இது மூடநம்பிக்கைக்கு மூட்டைகட்டும் கற்பனைப் திகில் தொடர்! மனிதமனம் உருவாக்கும் பேய் தான் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்தக் கற்பனையான பேயை விரட்டுவதாகச் சொல்லி பிழைப்பு நடத்து கின்றவர்கள். சமூகத்தில் இவற்றை போலியான பிரம்மையை ஏற்படுத்தி பிறரை பயமுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு சரியான சாட்டையடி கொடுக்கும் நோக்கில் மக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நன்நோக்கில் இந்த தொடர் வெளிவர உள்ளது. தொடராக வெளிவர உள்ள இவற்றை தைரியமாக நீங்கள் வாசிக்கலாம்.
நடுநிசி இரவு 12.30 மணி சிறுநீர் கழிக்க போகவேண்டும். தூக்கம் கண்களில் நிறைந்தபடியே முழு நினைவு வருமுன்பாகவே எழுந்து வீட்டுப் பின்புறக் கதவைத் திறந்து கொண்டு நடந்தான் அவன். வீட்டு பாத் ரூம் வீட்டுப்பின்பகுதியில் குட்டையான மதில்சுவற்றை ஒட்டியுள்ளது. அதன் வெளிப்புறப்பகுதி முழுதும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அடர்ந்த கருவேலன்காடு. ஜில்லென்ற காற்று மட்டும் தேகத்தை வந்து தீண்டிக்கொண்டிருந்தன. எதையும் உணராதவனாக தூக்கக் கரக்கத்திலேயே பாத் ரூமுக்கு சென்று விட்டு வெளியே வந்தபோது…
அந்த அமைதி நிசப்தத்தை களைக்கும் விதமாக திடீரென நாய்கள் குரைக்கும் சப்தம்.அதிலும் ஒருவித அழுகை கலந்த நடுங்கும் குரலில்…கருவேல மரத்தின் உச்சியில் ஆந்தைகள் விழியை அகண்டு காட்டியபடி பயமுறுத்திக் கொண்டு அமர்ந்திருந்ததுடன் தனக்கென உரித்தான திகிலை ஏற்ப்படுத்தும் மெல்லிய கூக்கூ..கூக்கூ.. குரலை குரவளைக்கடியிலிருந்து எழுப்பிக் கொண்டிருந்தன.
தூக்கத்திலிருந்து விடுபட்டவனாய் பாத் ரூமிலிருந்து பயத்தைக் கவ்வியபடியே வெளியே வந்தான். அப்போது அவன் பார்வை அந்தக் கருவேலங்காட்டுப் பக்கம் சென்றது.கூர்ந்து ஒருநிமிடமேனும் எதார்ச்சையாய் அந்தக்காட்டைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அக்குளிர்க் காற்றிலும் உடல் வியர்த்துக் கொட்டின. காரணம் என்னவென்றால் காட்டின் நடுப்பகுதியில் அரைகுறை நிர்வாணத் தோற்றத்தில் வெள்ளைநிறத்தில் தென்பட்ட ஒரு அசைவு அது இவனை அன்பே வா…அருகில் வா…என்று சொல்லி அழைப்பது போல இருந்ததோ என்னமோ தெரியவில்லை.
ஆதலால்தான் மூச்சி நிற்காத குறையாக மூச்சிரைக்க ஓடினான். ஓடியவேகத்தில் கால் இடறி கழனிப்பானையில் தடுக்கி விழுந்து மீண்டும் எழுந்து ஓடியவனை பின்புறத்தில் படுத்திருந்த வீட்டுப் பூனை மிரண்டு எழுந்து குறுக்கே ஓடியதும் செய்வதறியாது பயத்தில் அவன் நிலை தடுமாறி முடிந்தும் முடியாமலும் வீட்டுக் கதவைத்திறந்து கொண்டு வீட்டுக்குள் வந்து விழுந்து மயங்கிப் போனான்.
இவன் போட்ட சத்தத்தைக் கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வீட்டார்கள் அனைவரும் எழுந்து விட… நடந்த நிகழ்வை அறிந்தவர்களாய்…. இந்த நேரத்துலே ஏன்டா தனியா வெளியெ போனே.! என்னய எழுப்பியிருக்கலாம்ல என்று அம்மா வசைபாட… சரி..சரி போய் பயப்படாம படு காலைல பேசிக்கலாம் என்று தூக்கம் கண்களைவிட்டுப் அகலாத நிலையில் சொல்லி விட்டுச் சென்று விட்டாள் அம்மா. சரிம்மா நீ போ என்று சொன்னவனாய் மீண்டும் படுக்கைக்குச் சென்றான். சிந்தனைகள் பேய் உருவில் வந்து அந்த இரவு முழுதும் அவன் உறக்கத்தை பாழ்படுத்தின.
விடியும் வரை விழித்திருந்ததில் கண்கள் சிவந்திருந்தன. காலையில் கண்ணாடியில் முகம் பார்த்து பயத்தால் மாறிப் போய் இருந்த தனது முகத்தை சரி செய்து கொண்டிருக்கும் போது…
அவன்தங்கை அருகில் வந்து பே… பேயி… என்று கிண்டலடித்துக் கொண்டு சப்தம் போட்டபடியே அண்ணே ராத்திரி என்ன அண்ணே நடந்திச்சு….என்று கேட்டாள். இரவு நடந்த திகில் சம்பவத்தையும்,கருவேலங்காட்டில் வெள்ளை நிற மோகினிப் பேயை பார்த்த கதையையும் மிரண்டவனாக தன் தங்கையிடம் சொல்லிக் காட்டினான். அவளோ இந்தக்கதையைக் கேட்டு சிறிதும் பயப்படாமல் அதிர்ச்சியடையாமல் சிரிக்கத் தொடங்கி விட்டாள். இவனுக்கோ ஒன்றும் புரிய வில்லை. ஒனக்கு என்ன பைத்தியமா…இல்ல அந்த மோகினி பிசாசு புடிச்சிடிச்சா..???
அப்போது அம்மா குறுக்கே வந்து ஏண்டா இங்கே வாயேன் என்று பின்புறமாக அழைத்துச் சென்று இரவு அவன் பார்த்து பயந்த இடத்தை கைநீட்டிக் காண்பித்து…. இதெ பாரு இதெ தானே பார்த்து ராத்திரி பயந்தே… அட போடா… இப்படி பயந்தாங்கோலி புள்ளையா இருக்கியே நீ ! என்று அம்மா சொன்னதைக் கேட்டு வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான்.
அது வேற ஒன்னும் இல்லீங்கோ அது பழைய கிழிந்து போன வெள்ளை வேட்டியை அம்மா தான் எடுத்து அந்தப்பக்கமாக விட்டு எறிந்திருக்கிறாள். அது கருவேல மரத்தில் போய் விழுந்து படர்ந்து கிடந்திருக்கிறது. அது கிழிந்து போன வேட்டி என்பதால் இருட்டில் இவன் பார்வைக்கு மோகினி உருவமாகவும் காற்றில் கருவேலமர அசைவில் இவனை நோக்கி வருவது போலவும் காட்சியளித்து இருக்கிறது.
தொடரும்…