Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » மிரட்ட வரும் பேய் – 9

மிரட்ட வரும் பேய் – 9

பசுமை பரந்த வயல்வெளியாய்ப் பெற்று தென்னை, மா, பலா என்று பலவகை மரங்கள் ஒருபுறம் படை சூழ அழகிய இயற்க்கையமைப்பைக் கொண்ட அமைதிக்கு எடுத்துக்காட்டாய் ஒரு அழகிய சிறு கிராமம். விவசாயமே அந்த கிராம மக்களுக்கு பிராதானத் தொழிலாக இருந்தது..ஆதலால் இரவு வேளைகளில் வெளியில் செல்லும் விவசாயிகள் ஏதாவதொரு விளக்குத் துணையுடன் தான் சென்று வருவார்கள். கள்ளமில்லா உள்ளம் படைத்த இவர்களின் மனதில் காத்து,கருப்பு,பேய் என்று இந்த ஆவிகளின் மேல் அபார நம்பிக்கையும் இருந்து வந்தது. காரணம் அவர்கள் நம்புவதுபோல் இரவு நேரங்களில் அந்தப் பகுதிகளில் சில நடமாட்டங்கள் உள்ளதை பலரும் கண்டிருப்பதே காரணமாகும். ஆகவே மாலை நேரம் முற்றுப்பெற்று இரவு வேலை தொடங்கியதும் துணையின்றி யாரும் வெளியில் செல்வது இல்லை.

அன்று ஒரு நாள்…
விவசாயி ஒருவர் தனது வயல் வேலையை முடித்து விட்டு வருவதற்கு சற்று நேரமாகிவிட்டது. வேலையில் அதிக கவனம் செலுத்தி விட்டதால் நேரம் போனது கூட தெரியவில்லைஅவருக்கு… அட.. நேரமாயிட்டு போல யாரையும் காணமே..பசங்கல்லாம் போய்த் தாங்கெளா…என தனக்கே உரித்தான கிராமத்து பாணியில் தனக்குத்தானே பேசிக்கொண்டார். அவருக்குத் துணையாய் எந்நேரமும் அவரையே சுற்றிவரும் வளர்ப்பு நாயும் கூடவர … வாடா ராஜா நாம போலாம் என்றபடி.. நாலாபுறமும் பார்த்தவாறு அங்கிருந்து நடையைக் கட்டினார். அதோடு பயத்தைப் போக்க ஒரு பழைய சினிமா பாட்டான அச்சம் என்பது மடமையடா..அஞ்சாது திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு….என்றபடி பாடிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது…
பவுர்ணமி நிலா வெளிச்சம் பளிச்சென பசுமைவயல்களின்மேல் பட்டுக்கம்பளம் விரித்தது போல் மின்னிக் கிடந்தது. வயல் வரப்போரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த திருஷ்டி பொம்மைகள் இவரைப் பார்த்து இலிளித்துக் காட்டுவது போல் நின்று கொண்டிருந்தது. இளம் நெற்கதிர்கள் வீசும்தென்றல் காற்றில் ஒன்றோடு ஒன்று உராய்ந்து சல்ல்ல்லல்…. என்ற சப்தத்தை சளைக்காமல் எழுப்பிக் கொண்டிருந்தது. பக்கத்து வயல் வரப்பு களத்து மேட்டில் நிற்கும் அந்த ஒத்தைப்பனைமரம் மட்டும் கருப்பாய் நீண்டு நிமிர்ந்து தன்னந்தனியாக கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது. அப்போது சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு வருகையில் அந்த ஒத்தைப் பனைமரத்தடியில் குட்டிப் பனைமரம் போன்று கருத்த தேகத்தில் ஒரு உருவம் உட்கார்ந்து இருப்பதுஅந்த நிலாவெளிச்சத்தில் கண்களுக்கு தெரிந்தது. அப்போது மணி சுமார் இரவு 11.ஐத் தாண்டியிருக்கும்..

இது என்னான்ண்டு தெரியலையே. நாம வேற இன்னக்கிண்டு பாத்து ஒத்தையா போறோம். என்று அந்த விவசாயி தனக்குள் புலம்ப ஆரம்பித்தார். இந்தப்பனமரத்துப் பக்கமா ஒரு காடேறி அலையிறதா ஊருக்குள்ளே பேசிக்கிடுவாங்க அதாத்தான் இருக்குமோ..? என்று தன்னைத்தானே கேள்விகேட்டவாறு கால்கள் தடுமாற மனசு பதைபதைக்க மீண்டும் ஒரு முறை அதனைப் பார்த்தார். அப்போது பரட்டைத் தலையுடன் தலைவிரி கோலமாய் அதன் கரை படிந்த கோரைப்பற்களைக் காட்டியவாறு இவரை வெறிக்க வெறிக்க பார்த்தது. அந்த உருவத்தை நோக்கி இவரின் பார்வை திரும்பியதும்….

ஹாஹ்ஹ்ஹ்ஹா…ஹ..ஹஹ்ஹ்ஹாஹா…என சிரிக்க ஆரம்பித்தது. பிறகு அதன் கூரிய விரல் நிகங்களைக் நீட்டியவாறு இவரை அந்த உருவம் அருகில் அழைத்தது. ரோமங்கள் சிலிர்த்து உடல் வியர்த்து செய்வதறியாது திகைத்துப் போய் கவனத்தை வேறு திசையில் திருப்பியவாறு கடவுளை வேண்டிக் கொண்டபடி… இது சந்தேகமே இல்லெ அந்தக் காடேறிப் பேய் தான் நிக்கிது என்று சொல்லியவாறு வேகமாக நடக்கலானார். ஒருவழியாக அதைக் கடந்து வந்து மயான வழிப்பாதையை அடையும் போது…

[ அந்த ஊருக்கென ஒதுக்கப் பட்டிருக்கும் சின்னதொரு மயானம் உள்ளது. வயலுக்கு வருவதானால் ஒத்தையடிப்பாதையில் அந்த இடுகாட்டைக் கடந்து தான் ஊருக்குள் செல்ல முடியும் ]

அந்த இடுகாட்டுக்குள் இருக்கும் கல்லறையின் அருகிலிருந்து யாரோ அழுது புலம்பும் சப்தம் அந்த அமைதியைக் கிழித்தவாறு இவரின் செவிகளில் வந்து மோதியது. அழுகுரல் வந்த பக்கமாக தன் ஓரக்கண்ணால் திரும்பி பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆம்..அந்தக் கல்லறையை கட்டிப்பிடித்தவாறு கறுத்ததேகத்துடன் அழுக்குபடிந்த ஒரு உருவம் அழுது கொண்டிருந்தது. இந்த அழுகுரலைக் கேட்டு அதிர்ந்து பயத்தில் தானும் அழனும்போல் தோன்றியது. ஆண்டவா…என்னடா… சோதனையிது…இன்னெக்கிண்டு பாத்து நா தனியா மாட்டிக்கிட்டேனே.. என்று புலம்பிக் கொண்டே மனதை ஒருவழியாக தனக்குள் சமாதானம் செய்தவராய் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மின்னல் வேக நடையில் ஊரை வந்து அடைந்தார். ஊர்வந்ததும் அந்த இரவில் ஊர் பெரியவர் வீட்டைத்தட்டி எழுப்பி நடந்த அனைத்தையும் சொல்லிக் காண்பித்தார்.

எல்லா செய்திகளையும் ஒன்று விடாமல் கேட்ட ஊர் பெரியவர்… செய்வதறியாது திகைத்து நின்றார்.. அப்புடியா.. ஏண்டா நீ நேரங்காலத்தோட வேலைய முடிச்சுட்டு திரும்ப வேண்டியது தானே…. ஏதோ உன் நல்லநேரம் அந்த காடேறிப்பேய்ங்க ஒன்னே உசுரோட விட்டுச்சே நீ கொஞ்ச தைரியமானவெனா இருக்கிறதுனால ஒன்னய விட்டுடுச்சி இல்லேன்னா இந்நேரத்துக்கு என்ன ஆயிருக்கும். தண்ணி பாச்சபோனானாம் தண்ணி பாச்ச… சரி நீ வீட்டுக்கு போ. காலைல பேசிக்கலாம் என்று சொல்லி கோபத்துடன் அவரை அனுப்பிவைத்தார்.

அந்தப் பூங்காட்டு மைனாக்களின் கீ..கீ..கிர்..கிர்..சப்தத்தில் பொழுது விடிந்து விட்டதை ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு வயலுக்குச் செல்லும் விவசாயிகள் வேலைக்குச் செல்ல தன்னை ஆயப் படுத்திக் கொண்டு வெளியில் வரத் தொடங்கினார்கள்.இரவு நடந்த அந்தக் காடேறிப் பேய் விஷயம் அனைவருக்கும் காட்டுத் தீ போல் பரவ ஆரம்பித்தன.

வாங்கப்பா எல்லாரும் அந்த சம்பவம் நடந்த எடத்தெ போய் பாப்போம்.. என்று அந்தக் கூட்டத்தில் ஒருவர் ஆவலாய் அழைத்ததும் அனைவரும் அந்த இடத்தை நோக்கிச் சென்றார்கள். அங்கு…

மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் அந்தப் பனைமரத்தடியில் தூங்கிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. அந்த நபரைப் பார்த்ததும் ஒருத்தர் முகம் ஒருத்தர் பார்த்தவாறு….அப்போ அந்த மயானத்தில பாத்தது…..அங்கும் ஒரு மனநிலை சரியில்லாத ஒருவன் தூங்கி எழுந்தவாறு நின்று கொண்டிருந்தான். அப்போ….இவ்ளோநாளா இந்தப் பைத்தியங்கள பாத்துதா பேய்ன்டு நெனச்சி பயந்துக் கிட்டு இருந்தோமா.? என்று ஒருவர் முனுமுனுத்தார்

இந்த அனாதரவா மனநிலெ சரியில்லாத பைத்தியங்க இப்புடி ராத்திரிநேரத்துல வந்து கண்ட கண்ட எடத்துலே படுத்துக் கெடந்து எல்லாறையு பயங்காட்டுதுங்களே இதுங்களுக்கு கவுருமண்டு ஒரு காப்பகத்தெ அமைச்சி கொடுத்தா அதுங்களுக்கும் பாதுகாப்பா இருக்கும். நமக்கும் இந்தப்பேய், பிசாசு என்ற பயம் இல்லாம இருக்கும்ல என்று அந்த ஊர்பெரியவர் முனுமுனுத்தபடிச் சென்றார்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top