
எல்லாரும் தேவையான ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர். புரூத் நதியில் ஜோனாதனும் க்வின்செயும் பயணம் செய்யும் நீராவிப் படகு விரைந்து கொண்டிருந்தது. நதியின் அந்தப் பகுதி மிகவும் ஆழமாக இருந்ததால் படகு முழு வேகத்தில் விரைந்து கொண்டிருந்தது.
ஹென்சிங் போர்கோ கணவாயை அடைந்திருந்தார். மினாவை மயக்கமுறச் செய்து அவர் அவ்வப்போது முடிந்தமட்டும் தகவல்களைத் தெரிந்து கொண்டே வந்தார்.
சீக்கிரமாகவே அவர்கள் கணவாயின் நுழைவுப்பகுதிக்கு வந்தனர். அப்போது அசாதாரணமான ஆவேசத்துடன் இடுங்கிய வழி ஒன்றை சுட்டிக்காட்டியபடி, “”இதுதான் வழி” என்று கூறினாள் மினா.
மினா காட்டிய திசையில் ஹென்சிங் பார்த்தார். அங்கே ஒரு பாதை இருந்தது. புக்கோவினாவிலிருந்து பிஸ்ட்ரீடஸ் செல்லும் முக்கியமான சாலை அல்ல அது.
பனிபடர்ந்து தெளிவற்று இருந்தபோதிலும் அந்தப் பாதையில் பழக்கமானதுபோல குதிரைகள் பயணம் செய்தன.
தொடரும்…