வேலாயுதமும் ஜெகனும் சித்தப் பிரமையிலிருந்து முற்றாக விடுபட்டு உள்ளதை உள்ளவாறே பார்க்கத் தொடங்கியிருந்தனர் ! அதற்கு மாறாக பழனிக்கும் ராகவனுக்கும் பாதிப்பு அதிகமிருந்தது! இடைப்பட்ட நிலையில் மற்றவர்கள்.
பழனியும் ராகவனும் குறுகலான பாதையில் இடது மூலையில் நின்றிருந்தவர்கள்.
சமவெளியின் இடது மூலையில் என்ன இருக்கிறது? போய்ப் பார்த்தாலென்ன?
ஜெகனிடமும் வேலாயுதத்திடமும் சொல்லி விட்டு தியாகு இடப்பக்கம் போனான். வேலாயுதம் தியாகுவின் இடத்தில் நின்று கொள்ள, ஜெகன் தியாகுவுக்கு இடைஞ்சல் தராத, அதே சமயம் அவனுக்கு ஆபத்தென்றால் உதவக்கூடிய தொலைவில் நின்று கொண்டான். நட்பு வட்டாரத்தில் இம்மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள் எவ்வளவு அழகானவை! வலிமையானவையும் கூட.
சமவெளியின் இடது மூலையில் இலைச்சருகுகள் பொசுங்கி காணப்பட்டன. சருகுகளை விலக்கிப் பார்த்தால் அந்த மண்ணிலும் பாஸ்வரம் இருந்தது. ஆனால் சிவப்பு நிறத்தில்… வெள்ளை பாஸ்வரம் சூடானால் சிவப்பு நிறமாகும்…
தியாகு சமவெளி முழுதும் நோட்டமிட்டான். இங்கு உச்சி வெயிலே விழாது போலும். சிந்தனை வயப்பட்ட நிலையில் தன் கட்டை விரலோடு நடு விரலையும் மோதிர விரலையும் சேர்த்து அதன் பிம்பத்தை மானாக்கி வேடிக்கை பார்த்தான். எவ்வளவு பெரிய மான்! தன் நெற்றியை அழுத்திக்கொண்டே தூரத்து மலைத் தொடர்களை உன்னிப்பாகப் பார்த்தான்.
இரண்டாம் முறை பொறி தட்டியது!
அவர்கள் கண்டது கண்டாத்ரி கோயிலையா? இல்லை! நிச்சயமாக இல்லை!
தொடரும்…