ரத்த காட்டேரி – 26

ரத்த காட்டேரி – 26

டிராகுலா பிரபு தன்னுடைய இடக்கையில் மினாவுடைய இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்திருந்தது. வலக்கையால் அவளது கழுத்தின் பின்பகுதியை இறுக்கிப் பிடித்திருந்தது.

மேலும் அவளைத் தன் மார்போடு சேர்த்து இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. அவளது இரவு உடை ரத்தத்தில் ஊறி நனைந்திருந்தது.

டிராகுலா பிரபுவின் மார்புப் பகுதியிலிருந்து ஓர் அருவிபோல வடிந்து கொண்டிருந்த ரத்தப் பாய்ச்சலைக் கண்டு அவர்கள் எல்லாரும் மிரண்டுபோய் விட்டனர்.

அந்த அறைக்குள் அவர்கள் நுழைந்துவிட்ட காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினார் டிராகுலா பிரபு. அவரது நெற்றியில் அந்தக் காயம் அப்படியே இருந்தது.

அவரது கண்கள் தீக்கங்குகளாக ஜொலித்துக் கொண்டிருந்தன. நீண்டு வெளுத்திருந்த அவரது மூக்குமுனைகள் நடுங்கித் துடித்தது. ரத்தம் சொட்டிக் கொண்டிருந்த அந்தப் பைசாச உதடுகளுக்குப் பின்னால் காட்டு விலங்கினுடையது போன்ற கோரைப் பற்கள் நெறிபடுவது தெரிந்தது.

அந்தக் கட்டிலை நோக்கித் தன்னுடைய இரையைத் தள்ளிவிட்டு பயங்கர சத்தத்துடன் உறுமியபடி அந்த உருவம் அவர்களை நோக்கிப் பாய்ந்தது.

ஹென்சிங் அதனை எதிர்பார்த்திருந்ததைப் போல சட்டென பரிசுத்தமான ரொட்டித் துண்டுகள் நிறைந்த பையை அதற்கு நேராக நீட்டினார்.

கல்லறைத் தோட்டத்தில் முன்பு லூசி செய்ததைப்போல டிராகுலா பிரபு சடக்கென்று பின்வாங்கி நின்றார்.

அவர்கள் யாவரும் சிலுவையுடன் தன்னை நோக்கி நெருங்குவதைப் பார்த்து டிராகுலா பிரபு பின்னோக்கி நகர்ந்து போய்க்கொண்டே இருந்தார்.

அப்போது கருமேகம் ஒன்று நிலாவை மறைத்தது போலிருந்தது. இவர்கள் விளக்கை ஏற்றுவதற்குள் தெளிவற்ற புகைப் படலமாக டிராகுலா பிரபு மறைந்து போனார்.

அதன்பின்னர் ஹென்சிங்கும் ஆர்தரும் மினாவிடம் சென்றபோது, காதுகள் செவிடாகிப்போகும் வண்ணம் பயங்கரமாக அவள் அலறினாள்.

டிராகுலா பிரபுவின் மிருகத்தனமான பிடியில் அகப்பட்டுக் கன்றிப்போன கைகளால் முகத்தைப் பொத்தியபடி கதறிக் கொண்டிருந்தாள். அந்த ரத்தக் காட்டேரி ஏற்படுத்திய மயக்க நிலையில் ஜோனாதனும் ஆழ்ந்திருந்தார்.

ஹென்சிங் துணி ஒன்றைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து ஈரத்துடன் அவர் உடலை துடைக்கத் தொடங்கினார்.

அதன்பின்னர் ஹென்சிங் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தார். அச்சமயம் ஜோனாதன் கண்விழித்தார். உடனே அவர் செர்வாண்ட்டைப் பார்த்து, “இங்கு என்ன நடந்தது என்று சொல்லுங்கள்! ” என்று திகைப்பிலிருந்து விடுபடாதவராய்க் கேட்டார்.

ஹென்சிங் அவரைப் பார்த்து, “திகைப்படைய வேண்டாம் ஹார்க்கர். நாங்கள் எல்லாம் இங்கு இருக்கும்போது எந்த ஒரு தீய சக்தியாலும் உங்களை நெருங்க முடியாது. இந்த இரவில் உங்கள் பாதுகாப்புக்கு எந்தக் குறையும் கிடையாது. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.

ஆனால் ஜோனாதன் அந்தப் பதிலால் திருப்தியடையவில்லை. என்ன நடந்தது என்று துருவிக் கொண்டேயிருந்தார். ஹென்சிங்கும் நடந்ததைக் கூறினார்.

அப்போதுதான் ஆர்தரும் க்வின்செயும் திரும்பவும் அறைக்குள் நுழைந்தனர். டிராகுலா பிரபுவைத் தேடி அந்த பங்களா முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பியிருந்தனர்.

“அது இங்கிருந்து எப்படியோ தப்பித்து விட்டது. நிச்சயம் இப்போது அதனுடைய இடத்தில்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். மிகக்குறுகிய நேரத்திற்குள் இங்கிருந்த குறிப்புகளையெல்லாம் மிச்சம் வைக்காமல் எரித்து சாம்பலாக்கிவிட்டது” என்று ஆர்தர் கூறினார்.

“இனிமேல் ஒரு வினாடி நேரத்தைக்கூட வீணாக்கக்கூடாது. அந்த டிராகுலாவை சீக்கிரம் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் அது நம் எல்லாரையும் ஒருவழி பண்ணிவிடும்” என்று க்வின்செ கூறியபோது அவரது முகம் பயத்தில் உறைந்து போயிருந்தது.

கார்பக்ஸுக்கு செல்வதென்று தீர்மானித்தனர். ஏற்கெனவே ஒருமுறை சென்று வந்ததால் இப்போது அதிக சிரமமில்லாமல் டிராகுலா பிரபுவின் அழுக்கும் தூசியும் படிந்த அசிங்கமான கட்டடத்துக்குள் நுழைய முடிந்தது.

அங்கிருந்த பிரார்த்தனை அறையின் இருட்டில் அவர்கள் ஏற்கெனவே பார்த்த பிரம்மாண்டமான பெட்டிகளுக்கு முன்பாக போய் நின்றார் ஹென்சிங்.

“இப்போது நாம் மிகவும் முக்கியமான ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியுள்ளது. அந்த ரத்தக் காட்டேரி நீசத்தனமான உபயோகத்துக்காக கொண்டு வந்துள்ள இந்த மண் பெட்டிகளை நாம் புனிதப் பொருள் மூலமாக பயனற்றதாக்க வேண்டும்” என்று கூறியவாறு ஸ்க்ரூ டிரைவரையும் சுத்தியலையும் கையில் எடுத்தார்.

சில நொடிகளில் அந்தப் பெட்டியின் மூடியைத் திறந்தபோது உள்ளே இருந்த மண்ணிலிருந்து பிண நாற்றம் கிளம்பி குடலைப் புரட்டியது.

தன்னுடைய பைக்குள் இருந்த ரொட்டித் துண்டுகளை எடுத்து அந்தப் பெட்டிக்குள் போட்டு பழையபடி மூடினார். அவ்வாறே எல்லா பெட்டிகளிலும் போட்டு மூடினார்.

“இதுபோலவே மீதமுள்ள பெட்டிகளிலும் செய்துவிட்டால் இன்று மதிய நேரத்துக்குள் மேடம் மினாவின் உற்சாகம் பழையபடி திரும்பிவிடும். அந்த சைத்தானின் பற்கள் பதிந்த அடையாளமும் மறைந்துவிடும்” என்று ஹென்சிங் கூறினார்.

மீதமுள்ள ஒன்பது பெட்டிகள் பிரஞ்சுத் தெருவில் உள்ள பழைய கட்டடத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருப்பதை அறிந்து, அதனையும் பயனற்றுப் போகச் செய்ய வேண்டுமென்பது அவர்களின் லட்சியமாக இருந்தது.

அவர்கள் அங்கு சென்றபோது, அந்த ஒன்பது பெட்டிகளில் ஒன்று காணாமல் போயிருந்தது. அதனைக் கண்டுபிடிப்பதுவரை அவர்களின் தேடுதல் ஓயப் போவதில்லை என்று முடிவு செய்தனர்.

அங்கிருந்த எட்டு பெட்டிகளிலும் புனிதமான ரொட்டித் துண்டுகளைப் போட்டு பழையபடி மூடினர். சிறிது தூரத்தில் மனிதர் எவரும் குடியிருக்காத ஒரு பழைய வீட்டைப் பார்த்தனர். அந்தக் கட்டடத்துக்கு எப்படியும் டிராகுலா வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

வெகுநேரம் காத்திருந்தபின் ஒரு கட்டத்தில் க்வின்செ ஒரு கையை உயர்த்திக்காட்டி கூர்ந்து கவனிக்குமாறு சைகை செய்தார்.

அச்சமயம் வெளிப்புற வாசல் கதவின் சாவி துவாரத்தில் சாவி ஒன்றை நுழைத்துத் திருகும் சத்தம் அவர்களுக்கு கேட்டது.

ஹென்சிங்கும் ஆர்தரும் கதவின் பின்புறப் பக்கவாட்டுகளில் மறைந்து நின்று கொண்டனர். டிராகுலா பிரபு கதவைத் திறந்த வுடன் கவனித்துக் கொள்வதற்கு ஹென்சிங்கும், வாசலைக் கடந்த பிறகு அதன் முன்னேற்றத்தை தடுக்க ஜோனாதனும் நியமிக்கப் பட்டனர்.

க்வின்செயும் ஆர்தரும் ஜன்னலை நோக்கி நகரத்தக்க விதத்தில் பார்வையில் படாமல் ஒதுங்கி நின்றனர். உள்ளே கேட்கத் தொடங்கிய ஒவ்வொரு காலடிச் சுவடும் ஒவ்வோர் இடி முழக்கமாகத் தோன்றியது.

அப்போது ஒரே பாய்ச்சலில் டிராகுலா பிரபு அறைக்குள் வந்து சேர்ந்தார். அவருக்கு நேராக ஒரு விரலைக்கூட நீட்ட ஒருவருக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.

ஒரு கறுஞ்சிறுத்தையின் வேகப் பாய்ச்சலையும் அந்த அறை முழுக்க ஒரு அமானுஷ்ய சக்தியையும் உணர்ந்தனர். முதலில் ஆர்தர்தான் வேகமாகப் பாய்ந்து சென்று கதவுக்கு முன்பாகப் போய் நின்று கொண்டார்.

டிராகுலா பிரபு அவர்களைக் கவனித்து ஒரு பயங்கர மிருகம்போல உறுமினார். கோபாவேசமான அந்த உறுமலைத் தொடர்ந்து கூர்மையான வெளுத்த கோரைப்பற்கள் வெளியே தென்பட்டன.

டிராகுலா பிரபு மீதான தாக்குதல் திட்டத்தை ஏற்கெனவே அவர்கள் தீர்மானித்திருந்ததால், குபீரென அவர்கள் யாவரும் டிராகுலாமீது பாய்ந்தனர்.

ஆனால் அவர்கள் யாவரையும் ஒரே வீச்சில் தூர வீசினார் டிராகுலா. அந்த அதிர்ச்சியில் தாங்கள் என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் அவர்கள் திணறினார்கள்.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top