அவ்வாறு சொல்லி முடித்த ஹென்சிங் லாந்தர் விளக்கின்மீது கருமையான துணி ஒன்றைப் போட்டு மூடினார். அப்போது இருள் சூழ்ந்து ஒருவித பயங்கரம் ஏற்பட்டது போலிருந்தது.
“வாருங்கள். இனி நாம் வெளியே செல்வோம்” என்று கூறினார்.
எல்லாரும் அவரைப் பின்தொடர்ந்து கல்லறைக்கு வெளியே வந்தபோது ஹென்சிங் தன்னுடைய கைப்பையைத் திறந்து அதிலிருந்து ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வெள்ளைத் துணி ஒன்றில் முடிந்தார்.
பின்னர் இரண்டு கைகளிலும் வெண்மையான ஏதோ ஒரு பொருளை எடுத்தவர் அதை ரொட்டித் துண்டுகளுடன் போட்டுப் பிசைந்தார்.
கல்லறை வாசலிலிருந்து சவப் பெட்டிவரை அதனைத் தூவினார். மற்ற இருவரும் வியப்புடன் அதனைப் பார்த்தபடி விசாரித்தனர்.”அந்தப் பிசாசு இதற்குள் நுழைய முடியாதபடி கல்லறையை மூடுகிறேன்.”
ஆர்தருக்கு டாக்டரின் இச்செயலில் நம்பிக்கை இல்லை என்பதை அவரது முகமே காட்டிக் கொடுத்தது.
“பிசாசு நுழைய முடியாதபடி அப்படி நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று ஆர்தரிடமிருந்து கேள்வி புறப்பட்டது.
ஹென்சிங் தனது தொப்பியைத் தலையிலிருந்து சற்று உயர்த்திய பிறகு அவர்களிடம் மென்மையாகக் கூறினார்.
“பரிசுத்தமான திரு இதயம். இதை நான் ஆர்ம்ஸ்டர்டாமிலிருந்து கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு மிகவும் அதிகமான நம்பிக்கையளிக்கும் ஒரு பொருள்.”
கடவுளை நம்பாத ஆத்திகர்களைக்கூட திடுக்கிட வைக்கும் பதிலாக அது இருந்தது. மிகப் புனிதமானதும் நம்பிக்கை உள்ளதுமான அந்தப் பொருளைப் பயன்படுத்தி அவர் மேற்கொள்ளும் செயல் கண்டிப்பாக பலனளிக்கும் என்று அவர்கள் கருதியதால் அவர்களால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
அந்தக் கல்லறையைச் சுற்றிலும் அவர்களுக்கு எல்லையிட்டுக் கொடுத்த பகுதியில் ஒருவரையொருவர் காண முடியாதபடி மௌனமாக நின்று கொண்டனர்.
நீண்ட நேரமாக அந்தப் பகுதி இரவின் அமைதியில் ஆழ்ந்திருந்தது. அந்த சூனியத்தன்மை மூச்சைத் திணற வைத்தது.
ஹென்சிங் திடீரென்று தன் சுட்டுவிரலை உதடுகளில் பொருத்தி ஸ்… ஸ்… என்று சத்தம் எழுப்பிச் சிறிது தூரத்தில் யூக
லிப்டஸ் மரங்களுக்கு இடையில் வெண்மையான உருவம் ஒன்று நகர்வதைப் பார்த்தார்.
தெளிவற்ற மங்கலான உருவமாக இருந்தது அது. அந்த உருவம் தன்னுடைய மார்பில் கன்னங்கரேல் என்று ஏதோ ஒரு பொருளை இறுக்கிப் பிடித்திருந்தது.
திடீரென யாரோ பிடித்து நிறுத்தியது போல அந்த உருவம் சட்டென நின்றது. ஒருவித சந்தேகத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தது. சன்னமான நிலவின் வெளிச்சம் அப்போது கல்லறைப் பகுதியில் பரவியது.
கலைந்துபோன கருமையான கூந்தலை உடைய ஒரு பெண் பிணம் நடந்து செல்வது அவர்களுக்குத் தெரிந்தது. சுருண்ட முடி கொண்ட ஒரு அழகான குழந்தை ஒன்று அவளது மார்பில் கிடப்பதைப் புரிந்து கொண்டதும் அவர்களின் இதயங்கள் படபடக்க ஆரம்பித்துவிட்டன.
செர்வாண்ட்டையும் ஆர்தரையும் ஹென்சிங் கைவீசி முன்னெச்சரிக்கை செய்து அசையாது இருக்கும்படி செய்தார்.
திரும்பவும் அந்த உருவத்தைப் பார்த்தபோது அது முன்னோக்கி நடக்கத் தொடங்கியிருந்தது. அந்த முகத்தைப் பார்த்த அவர்களின் முகம் பனிக்கட்டியைப் போல சில்லிட்டுப் போனது.
லூசியின் முகம்தான் அது. ஆனால் அவளிடமிருந்த பெண்மை யின் மென்மை காணாமல் போய்விட்டிருந்தது.
இரக்கமற்ற கருங்கல்லைப் போல அந்த முகம் தோற்ற மளித்தது. மொத்தத்தில் அவளது முகம் விகாரமாக – மிருக வெறி தோன்ற காட்சியளித்தது.
இப்போது ஹென்சிங் வேகமாக முன்னோக்கி நடக்க, மற்றவர்களும் அவர் பின்னால் சென்றனர். கல்லறையின் வாசலுக்கு முன்பாக நான்கு பேரும் வரிசையாக நின்றனர்.
தனது லாந்தர் விளக்கில் போர்த்தியிருந்த கருப்புத்துணியை ஹென்சிங் அகற்றியபோது, அடர்த்தியான வெளிச்சம் லூசியின் முகத்தில் பதிந்தது.
அவளது உதடுகள் ரத்தச் சிவப்பில் பளபளப்பதையும், ரத்தமானது அவளது தாடை வழியாக வழிந்து கருஞ்சிவப்புக் கறை ஏற்படுத்தியிருப்பதையும் கவனித்தனர்.
பயத்தினால் எல்லாரும் உறைந்து போயிருந்தனர். ஆர்தரை ஹென்சிங் பாய்ந்து பிடித்திராவிட்டால் அவர் மயங்கிக் கீழே விழுந்திருப்பார்.
அந்தப் பெண் பிசாசு லூசி என்று சொல்வதற்கே பயமாக இருந்தது. அவர்கள் அனைவரையும் அங்கு ஒன்றாகப் பார்த்தபோது அந்தப் பிசாசும் திடுக்கிட்டுப் பின்வாங்கியது.
திடும்மென்று அந்தப் பிசாசை ஹென்சிங் பாய்ந்து பிடித்த போது, பூனையிடமிருந்து கிளம்புவது போன்ற ஓர் உறுமல் அவளிடமிருந்து கேட்டது.
அவளது கண்களில் கோபமும் வெறுப்பும் நிறைந்து வழிந்தன. அந்தக் கண்கள் லூசியுடையதாக இருந்தாலும், அதில் பழைய அன்பு, கனிவு எதுவுமின்றி ஒருவித பிசாசுத் தன்மையின் குரூரம்தான் பிரதிபலித்தது.
அப்போது திடீரென ரத்ததாகம் கொண்ட ஒரு பிசாசு போல ஆர்தரை நோக்கி லூசி இரு கைகளையும் உயர்த்தியபடி நெருங்கி னாள். ஆர்தரின் தொண்டைக்குள்ளிருந்து ஒரு வீறல் எழுந்து உயர்ந்தது.
“ஆர்தர்… என் அன்புக்குரிய ஆர்தர்… இவர்களிடமிருந்து விடுபட்டு என்னிடம் வாருங்கள். உங்களுக்காக நான் தாகத்துடன் காத்திருக்கிறேன்… வாருங்கள். அன்புக்குரியவரே…” என்று லூசி முனகினாள்.
தொடரும்…