ஹென்சிங் சவப் பெட்டியை நெருங்கி அந்த மூடியைக் கழற்றி பழையபடி ஈயத் தகட்டின் இருபுறத்தையும் நீக்கியபோது, திகைப்பும் ஆச்சரியமும் பீதியும் ஏற்பட்டது.
டாக்டர் ஹென்சிங் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ச்சியது போல உணர்ந்தார்.
சவ அடக்கச் சடங்கு நடைபெறுவதற்கு முதல்நாள் இருந்தது போலவே லூசியின் தோற்றம் அப்போது காணப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் அதைவிட அழகாகவும் கவர்ச்சியாகவும் காணப்பட்டாள்.
அந்த அழகான- கருஞ்சிவப்பான உதடுகளையும் கவர்ச்சி கரமான கன்னக் கதுப்புகளையும் பார்த்தால் அவள் இறந்து விட்டது போலவே தோன்றவில்லை.
“இது ஏதோ மாயாஜாலம் போல இருக்கிறது” என்று செர்வாண்ட் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார்.
ஹென்சிங் எதுவும் பேசாது லூசியின் சவப்பெட்டி அருகில் அமர்ந்து அவளது உயிரற்ற உதடுகளை இரண்டாகப் பிரித்தார். அப்படியே திடுக்கிட்டுப் போனார் -அந்தக் காட்சியைக் கண்டு.
ஹென்சிங் பிரித்திருந்த லூசியின் ரத்தம் வடியும் உதடுகளுக்குள் இதுவரை பார்த்திராத மிகவும் பயங்கரமான இரண்டு கடைவாய்ப் பற்களைப் பார்த்தார்.
நீண்டு வளைந்த அவற்றின் முனை ஊசிபோல கூர்மையாக இருந்தன. அந்தக் கோரைப்பற்கள் கொடூரமான ஒரு பிசாசின் அடையாளமாக இருந்தது.
செர்வாண்ட்டை அழைத்து, “இதோ பார்த்தீர்களா? இந்தக் கோரைப்பற்களால்தான் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் கழுத்தில் கடித்துக் காயப்படுத்திக் கொன்றாள்” என்றார் ஹென்சிங்.
அந்தக் காட்சியை நம்ப முடியாமல் திகைப்புடன் செர்வாண்ட் அசைவின்றி நின்று கொண்டிருந்தார்.
“மிஸ்டர் செர்வாண்ட், இப்போது நீங்கள் பார்க்கிற காட்சி இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது ஒரு அசாதாரணமான இரட்டை வாழ்க்கை. அந்தப் பெண் லூசியை ஒருவித மயக்க நிலைக்குத் தள்ளிவிட்டு வௌவாலின் வடிவத்தில் வந்த ரத்தக் காட்டேரி அவளுடைய உடம்பில் பற்களைப் பதித்தது.
தூக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ள லூசி இந்த கோர விபத்துக்கு அடிக்கடி அடிமையானாள். அதன்பிறகு லூசி மயக்க நிலையில் ஆழ்ந்திருக்கும் போதெல்லாம் இந்த ரத்தக் காட்டேரி மீண்டும் மீண்டும் அவளிடமிருந்து ரத்தத்தைக் குடித்துக் கொண்டே இருந்தது. அதனால்தான் அதே நிலையில் லூசி மரணமடைந்தாள்.
இப்போது இவள் இருக்கும் நிலையிலிருந்து விடுதலையானால் மறுகணமே எல்லாரையும் போல சாதாரணமாக இறந்தவர்களின் நிலையை அடைவாள்.
இவளிடம் இப்போது காணப்படும் அமைதியான தன்மை யைப் பார்த்தபிறகு இவளை அழிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.”
ஹென்சிங் கூறியதைக் கேட்டுவிட்டு, “”லூசி ஏற்கெனவே இறந்துபோனவள் என்றால் இப்போது அவளை அழிப்பதில் என்ன பயங்கரம் இருக்கிறது?” என்று செர்வாண்ட் கேட்டபோது ஹென்சிங் சிரித்தபடியே பதில் கூறினார்:
“இதுபோன்ற ரத்தக் காட்டேரிகளை என்றைக்குமாக- நிரந்தரமாக அழிக்க வேண்டுமென்றால் ஒரு வழிதான் இருக்கிறது. அவற்றின் தலையை வெட்டி எடுத்து வாய்க்குள் வெள்ளைப் பூண்டை திணிக்க வேண்டும். அதன்பின்னர் இதயத்தில் மரக்கொம்பை அடித்து இறக்க வேண்டும்.
அதைக் கேட்டு செர்வாண்ட் மிகவும் கவலையுற்றார். தனக்கு நேசமான ஒரு பெண்ணின் உடம்பை இத்தனை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்த வேண்டுமா என்று தளர்ச்சியடைந்தார்.
ஆனால் இதனுடைய யதார்த்தத்தை உணர்ந்தபோது அது சாதாரணமாகத் தெரிந்தது. தனக்கு முன்பாகக் கிடப்பது ரத்த தாகம் கொண்ட ரத்தக் காட்டேரியாயிற்றே!
அதுமட்டுமின்றி, ஒரு ரத்தக் காட்டேரி எண்ணற்ற ரத்தக் காட்டேரிகளை உருவாக்கக்கூடிய வல்லமை உடையதாயிற்றே என்பதை நினைக்கும்போது, ஹென்சிங் கூறியபடி செய்வதே சரியென்று தோன்றியது.
அந்தச் செயலை எவ்வாறு செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்த ஹென்சிங், கடைசியில் ஆர்தரின் முன்னிலையில் அதை நடத்த வேண்டும் என்ற முடிவோடு பூட்டிக் கிடந்த மதிலைத் தாண்டி வெளியே வந்தார். ஆர்தர் லூசியின் காதலராயிற்றே!
மறுநாள் இரவு ஆர்தரை அழைத்துக் கொண்டு அவர்கள் மறுபடியும் கல்லறைக்கு வந்தனர். மதிலைக் கடந்து மயானத்துக்குள் நுழைந்தனர்.
ஆர்தர் மிகவும் துயரப்படுவாரோ என்று அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. கல்லறையின் வாசலைத் திறந்த செர்வாண்ட் எல்லாரும் நுழைவதற்காக ஒதுங்கி நின்றார்.
எல்லாரும் நுழைந்தவுடன் அதன் கதவைத் பூட்டிவிட்டு லாந்தர் விளக்கை ஏற்றி சவப் பெட்டியில் வெளிச்சம் படுமாறு உயர்த்திப் பிடித்தார் செர்வாண்ட்.
ஹென்சிங் இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தபடி ஸ்க்ரூ டிரைவரை எடுத்து சவப் பெட்டியின் ஆணிகளை ஒவ்வொன்றாக கழற்றத் தொடங்கினார். அதன் பின்னர் மேல் மூடியைத் திறந்து அப்புறப்படுத்தினார்.
அடக்க முடியாத உணர்வுடன் பெட்டி திறந்தவுடன் ஆர்தர் பாய்ந்து நோக்கினார். அடுத்ததாக இருந்த ஈயத் தகடு அவருக்கு நினைவுக்கு வரவில்லை போலிருந்தது.
ஹென்சிங் அந்த ஈயத் தகட்டையும் கழற்றித் திறந்தபோது உட்புறம் காலியாக இருந்தது. அதனைப் பார்த்த மாத்திரத்தில் மூவரும் எதுவும் பேசாமல் சில நொடிகள் மௌனமாக இருந்தனர்.
பொறுமையிழந்துபோன ஆர்தர், “நீங்கள் வேண்டுமென்றே எங்களை அவமானப்படுத்துவதற்குத்தானே இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.
ஹென்சிங் அதைக் கேட்டு, “நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். பரிசுத்தமான எதில் வேண்டுமானாலும் தொட்டு நான் சத்தியம் செய்கிறேன். நான் அவளைத் தொடவோ வேறு எங்கேயும் அப்புறப்படுத்தவோ இல்லை. இரண்டு நாட்களுக்கு முன் நானும் செர்வாண்ட்டும் இங்கு வந்திருந்தோம். நல்ல நோக்கத்துடன்தான் இந்த சவப் பெட்டியைத் திறந்தோம். அப்போதும் இந்தப் பெட்டி இப்போது போலவே காலியாக இருந்தது.
மறுநாள் வந்து பார்த்தபோது அவள் இந்தப் பெட்டிக்குள் கிடந்தாள். அன்று நாங்கள் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தோம். மறுபடியும் ஒரு முறை சோதித்துப் பார்ப்பதுதான் எங்கள் நோக்கம். ஆனால் அன்றைக்கு முடியாததால் நாங்கள் திரும்பிச் செல்ல நேர்ந்தது.
திரும்பவும் சூரியன் அஸ்தமனமாவதற்கு முன்பு நான் இங்கு வந்து சேர்ந்தேன். இருட்டிவிட்டால் காட்டேரிகளால் பயணம் செய்ய முடியும். விடியும்வரை நான் இந்தப் பகுதியிலேயே அலைந்து திரிந்த போதிலும் என்னால் – குறிப்பாக எதையும் காண முடியவில்லை.
வெள்ளைப் பூண்டு மாலை மற்றும் சில பொருட்களுடன் நான் கல்லறை வாசலை பத்திரமாக மூடியிருந்ததால் அவளால் அன்று வெளியேற முடியாமல் போயிருந்திருக்கும்.
இன்று சூரியன் மறைவதற்கு முன்பாகவே நான் வெள்ளைப் பூண்டு மாலை மற்றும் சில பொருட்களை வாசல் பகுதியிலிருந்து அகற்றினேன். அதன் பலன்தான் நாம் இப்போது காணும் காலியான சவப்பெட்டி. நீங்கள் நம்பாது போனாலும் இன்னும் சிறிது நேரத்தில் சில அசாதாரணமான காட்சிகளை நீங்கள் காணப் போகிறீர்கள்.”
தொடரும்…