அச்சமயம் ஒரு ஊழியர் கேப்டனை நோக்கி மோதுவதுபோல ஓடிவந்து, மற்றொரு ஊழியரும் அன்று காணவில்லை என்று பதட்டத்துடன் கூறினார். மேலும் கப்பல் திசைமாறிப் போய்க் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
அவர்கூறியது உண்மைதான் என்பதை கேப்டனும் கண்டறிந்தார்.
அன்றைக்கு நள்ளிரவானதும் சுக்கான் பகுதியில் நின்றவரை ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு கேப்டனே அந்தப் பணியை மேற்கொண்டார்.
பலத்த காற்று வீசிக் கொண்டிருந்த அச்சமயம், ஒரு ஊழியர் கேப்டனிடம் வந்து மெல்ல காதில் சொன்னார்:
“அதை நான் தெளிவாகப் பார்த்துவிட்டேன். அது நமக்கு மிக அருகில்தான் இருக்கிறது. நான் நேற்று இரவு காவலில் இருந்தபோது உயரமான மெலிந்த மனித வடிவில், கப்பலின் முனைப்பகுதியில் நின்று கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
நான் பின்புறமாகச் சென்று ஒரு கத்தியால் ஓங்கிக் குத்தினேன். அந்தக் கத்தி உடம்புக்குள் ஊடுருவி மறுபுறம் வெளியே வந்துவிட்டது. அது இந்த இடத்தைவிட்டு வேறு எங்கும் போகவில்லை என்பது நிச்சயமாக எனக்குத் தெரியும். எப்படியும் நான் அதைக் கண்டுபிடித்துக் காட்டுகிறேன்.”
அந்த ஊழியர் அதன்பிறகு மெதுவாக நடந்து மண் நிறைந்த பெட்டிகள் வைத்திருந்த பகுதிக்குச் சென்றார். அவர் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேப்டனுக்கு அவருடைய குரல் கேட்டது.
யாரையோ விரட்டி ஓடுவது போலவும் யாருடைய பிடியிலிருந்தோ திமிறி விடுபட முனைவது போலவும் சத்தங்கள் மாறிமாறித் தொடர்ந்து கேட்டன. அடுத்த கணம் ஒரு பயங்கரமான அலறலோடு அவர் மேல்தளத்துக்கு ஓடிவந்தார்.
மிகுந்த பயத்தால் அவரது கண்கள் வெளியே துருத்திக்கொண்டு, உடல் முழுவதும் நடுங்க, “கேப்டன் சார்! எனக்கு எல்லாம் தெளிவாகிவிட்டது. அந்த சைத்தான் என்னை அழிப்பதற்கு முன்னால் எப்படியாவது நான் சீக்கிரம் இதிலிருந்து தப்பிக்க வேண்டும். என்னை இந்தக் கடல் தாய் எப்படியும் காப்பாற்றிவிடுவாள்” என்று கூறிக்கொண்டே கேப்டன் தடுப்பதற்குள் அந்த உதவியாளர் கடலில் குதித்துவிட்டார்.v கடுமையான பனிமூட்டத்தில் அப்போது கப்பல் சிக்கியிருந்தது. தான் மட்டும் தன்னந்தனியாளாகிவிட்டோம் என்பதை நினைத்த போது, கேப்டன் மிகவும் நடுநடுங்கிப் போனார்.
அந்த இரவில் கேப்டனும் அந்தப் பிசாசைப் பார்த்தார். தன்னுடைய உதவியாளரைப் போலவே தானும் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார். எனினும் தான் அந்தக் கப்பலின் கேப்டன் என்பதால் அந்தச் சுக்கான் சக்கரத்திலேயே தன்னுடைய உயிர் பிரிய வேண்டும் என்று விரும்பினார். அது நிகழவும் செய்தது.
அன்றைக்கு பகல் நேரத்தில் அந்தக் கப்பல் கேப்டனின் சவ அடக்கம் நடைபெற்றதற்குப் பின்பு என்ன காரணத்தாலோ லூசி நிம்மதியின்றித் தவிப்பதாக மினாவுக்குத் தோன்றியது.
எப்போதும் காணப்படுவதைவிட அவள் மிகுந்த சோர்வுடனேயே இருப்பதாகத் தெரிந்தது.
தங்களது அறையில் மினாவும் லூசியும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். மினாவும் சரியாகத் தூக்கம் வராமல் புரண்டு கொண்டேயிருந்தாள்.
நள்ளிரவுக்குமேல் லேசாகக் கண்ணயர்ந்த மினா மூன்றுமணி அளவில் திடுக்கிட்டு விழித்தபோது பக்கத்தில் படுத்துக் கிடந்த லூசியைக் காணாமல் ஒருவித பயம் ஏற்பட்டது.
நைட்டியோடு அந்த நள்ளிரவில் எங்கே வெளியேறியிருப்பாள் என்ற பதைபதைப்புடன் மாடியறையிலிருந்து கீழ்த் தளத்துக்கு ஓடினாள் மினா.
வாசல் கதவு தாழ்போடாமல் இருப்பது கண்டு அதன்வழியாக லூசி வெளியேறியிருக்க வேண்டும் என்று மினா நினைத்தாள்.
துப்பட்டா ஒன்றை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு மினா வெளியே ஓடி வந்தாள். மாதா கோவில் அருகே தாங்கள் இருவரும் எப்போதும் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கினாள்.
அங்கு ஒரு வெண்மையான உருவத்தின் நிழலும், அதற்குப் பின்னால் கருமையான மற்றோர் உருவம் நிற்பதாகவும் மீனாவுக்குத் தோன்றியது. அது மனிதனா, மிருகமா என்று அவளால் பிரித்தறிய முடியவில்லை.
வெள்ளை நிழலைப் பார்த்து லூசி என்று சத்தமாக அழைத்தபோது, அந்தக் கறுப்பு உருவம் வெள்ளை நிழலுருவத்திலிருந்து தலையைத் தூக்கித் திரும்பிப் பார்த்தது.
ரத்தச் சிவப்பில் தென்பட்ட அதன் சிவந்த விழிகளை மட்டும் மினா பார்த்தாள்.
மீனாவின் சத்தத்தை லூசி கேட்டதாகத் தெரியவில்லை. மினா அவளை நோக்கி ஓடினாள். அருகில் போய்ப் பார்த்தபோது லூசி நல்ல ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவளைப்போல காணப்பட்டாள். மினா தொட்டதும் திடுக்கிட்டுக் கண்விழித்தாள்.
தன்னுடைய சால்வையால் அவள்மீது போர்த்தியதும் குழந்தையைப் போல மினாமீது சாய்ந்து கொண்டாள்.
அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு தங்களுடைய அறைக்கு திரும்பி வந்தபோதுதான் பார்த்தாள்- லூசியின் கழுத்தில் ஊசிமுனையால் குத்தியதுபோல புதிதாக இரண்டு அடையாளங்கள் தென்பட்டன.
அன்றைக்குப் பகல் நேரம் முழுவதும் நன்றாக உறங்கினாள் லூசி. இரவில் மினாவின் கட்டுப்பாட்டிலிருந்து மீறித் தப்பித்துச் செல்ல இரண்டு முறை லூசி முயன்றாள்.
ஜன்னலின் திரைச்சீலையை மினா விலக்கிப் பார்த்தபோது வெளியே ஒரு கன்னங்கரிய வௌவால் சுற்றிக் கொண்டிருந்தது.
மறுநாள் இரவு கடற்கரையிலிருந்து மினா மட்டும் திரும்பி வந்தபோது ஒரு அசாதாரணமான காட்சியைக் கண்டு திடுக்கிட்டாள்.
அவர்களின் படுக்கையறை ஜன்னலுக்கு வெளியே லூசியின் தலை மட்டும் நீண்டிருந்தது. அவளுக்கு அருகில் பிரம்மாண்டமான வௌவால் வடிவம் ஒன்று இருப்பதையும் கவனித்தாள்.
பதைபதைப்போடு அறைக்குள் மினா நுழைந்தபோது ஒரு பெருமூச்சுடன் லூசி ஜன்னலுக்குள் தலையை இழுத்துக் கொண்டு தன்னுடைய படுக்கையை அடைந்தாள்.
தொடரும்…