ஆம்; உண்மைதான். நம்முடைய ஜோனாதன் ஹார்க்கர் டிராகுலா பிரபுவோடு சில காலம் தங்கியிருந்தவர். அது உணவு அருந்துவதை ஒருபோதும் அவர் பார்த்ததில்லை. முகம் பார்க்கும் கண்ணாடியில் அதன் உருவம் தெரியாது.
திடும்மென்று ஒரு ஓநாயாகவோ அல்லது வௌவாலாகவோ அதனால் சுலபத்தில் மாற முடியும். ஏன் திடும்மென்று பனிமூட்ட மாகவோ நிலாவில் ஒரு பனித்துளியாகவோ மாறமுடியும். ஒரு தலைமுடி கடக்க முடியாத இடைவெளியில்கூட அதனால் கடந்து செல்ல முடியும்.
ஆனால் இவ்வளவெல்லாம் செய்ய முடிந்தாலும் சில விஷயங்களில் மிகவும் பலவீனமானது என்பதையும் சொல்லியாக வேண்டும். விரும்பும் எந்த இடத்திலும் அதனால் தானாக நுழைந்துவிட முடியாது.
யாராவது ஒருவரால் ஒருமுறையாவது அழைத்து வரப்பட்டால் மட்டுமே நுழைய முடியும். அதன்பிறகு எப்போது வேண்டுமானாலும் நுழைந்துவிடும்.
சூரியன் உதித்துவிட்டால் இந்த ரத்தக் காட்டேரியின் தைரியம் யாவும் பறந்துபோய்விடும். நடுமதியம், சூரியோதய வேளை, அஸ்தமன வேலை ஆகிய நேரத்தில் மட்டும் இதனால் உருமாற முடியும்.
அதே போல சிலுவை போன்ற புனிதமான ஒரு பொருளுக்கு முன்பாக அதனால் நிற்க முடியாது. காட்டு ரோஜா செடியின் கிளைகளை அதன் சவப்பெட்டி மீது வைத்தால் அதன்பிறகு அதனால் அசைய முடியாது.
பிரார்த்தனை செய்து மந்திரம் சொல்லிப் பரிசுத்தம் செய்த வெடிகுண்டு ஒன்று அதன் உடலைத் துளைத்தால் அது மரண மடைந்துவிடும். அதே போல பிரார்த்தனையால் மந்திரிக்கப்பட்ட மரத்தாலான ஈட்டி ஒன்றை அதன் மார்பில் பதித்தாலும் அதே முடிவுதான்.
அந்த மனிதப் பிசாசை மட்டும் நாம் கண்டுபிடித்துவிட்டால் அதன் சவப்பெட்டியிலேயே வைத்து அடக்கம் செய்துவிட முடியும்.
இந்த டிராகுலா பிரபு காட்டேரியைப் பற்றி புடாபெஸ்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் என் நண்பர் ஒருவர் மூலமாக சில கூடுதல் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன்” என்று கூறி ஹென்சிங் நிறுத்தியபோது, அது என்ன என்ற ஆர்வம் முன்னாலிருந்த எல்லார் முகத்திலும் பளிச்சென வெளிச்சமிட்டது.
ஹென்சிங் மீண்டும் தொடர்ந்தார். “”வோய்வோஸ் டிராகுலா என்ற பிரபுதான் இது. துருக்கி நாட்டின் எல்லையில் அவர்களுடன் போர் புரிந்த புகழ் பெற்ற பிரபுதான் இவர். உயிரோடு இருக்கும் போதே இவர் சாதாரணமான மனிதரில்லை. டிராகுலா பிரபுவின் வம்சம் மிகவும் புகழ் பெற்றது.
அவரது வம்சாவழியினர் மந்திர சித்துக்களும் அற்புத வல்லமையும் பெற்றவர்கள். அவர்களில் ஒரு சிலர் ஹெர்மன்ஸ்டாடு நதிக்கு அப்பாலுள்ள மலைப்பகுதிகளுக்குச் சென்று சைத்தானின் அருள் பெறுவதற்காக துர்பூசைகள் பலவும் செய்தார்களாம்.
பழமையான நூல்களில் இந்த டிராகுலா பிரபுவை ரத்ததாகம் கொண்ட பிசாசு என்றும் ரத்தம் குடிக்கும் வௌவால் என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது.
சரி, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்போம். ஜோனாதன் ஹார்க்கர் சொன்ன தகவல்படி, டிராகுலா பிரபு கோட்டையிலிருந்து மண் நிறைக்கப்பட்ட சுமார் ஐம்பது பெட்டிகள் வீட்ஸ்பி நகரை அடைந்திருக்கின்றன. அவையத் தனையும் கார்ஃபாக்ஸ் மாளிகைக்குக் கொண்டு செல்லப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன.
அந்தப் பெட்டிகளில் சிலவற்றை அங்கிருந்து அகற்றியிருப்பது தெரிகிறது. அந்த மீதமுள்ள பெட்டிகள் எங்கே இருக்கின்றன என்பதை விசாரணை செய்ய வேண்டும்.”
ஹென்சிங் அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும்போது திடும் மென்று வீட்டுக்கு வெளியே கைத் துப்பாக்கியால் யாரோ சுடும் சத்தம் கேட்டது.
கண்ணாடி ஜன்னல் ஒன்று துப்பாக்கி குண்டு பாய்ந்து உடைந்து சிதறியது. அந்த சத்தத்தில் எல்லாரும் மிரண்டுபோய் துள்ளி எழுந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் வெளியே இருந்த மிஸ்டர் மாரீஸ் உள்ளே வந்தார்.
இவ்வளவு நேரம் ஹென்சிங் பேசுவதை எல்லாருடனும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த மிஸ்டர் மாரீஸ் எப்போது அந்த இடத்தைவிட்டுப் போனார் என்பதையே யாரும் கவனிக்கவில்லை.
“சாரி… எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும்போது பெரிய வௌவால் ஒன்று இங்கேயிருந்த ஜன்னல் சட்டத்தில் வந்து அமர்ந்ததைப் பார்த்தேன். எந்த சப்தத்தையும் எழுப்பாமல் அது அங்கு அமர்ந்தது. எனக்கு வௌவால் என்றால் பயம். அதுதான் வெளியில் போய் வௌவாலைச் சுட்டேன்” என்றார் மாரீஸ்.
“நீங்கள் அதைக் காயப்படுத்தினீர்களா” என்று ஹென்சிங் கேட்டார்.
“காயம் பட்டதாகத் தெரியவில்லை. அது தொலைவிலுள்ள காட்டுப்பகுதியை நோக்கிப் பறந்து சென்றதைப் பார்த்தேன்” என்றார்.
அதன்பிறகு ஹென்சிங் அதைப்பற்றி ஏதும் கேட்காமல் தொடர்ந்து பேசினார்.
“லண்டனுக்கு டிராகுலா பிரபு கொண்டு வந்த பெட்டிகள் ஒவ்வொன்றையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். டிராகுலா பிரபுவின் ரகசியமான இடத்தைக் கண்டுபிடித்து அங்கேயே அந்த மண்ணை செயலற்றதாக்க வேண்டும்.
அந்தக் காட்டேரி இனிமேல் அந்த இடத்திற்கு அபயம் தேடிவர முடியாதபடி செய்ய வேண்டும். கடைசியில் அதன் மனித வடிவத்தினைக் கண்டுபிடித்து மதியத்திற்கும் மாலை நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில், அது மிகவும் சோர்வாக இருக்கும்போது நாம் அழித்துவிடலாம்.”
மறுநாள் டிராகுலா பிரபுவின் இருப்பிடத்தை எப்படியும் கண்டுபிடித்தாக வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர்கள் கிளம்பினர்.
“அந்தப் பழைய கட்டிடத்தில் எலித் தொல்லை அதிகம். ஆனாலும் அதற்கு என்னிடம் ஒரு மாற்று வழி இருக்கிறது” என்று விசில் ஒன்றை எடுத்துக் காட்டினார் ஹென்சிங்.
அவர்கள் அனைவரும் வெளிமதிலைத் தாண்டிக் குதித்து உள்ளே நடந்தனர். அந்தப் பகுதியில் நிலவின் வெளிச்சம் பரவியிருந்தது.
அந்தக் கட்டிடத்தின் திண்ணைப் பகுதியைக் கடந்ததும் ஹென்சிங் தனது பையிலிருந்து சில பொருட்களை வெளியே எடுத்து வரிசையாக வைத்தார்.
அப்போது ஹென்சிங் அவர்களைப் பார்த்து, “நாம் ஒரு மிகப்பெரிய ஆபத்தான பயணத்தில் இறங்கியிருக்கிறோம். நமது எதிரி ஆவி வடிவமானது மட்டுமல்ல; அதற்கு இருபது மனிதர்களின் பலம் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நம் அத்தனை பேருடைய குரல்வளைகளையும் கடித்துக் குதற அதற்கு சில நிமிடங்களே போதுமானது. ஆனாலும் நம்முடைய தைரியமும் ஒற்றுமையும் நம்மை வெல்ல வைக்கும். நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சியைதான் மேற்கொள்ளலாமே தவிர எதிர்த்துத் தாக்க முடியாது” என்று கூறியபடியே தனது பையிலிருந்து வெள்ளியாலான சிலுவை ஒன்றை எடுத்து ஜோனாதனிடம் கொடுத்தார்.
தொடரும்…