இதோ, இந்தக் கட்டுத்தறியை உங்களின் இடக்கையால் பற்றிக்கொண்டு அவள் இதயத்திற்கு நேர்மேலாக இதன் முனை பொருந்துமாறு சரியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். வலது கையால் மரச் சுத்தியலை எடுத்துக் கொண்டு தயாராகுங்கள். நாங்கள் பிரார்த் தனை செய்யப் போகிறோம். அப்போது கடவுளை தியானித்தபடி இந்தக் கட்டுத்தறியை அவளின் மார்பில் அடித்து இறக்குங்கள்.
அத்துடன் அந்தக் காட்டேரி அவளிடமிருந்து விடுபடுவதுடன், லூசியின் ஆத்மா என்றென்றைக்கும் சாந்தி யடைந்துவிடும்.”
ஹென்சிங் கூறியபடியே ஆர்தர் லூசியின் இதயத்தில் அந்தக் கட்டுத்தறியை அடித்து இறக்கத் தயாரானபோது அவரது கைகள் சிறிதும் நடுங்கவில்லை.
ஹென்சிங் பிரார்த்தனையில் ஈடுபட்டபோது ஆர்தரின் கையிலிருந்த மரக்கொம்பின் கூர்மையான பகுதி லூசியின் இதயப் பகுதியில் படிந்தது. ஆர்தர் ஒருவித ஆவேசத்துடன் மரச் சுத்தியலை ஓங்கி ஓங்கி அடித்தார்.
அப்போது பெட்டிக்குள் கிடந்த லூசியின் கோரமான உருவம் தாங்க முடியாத வேதனையில் துடிப்பதுபோல நெளிந்து புரண்டது. அவளது உதடுகளிலிருந்து மிகவும் கடுமையான வேதனைக் குரல் உயர்ந்து ஒலித்தபோது அந்த பயங்கரமான ஓலம் அந்த மயானப்பகுதி முழுவதும் எதிரொலிப்பதாகத் தோன்றியது. அவளது உடல் நடுநடுங்கி நெளிந்து துடித்தது.
அவளது கூர்மையான பற்களே அவளின் உதடுகளை கடித்துக் கிழித்தன. ஆர்தரின் வலது கையிலிருந்த மரச்சுத்தியல் மேலும் மேலும் கட்டுத்தறிமீது விசையுடன் பதிந்து கொண்டிருந்தது.
திடும்மென்று ஒரு விநாடியில் பிளக்கப்பட்ட அவளது இதயத்திலிருந்து இளஞ்சூடான ரத்தம் நீரூற்றுபோல பீய்ச்சி யடித்தது.
அத்துடன் அவளது பிண உடலில் அசைவுகள் படிப்படியாகக் குறைந்து, முகத்தின் தசைகள் இழுபடும் வேகமும் குறைந்தது. கடைசியாக அனைத்து அசைவுகளும் சுத்தமாக நின்றுவிட்டன.
மரச்சுத்தியல் ஒருவித விசையோடு தொடர்ந்து விழுந்தபோது ஆர்தரும் பின்னோக்கிச் சரிந்து விழுந்தார்.
அவருடைய எல்லையற்ற மன வேதனை அவருடைய முகத்தில் தென்பட்டது. அன்புக்குரியவளின் இதயத்தைக் கூர்மையான மரக்கட்டையால் பிளக்கக்கூடிய துயர நிலை வேறு யாருக்கும் நேர்ந்திருக்காது.
சிறிது நேரத்தில் மயக்கத்திலிருந்து மீண்டெழுந்தவரைப்போல எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியபடி எழுந்த ஆர்தரின் முகத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் தென்பட்டது.
எல்லாருடைய கண்களும் சவப் பெட்டியை நேராகப் பார்த்தன. இதுவரை பயத்துடனும் வெறுப்புடனும் மட்டுமே பார்க்க முடிந்த லூசியின் பிசாசு முகம் மாறி எல்லாரும் நேசித்த களங்கமற்ற ஒரு பெண்ணின் முகமாக இப்போது தென்பட்டாள்.
ஆத்ம சாந்தியடைந்த அனுபவம் அந்த முகத்தில் அப்போது தென்பட்டது.
“ஆர்தர்! உங்கள் அன்புக்குரிய காதலியை இப்போது தாங்கள் தாராளமாக முத்தமிட்டுக் கொள்ளலாம். அவள் இறப்பதற்கு முன்பு இருந்த மாதிரியே இப்போது இருக்கிறாள். ரத்தக் காட்டேரியாக இருந்த லூசி நிரந்தரமாக இவளை விட்டுப் போய்விட்டாள். கடவுளின் விருப்பப்படி இயல்பான மரணத்தால் மறைந்த சாதாரண மனிதப் பெண்ணாக இப்போது இருக்கிறாள்.”
ஹென்சிங் சொல்லி முடித்ததும் ஆர்தர் ஆவலுடன் குனிந்து லூசியை முத்தமிட்டார்.
அதன்பின்னர் மற்றவர்களைப் போகச் சொல்லிவிட்டு செர்வாண்டும் ஹென்சிங்கும் லூசியின் இதயத்தில் அடித்து இறக்கப்பட்ட கட்டுத்தறியின் உடம்புக்கு மேல் தென்பட்ட பகுதியை அறுத்து எடுத்தனர்.
மற்றபகுதி அடித்து இறக்கிய நிலையில் அப்படியே இருந்தது. பின்னர் அவளின் தலையை வெட்டி அகற்றினர்.
அவளுடைய வாய்ப்பகுதியில் வெள்ளைப் பூண்டைத் திணித்தனர். சவப் பெட்டியை ஏற்கெனவே இருந்தது போல ஆணியடித்து இறுக்கிய பின்பு, கல்லறையைவிட்டு வெளியேறினர்.
நிரந்தரமான பூட்டு ஒன்றினை அந்தக் கல்லறை வாசலில் பூட்டினர்.
கல்லறையைவிட்டு வெளியே வந்த ஹென்சிங், “நண்பர்களே, ஒரு பெரிய பணி முடிந்து விட்டது. ஆனால் இந்தக் கொடுமையான அனுபவங்களுக்கெல்லாம் காரணமான அந்த பயங்கர ரத்தக் காட்டேரியாகிய டிராகுலா பிரபுவைக் கண்டுபிடித்து அதை ஒழிக்க வேண்டும். இதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை” என்றார்.
அவர்கள் நிச்சயமாக தாங்கள் ஒத்துழைப்பதாக வாக்குறுதி தந்தனர்.
“இன்னும் இரண்டு நாட்கள் சென்று என்னுடைய வீட்டுக்கு வாருங்கள். உங்களுக்குப் புதிதாக சிலரை அங்கே நான் அறிமுகப் படுத்துகிறேன். அதன்பிறகு ஒட்டுமொத்தமாக சேர்ந்து நாம் வேட்டையைத் தொடங்குவோம்” என்றார் ஹென்சிங்.
அவர் குறிப்பிட்ட நாளில் அவரது வீட்டுக்கு செர்வாண்ட்டும் ஆர்தரும் க்வின்செ என்பவரும் சென்றனர்.
டிராகுலா கோட்டையில் ஜோனாதன் ஹார்க்கருக்கு நிகழ்ந்த அத்தனை அனுபவங்களையும் மினா ஹார்க்கர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாள்.
அப்போது ஹென்சிங்தான் பேசத் தொடங்கினார்.
“அந்த பயங்கரமான மனித வடிவத்தின் வரலாற்றையும் நீங்கள் தெரிந்து கொண்டால்தான் அதன்பின்னர் நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும்.
ரத்தக் காட்டேரிகள் ஒரு முறை கடிப்பதால் மட்டும் எவரும் மரணமடைவதில்லை. அதன் காரணமாக அவற்றுக்கு தைரியம் ஏற்பட்டுவிடுகிறது. திரும்பத் திரும்ப அந்தத் தீய செயலில் ஈடுபடுகின்றன. நமக்கு பிரச்சினை ஏற்படுத்தியுள்ள இந்த ரத்தக் காட்டேரியானது இருபது மனிதர்களின் வலுவைக் கொண்டது.
மேலும் அவை மனிதர்களைவிட பத்து மடங்கு தந்திரம் உடையது. தலைமுறை தலைமுறையாக அந்த அறிவும் அதற்கு வளர்ந்து கொண்டே போகிறது. அவற்றிடம் ஏராளமான கெட்ட ஆவிகளின் தன்மையும் உண்டு. எல்லா ஆவிகளையும் கட்டுப்படுத்தும் – ஆட்டிப்படைக்கும் திறமையும் உண்டு.
இந்தக் காட்டேரிகளுக்கு எலி, பாம்பு, ஆந்தை, வௌவால், புழுக்கள், நரிகள், ஓநாய் போன்றவை அடிமைகள். தன்னுடைய உருவத்தை எந்த அளவுக்கும் பெரிதாக்கவோ சிறிதாக்கவோ முடியும். மின்னல்போல மறையவும் சூனியப் பகுதியில் திடீரெனத் தோன்றவும் இவற்றால் முடியும்.”
ஜோனாதன் ஹார்க்கர் செர்வாண்ட்டின் கைகளைப் பற்றினார். பின்பு ஹென்சிங்கிடம், “தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பணியில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.
டிராகுலா பிரபுவுக்கு எதிரான வேட்டை தொடங்குவதன் சபதம் அங்கே மேற்கொள்ளப்பட்டது.
“முதலில் நாம் டிராகுலா பிரபுவின் வல்லமை குறித்து ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள வேண்டும். கால ஓட்டத்தில் மரணமடையாமல் அழிவற்று உயிர் வாழ்வது அந்தப் பிசாசின் நிலை. உயிருடன் இருப்பவர்களின் ரத்தத்தைக் குடித்து வலுப் பெற்று வருகிறது. புதிய ரத்தத்தைப் பருகப் பருக இளமையடையும். ரத்தத்தின் அளவையொட்டி அதனிடம் அசாதாரண தன்மைகள் ஏற்படும். உணவு அருந்தாமல் வாழ்வது அதன் இயல்பு.
தொடரும்…