ரத்த காட்டேரி – 27

ரத்த காட்டேரி – 27

ஆயினும் ஜோனாதன் ஹார்க்கர் தன்னை சுதாரித்துக் கொண்டு சட்டென்று உருவிய தனது கூர்மையான பிச்சுவாவை அந்த உருவத்தை நோக்கி விசையுடன் வீசினார்.

ஆபத்தான அந்த வீச்சிலிருந்து மிக சாதாரணமாக டிராகுலா பிரபு தப்பித்துக் கொண்டார். அதற்குள் அந்தப் பிச்சுவாவை கைப்பற்றிக் கொண்ட ஜோனாதன் மறுபடியும் டிராகுலா பிரபுவை நோக்கி வீசினார்.

ஹென்சிங் இடக்கையில் பரிசுத்த ரொட்டி நிறைந்த பை மற்றும் சிலுவையை உயர்த்திக் காட்டியபடி டிராகுலா பிரபுவை நோக்கி முன்னேறினார். அதே சமயம் மற்றவர்களும் அதை நோக்கி மோதினர்.

டிராகுலா பிரபுவின் முகம் கடும் வெறுப்பையும் கோபத்தையும் கக்கியபடி கோரப் பிசாசின் முழு வடிவமாக நின்றது.

மறுவினாடி ஜோனாதனின் கைகளின் இடைவெளி வழியாக ஜன்னல் பக்கம் பாய்ந்தார்.

“என்னை ஒரேயடியாக விரட்டிவிடலாம் என்று நினைக்கிறீர்களா? நான் ஓய்வெடுப்பதற்கு ஒரு இடம்கூட இல்லாமல் ஆக்கிவிட்டதாக நீங்கள் ஆணவம் அடைகிறீர்களா? எனக்கு ஏராளமான இடங்கள் இருக்கின்றது. அவற்றைப் பல நூற்றாண்டுகளாகப் பராமரித்து வருகிறேன். நீங்கள் அனைவரும் சீக்கிரமே என்னுடையவர்களாகிவிடுவீர்கள்” என்று கூறிய டிராகுலா பிரபு சட்டென மறைந்து போனார்.

துரு ஏறிய அந்தக் கதவு இழுத்தடைக்கும் சத்தம் அவர்கள் எல்லாருக்கும் கேட்டது.

“வாருங்கள்! எல்லாரும் முடிந்தவரையில் சீக்கிரமாக அதைப் பின்தொடர வேண்டும். அது என்ன ஜம்பமாகப் பேசுகிறது பார்த்தீர்களா? அதற்கு இடம் தேவைப்படும் அவசரம்… அதுதான் அப்படித் தவிக்கிறது.”

ஹென்சிங் அவ்வாறு கூறியதும் அவர்கள் எல்லாரும் தாவி அந்த டிராகுலா பிரபுவைத் தொடர்ந்தார்கள்.

டிராகுலா பிரபு நுழைந்த தொழுவத்தின் கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. அவர்கள் அதைத் திறந்து கொண்டு உள்ளே போனபோது அங்கே பிரபுவின் அடையாளம் ஏதும் இல்லை.

ஜோனாதன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு மினா அவரைத்தட்டி உசுப்பினாள்.

தூக்கத்திலிருந்து படக்கென்று கண்ணை விழித்த ஜோனாதன், “”என்ன மினா… ஏன் என்னை எழுப்பினாய்? ஏன் பதட்டமாக இருக்கிறாய்?” என்று கேட்டார்.

“நான் உடனே ஹென்சிங்கைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. பொழுது விடிவதற்கு முன்னால் என்னை தூக்க மயக்கத்துக்கு உட்படுத்தினால் என்னால் சிலவற்றை கூறமுடியும் போல தோன்றுகிறது. நீங்கள் சீக்கிரமாக சென்று அவரை அழைத்து வருகிறீர்களா?” என்று மினா கூறியதைக் கேட்டு ஜோனாதன் ஆச்சர்யமடைந்தார்.

ஜோனாதன் ஹென்சிங் அறைக்குச் செல்வதற்காகக் கதவைத் திறந்தபோது அங்கே டாக்டர் செர்வாண்ட் அந்த அறைவாசலில் அமர்ந்து காவல் புரிந்து கொண்டிருந்தார். ஜோனாதனைப் பார்த்ததும் பதட்டத்துடன் எழுந்து, “”என்ன, ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டார்.

“”இல்லை. மினா உடனே ஹென்சிங்கைப் பார்க்க வேண்டுமென்று கூறுகிறாள்” என்று கூறினார். சில நிமிடங் களுக்குள் ஹென்சிங் மினா இருந்த அறைக்குள் வந்து சேர்ந்தார்.

மாரீசும் ஆர்தரும் சந்தேகத்துடன் வாசலிலேயே நின்று கொண்டனர்.

மினாவைப் பார்த்தவுடன் ஹென்சிங் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

“பார்த்தீர்களா, நமக்கு பழைய மினா கிடைத்துவிட்டாள்” என்று, உற்சாகத்துடன் ஹென்சிங் கூறினார்.

இப்போது மினாவின் பக்கம் திரும்பியவர், “”நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்னை அழைத்ததற்கு ஏதாவது ஒரு முக்கியமான காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.

“ஆமாம். நீங்கள் உடனடியாக என்னை மயக்க நிலைக்கு ஆட்படுத்த வேண்டும். பொழுது விடிவதற்கு முன்னாலேயே நீங்கள் இதனைச் செய்ய வேண்டும். அப்போதுதான் நான் பார்த்த பல விஷயங்களை சுதந்திரமாகப் பேச முடியும்” என்றாள் மினா.

சில நிமிடங்களில் ஹென்சிங் மினாவை மயக்க நிலைக்கு உட்படுத்தினார். அதன்பிறகு மிகவும் சன்னமான குரலில் அவளுடன் பேசத் தொடங்கினார்.

“நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்?”

“எனக்குத் தெரியாது. உறக்கத்தின்போது- குறிப்பாக எனக்கு இன்ன இடமென்று ஒன்றும் கிடையாது” என்று கூறிய மீனாவின் குரல் கரகரவென்றிருந்தது.

“உங்கள் கண்களுக்கு என்ன தட்டுப்படுகிறது என்பதைத் தெளிவாகக் கூறுங்கள்?”

“என்னைச் சுற்றிலும் ஒரே கும்மிருட்டுதான் இருக்கிறது. ஒன்றுமே தெரியவில்லை. என்னால் எதையுமே பார்க்க முடிய வில்லை” என்றாள் மினா.

“அப்படியானால் உங்கள் காதுகளில் என்ன சத்தம் கேட்கிறது?”

“தண்ணீரின் சலசலப்புச் சத்தம். அது ஒரு விசையோடு பாய்ந்து கொண்டிருக்கிறது. சின்னச் சின்ன அலைகள் துள்ளிக் குதிக்கின்றன. இந்தச் சத்தங்கள் என்னுடைய காதுகளில் தெளிவாகக் கேட்கிறது.”

“சரி, நீங்கள் சொல்லும் இடம் கப்பல்தானே… கப்பலில்தானே நீங்கள் இருக்கிறீர்கள்?” என்று ஹென்சிங் சந்தேகத்தினை உறுதிப்படுத்தக் கேட்டார்.

“ஆமாம்.”

“வேறு ஏதாவது சத்தம் கேட்கிறதா?”

“தலைக்குமேல் ஆட்கள் சத்தம் எழுப்பியபடி நடப்பதும் இங்குமங்கும் பரபரப்பாக ஓடுவதும் சங்கிலியைப் பிடித்து இழுப்பதும் நங்கூரத்தை உயர்த்தும் சத்தங்களும் கேட்கின்றன.”

அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மினாவின் திறந்த கண்கள் மெதுவாக மூடிக் கொண்டன.

ஹென்சிங் மினாவை தலையணையில் சாய்த்து உறங்கச் செய்துவிட்டு எழுந்தார்.

“நண்பர்களே! நாம் இனியும் ஒரு நிமிடத்தைகூட வீணாக்கக்கூடாது. மினா குறிப்பிடுவது ஒரு கப்பலைத்தான் என்றாலும், அந்தக் கப்பல் எங்கேயுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது. தப்பித்துச் செல்லும் பரபரப்பில் டிராகுலா பிரபு கப்பலில் ஏறிவிட்டது மட்டும் உறுதியாகிவிட்டது.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top