பிசாசின் அந்தக் குரூரக் கவர்ச்சியில் ஆர்தரைப் பொறுத்தமட்டில் ஒரு மயக்கத்துக்கு ஆட்பட்டிருந்தார்.
ஆர்தரும் தன் கைகளை அவளுக்கு நேராக நீட்டினார். அந்தப் பிசாசு அவரது கைகளைப் பற்றுவதற்கு முன்னோக்கிப் பாய்ந்தபோது, ஹென்சிங் அவர்களுக்கு நடுவே குதித்து தன்னிடமிருந்த தங்கச் சிலுவையை உயர்த்திக் காட்டினார்.
அதைப் பார்த்ததும் லூசி பயந்து பின்னோக்கி நகரத் தொடங்கினாள். பயமும் பயங்கரமும் நிறைந்த முகத்தில் கோபம் சிதற, கல்லறைக்குள் நுழைந்து தப்பித்துவிட ஓடினாள் லூசி.
கல்லறையின் வாசலுக்கு முன்னால்வரை வந்தவள் இரண்டடி தொலைவிலேயே நின்றுவிட்டாள். ஏதோ ஒன்று தடுத்து நிறுத்தியதுபோல அவள் திரும்பி நின்றபோது, அவள் முகத்தில் படர்ந்த நிலவொளி அவள் குரோதத்தின் உச்சத்தில் இருப்பதைப் பதிவு செய்தது.
அவளது தங்க நிற மேனி கருநீலமாக மாறியது. அரக்கத் தன்மை பொங்க அந்த விழிகளில் ஒரு நச்சுத் தீ கனன்றது.
ரொட்டித் துண்டு தூவப்பட்ட கல்லறைக்கும் உயர்த்திப் பிடித்துள்ள சிலுவைக்கும் நடுவில் லூசி திகைத்துப் போய் செய்வதறியாது நின்றாள்.
“ஆர்தர்! எனக்கான நேரம் இதுதான். தயவு செய்து என் வேலையைச் செய்ய எனக்கு அனுமதி தாருங்கள்” என்று ஹென்சிங் வேண்டிக் கொண்டபோது, “”தங்கள் விருப்பப்படியே எல்லாவற்றை யும் செய்து முடியுங்கள். என்னால் அதனைப் பார்க்க இயலாது” என்று ஆர்தரும் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
ஹென்சிங் லாந்தர் விளக்கைத் தாழ்த்தி அதனைத் தகர மூடியால் மூடினார். அவர் கல்லறைப் பக்கமாக நகர்ந்து அந்தப் பகுதியில் ஏற்கெனவே தூவியிருந்த ரொட்டித் துண்டுகளை அங்கிருந்து அகற்றத் தொடங்கினார்.
ஒரு கத்திமுனைகூடச் செலுத்த முடியாத கதவுகளின் இடைவெளி வழியாக அந்த லூசியின் பிரேத உடல் நுழைந்து செல்வதை எல்லாரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அந்த இடைவெளியில் ஹென்சிங் ரொட்டித் துண்டுகளைச் தேய்த்து அடைப்பதை அவர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் கவனித்தனர்.
“வாருங்கள். நாளை வருவோம். நிறைய வேலைகளை நாளைதான் செய்ய வேண்டியிருக்கிறது” என்று ஹென்சிங் கூறினார்.
ஹென்சிங் லூசி தூக்கி வந்த குழந்தையை எடுத்துக் கொண்டு, நேற்று மாதிரியே காவல்காரர் கண்ணில் படுவது போல இக்குழந்தையை விட்டுவிட்டு வருவோம் என்று கூற, அவ்வாறே செய்தனர்.
அதன்பிறகு நடந்து வந்துகொண்டிருந்தபோது ஆர்தரின் கவலை சூழ்ந்த முகத்தைப் பார்த்துவிட்டு, “நண்பரே, இப்போது நடக்கும் விஷயங்கள் கவலை தருவதாக தோன்றினாலும் பின்னால் நீங்கள் யோசித்துப் பார்க்கும்போது பெருமிதத்துக்குரிய காரியத்தை செய்து முடித்திருக்கிறோம் என்ற சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படும். நாளை இதே நேரம் எல்லாத் துயரங்களும் கரைந்து ஓடிவிடும் பாருங்கள். அதுவரை நீங்கள் எதுவும் வருத்தப்பட வேண்டாம்” என்று கூறினார்.
மறுநாள் சரியாக ஒன்றரை மணியானபோது மூவரும் கறுப்பு உடையணிந்து மாதா கோவிலை வந்தடைந்தனர்.
எப்பொழுதும் போலவே அவர்கள் மதில் சுவரைத் தாண்டி கல்லறைக்குள் வந்தனர். சவக்குழி தோண்டுபவர்களும் பாதிரியாரும் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டிருந்தனர்.
ஹென்சிங் எப்பொழுதும் கொண்டு வருவதைவிட பெரிய பையை இம்முறை எடுத்து வந்திருந்தார். அந்தப் பையும் மிகவும் கனமாகத் தெரிந்தது.
அந்த இடத்தில் வேறு யாருடைய காலடிச் சத்தமும் கேட்க வில்லை. ஹென்சிங்கைப் பின்தொடர்ந்து அவர்கள் கல்லறையை நெருங்கினர்.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அவர்கள் கதவை மூடினர். லாந்தர் விளக்கை ஹென்சிங் ஏற்றினார். மேலும் மெழுகுவர்த்திகள் இரண்டை எடுத்துப் பற்றவைத்து சவப் பெட்டியின் அருகில் வைத்தார்.
இப்போது அங்கே அவர்களுக்குத் தேவையான வெளிச்சம் கிடைத்தது. ஹென்சிங் அந்தச் சவப் பெட்டியின் மூடியை உயர்த்தியதும் அவர்கள் அனைவரும் அதற்குள் பாய்ந்து நோக்கினர்.
ஆர்தரின் தலைமுதல் கால்வரை ஒருவித நடுக்கம் பரவியது. அந்தப் பெட்டிக்குள் நீட்டி நிமிர்ந்து மரணத்தின் முழு வடிவமாகப் படுத்திருந்தாள் லூசி.
அதனைப் பார்த்துவிட்டு, “இது உண்மையிலேயே லூசியின் உடல்தானா அல்லது வேறு ஏதாவது ஒரு காட்டேரியின் வடிவமா” என்று ஆர்தர் கேட்டார்.
“இது அவளது உடம்புதான். ஆனால் வேறொரு முறையில் பார்த்தால் அவளது உடம்பல்ல இது. சிறிது நேரத்திற்குப் பின்னர் இதனுடைய உண்மைத் தன்மையினை நான் காட்டுகிறேன்” என்று கூறிவிட்டு வழக்கம்போல் பையிலிருந்து சடங்குப் பொருட்களை வரிசைக் கிரமமாக எடுக்க ஆரம்பித்துவிட்டார் ஹென்சிங்.
இரும்புத்துண்டை முதலில் எடுத்தார். அதனைப் பற்றவைத்து இணைப்பதற்கான தூளையும் ஈயக் கட்டியையும் எண்ணெய் விளக்கு ஒன்றையும் எடுத்தார்.
அதன்பின்னர் அறுவை சிகிச்சைக்கான கத்திகளையும் பிற பொருள்களையும் எடுத்தார். மூன்றடி நீளம் கொண்ட மரக்கட்டையிலான ஆப்பு ஒன்றையும் எடுத்து வைத்தார்.
அவருக்கு முன் இருந்த அந்த இரும்புத் தண்டின் முனை மிகவும் கூர்மையாக இருந்தது. அதனருகில் பிரம்பு ஒன்றையும் எடுத்து வைத்தார்.
எல்லாரும் ஹென்சிங் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தபோது, “நமக்கு முன்னால் வாழ்ந்த முன்னோரின் அனுபவம் மற்றும் அறிவால் அவர்கள் புரிந்துகொண்ட ரத்தப் பிசாசுகளைக் குறித்துதான் நான் சொல்ல வேண்டியிருக்கிறது.
இறந்தும் இறவாத ரத்தக் காட்டேரியின் அமானுஷ்ய சக்தி பற்றி சில வார்த்தையைக் கூறிவிட்டு என்னுடைய பணியைத் துவங்கலாமென்று நினைக்கிறேன்” என்றார்.
அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கும் ஆவலில் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
“செத்துப் போன மனிதர்கள் ரத்தக் காட்டேரிகளாக மாறும்போது, அழிவற்ற தன்மை என்ற சாபமும் அவர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. அதற்குப் பிறகு அவர்களால் இறக்க முடியாது.
தலைமுறைகளைத் தாண்டிக் கொண்டு அந்த பயங்கரமானவை புதிய புதிய பரம்பரைகளை உருவாக்குகின்றன.
ரத்தக் காட்டேரிகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக உயிருடன் இருக்கும் தன் இனமக்களைப் பலியிட்டு அவர்களின் ரத்தத்தை குடிக்கின்றன. அந்தச் செயலுக்குப் பின்னர் அதற்கு பலியான உயிர்கள் ரத்தக் காட்டேரிகளாக மாறுகின்றன என்பதுவும் உண்மை.
ஆர்தர்! நேற்று லூசி விரும்பியபடி நீங்கள் கடைசி முத்தம் வழங்கியிருந்தால் நீங்களும் அவளைப்போலவே ஆகியிருப்பீர்கள். நீங்களும் அதன்பின் பல காட்டேரிகளை உருவாக்கியிருப்பீர்கள்.
லூசியின் மரணத்துக்குப் பிந்தைய ரத்தம் குடிக்கும் வாழ்க்கை இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது.
இந்த நிலைமையிலிருந்து அவளைக் கொன்று உண்மையான மரணத்துக்கு ஆளாக்கும் பட்சத்தில்தான் நாமெல்லாம் மிகவும் விரும்பும் அந்த மேன்மையான பெண்ணின் ஆன்மா விடுதலை அடையும். மரணத்துக்குப் பின்பு அவளுக்கு கிடைக்க வேண்டிய உரிய இடம் கிடைக்கும். ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கைதான் அவளை இந்த சாபத்திலிருந்து விடுவிப்பதற்கான கட்டுத்தறி அடிக்க வேண்டும்” என்று ஹென்சிங் கூறினார்.
ஆர்தர் தன்னுடைய உடம்பில் பரவியிருந்த நடுக்கத்தை மறைத்துக் கொண்டு, “நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்” என்றார்.
தொடரும்…