‘‘இந்தக் கோயிலைப் பார்த்தவங்க அடுத்த நாள் சூரியோதயத்தை பார்க்க முடியாதாமே? அப்ப… அப்ப… நாமெல்லோரும் சா…சாகப் போறோமா? ’’
நண்பர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.
‘‘அப்படி இருக்காதுடா.. இதுக்குள்ள விலையுயர்ந்த பொருள் எதுனா மறைச்சி வச்சிருப்பாங்க; யாரும் வந்து எடுத்துட்டு போகாம இருக்க வதந்தி கிளப்பி விட்ருப்பாங்க.’’
ஏறினார்கள்… நடந்தார்கள் ஏறினார்கள்..நடந்தார்கள்!
ஒரு கட்டத்தில் கோயிலைக் காணவில்லை; உடைந்த ‘ட’ எழுத்தைப் போன்ற இடம் (‘| —’) வந்தது. எழுத்தின் படுக்கைக் கோடாக புதர் மண்டிய சமவெளி விரிந்தது. ‘ட’வின் முதுகாக ஓங்கி நின்றது ஒரு செங்குத்துக் குன்று. இவர்கள் வந்த பாதை தவிர நாலா பக்கமும் கிடுகிடு பள்ளம். சமவெளிக்கும், குன்றுக்கும் இடையில் கூடப் பள்ளம்…
‘‘கோயில் எங்கடா? ’’
‘‘கோயில் இருந்த இடம் துடைச்சு வச்ச சமதரையா கிடக்குது? ’’
‘‘ஏதோ சித்து விளையாட்டில மாட்டிகிட்டோண்டா.’’
‘‘டேய், என்னடா, காலெல்லாம் எரியுது’’
‘‘ எங்களுக்கும் தாண்டா’’
‘‘ஏதோ நெடியடிக்குது, பூண்டு வாடையா? பிண வாடைடா! ’’பயத்தில் இதயத் துடிப்பு எகிறக் கத்தினான் விவேக்..
அவனைத் தொடர்ந்து நிறைய பேரும் அதையே சொன்னார்கள்.
‘‘இந்த இடத்தை விட்டு உடனே போகணும்.. ’’
ஆனால் சமவெளியில் அவர்கள் கண்ட காட்சி!
‘‘நாம வந்த மினி பஸ்ஸூம் லாரியும் மோதிக் கிடக்குது; நாம எல்லாம் பிணமா கிடக்கோம்! ’’- பழனி வீறிட்டான்.
‘‘ரா..ராகவன் டிரைவர் சீட்டில பிணமா கிடக்கானே!’’
‘‘இல்லடா..நா…நான் டயருக்கடியில கிடக்கேண்டா யாராவது தூக்கி விடுங்கடா!’’- ராகவன் தடதடவென்று ஓடினான்.
‘‘டேய், ’’ அலறினான் சரவணன். ‘‘விவேக் உடம்பிலேர்ந்து கருப்பா ஒண்ணு எந்திரிச்சு வருதுடா!.. என்னை துரத்துதுடா… ’’ பள்ளத்தாக்கு நோக்கி ஓடினான்; ஆயிரத்தி இருநூறடி பள்ளம்!
‘‘டேய் அதோ பரமேஸ்வரன்! என்னடா மிதந்து வரான்? ஆக்ஸிடெண்டா..? செத்துட்டானா? ’’
‘‘அவன் செத்தாலும் ஆவியா வர்றேன்னு சொல்லியிருந்தானே?’’
வேலாயுதம் என்னத்தையோ பார்த்தவன் போல் வெலவெலத்துக் கொண்டிருந்தான்! அவனுக்கு எதிரில் பாம்பை அடிக்கிற பாவனையில் ஜெகன்!
துரைராஜ் தன் கழுத்தை தானே பிடித்து நெரித்தபடி தள்ளாடிக் கொண்டிருந்தான்!
தியாகுவுக்கு சமவெளியையும் குன்றையும் தவிர வேறொன்றும் புலப்படவில்லை! அவன் ஆச்சர்யமும் திகிலுமாக நண்பர்களை கவனித்தான்.
தன் நண்பர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதும் மயிர் கூச்செறியும் திகிலோடு மரண விளிம்பில் நிற்பதும் தியாகுவுக்குத் தெரிந்தது!
ஒரு நிமிடத் தைரியம்…
‘‘டாய்ய்ய்! ’’ உயிர் போகக் கத்தினான் தியாகு. ‘‘நாம உயிரோடதான் இருக்கோம்; நாம எல்லோரும் நல்லவங்க; நாம எல்லோரும் ஃப்ரண்ட்ஸ்.. இத முதல்ல நம்புங்கடா… எல்லோரும் கண்ணை மூடுங்கடா… அந்தந்த இடத்துல அப்படியே உட்காருங்கடா! ’’
நட்பின் பலம்.. ! அப்படியே கட்டுப்பட்டார்கள்!
‘‘கண்ணைத் திறக்காதீங்கடா.. மூளைக்கு வேலை கொடுங்கடா..ஒருத்தரை ஒருத்தர் தடவிப் பார்த்துகங்கடா, இவ்வளவு உயரத்துல எப்படிடா மினி பஸ் வரும்? ’’
தொடரும்…