அதன்பிறகு அந்த பிரம்மாண்டமான படிக்கட்டுகளில் ஏறி கோட்டையின் மேல்புறத்தை அடைந்தார்.
மேலே இருந்து பார்த்தபோது கோட்டைக்கு வெளிப்புறம் கரிய இருள் சூழ்ந்து காணப்பட்டது. ஆயினும் அங்கே இருக்கும் சுதந்திரம் இங்கே இல்லை என்பது மனதை நெருடியது.
எதேச்சையாக கோட்டையின் இன்னொருபுறம்நோக்கி உற்று கவனித்தபோது, நிலவின் வெளிச்சத்தில் தெரிந்த அந்தக் காட்சி விசித்திரமாக இருந்தது.
அந்த மாடிப்பகுதியின் தெற்குப் பக்கமாக ஏதோ ஒன்று அசைவதுபோலத் தெரிந்தது. அந்த இடம் டிராகுலா பிரபுவின் அறையிலிருந்து முன்புற முற்றத்தை நோக்கிய பகுதிதான் என்பது தெளிவாகியது.
அந்த அறை ஜன்னல் வழியாக டிராகுலா பிரபுவின் தலை நீண்டு வெளியே வந்ததைப் பார்த்துவிட்டுத்தான் நிலைகுத்திப் போயிருந்தார் ஜோனாதன்.
ஜன்னல் வழியாக முதுகும் உடம்பும் நீண்டு அப்படியே கீழ்நோக்கி சுவரைப் பற்றிக் கொண்டு உடும்பு நகர்வதைப் போல அந்த உருவம் கீழ்ப் பகுதிக்கு வேகமாக செல்வதைப் பார்த்து ஜோனாதனின் தண்டுவடம் சிலிர்த்தது.
அப்படி அவர் இறங்கிச் செல்லும்போது அவர்மீது வழக்கமாகக் கிடக்கும் கருப்பு அங்கி வௌவாலின் சிறகுகளைப் போல காற்றில் இங்குமங்குமாக அலைந்து கொண்டிருந்தது.
இது என்ன அதிசயம்? உண்மையில் டிராகுலா பிரபு மனிதர்தானா? அல்லது மனித உருவில் வேறு ஏதாவது ஒரு உயிரா என்று பதட்டத்துடன் யோசித்தார்.
அதைப் பற்றி நினைக்க நினைக்க ஒட்டுமொத்த உடம்பும் கை கால்களும் நடுங்கத் தொடங்கின.
டிராகுலா பிரபு உடும்புபோல கீழே இறங்கும் காட்சியைத் திரும்பவும் பார்த்தார். பிரபு அவ்வாறு சுமார் இருநூறு அடிதூரம் கடந்து திடும்மென மறைந்து போனதைப் பார்த்தால் ஏதோ ஒரு குகைக்குள்ளோ அல்லது ஜன்னலுக்குள்ளோ போய் ஒளிந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
எப்படியோ… டிராகுலா பிரபு தற்போது இந்தக் கோட்டையை விட்டு வெளியேறியிருக்கிறார் என்பது திண்ணமாகியது. இந்த சமயத்தில் கோட்டையின் மற்ற பகுதிகளைப் பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தார்.
ஜோனாதன் தன்னுடைய அறைக்குச் சென்று ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். எல்லா அறைகளும் பூட்டித் தாழ்ப்பாள் போட்டிருப்பதைப் பார்த்தபடி கருங்கல் படிக்கட்டு களில் இறங்கி வந்தார்.
அவர் ஏற்கெனவே சென்றிருந்த விசாலமான பால்கனியை அடைந்தபோது அந்த வாசலும் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்தார்.
ஒருவேளை அந்த அறையின் சாவி டிராகுலா பிரபுவின் அறைக்குள் இருக்கலாம். அதைக் கண்டுபிடித்து இந்த வாசலைத் திறக்க முடியுமானால் தப்பிச் சென்றுவிட முடியும் என்று நினைத்தார்.
திடீரென ஒருவித துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கண்ணில் தென்பட்ட படிக்கட்டுகளிலெல்லாம் ஏறி இறங்கி, நுழைய முடிந்த ஒவ்வொரு அறைகளிலும் நுழைந்து சோதனை செய்தார் ஜோனாதன்.
அந்த அறைகளிலெல்லாம் நூற்றாண்டுகால பழைமை வாய்ந்த- தூசடைந்த கரையான் புற்று மேவியிருந்த நாற்காலிகளைத் தவிர வேறு ஏதும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டார்.
அதன்பின்னர் மாடிப்படியின் மேல்புறத்திலிருந்த சிறிய அறை ஒன்றைக் கண்டுபிடித்தார். அதன் பூட்டியிருந்த கதவை ஓங்கி ஒரு உதை உதைத்தபோது அது திறந்து கொண்டது. பின்னர் ஒரு வாசல் வழியாக அங்கிருந்து வெளியேறினார்.
தென்புறத்தில் வரிசையாக ஏராளமான அறைகள் இருந்தன. அவற்றின் ஜன்னல்கள் மேற்குப்புறமாக அமைக்கப்பட்டிருப்பதைக் கவனித்தார். கோட்டையின் மேற்குப்புறம் பெரிய தாழ்வாரமாக இருந்தது. அதைத் தாண்டி உயர்ந்த மலை வரிசைகளும் செங்குத் தான பாறைகளும் காணப்பட்டன.
ஜோனாதன் அப்போது தான் நின்று கொண்டிருந்த இடத்தை சுற்றும்முற்றும் பார்த்தார். அது பழங்காலத்து அரண்மனையின் அந்தப்புரப் பெண்கள் வசித்த பகுதிபோல் இருக்க வேண்டும் என நினைத்தார்.
ஏனென்றால் அங்கே பளபளப்பான வீட்டு உபயோகப் பொருட்களும் அழகான ஜன்னல் திரைச்சீலைகள் போன்றவையும் அவற்றை அடையாளப்படுத்தின.
விளக்கு வெளிச்சத்தில் ஒவ்வொன்றாகப் பார்க்கப் பார்க்க ஜோனாதனின் நரம்புச்சிறைகளில் ஒருவிதமான நடுக்கம் பரவியது. தான் அப்போது நின்று கொண்டிருக்கும் அறை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏதோ ஒரு அரசகுமாரியின் அறையாகத் தான் இருக்கும் என்பதை உணர்ந்தபோது இன்னும் கூடுதலாக பயம் அவரைப் பற்றிக் கொண்டது.
தான் வந்து மாட்டிக் கொண்டிருக்கும் பகுதியைப் பற்றி நினைக்க நினைக்க, தலையைப் பிய்த்துக் கொண்டு ஓடிவிடலாம் போலத் தோன்றியது.
அன்றைய சம்பவங்கள் குறித்து டைரிக்குறிப்பு எழுதுவதற்காகத் தன்னுடைய அறைக்குத் திரும்பிச் சென்று எதை எதையோ எழுதி முடித்தாலும், டிராகுலா பிரபுவைப் பற்றிய ஆர்வம் மட்டும் குறைந்தபாடில்லை.
அவரது எச்சரிக்கையை மீறிச் செயல்பட்டால் தன்னை ஒரு அடிமையாக நடத்த முடிவு செய்துவிடுவார் என்று தோன்றியது.
தன்னுடைய அறையிலிருந்து எழுந்து புராதன காலத்து இளவரசிகள் தங்கியிருந்த அந்தப்புரப் பகுதிக்குச் சென்று அங்கேயே ஓய்வெடுக்க முடிவு செய்தார் ஜோனாதன்.
அங்கே ராஜதோரணைமிக்க ஒரு பெரிய சோபா காணப்பட்டது. அதனைச் சுவரோடு சேர்த்து இழுத்துப் போட்டு படுத்தபடி வெளியே காணப்படும் பயங்கர அழகைப் பார்த்தார் ஜோனாதன்.
புராதனமான அந்த அறையில் படர்ந்து கிடந்த தூசியையும் நெடியையும் கண்டுகொள்ளாமல் படுத்துக் கிடந்தவர் எப்போது உறங்கினார் என்றே தெரியாமல் ஆழ்ந்து உறங்கிப் போனார்.
அங்கே திடும்மென ஒரு மெலிதான சப்தம் கேட்டு ஜோனாதன் விழித்தபோது முற்றிலும் அசாதாரணமான ஒரு காட்சியைக் கண்டு நடுங்கிப் போனார்.
அந்த பால்கனியில் நிலவின் ஒளியைவிட வெளிச்சமான மூன்று அழகிகள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களின் ஆடை அலங்காரங்கள் – அவர்கள் மேல்தட்டு வர்க்கத்து குடும்பப் பெண்மணிகள் என்பதைப் பறைசாற்றின. தான் காண்பது கனவா, நனவா என்று நினைத்த ஜோனாதன் திரும்பவும் அவர்களை வெறித்துப் பார்த்தார்.
அப்போது அந்த மூன்று இளம் அழகிகளும் மெல்ல நடந்து வந்தபோது, அந்த தூசு படர்ந்த அறையில் அவர்களது பாதத்தின் தடயம் ஏதும் பதிவாகவில்லை என்பதைக் கவனித்தார்.
மேன்மேலும் மிரண்டு கொண்டிருந்த ஜோனாதனால், தன்னுடைய உடம்பை படுத்த இடத்திலிருந்து ஒரு இம்மிகூட நகர்த்த முடியவில்லை. உடம்பு முழுவதும் மரக்கட்டைபோல அசைக்க முடியாதபடி இருந்தது.
அந்த அழகிய இளம் பெண்கள் ஜோனாதனை நெருங்கிப் பார்த்தபடி தங்களுக்குள் ஏதேதோ மந்திரம் போலப் பேசிக்கொண்டனர்.
தொடரும்…