மற்றவர்கள் யாவரும் விழித்திருக்கும் பொழுதுகளில் தான் உறங்குவதும் அவர்கள் உறங்கும் நேரத்தில் தான் விழித்திருப்பதும் டிராகுலா பிரபுவின் பழக்கமாக இருந்தது.
பகல் நேரத்தில் டிராகுலா பிரபுவை எத்தனை முயன்றும் பார்க்க முடியவில்லை. எப்படியாவது அவரை பகல் நேரத்தில் அவரது அறைக்குள் நுழைந்து பார்த்துவிட வேண்டும் என ஜோனாதன் முடிவு செய்தார்.
டிராகுலா பிரபு ஜன்னல் வழியாக பல்லி மாதிரி ஊர்ந்து செல்வாரே- அதுபோலவே தானும் செல்ல வேண்டியதுதான்.
ஆபத்தான முயற்சிதான் அது என்றாலும், அதனை எப்படியாவது செயல்படுத்திப் பார்க்க வேண்டியதுதான்.
மிகுந்த சிரமத்துடன் டிராகுலா பிரபுவின் அறை ஜன்னல் பகுதிக்கு ஜோனாதன் சென்றடைந்தார். அங்கிருந்த கருங்கல் திட்டில் காலைப் பதித்தபடி கதவைத் திறப்பதற்கு முயற்சி செய்தார்.
டிராகுலா பிரபு எங்காவது தென்படுகிறாரா என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது இல்லை என்பது தெரிந்தது.
அங்கிருந்த மேஜை, நாற்காலி யாவும் மிகவும் தூசடைந்து பயன்படுத்தப்படாது இருப்பதைக் கண்டார். அந்த அறையின் மூலையில் தங்க நாணயங்கள் குவிந்து கிடந்தன.
அந்த அறையிலிருந்து மற்றொரு வாசல் தெரிந்தது. அதன் வழியாக சுரங்கம் போன்ற ஒரு பகுதிக்குள் ஜோனாதன் சென்றார்.
அந்தச் சுரங்கப்பகுதியில் இருந்த ஈரமான மண்ணைக் கிளறியதால் குடலைப் புரட்டும் துர்நாற்றம் கிளம்பியது.
அதனைத் தாண்டி நாற்றத்தை சகித்துக் கொண்டு சென்றபோது கடைசியாக ஒரு வாசல் பகுதி தெரிந்தது. அதைத் திறந்தபோதுதான் அந்தப் பகுதி ஒரு இடுகாடு என்பது தெரிந்தது.
அந்த இடுகாட்டுப் பகுதியிலிருந்த மணலை எல்லாம் கிளறி எடுத்ததற்கு அடையாளமாக ஈரமாகத் தெரிந்தது.
அந்த மண் முழுவதும் ஜிப்ஸிகளிடம் வாங்கிய அந்த மரப்பெட்டிகளில் நிரப்பப்பட்டிருக்கலாம் என்று ஜோனாதன் அனுமானித்துக் கொண்டார்.
அங்கிருந்த அந்த அறைகளில் எட்டிப் பார்த்தபோது பயத்தினால் ஜோனாதனின் இதயத்துடிப்பே நின்றுபோனது.
நீண்ட நாட்கள் பழமையினால் இற்றுப் போயிருந்த சவப் பெட்டிகளின் மிச்ச மீதிகள் அங்கே கிடந்தன. அடுத்த அறையில் எட்டிப் பார்த்தபோது சப்த நாடியும் அடங்கிப் போனார் ஜோனாதன்.
அது அத்தனை பயமேற்படுத்தக்கூடிய காட்சியாக இருந்தது. அந்தக் கல்லறைக்குள் இருந்த பெட்டிகள் ஒன்றில், புதியதாக அள்ளிக் கொண்டு வந்து போடப்பட்ட அந்த மயான மண்குவியல்மீது டிராகுலா பிரபு படுத்திருந்தார்.
அவர் உறங்குகிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று ஜோனாதனுக்கு சந்தேகம் எழுந்தது. அவருக்கு மரணம் என்பதே கிடையாது என்பதை ஜோனாதன் புரிந்து கொண்டார்.
டிராகுலா பிரபுவின் முகத்தில் ஒரு உயிர்த் தெளிவும் உதடுகளில் சிவப்பும் காணப்பட்டது. ஆனால் மூச்சுவிடும் சத்தமோ இதயத் துடிப்போ இன்றி அவர் காணப்பட்டார். எந்த அசைவும் இல்லை.
புதுமண்ணின் மணம் அப்போதும் ஈரத்துடன் காற்றில் அலைந்ததை வைத்துப் பார்த்தால், டிராகுலா பிரபு அங்கு வந்து படுத்து அதிக நேரம் ஆகியிருக்காது என்பது உறுதியாகியது.
அந்த டிராகுலா கோட்டையிலிருந்து வெளியேறுவதற்கான சாவி அவரிடத்தில் அவரது பாக்கெட்டில்தானே இருக்கும் என்பதை சோதிக்க நினைத்த ஜோனாதன், அப்படியே அலறியபடி பின்னால் நகர்ந்தார்.
டிராகுலா பிரபு ஜோனாதனை அப்போது கண்களைத் துருத்தியபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனை சீக்கிரம் அந்த இடத்திலிருந்து தப்பிக்க வேண்டுமோ அத்தனை சீக்கிரம் தப்பிக்க வேண்டும் என்று நினைத்தார்.
அவ்வாறே ஜோனாதன் விரைந்து நடந்து அந்த பாறைச் சுவரைப் பற்றியபடி மேற்புறமாக ஏறி தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டார்.
ஜோனாதன் ஊருக்கு செல்வதாக டிராகுலா பிரபு எழுதிய மூன்றாவது கடிதத்தில் குறிப்பிட்ட தேதியும் வந்தது. அவரை நம்ப வைப்பதற்காக ஜோனாதன் அந்த கோட்டையைவிட்டு பயணம் செல்லவிருப்பதற்கான ஏற்பாடுகளை பிரபு மேற்கொண்டிருந்தார்.
பல்லியைப் போல சுவரில் ஊர்ந்து செல்லும் டிராகுலா பிரபுவின் உயிரைப் பறிப்பதற்கான ஒரு சிறு ஆயுதம்கூட தன்னிடம் இல்லையே என்று வருந்தினார் ஜோனாதன்.
ஆனால் எந்த ஆயுதத்தாலும் அத்தனை எளிதில் அவரது உயிரைப் பிடுங்க முடியாது என்பதும் ஜோனாதனுக்குத் தெரியும்.
ரத்தவெறிக் கொண்டு அலையும் அந்த மூன்று பெண் பிசாசுகளும் எந்த நேரத்தில், எங்கேயிருந்து பாயும் என்று தெரிய வில்லை. ஆகையால் தன்னுடைய படுக்கையறைக்குத் திரும்பியவர் தூக்கம் வரும்வரை எதையாவது வாசித்துக் கொண்டிருக்கலாமே என்று நினைத்தார். அப்படியே உறங்கிப் போனார்.
திடும்மென்று டிராகுலா பிரபுவின் தடித்த குரலைக் கேட்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஜோனாதன் எழுந்தார். பிரபு கோபத்தின் உச்சத்தில் இருந்தார் என்பதை அவரது முகம் காட்டிக் கொடுத்தது.
“நண்பரே! நாளைக்கு நாம் இருவரும் பிரிய இருக்கிறோம். உங்களுடைய அழகான இங்கிலாந்து நாட்டுக்கு நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். நாம் இனிமேல் சந்திக்க வாய்ப்பு இல்லாது போகலாம். நாளைக்கு வண்டி வரும். அதில் நீங்கள் போர்கோ கணவாய் வரை போகலாம். பின்னர் அங்கிருந்து உங்களை பிஸ்ட்ரீடஸ் கொண்டுபோய்ச் சேர்க்க புக்கோவினாவிலிருந்து ஒரு சாரட் வண்டி வரும்” என்று டிராகுலா பிரபு கூறினார்.
ஆனால் அந்த வார்த்தைகளில் உண்மை சிறிதும் இல்லை என்பது தெரிந்ததால் ஜோனாதனுக்கு அது ஆறுதலளிக்கவில்லை.
இருந்த போதிலும் ஜோனாதன் அவரைப் பார்த்து, “எதற்காக பயணத்தை நாளைக்குத் தள்ளிப் போட வேண்டும். இந்த இரவிலேயே புறப்படக்கூடாதா?” என்று கேட்டார்.
“என்னுடைய வண்டி இங்கிருந்தால் அது சாத்தியம். அது வெளியே சென்றிருக்கிறது” என்று தடித்த குரலில் பதிலளித்தார் டிராகுலா பிரபு.
“பரவாயில்லை. எனக்காக தாங்கள் வண்டி வரவழைக்க வேண் டியதில்லை. எத்தனை விரைவாக நடந்து செல்ல முடியுமோ அத்தனை விரைவாக நான் நடந்தே செல்கிறேன். அதுதான் எனக்கு மகிழ்ச்சி.”
அதனைக் கேட்டு வஞ்சகமாக சிரித்த டிராகுலா பிரபு, “ஓ.கே. நண்பரே, அப்படியே ஆகட்டும். உங்களைவிட்டுப் பிரிவது எனக்கு வருத்தமளித்தாலும் உங்களது ஆசைக்கு எதிராக நான் நடக்க விரும்பவில்லை” என்றார்.
அப்படிக் கூறிவிட்டு சடாரென தன்னுடைய கைவிளக்கை எடுத்துக்கொண்டு மாடிப்படிகளில் இறங்கி கீழ்ப்புறமாகச் சென்றுவிட்டார்.
தொடரும்…