செர்வாண்டிடம் ஒரு பூமாலையைக் கொடுத்தபடி, “இது வெள்ளைப் பூண்டின் பூக்களால் கோர்க்கப்பட்ட மாலை. நீங்கள் இதனைப் போட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.
இன்னும் சில பொருட்களை எடுத்து மற்றவர்களிடம் கொடுத்து அதன் பாதுகாப்பு மகத்துவம் பற்றிக் கூறினார்.
செர்வாண்ட் தனது பையிலிருந்த சாவிக் கொத்து ஒன்றை எடுத்து, அதில் இருந்த ஒவ்வொரு சாவியையும் கல்லறையின் கதவில் போட்டுத் திருப்பினார்.
அதில் கடைசிச் சாவி கதவில் பொருந்தியவுடன் கதவு திறந்து கொண்டது. அந்தக் கதவைத் திறந்தவுடன் எல்லாரும் ஒருவித நடுக்கத்தை உணர்ந்தனர். ஹென்சிங்தான் வழக்கம் போல முதன்முதலாக உள்ளே காலடி எடுத்து வைத்தார்.
“பிதாவே! உங்களின் திருநாமம் என்றென்றும் எங்களுக்குத் துணையாக இருக்கட்டும்” என்று நெஞ்சில் சிலுவை போட்டு பிரார்த்தனை செய்தபடி ஹென்சிங் கதவை இழுத்துச் சாற்றினார்.
பின்னர் தங்கள் கையிலிருந்த விளக்குகளை எரியவிட்டு அந்த அறைகள் ஒவ்வொன்றையும் சோதனையிடத் தொடங்கினர். அப்பகுதி முழுவதும் தூசுப்படலமாக இருந்தது.
அந்த அறையின் நடுவில் ஒரு மேஜை கிடந்தது. அதன்மேல் ஒரு சாவிக் கொத்தும் காணப்பட்டது.
“ஜோனாதன்… உங்களுக்கு இந்த இடத்தைப் பற்றி நன்றாகத் தெரியுமல்லவா? இந்த இடத்தை டிராகுலா பிரபுவுக்கு விலை பேசி வாங்கத்தானே டிராகுலா பிரபுவின் கோட்டைக்குப் பயணம் செய்தீர்கள்? பிரார்த்தனை அறைக்குச் செல்லும் வழி எதுவென்று காட்டுங்கள்” என்றார் ஹென்சிங்.
ஜோனாதனுக்கு அந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் மிகவும் பழக்கமாக இருந்தது. எனவே அவர் ஒரு வழிகாட்டியைப் போல முன்புறமாக நடக்கத் தொடங்கினார்.
பல வளைவுகளையும் திருப்பங்களையும் கடந்து கடைசியாக ஓக் மரத்தில் வடிவமைக்கப்பட்டு இரும்புச் சட்டங்கள் பொருத்திய வாசல் பகுதியை அடைந்தனர். “இதுதான் அந்தப் பகுதி” என்று ஜோனாதன் கூறினார்.
ஹென்சிங் அந்தக் கதவுக்கான சாவியை சிரமப்பட்டுக் கண்டுபிடித்துத் திறந்தார்.
அந்தக் கதவைத் திறந்த மாத்திரத்தில் கடுமையான துர்நாற்றத்தை உணர்ந்தனர். புனிதமான லட்சியத்திற்காக அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்ததால், அவர்களுக்கு அந்த துர்நாற்றத்தைத் தாங்கிக் கொள்ளும் வல்லமை இருந்தது.
“இங்கு எத்தனை பெட்டிகள் மீதமுள்ளதென முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பிறகு ஒவ்வொரு மூலை முடுக்கை யும் விடாமல் தேடி மற்ற பெட்டிகள் எங்கே என்பதைக் கண்டறிய வேண்டும்.”
அங்கே இருபத்தொன்பது பெட்டிகள் இருந்ததை எண்ணிக் கொண்டனர். ஜோனாதன் அந்த இருட்டு அறையில் எங்கோ டிராகுலா பிரபுவின் கோரமான முகத்தின் பயங்கரமும், ஜொலித்துக் கொண்டிருக்கும் உதடுகளும் தங்களைக் கவனித்துக் கொண்டிருப் பதைப் போன்று உணர்ந்தார்.
அந்தப் பயத்துடன் தன் கையிலிருந்த விளக்கை அந்தப் பக்கமாக நகர்த்தியபடி ஜோனாதன் அந்த வராந்தாவைப் பார்த்தார். அங்கு எதுவுமே தென்படவில்லை.
அப்போது அங்கிருந்த மூலைப் பகுதியை சோதித்துக் கொண்டே இருந்த மாரீஸ் ஓர் அலறலுடன் திடுக்கிட்டுப் பின்வாங்கியதை எல்லாரும் பார்த்தனர்.
நட்சத்திரங்களைப் போல ஜொலிக்கும் வெளிச்சம் ஒன்று அந்தப் பகுதியில் பளபளப்பது தென்பட்டது. சட்டென அங்கிருந்து கருமையான- பருமனான பெருச்சாளிகள் வெளிவரத் தொடங்கின. அவை ஒருவிதமான பயங்கர சத்தத்துடன் வெளிவந்தன.
அந்த சில நிமிடங்கள் எல்லாரும் அதிர்ந்துபோய் அசைவற்று நின்றபோது, செர்வாண்ட் வாசல் கதவை சட்டென்று திறந்து தன்னிடமுள்ள விசிலை எடுத்து காதைத் துளைக்கும் சத்தத்துடன் ஊதத் தொடங்கினார்.
அதன் எதிரொலியாக செர்வாண்ட் வீட்டிலிருந்து கண்மூடித் திறப்பதற்குள் பிரம்மாண்டமான மூன்று வேட்டை நாய்கள் உரத்த குரைப்பொலியோடு பாய்ந்து வந்து மூன்று பக்கங்களிலும் நின்று கொண்டன.
சில நிமிடங்களுக்குள் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அறை முழுக்க அடைத்து நிற்பதுபோல பளபளப்பான கண்களால் அவை பயமுறுத்தின.
அதே சமயம் அந்தக் கதவைத் திறந்தபோது மூன்று நாய்களும் நாலாபுறமும் அந்த எலிக்கூட்டத்தின்மீது பாய்ந்து பிடுங்கத் தொடங்கிவிட்டன. சிறிது நேரத்திற்குள்ளேயே அந்த வேட்டை நாய்கள் அந்த எலிக்கூட்டத்தை கொன்று விரட்டியடித்து விட்டன.
அதனைப் பார்த்த பின்புதான் அங்கிருந்தவர்களுக்கு மூச்சு வந்தது. அத்துடன் இன்றைய தேடுதல் வேட்டையை நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
மறுநாள் ஹென்சிங்குக்கு டிராகுலா பிரபு அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேறவில்லை என்ற உண்மை எதிர்பாராத விதமாக தெரியவந்தது.
உடனே எல்லாரையும் அழைத்து, “அந்த ரத்தக்காட்டேரி இன்னும் அந்தக் கட்டிடத்திலேயேதான் இருக்கிறது. தாமதமின்றி பயங்கர ஆயுதங்களுடன் நாம் அங்கு செல்வோம்” என்று ஹென்சிங் கூறியதும் எல்லாரும் புறப்பட்டனர்.
எல்லாருடைய பயமும் உச்சத்தை எட்டியிருந்தது- அந்நேரத்தில். ஹென்சிங் திரும்பவும் எல்லாருக்கும் எச்சரிக்கை செய்தார். “நாம் போரிடப் போவது சாதாரண எதிரியிடம் இல்லை. எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.”
ஜோனாதனை உடனே அழைத்துவரும்படி ஹென்சிங் கூறியதால் மற்றவர்கள் அவருடைய படுக்கை அறைக்குச் சென்று கதவைத் தட்டினர்.
எத்தனைமுறை தட்டியும் கதவு திறக்காததால் எல்லாரும் சேர்ந்து கதவில் மோதி முட்டித் தள்ளினர். தாழ்ப்பாள் பெயர்ந்து கதவு பெரும் சத்தத்துடன் விழுந்தது.
அங்கே அவர்கள் கண்ட கோரக்காட்சி எல்லாரையும் நடுங்கச் செய்தது. ஜன்னலுக்கு அருகிலிருந்த கட்டிலில் ஜோனாதன் ஹார்க்கர் வெளிறிய முகத்துடன் – பயந்து மிரண்டதால் துருத்தி நிற்கும் கண்களுடன் ஏதோ ஒரு மயக்கத்தில் ஆழ்ந்திருப்பதுபோல கிடந்தார்.
கட்டிலின் கோடியில் முழந்தாழிட்டு – கட்டிலின் பக்கவாட் டில் கைகளை ஊன்றிப் பின்புறமாக வளைந்து வெளிப்புறத்தைப் பார்த்தவாறு கிடந்த உருவம் மினாவுடையது.
அவளுக்கு அருகில் கறுப்பு உடையில் மொத்த உடலையும் மூடியிருந்த உயரமான மெலிந்த மனித வடிவம் ஒன்று நின்று கொண்டிருந்தது.
அவர்கள் எல்லாரும் அந்த உருவத்தைக் கூர்ந்தபோது அது டிராகுலா பிரபுதான் என்பது தெரியவந்தது.
தொடரும்…