மினா தன்னுடைய காதலரைப் பற்றிய அந்தரங்கமான விஷயங்களை தன்னுடைய தோழி லூசியுடன்தான் எப்போதும் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
லூசியும் தன்னுடைய காதலர் டாக்டர் ஆர்தரைப் பற்றி பேசுவதால் இருவரின் பேச்சிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அவர்கள் இதற்காக அவ்வப்போது கடற்கரைப் பக்கம் செல்லுவ துண்டு.
அந்தக் கடற்கரையை ஒட்டி ஒரு மாதா கோவிலும் கல்லறையும் தென்படும். இந்தக் காட்சி மிக ரம்மியமாக அவர் களுக்குத் தோன்றுவதால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப் பார்கள்.
ஒருமுறை அப்படி அவர்கள் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அசாதாரணமான ஒரு காட்சியைக் கண்டனர்.
தொலைதூரத்திலேயே தட்டுத்தடுமாறி திசை தெரியாது அலைந்து, திக்கித் திணறி ரஷ்ய நாட்டுக் கப்பலைப் போன்ற ஒரு கப்பல் வந்து கொண்டிருப்பதைக் கண்டனர்.
“டெய்லி டெலிகிராஃப்’ என்ற செய்தித் தாளில் மறுநாள் தலைப்புச் செய்தியாக மினாவும் லூசியும் பார்த்த காட்சி “தட்டுத்தடுமாறி இலக்கின்றி கடலில் அலையும் கப்பல்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது.
“நேற்று அடித்த கடும் புயற்காற்றில் அந்தக் கப்பல் தட்டுத் தடுமாறி தாறுமாறாக வந்து கொண்டிருப்பதை “செர்ச் லைட்’டின் வெளிச்சத்தில் கண்டுகொள்ள முடிந்தது.
ஒட்டுமொத்த புயற்காற்றும் அடங்கிவிட்ட பிறகு, அந்த அமைதியான நேரத்தில் அந்தக் கப்பலின் மேல்தளத்தில் தென்பட்ட காட்சி எல்லாரையும் திடுக்கிடச் செய்தது.
அந்தக் கப்பலின் மேல் தளத்தில் சுக்கான் சக்கரத்துடன் சேர்த்து வைத்துக் கட்டிய நிலையில் எதனாலோ அடித்துக் கொல்லப்பட்ட அந்த கப்பல் மாலுமியின் உடல் கிடந்தது.
அதைவிட மற்றொரு சம்பவம் அந்த நேரத்தில் எல்லார் மனதையும் பீதியில் உறைய வைத்தது. அந்தக் கப்பலானது அந்தத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த மறுவிநாடி பெரிய கறுப்பு நிற நாய் ஒன்று கப்பலுக்குள்ளிருந்து மேல்தட்டுக்குத் தாவிக் குதித்து அங்கிருந்து துறைமுகப்பகுதியில் நின்று கொண்டிருந்த மனிதர் களுக்கு ஊடாகப் பாய்ந்து சட்டென மறைந்துவிட்டது.
அங்கிருந்து செங்குத்தான பாறையின் விளிம்பு வழியாக மாதா கோவில் மற்றும் இடுகாட்டுக்கு நேராக அந்த பெரிய கறுப்பு நாய் விரைந்து மறைந்தது.
மறுநாள் விடிகாலையில் துறைமுகத் தலைவர் அந்தக் கப்பலை சோதனையிட கட்டளையிட்டார். அந்தக் கப்பலுக்குள் ஏராளமான மண்ணும் ஐம்பது பெரிய மரப் பெட்டிகளும் இருந்தன.
அந்த மரப் பெட்டிகளுக்குள்ளும் ஏராளமான ஈரமண் நிரப்பப்பட்டிருந்தது. அந்தப் பெட்டிகள் அனைத்தும் விட்டி நகரைச் சேர்ந்த வக்கீல் மிஸ்டர் வில்லிங்டன் என்பவரின் பெயரில் கப்பலின் சரக்குப் பகுதியில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அந்த மனிதர் கப்பல் அதிகாரிகளைச் சந்தித்து தன் பெயரில் வந்துள்ள அந்தப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டார்.
அந்தக் கறுப்பு நிற நாய் எல்லார் மத்தியிலும் ஒரு பீதியை உருவாக்கியிருந்ததால் எல்லாரும் அதனைத் தேடும் பணியில் ஈடுபட்டும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அந்த நாய் பொது மக்களுக்கு நிச்சயம் ஏதோ ஒரு பேராபத்தை விளைவிக்கப் போகிறது என்று அனைவரும் பயந்தனர்.
அதற்கேற்றார்போல அந்தத் துறைமுகக் காவல் நாய் கடல் பாலத்திற்கு அருகில் மிகவும் கோரமான முறையில் கழுத்துப் பகுதி கடித்துக் குதறப்பட்டுக் கிடந்தது. நிச்சயம் கப்பலிலிருந்து குதித்து ஓடிய அந்த பிரம்மாண்டமான கருப்பு நாய்தான் இக்கொடூரத்தை நிகழ்த்தி இருக்குமென்பதை அனைவரும் நம்பினர்.
சுக்கான் சக்கரத்தில் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த கப்பல் மாலுமியின் பாக்கெட்டிலிருந்து ஒரு டைரியைக் கைப்பற்றினர், அந்தக் கப்பல் ஊழியர்கள்.
அந்த டைரியைப் படித்தபோது, அவர் குறிப்பிட்டிருந்த பல சம்பவங்கள் அந்த ஊழியர்களை நடுநடுங்கச் செய்தன.
ஐம்பது பெட்டிகள் நிறைய மண்ணும், ஐந்து கப்பல் ஊழியர்களும், சமையல்காரர் இரண்டுபேரும், கேப்டன் ஒருவரும் என இவர்கள் மட்டுமே அந்தக் கப்பலில் இருந்தனர்.
காற்றின் திசை சாதகமாக இருந்ததால் மதிய நேரத்துக்கு முன்பாகவே அவர்கள் பாஸ்பெரஸை அடைந்துவிட்டார்கள்.
அந்தக் கப்பல் மட்டபான் முனையைக் கடந்தது முதலே அதிலிருந்த ஊழியர்களிடம் ஒரு பதட்டமும் கலக்கமும் இருந்து கொண்டு இருப்பதை கப்பல் கேப்டன் உணர்ந்தார். அந்த ஊழியர் கள் அனைவரும் சிலுவை போட்டுக் கொண்டே இருந்தனர்.
அதற்கேற்றாற்போல மறுநாள் காலையில் அந்த ஊழியர்களில் ஒரு நபர் காணாமல் போய்விட்டார். அதுபற்றி மற்றவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அதுமட்டுமின்றி, அவர்களும் மிகுந்த களைப்புடன் இருந்தனர்.
கேப்டன் அதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டபோது, அந்தக் கப்பலில் ஏதோ ஒரு தீயசக்தி இருப்பதாகக் கூறியபடி மீண்டும் சிலுவை போட்டுக் கொண்டார்கள்.
சிறிது நேரத்திற்கு பின்பு ஆர்காரன் என்ற ஊழியன் கேப்டனின் அறைக்கு ஓடிச் சென்று, “இந்தக் கப்பலுக்குள் மிகவும் பயங்கரமான மனிதன் ஒருவன் இருப்பது போல சந்தேகமாக இருக்கிறது’ என்று படப்படப்போடு கூறினான்.
உடனே அந்தக் கப்பலின் அனைத்து இடங்களிலும் அந்த பயங்கர மனிதனைத் தேடும் வேட்டை நடந்தது.
உயரமான ஒரு மெலிந்த மனிதன் கப்பலின் மேல்தளத்தில் உலாவுவதைத் தான் கண்ணால் பார்த்ததாக காவல் கூண்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த பணியாள் ஒருவர் கூறினார்.
கேப்டனும் மற்றவர்களும் அதன்பின் திரும்பவும் எல்லா இடத்திலும் தேடியபோது மரப் பெட்டிகளைத் தவிர வேறு எதுவும் தென்படவில்லை. இது வெறும் மனப்பிரம்மையாக இருக்கும் என்று கேப்டன் கூறினார்.
அதன்பின்னர் தொடர்ந்து மூன்று நாட்கள் மோசமான பருவ நிலை தென்பட்டாலும் எந்த ஆபத்துமில்லாமல் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்துவிட்டனர்.
மூன்று நாள் மௌனத்தைத் தகர்ப்பதுபோல மேலும் ஒரு கப்பல் ஊழியர் காணாமல் போனார். கடலில் கொந்தளிப்பு அதிகமாக… அன்று இரவு மற்றொரு ஊழியரும் காணாமல் போய்விட்டார்.
கப்பல் மெல்ல மெல்ல இங்கிலாந்தை நெருங்குவதை அறிந்து கப்பல் கேப்டனும் உதவியாளரும் ஊழியர்களும் சந்தோஷப் பட்டனர். கடலின் மேற்பரப்பு எங்கும் பனிப்படலமாக இருந்தது.
தொடரும்…