கன்னங்கரிய விழிகளும் புறாவின் மூக்கைப் போன்று நீண்டு வளைந்த மூக்கையும் கொண்டு மாநிறத்தில் இரண்டு பெண்கள் தோற்றமளித்தனர். மற்றொருத்தி வீனஸ் தேவதைபோல அப்படி யொரு அழகியாகத் தென்பட்டாள். பவளம் போன்ற அதரங்களும் பளபளக்கும் பளிங்கு வரிசைப் பற்களுமாக அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அவருக்குள் ஏதோ ஒரு விசை இழுக்க, தன்னை அவர்கள் முத்தமிடமாட்டார்களா என்று ஏங்கினார்.
அப்போது தன்னுடைய நேசத்திற்குரிய காதலி மினாவைக்கூட அவர் மறந்துவிட்டார். அந்தப் பெண்கள் இவரைப் பார்த்து அச்சமயம் வாய்விட்டுச் சிரித்தனர்.
அந்தச் சிரிப்பு சாதாரண பெண்களின் சிரிப்பொலியாக இல்லை. அது ஒரு சங்கீத ஒலியாக இருந்தது.
அந்த மூவரில் பேரழகியாக இருந்தவளை மற்ற இருவரும் பார்த்து, “”நீ முதலில் போ. உனக்குப் பிறகுதான் நாங்கள் எப்போதுமே… உனக்குத்தான் முதல் உரிமை” என்று கூறிய வார்த்தைகளைக் கேட்டு திடுக்கிட்டார் ஜோனாதன்.
அதற்கு அந்தப் பெண், “நல்ல பலசாலியான இந்த மனிதரிட மிருந்து நம் அனைவருக்கும் தேவையான முத்தங்கள் கிடைக்கும்” என்று கூறினாள்.
அவர்கள் பேசுவதை எல்லாம் ஜோனாதனால் கேட்க முடிந்ததே தவிர அவரால் வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூட பேச முடிய வில்லை.
ஏதோ ஒரு மோக வளையத்துக்குள் தான் சிக்கி மீளமுடியாது நிற்பது போன்ற கனவில் இருப்பதை மட்டும் அவரால் உணர முடிந்தது.
முத்தத்தை எதிர்நோக்கி அவர் கண்மூடிக் கிடந்தபோது, ஒரு அழகி தன்னுடைய முகத்துக்கருகில் முத்தமிட குனிந்தபோது வெப்பமான மூச்சுக்காற்று பட்டதை உணர்ந்தார்.
சிரிப்பில் ஒரு சங்கீத சிணுங்கல் உணர்ந்ததைப்போல, முத்தமிடும்போது அந்த மூச்சுக்காற்றில் இனிமையான வாசனை தென்படும் என எதிர்பார்த்து கண்மூடியிருந்த ஜோனாதன், அவளது மூச்சுக்காற்றில் கலந்திருந்த- குமட்டலை ஏற்படுத்தக்கூடிய ரத்தத்தின் துர்நாற்றத்தை சுவாசித்தபோது வெடவெடவென உடம்பெல்லாம் நடுங்கியது.
எத்தனைமுறை முயற்சித்தபோதும் அவரால் கண்களைத் திறக்க முடியவில்லை. நடந்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் உணர்ந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர் கண்விழித்தபோது, அந்தப் பெண் ஜோனாதனுக்கு மிகவும் நெருக்கமாக
முழங்காலிட்டு, சிவந்த நாக்கைத் தொங்கவிட்டு பசி மிகுந்த ஒரு ஓநாய் மாதிரி அவர்மீது சாயத் தொடங்கினாள்.
அவளது கண்கள் தீக்கங்குகளாக ஜொலித்தன. பசி மிகுந்த அவளது நாக்கு தன்னுடைய உதடுகளையும் பற்களையும் நனைக்கும் சத்தத்தை ஜோனாதன் உணர்ந்தார். மூளை மரத்துப் போகும் படியான ரத்தத்தின் துர்நாற்றம் அவரது மூக்கு துவாரங்களுக்குள் ஊடுருவுவதை மட்டும் உணர்ந்தார்.
ஜோனாதனின் முகத்துக்கும் தாடைக்கும் இடைப்பட்ட பகுதியில் முகத்தைப் பதித்த அந்தப் பெண்ணின் பார்வை சட்டென கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயின்மீது படிந்தது.
கூர்மையான வளைந்த அவளது இரண்டு பற்கள் அந்தக் கழுத்தின் மென்மையான தோலில் கூச்சம் ஏற்படுத்துவது போல துளைத்துக் கொண்டு ஊடுருவவும் செய்தன.
மயக்கம் நிறைந்த ஒரு பேரின்பமான சுகானுபவத்தில் ஒட்டுமொத்த தேகமும் சரணடைந்து அசைவின்றி அவர் கிடந்த போது, அவரது இதயம் மட்டும் வேக வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
அசைவின்றிக் கிடந்தபோதிலும் மறுநொடியில் விறுக்கென தன்னை மறந்த ஆவேசத்தில் ஜோனாதன் துடித்தார்.
அடுத்த நிமிடமே ஒரு சூறாவளிபோல டிராகுலா பிரபு அங்கு வந்து சேர்ந்தார். அந்த அழகிய பெண்மீது பாய்ந்த அவர் அவளது கழுத்தைப் பற்றி உயர்த்தி பின்புறமாக இழுத்தார்.
பிரபுவின் இரண்டு கண்களும் கோபத்தில் நெருப்புத் துண்டமாக ஜொலித்தன. அவரது முகத் தசைகள் மிகவும் இறுக்க மாக முறுக்கேற, அவரது உதடுகளின் இரண்டு பக்கங்களிலும் நீண்டு வளைந்த கோரைப்பற்கள் முழுமையாக வெளியில் தெரிந்தன.
சீற்றம் பொங்கிய டிராகுலா பிரபு அந்தப் பெண்ணை பலம் கொண்ட மட்டும் வெகுதொலைவில் வீசி எறிந்தார். மற்ற இரண்டு பெண்களையும் விரட்டியடிக்க கைகளை வீசியபோது, இந்தக் கோட்டைக்கு வரும் வழியில் அந்த வண்டிக்காரர் ஓநாய்களை விரட்டுவதற்கு கைகளை வீசிய காட்சிதான் ஜோனாதனின் நினைவுக்கு வந்தது.
“உங்கள் யாருக்கும் இவரைத் தொடுவதற்கு உரிமையில்லை. இவர் எனக்கு மட்டுமே சொந்தமானவர். உங்களை எச்சரிக்கிறேன். இவரைத் தொடக்கூடாது. அப்படி மீறி நீங்கள் இவரைத் தொடுவதாக இருந்தால் எனக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்” என்று அந்த கோட்டையே கிடுகிடுக்கும் குரலில் டிராகுலா பிரபு கர்ஜித்தபோது, “எங்களுக்கு உரிமை இல்லை என்றா கூறுகிறீர்கள்?” என்று ஒருத்தி கேட்டாள்.
“ஆம். நிச்சயமாக உங்களுக்கு இப்போது கிடையாது. இவரிடம் எனக்கு முடிய வேண்டிய வேலைகள் இன்னும் இருக்கிறது. அதுவரை உங்களுக்கு இவரிடம் உரிமை இல்லை. அதன்பின்பு நானே இவரை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் இப்போது போகலாம். இவரை நான் உடனடியாக எழுப்ப வேண்டும்” என்று டிராகுலா பிரபு கூறினார்.
“எங்களுக்கு இந்த இரவில் எதுவுமே கிடையாது என்றா கூறுகிறீர்கள்? அந்த இளைஞனை நாங்கள் ஒருமுறை முத்தமிடக்கூட நீங்கள் அனுமதிக்கக் கூடாதா?” என்று உதடுகளை நாக்கால் நக்கித் துடைத்தபடி ஒருத்தி கேட்டாள்.
அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த டிராகுலா பிரபு தன் கையிலிருந்த ஒரு சாக்கு மூட்டையை அவர்களை நோக்கி வீசி எறிந்தார்.
அந்தச் சாக்குப் பைக்குள் ஏதோ உயிருள்ள ஜீவன் இருப்பது மட்டும் தெரிந்தது. மிகுந்த வேதனையுடன் அந்த மூட்டைக்குள் அது துடிப்பது தெரிந்தது.
அந்த இளம்பெண்கள் பரபரப்பாக அந்த சாக்கு மூட்டையைப் பாய்ந்து பிடிப்பதை ஜோனாதன் மிரட்சியுடன் பார்த்தார்.v அந்தச் சாக்கு மூட்டைக்குள் பச்சிளங்குழந்தையின் சத்தம் தெளிவாகக் கேட்டது. அந்த ரத்தக் காட்டேரிகள் ஆவேசமாக அந்த சாக்கு மூட்டையை நெருங்குவதைப் பார்த்தார் ஜோனாதன்.
அடுத்த கணமே அந்த ரத்தக் காட்டேரிகள் சாக்கு மூட்டை யுடன் மறைந்து போயின. அப்படியே மயங்கிப்போன ஜோனாதன் கண்களைத் திறந்தபோது தன்னுடைய அறையில் தான் எப்போதும் வழக்கமாகப் படுத்திருக்கும் கட்டிலில் படுத்திருப்பதை நினைத்து வியப்படைந்தார். நடந்ததெல்லாம் கனவா என்று அவரால் நம்ப முடியவில்லை.
தன்னை அந்த அறையில் கொண்டு வந்து படுக்க வைத்துப் பணிவிடை செய்தது டிராகுலா பிரபுதான் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருந்தது.
தொடரும்…