அது ஒரு மாலை நேரம்…
பள்ளியில் படிக்கும் நண்பர்கள் இருவர்கள் சேர்ந்து கால்நடையாக பொழுது போக்கிற்காக அந்த கடற்கரைச் சாலையை நோக்கி நடந்து செல்கிறார்கள். இருவரும் வகுப்பில் நடந்த பல சுவராஸ்யமான நிகழ்வுகளையும், படிப்பைப் பற்றியும் பள்ளியில் அடித்த அரட்டையைப் பற்றியும் பேசிக் கொண்டு போனதில் நேரம் போனதே தெரியாமல் கடல்க் கரையின் ஓரத்தை வந்தடைந்து விட்டார்கள். மாலைக் கதிரவன் மறைந்து இருட்டத் தொடங்கிய நேரம் அது.
ஆள் ஆரவாரமற்ற அந்த இடத்தில் இந்த இருவர் மட்டுமே தனியாக நின்று கொண்டு கடல் அலைகளின் சீற்றத்தை கொஞ்ச நேரம் வெறிக்க வெறிக்க பார்த்தவர்களாய் இருக்கும் போது…நரிகள் ஊலையிடும் சப்தம் மட்டும் எங்கிருந்தோ வந்து காதுகளை துளைத்தன. சுற்றும் முற்றும் பார்க்கையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவுமே தென்படவில்லை. கடல் அலைகளின் சீற்றம் மட்டும் மேலும் உயர்ந்து கொண்டே விழுங்கி விடுவதைப் போல் பாய்ந்து வந்து கொண்டு இருந்தன. தனிமையில் நின்று கொண்டிருந்த அவர்களை பயம் கவ்விக்கொண்டன.
பயத்தில் உறைந்து போன அவர்களில் ஒருவன்… டேய் மாப்ளே வாட போய்டலாம். யாருமே இல்லடா… நம்ம மட்டுந்தாண்டா இங்கெ நிக்கிறோம்… பயமா இருக்குடா
ஏன்டா இப்புடி பயந்து சாவுரே ! என்று சொல்லியபடி… சரி சரிவா போயிடலாம்… என்று பெரிய அதிரடி அஞ்சா நெஞ்சன் வீரனைப் போல் வீராய்ப்பாய் பேசியவன் மனதிற்குள் அவனையும் அறியாது பயம் தொற்றிக் கொண்டது.
இப்போ என்னடா பண்றது இங்கேருந்து நம்ம ஊரு இன்னும் 2 கிலோ மீட்டார் தூரம் இருக்கேடா….நல்லா மாட்டிக் கிட்டோம்டா…என்று சொன்னவர்களின் நடை சற்று வேகமெடுத்தது. இவர்களின் வேக நடைக்கு நரி ஊலைவிடும் சப்தம் சற்று குறைவாக கேட்டன. நiடை நீல நீல சப்தம் நிசப்தம் ஆனது. கொஞ்ச தூரம் வந்த பிறகு சுற்றும் முற்றும் ஒருநண்பன் திரும்பிப் பார்த்தவனாய் வந்தான் அப்போது மீண்டும் ஒரு திகில் அவர்களுக்கு காத்திருந்தது.
இடது பக்கமாக உள்ள காட்டின் ஒரு ஓரப்பகுதில் தீ கொழுந்து விட்டு எறியும் ஜுவாலை கண்களுக்குத் தெரிந்தது. அது மட்டுமல்லாது. சில பேச்சு சப்தம் கூட காற்றலையின் வாயிலாக கேட்கத் துவங்கின அந்தப் பேச்சு மனிதர்கள் பேசும் பேச்சுபோல அல்லாது மாறுபட்டுப் போய் பேச்சில் குரல் தளர்ந்து வீரியம் நிறைந்ததாகவும்,ஆவேசப்பட்ட தாகவும் இருந்தன..
இந்த கடற்கரைப் பக்கமா போகாதே அங்கே மோகினி பிசாசு கொல்லிப் பிசாசு நிக்கிறதா எங்கம்மா பல தடவெ சொல்லி இருக்காங்கடா அது இப்போ நிஜமா போச்சி…
சும்மா வாயேன்டா …… என்று முனுமுனுத்தபடியே வேகமாக ஒருத்தனை முந்தி ஒருத்தன் ஒருத்தனை முந்தி ஒருத்தன் என்று வேகமாக வந்து கொண்டிருக்கும் போது சற்று தூரம் கடந்து வந்த பிறகு கிழக்குப் பக்கமாய்த் திரும்பிப் பார்த்தவன் மீண்டும் அதிர்ச்சி அடைந்தான்.!
அந்த கும்மிருட்டில் திட்டுத் திட்டாக அந்தரத்தில் வெளிர்நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் ஏதோ இனம் புரியாத ஒன்று நிற்ப்பது போல காட்சி தந்தது. இதைப் பார்த்த இருவரும் செய்வதறியாது திகைத்துப் போய் …. எல்லாம் உன்னாலே தான்டா நான் அப்பவே சொன்னேன் இந்தப் பக்கமெல்லாம் போக வேண்டாண்டு அநியாயத்துக்கு நாம இப்போ மோகினிப் பிசாசுக்கு பலியாகப் போறோம். என்று அழுது புலம்பினான்.
சரிடா… வருவது வரட்டும் நாம எங்கயும் திரும்பிப்பாக்காமெ வேகமாக நடந்துடுவோம். இன்னும் கொஞ்ச தூரந்தாண்டா ஊர் எல்லே வந்துடிச்சிடா..என்று சொல்லியபடி பயந்து நடுங்கியவர்களாய் வந்து சேர்ந்தார்கள்.
ஊர் வந்தடைந்ததும் டேய் நாம கடல்கரை ரோட்டுப் பக்கம் போனது, எதையும் உங்கவீட்ல சொல்லாதே..அப்பறம் உங்க அம்மா என்னயெ திட்டுவாங்க. நானும் சொல்ல மாட்டேன் என்னா புரிஞ்சதா… என்று அறிவுறுத்தியபடி அவரவர் வீட்டுக்சென்றனர்.
அடுத்தநாள் பள்ளிக் கூடத்திற்க்குச் செல்லும் வழியில் ஒருவர் இடைமறித்து..தம்பீங்களா நீங்கதான் நேத்து ராத்திரி கடல் பக்கமா வந்தீங்க.. அந்த தீப்பந்த வெளிச்சத்தில் உங்க மூஞ்சி தெரிஞ்சது. இனிமே ராத்திரி நேரத்துலே அந்தப் பக்கமெல்லாம் வராதீங்க..சரியா.. என்று அறிவுறித்தியபடி சென்றார். .
சற்று நேரம் அவர் சொன்னது ஏதும் புரியாதவர்களாய் குழம்பியவர்களுக்கு பட்டென புத்தியில் உதித்தன.இவர்கள் ஆள் ஆரவாரமற்ற அந்த இடத்தை சாதகமாக்கிக் கொண்டு மது,மாது,சூது போன்ற சமூக விரோத செயல்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று…
அடுத்து திட்டுத்திட்டாக வெளிர்நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உப்புக்கள் குமிக்கப்பட்டு அதனைச் சுற்றி ஓலைகளாலும் பலகைகளாலும் பாதுகாப்பு செய்துவைத்திருப்பதால் இருட்டில் மேற்பகுதி மட்டும் வெண்மையாக பளிச்சென்று அந்தரத்தில் மிதப்பதுபோல தெரிந்திருக்கிறது. அதுவே அவர்களின் கண்களுக்கு மோகினியாகவும் பேயாகவும் தெரிந்திருக்கிறது..
இந்த உண்மை தெரிந்ததும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து அப்போ … இப்புடித்தான் இருட்ல எதையாவது பாத்துட்டு எல்லாரு பேய், பிசாசுண்டு சொல்லிக்கிட்டு அலைராங்களா !? என்று ஆச்சரியத்துடன் நண்பனைப் பார்த்துக் கேட்டான்.
தொடரும்…