ஜோனாதன் ஒன்றும் தெரியாதவராய் தலையசைத்தபோது, இன்றைக்கு செயின்ட் ஜார்ஜ் தினம். இன்றைக்கு நள்ளிரவில் இந்த உலகத்திலுள்ள துஷ்ட ஆவிகள் அனைத்தும் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து வரும் நாள். நீங்கள் இன்று பயணம் செய்வதால் என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியவில்லை” என்றாள் அந்த வயதான பெண்மணி.
அவ்வாறு படபடப்புடன் கூறிக் கொண்டிருக்கும் அந்த வயதான பெண்மணியை சமாதானப்படுத்துவது எப்படி என்று ஜோனாதனுக்குப் புரியவில்லை.
தன்னுடைய பயணம் பற்றிய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அந்தப் பெண்மணி புரிந்து கொண்ட பிறகு, வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
தன்னுடைய கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிலுவை போட்ட ஜெபமாலையைக் கழற்றி ஜோனாதனின் கழுத்தில் போட்டாள்.
வேறு வழியின்றி அதன்பிறகு எதுவுமே பேசாமல் அந்தப் பெண்மணி அந்த அறையிலிருந்து வெளியே சென்றுவிட்டாள்.
பலதரப்பட்ட ஆவிக் கதைகளும், மக்களின் மூட நம்பிக்கைகளும், அந்த வயதான பெண்மணி படப்படப்போடு கூறிய எச்சரிக்கை தகவலும் சுழன்று சுழன்று ஜோனாதனுக்குள் ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.
தூரத்தில் ஒரு குதிரை வண்டியின் சத்தம் சன்னமாகக் கேட்டது. தன்னை அழைத்துக் கொண்டு செல்வதற்கான சாரட் வண்டிதான் என்பது தெரிந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த வண்டி அவர் தங்கியிருந்த ஹோட்டல் வாசலில் வந்து நின்றது.
அந்த சாரட் வண்டியில் ஜோனாதன் ஏறி அமர்ந்தபோது, அந்த வண்டிக்குள் இன்னும் சிலரும் அமர்ந்திருப்பது தெரிந்தது.
சாரட் வண்டிக்காரர் ஹோட்டல் உரிமையாளரிடம் எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தார். வண்டியில் இருப்பவர்களும் அடிக்கடி ஜோனாதனைத் திரும்பிப் பார்த்து தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டனர்.
மனித ஓநாய், சைத்தான், மந்திரவாதி என்று யாரைப் பற்றியோ அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
அதனைப் பற்றிய முழு விவரத்தையும் டிராகுலா கோட்டையை அடைந்த பிறகு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று ஜோனாதனும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.
அதன்பின்பு அந்த வண்டி புறப்பட்டபோது சுற்றிலும் ஏராளமானவர்கள் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
தங்களது வலக்கையின் இரண்டு விரல்களை ஜோனாதனை நோக்கி விசித்திரமாக சுட்டிக்காட்டியபடி எல்லாரும் சிலுவையிட்டுக் கொண்டது வேடிக்கையாக இருந்தது.
அவர்கள் அவ்வாறு விரலைச் சுட்டிக்காட்டியதற்கு என்ன அர்த்தம் என்று தன்னுடன் பயணம் செய்தவர்களிடம் ஜோனாதன் விசாரித்தபோது, அன்னிய தேசத்துக்காரரான ஜோனாதன் மீது எந்த ஒரு துஷ்ட தேவதையின் பார்வையும் பட்டுவிடாமல் இருப்பதற் காக அம்மாதிரி அவர்கள் செய்தார்கள் என்று கூறினார்கள்.
அப்படி அவர்கள் கூறியபோது அவருக்கு ஏனோ ஒரு இனம்புரியாத கலக்கம் ஏற்பட்டது. ஆயினும் முன்பின் தெரியாத அந்த மனிதர்களின் கரிசனம் நெஞ்சை வருடுவதாக இருந்தது.
தனக்காக சிலுவை போட்டுக் கொண்ட அந்த மக்களையும் அவர்களுக்குப் பின்னால் அடர்ந்து வளர்ந்திருந்த மரம், செடிகொடிகளையும் அவ்வளவு சீக்கிரமாக அவரால் மறக்க முடியவில்லை.
நீண்டநேரம் வரை- அவர்கள் கண்களிலிருந்து மறையும் வரை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது, நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி காற்றைவிட வேகமாகப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.
மனதுக்குள் நடுங்கிக் கொண்டிருந்த ஜோனாதனுக்கு, செல்லும் பாதை நெடுகிலும் புலப்பட்ட இயற்கை காட்சிகள் சற்று நிம்மதியைத் தந்தன.
அந்த மலையடிவாரப் பகுதியின் இரண்டு பக்கங்களிலும் ஆப்பிள், பைன் மரங்களும் விவசாயிகளின் குடிசைகளும் தென்பட்டன. அந்த சாரட்வண்டி குண்டும் குழியுமான பாதைகளில் படுவேகத்தில் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.
ஜோனாதனுக்கு அந்த வேகத்தின் காரணம் ஏன் என்பது புரியவில்லை. மேலும் இந்தப் பாதையில் கோடைக்காலத்தில் பயணம் செய்தால்தான் நன்றாக இருக்கும் என்றும், தற்போதுள்ள பனிக்காலத்திற்கு இந்தப் பயணம் ஏற்றதல்ல என்றும் வண்டிஓட்டி கூறினார்.
மலையிலிருந்து வெள்ளி நூல்கள் கீழே இறங்குவதுபோல் சிறிய சிறிய ஓடைகள் மலையிலிருந்து வழிந்தோடுவது தூரத்திலிருந்து பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.
ஜோனாதன் ஓக் மரக்கிளைகளில் தொங்கும் பனி முத்துக்களைப் பார்த்துக் கொண்டே வந்தபோது, சாரட் வண்டி மேல்நோக்கி ஏறத் தொடங்கியிருந்தது.
பைன் மரங்களுக்கிடையே படர்ந்து கொண்டிருந்த இருளும் மரத்தின் கரிய நிழலும் நெஞ்சுக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது.
செங்குத்தான மலைப்பகுதிமீது வண்டி ஓட்டுவது மிகவும் சிரமமாக இருந்தது. முன்பிருந்த வேகத்தினை சாரட் வண்டியில் இப்போது காண முடியவில்லை.
சிரமப்பட்டு அப்படி வண்டியை ஓட்டுவதைக் காட்டிலும் பயணிகள் எல்லாரும் கீழே இறங்கி நடந்தால் குதிரைகள் வண்டியை இழுத்துக் கொண்டு மெதுவாக நடக்க வசதியாக இருக்குமே என்று யோசனை சொன்னார் ஜோனாதன். வண்டிக்காரர் அதனை ஏற்கவில்லை.
புரியாமல் பேசாதீர்கள். யாரும் கீழே இறங்கி நடக்க வேண்டாம். அது பெரிய ஆபத்தாய் முடியும். இங்கே இருக்கிற ஓநாய்கள் பாய்ந்து எல்லாரையும் கடித்துக் குதறிவிடும்” என்று கூறிய வண்டிக்காரர் மிரண்டுபோன தன் விழிகளை உருட்டியபடி, “இன்றைக்கு ராத்திரி தூங்கப் போவதற்கு முன்னால் உங்களுக்கு நான் சொன்னது புரியம்” என்று மேலும் பயமுறுத்தினார்.
நேரம் ஆக ஆக செல்லும் பாதையெங்கும் இருள் பரவத் தொடங்கியது. அவ்வப்போது விளக்கை ஏற்றுவதற்காக வண்டிக் காரர் வண்டியை நிறுத்தினார்.
சீக்கிரம் சென்றால் நன்றாக இருக்கும் என்ற பதட்டமும் பரபரப்பும் எல்லாருக்குள்ளும் ஏற்பட்டதால் வண்டிக்காரரிடம் மாறிமாறிக் கூறியபடி இருந்தனர்.
அதனைக் கேட்டு வண்டிக்காரர் சாட்டையை சுழற்றி விசித்திரமான சப்தங்களை எழுப்பியபடி குதிரைகளை படுவேகமாக விரட்டினார்.
அச்சமயம் திடீரென அங்கிருந்த மலைமீதுள்ள ஒரு பாறைமீது மங்கலான வெளிச்சம் தோன்றியது கண்டு வண்டியிலிருந்த பயணிகளுக்கு மிரட்சி ஏற்பட்டது.
ஜோனாதன் அந்த வெளிச்சத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது சாரட் வண்டி பேரலைமீது பாய்ந்து தாவும் படகுபோல பேய் பாய்ச்சலாய் சென்று கொண்டிருந்தது.
போர்கோ கணவாயை வண்டி நெருங்கிக் கொண்டிருந்த போது ஜோனாதனுக்கு வண்டியிலிருந்தவர்கள் ஒவ்வொருவரும் பரிசுகள் வழங்கினர். கணவாய் வழியாக வண்டி செல்ல ஆரம்பித்த போது வண்டி ஓட்டி பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தார்.
பயணிகள் எல்லாரிடமும் ஒருவித பயம் கலந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் ஜோனாதனுக்குத்தான் ஒன்றுமே விளங்க வில்லை. தன்னுடன் பயணிப்பவர்களிடம் அது குறித்து விசாரித்த போதும், அவர்கள் ஏதும் பதில் கூறாமல் திரும்பிக் கொண்டனர்.
திடும்மென வானத்தில் இடியும் மின்னலும் தோன்ற, தன்னை அழைத்துச் செல்வதற்கு டிராகுலா பிரபு அனுப்பி வைக்கும் வண்டி எங்கேயாவது தென்படுகிறதா என்று சுற்றும் முற்றும் பார்க்க லானார் ஜோனாதன்.
தொடரும்…