நண்பகல் நழுவிக் கொண்டிருந்தது. பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டிருந்தன. ஒரு வழியாக எல்லா நண்பர்களும் நார்மலாகி இருந்தனர். அனைவரும் கீழே புறப்படத் தயாராயினர்.
அதே சமயம் பரமேஸ்வரனும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். சுருளித் தீர்த்தம் போய் தேடி விட்டு, ஏதோ சமவெளியில் எட்டு பேர் நிற்பதை பைனாகுலர் வழியே கவனித்து விட்டு வந்திருக்கிறான்!
தன்னைச் சூழ்ந்து நின்ற நண்பர்களின் ‘பேயடித்த’ தோற்றம் அவனுக்குப் பதற்றத்தைக் கொடுத்தது.
‘‘என்னடா ஆச்சு?’’ பரமேஸ்வரன் குழப்பத்துடன் தியாகுவை உலுக்கினான்.
‘‘பரமேஸ்வரா, நாங்க கண்டாத்ரி கோயிலைப் பார்த்தோம். இங்கே வந்தப்பறம் ஏதோ ஒண்ணு இவுங்க மூளையைத் தூண்டி பயங்கரமான மாயத் தோற்றங்களை ஏற்படுத்திடிச்சு. அத நிஜமுன்னு நம்பி இவங்க சாக இருந்தாங்கடா! ’’
பரமேஸ்வரன் நம்ப முடியாமல் திகைத்தான். நண்பர்கள் தங்கள் அனுபவங்களை விவரித்தார்கள்.
‘‘உ…உடனே போகலாம், வா’’ அனைவரும் அவசரப்பட தியாகு புன்னகைத்தான்.
‘‘கண்டாத்ரி கோயில் மர்மம் புரிஞ்சிடுச்சு! ப்ரில்லியண்ட்! அதத் தெரிஞ்சிகிட்டே போகலாமே’’
தியாகு ஹீரோவாகத் தெரிந்தான்.
‘‘சொல்லுடா, சொல்லுடா, சொல்லுடா’’ எட்டுப் பேரும் நச்சரித்தனர்.
தியாகு சொல்லத் தொடங்கினான்.
‘‘அதோ தெரிகிற மலைத்தொடர்களை பாருங்க. சூரியக் கதிர்கள் ஒரு குறிப்பிட்ட நாள்ல குறிப்பிட்ட கோணத்துல விழும்போது அந்த மலைத்தொடர்களோட நிழல் இந்தப் பாறை மேல விழுது – அது ஒரு கோயிலோட உருவத்துல தெரியுது. எப்படி நாம கை விரல்களை சேர்த்து பிடிச்சா அந்த நிழல் மான் உருவமாத் தெரியுதோ அப்படி. அதுதான் கண்டாத்ரி கோயில். இயற்கையை கடவுளா மதிக்கிற பழங்குடி மக்கள் கண்டாத்ரி நிழல் தேவதைக்குப் பிறந்த மகள்னு நம்புறத வச்சி பார்த்தோமானா அவங்க கோயிலும் நிழலாத்தானே இருக்கணும். அதத்தான் நாம பார்த்தோம். ’’
‘‘அதே சமயம் அதீத கதிர் வீச்சால இந்த மண்ணுல இருக்கற பாஸ்வரம் சூடாகுது. அதும்மேல கிடக்கிற இந்த வகை இலை தழைகள் பொசுங்கி ஒரு வித நெடியப் பரப்புது. இந்த நெடிதான் மூளையைத் தூண்டி பயங்கரமான மாயத் தோற்றங்களை ஏற்படுத்துது. அந்த மாயத் தோற்றங்களை நிஜமுன்னு நம்பி பள்ளத்தாக்கில குதிச்சி சாகறாங்க; இல்ல ஒருத்தரை ஒருத்தர் தாக்கிகிட்டு சாகறாங்க.. இயற்கையான இந்த விஷயத்தை காரணம் தெரியாமலேயே பழங்குடி மக்கள் தங்கள் பாதுகாப்புக்குப் பயன்படுத்திகிட்டாங்க. பாஸ்வரம் சூடாகித்தான் நெடி வரணும்னு இல்ல; எதிரிங்கள இங்க வரவழைச்சுட்டு கீழேயிருந்து ஒரு தீப்பந்தத்தை மேலே விட்டெறிஞ்சா கூடப் போதும். ஆட்டம் க்ளோஸ். ’’
‘‘தியாகு! உனக்கு ஏன்டா ஒண்ணும் ஆகல? ’’
‘‘மூக்கு ரிப்பேர்! ஜலதோஷம்டா; எந்த நெடி எப்படி வேலை செய்யும்? ’’
அவன் சொல்லி முடிப்பதற்குள் பரமேஸ்வரன் முந்திரிக் கொட்டைத்தனமாக ஊமத்தை இலையை ஒத்திருந்த அந்த இலைச் சருகை லைட்டரால் பொசுக்கி அதன் நெடியை முகர்ந்த அடுத்த நொடி…
அலறினான்.‘‘இது தியாகு இல்ல! இது தியாகு இல்ல!’’
அவன் மலை விளிம்பை நோக்கி ஓட ஆரம்பிக்க, அனுபவப்பட்ட மற்றவர்கள் அமுக்கிப் பிடித்தனர்; நாலு மொத்தும் மொத்தினர்!
எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்ப இன்னெரு கால் மணி நேரமானது.
நண்பர்களின் பாராட்டும் அரவணைப்பும் தியாகுவுக்கு கூச்சமாக இருந்தது. மொபைல் ஃபோனில் சிக்னல் கிடைத்த மறு விநாடி தன் வயதான தந்தைக்கு தெரிவிக்கப் போவதாக பரமேஸ்வரன் துள்ளி முடித்தான்.
‘‘தியாகுவோட மூக்கு மட்டும் நல்லா இருந்திருந்தா என்னவாகி இருக்கும்? ’’
எங்கேயோ சங்கொலி கேட்க, கூட்டம் திடுக்கிட்டு உறைந்தது; பிறகு சிரித்தது!
முற்றும்.