இதுவரை தான் வாசித்த எந்த ஒரு புத்தகத்தி லாகட்டும் வரைபடங்களாகட்டும் நிலப்பகுதி பற்றிய செய்திகளிலாகட்டும் “டிராகுலாக் கோட்டை’ என்பதைப் பற்றி ஜோனாதன் ஹார்க்கர் எந்த ஒரு தகவலையும் அறிந்திருக்கவில்லை.
டிராகுலா பிரபு எழுதியிருந்த கடிதத்தில் அவர் குறிப் பிட்டிருந்த பிஸ்ட்ரீடஸ் நகரத்தின் பெயர் மட்டும் எப்போதோ கேள்விப்பட்டதாக இருந்தது.
கார்பெத்தியன் மலைப்பகுதி என்பது அந்த நாட்டின் ஒட்டுமொத்த மூட நம்பிக்கையின் இருப்பிடமாகத் திகழ்வதை தன்னுடன் பயணம் செய்பவர்கள் கூறியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.
ஜோனாதனுக்கு மட்டும்தான் தூக்கம் வரவில்லை. ஆனால் அந்த லாட்ஜிலுள்ள எல்லாரும் அகண்ட உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
தொடர்ந்து இடைவெளியில்லாது இரவு முழுவதும் ஊளை யிட்டுக் கொண்டிருந்த நாய் அவரது நிம்மதியையும் உறக்கத்தையும் துரத்திவிட்டது.
விடியும்போதுதான் கண்ணயர்ந்தது போலிருந்தது. யாரோ தட்டி எழுப்பினர். காலைக்கடனை முடித்துவிட்டு, சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு திரும்பவும் பயணத்தைத் தொடர்வதற்கு ரயில் நிலையம் சென்றார்.
இயற்கை கொஞ்சும் பசுமையான நிலப்பகுதி நடுவே பகல் நேரத்து ரயில் பயணம் சென்று கொண்டிருந்தது.
அழகிய நதிகளையும் ஆறுகளையும் மலைப்பகுதிகளையும் புகைவண்டியானது விரைந்து கடந்து கொண்டிருந்தது.
விதவிதமான மனிதர்கள், தடித்த சாக்கு மாதிரியான முரட்டுத்துணி உடைகளணிந்தவர்கள், பெரிய தொப்பிகளணிந்த மனிதர்கள் என எல்லாரையும் பார்க்க ஜோனாதனுக்கு வித்தியாசமாக இருந்தது.
சூரியன் அடிவானத்தில் போய் சிவந்து காணப்பட்டபோது புகைவண்டி பிஸ்ட்ரீடஸ் நகரை அடைந்தது.
ஜோனாதன் ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்து சுற்றிலும் பார்த்தார். தான் நின்றுகொண்டிருக்கும் இடத்தைப் பற்றி நினைத்தபோது உடல் முழுவதும் இனம்புரியாது நடுங்கியது.
இந்த இடம் புக்கோவினாவுக்கு செல்லும் போர்கோ கணவாயின் எல்லைப் பகுதி. இங்குதான் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நான்கைந்து முறை மிக பயங்கரமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மூன்று வார காலத்திற்கும் மேலாக நீடித்த பயங்கரமான ஒரு போரில்,ண பதின்மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ரத்தக்களறியாகக் கொல்லப்பட்டது இங்குதான்.
டிராகுலா பிரபு கடிதத்தில் கூறியிருந்த அறிவுரையின்படி, ஜோனாதன் அங்கிருந்து “கோல்டன் கிரவுன்’ ஹோட்டலுக்குச் செல்ல விரும்பினார்.
ரொம்பவும் புராதனமான கட்டிடமாக அந்த ஹோட்டல் இருப்பதைப் பார்த்ததும் அவருக்கு சந்தோஷமாக இருந்தது. அந்த வாசலில் நின்றுகொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு, ஒருவேளை அவர்களும் தன்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று நினைத்தார்.
அவர்கள் அணிந்திருந்த உடையைப் பார்த்தபோது விவசாயிகளைப் போலத் தோன்றியது. அப்போது அங்கிருந்த வயதான மாது ஒருவர், “”நீங்கள்தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஆங்கிலேயர் என்று நினைக்கிறோம். சரிதானே?” என்றார்.
மெலிதான புன்னகையுடன், “”ஆம்! நீங்கள் நினைத்தது சரிதான். நான்தான் ஜோனாதன் ஹார்க்கர்” என்று கூறினார்.
அப்போது அந்த வயதான பெண்மணி அங்கிருந்த ஒருவரைப் பார்க்கவும், அந்த மனிதர் உடனே அங்கிருந்து சென்று ஒரு கடிதத்துடன் வந்தார்.
டிராகுலா பிரபு கொடுக்கச் சொன்னதாக அந்த கடிதத்தைக் கொடுத்தார்.
ஜோனாதன் அதனைப் பிரித்து வாசித்தார்.
“அன்புள்ள சிநேகிதருக்கு…
உங்களது வருகை கார்பெத்தியன் மலைப்பகுதிக்கு நல்வரவாகுக. உங்களது வரவை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தாங்கள் இன்றைய ராத்திரிப் பொழுதுக்கு அங்கேயே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த இடத்திலிருந்து பொக்கோவினாவுக்குச் செல்லும் குதிரை வண்டி நாளைக்குப் பகல் நேரத்தில் மூன்று மணிக்குப் புறப்படும். அந்த வண்டியில் உங்களுக்கு முன்னதாகவே பதிவு செய்துள்ளேன். என்னுடைய குதிரை வண்டி போர்கோ கணவாய் அருகில் காத்துக் கொண்டிருக்கும். அந்த குதிரை வண்டி உங்களை என்னுடைய கோட்டைக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும்.
உங்களின் சிநேகிதன்,
டிராகுலா.’
அதன்பின் ஜோனாத
னை அந்த மனிதர் அவருக்கு ஒதுக்கப் பட்ட அறைக்கு அழைத்துச் சென்று படுக்கச் செய்தார். பயணக் களைப்பு காரணமாக ஜோனாதனும் படுத்தவுடனே தூங்கிவிட்டார். அடர்ந்த மரக்கூட்டங்களுக்கு மேல்புறத்தில் சிவப்புச் சூரியன் வெளிப்பட்டபோது ஜோனாதன் விழித்துக் கொண்டார்.
அந்த ஹோட்டல் பணியாளர்கள் பரபரப்புடன் அவரைக் கவனித்துக் கொண்ட பாங்கு, ஒருவேளை டிராகுலா பிரபுவின் அறிவுரைப்படி இருக்குமோ என்று நினைக்கத் தோன்றியது.
அந்த மலைப் பகுதியைப் பற்றி அங்கிருந்த யாரிடம் விசாரித்தாலும் எந்த பதிலும் அவரால் பெற முடியவில்லை. அவர்கள் எதுவுமே தெரியாதது போல நடித்தது புரிந்தது.
மேலும் அவர் பேசிய ஜெர்மன் மொழி தெரியவில்லை என்றும் அவர்கள் கூறினர். ஆனால் ஜோனாதன் ஜெர்மானிய மொழியில் இதுவரை கேட்ட பல கேள்விகளுக்கு அவர்கள் பதில் கூறியிருப்பதி லிருந்தே அவர்கள் நடிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டார்.
ஜோனாதன் கேள்வி கேட்டபொழுதெல்லாம் தங்களுக்குள் அவர்கள் கைகளை அசைத்து பரிபாஷையாகப் பேசிக் கொண்டனர்.
அதற்குமேல் அந்த வயதான பெண்மணியிடம் டிராகுலா பிரபுவைப் பற்றி எது கேட்டாலும் அல்லது அவரது அரண்மனை யைப் பற்றிக் கேட்டாலும், படக்கென்று தனது நடுங்கும் கைகளை உயர்த்தி சிலுவை அடையாளம் செய்வதை வழக்கமாகக் கொண்டாள்.
அவர்கள் எல்லாருக்குமே டிராகுலா பிரபுவைப் பற்றிப் பேசுவதற்கு தயக்கமாக இருப்பது தெரிந்தது.
ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் பயணத்தைத் தொடர வேண்டி இருந்ததால் வேறு யாரிடமாவது இதனைப் பற்றி பேசுவதற்கு அவரால் முடியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது. அந்த ஹோட்டல் பணியாளர்கள் அனைவருக்குள்ளும் ஒரு விதமான நடுக்கம் இருப்பதை அவர்களது பேச்சிலிருந்தே தெரிந்து கொண்ட ஜோனாதனுக்கு மனம் சதா கலவரப்பட்டுக் கொண்டே இருந்தது.
அவர் புறப்படும் நேரத்தில் அந்த வயதான பெண்மணி ஓடி வந்து, “”தம்பி, நீங்கள் இன்றைக்கே அவசியம் பயணம் செல்ல வேண்டுமா… பயணத்தைத் தவிர்க்க முடியாதா?” என்று கேட்டாள்.
அந்தப் பெண்மணியின் குரலில் ஒரு விதமான பதட்டமும் பயமும் மையம் கொண்டிருந்தது.
“அங்கே செல்வதற்காகத்தான் நான் புறப்பட்டு வந்திருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகத்தான் நான் வந்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது நான் இன்றைக்குப் புறப்படுவதைத் தவிர்க்க முடியாது” என்றார் அவர்”.
“இன்றைய நாள் எப்படிப்பட்ட நாள் என்பது உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியும். மே நான்காம் நாள்.”
“அது சரி; இன்றைக்கு என்ன முக்கியமான சேதி தெரியுமா உங்களுக்கு?”
தொடரும்…