கம்பம் லாட்ஜிலிருந்து காலை ஏழு மணிக்கெல்லாம் மினி பஸ் சுருளி தீர்த்தம் நோக்கி சீறிப் பாய்ந்தது. டிரைவரின் வண்டியோட்டுதலில் நிதானமில்லை. ஆனால் அந்த கோஷ்டிக்கு அதுதான் பிடித்திருந்தது. வண்டியில் எல்லோரும் அரைத் தூக்கத்தில் இருந்தனர்.
வழியில் டிரைவரும் டிராபிக் கான்ஸ்டபிளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நேரம் பரமேஸ்வரன் இயற்கை உபாதையைத் தணிக்க கீழே இறங்கினான்.
போகிற பாதையெல்லாம் திராட்சைத் தோட்டங்களும் பெரிய பெரிய மரங்களுமாய் மாறி மாறி வந்தன. மினி பஸ் சற்று தூரத்திலேயே நின்று விட பயணிகள் இறங்கினர்.சுருளி தீர்த்தத்தை அடையுமுன்பே சட்டென்று புகையாய் கவிந்து எலும்பை ஊடுருவியது குளிர். சூரியனின் செங்கதிர்கள் நுழைய முடியாத அடர்ந்த வனத்தில் புகுந்தது கோஷ்டி. பறவைகளின் கீச்சொலி காதுக்குப் பழக்கப்பட்டு அதுவும் மௌனத்தின் அங்கமாகியிருந்தது. காலை பத்து மணி, மாலை ஆறு மணியாக மயக்கியது. மலையடிவாரத்தில் வேர் விட்ட மரங்கள் ஓங்கி உயர்ந்து முகட்டளவு நின்றன. ஒரு கோணத்தில் ஊடுருவிய சூரிய ஒளி அவர்களின் நிழல்களைப் பெரிதாக்கி ஏதோ குறளிப் பேய்கள் அவர்களோடு பயணப்படுவதைப் போன்ற பிரமையை உண்டாக்கின. ஆளறவமற்ற வெளியில் சருகுகளில் நடக்கிற சத்தமே கண்ணுக்குத் தெரியாமல் ஆயிரம் பேர் பின் தொடர்வதைப் போலிருந்தது.
நண்பர்கள் கை பிடித்தபடி தயங்கித் தயங்கி நடந்தனர்.
‘‘அதோ சுருளி தீர்த்தம் போர்டு! ’’
‘‘டேய், இங்கேயும் ஒரு அருவிடா! ’’
‘‘இதப்பத்தி பரமேஸ்வரன் ஒண்ணும் சொல்லலியேடா? பரமேஸ்வரா! இது என்ன அருவிடா? ’’
அப்போதுதான் கவனித்தார்கள், பரமேஸ்வரன் மிஸ்ஸிங்!
சுற்றுமுற்றும் தேடி சலித்தார்கள். ஒரு மொபைல் ஃபோனிலும் சிக்னல் இல்லை. இடையில் இறங்கியவன் திரும்ப ஏறவில்லை என்பது முடிவானது.
‘‘சே! ஒருத்தன் காணாம போயிட்டான்- நமக்கு இப்பத்தான் தெரியுது; நாமல்லாம் ஃப்ரென்ஸூ! ’’
‘‘சரி… சரி… விடுடா, அவன் என்ன சின்ன குழந்தையா? இன்னொரு பஸ் பிடிச்சி வந்துருவான்.’’
‘‘இந்த இடம் உனக்கும் எனக்கும்தான் புதுசு; அவனுக்குத் தண்ணிபட்ட பாடு! ’’
மேலே மேலே ஏறினார்கள். கண்ணில்பட்ட அருவியில் போய் குளித்தார்கள். உடம்பு லேசானது போல் உணர்வு.
திடீரென்று ஜெகன் பழனி தோளைத் தொட்டான்.
‘‘டேய், இந்த பரமேஸ்வரன் பயல் ஏதோ கண்றாவிக் கோயில்னானே, இது தானா பாரு? ’’
பழனி உட்பட அனைவரும் திரும்பிப் பார்த்தனர். கருப்பு அவுட்லைனில் கோயிலொன்று… கோயிலின் தோற்றம் அவர்களை சிலிர்க்க வைத்தது!
‘‘இது கனவா,நனவா? ’’
‘‘இது கண்டாத்ரி கோயில்தாண்டா’’
‘‘பரமேஸ்வரனோட அப்பா மலையில பத்து பதினஞ்சு மைல் அலைஞ்சும் கண்டு பிடிக்க முடியாத இடம் நம்ம கண்ணு முன்னாடி போண்டா மாதிரி நிக்குதேடா? ’’
‘‘இதப் பார்த்தவங்க அடுத்த நாள் சூரியோதயத்தை பார்க்க முடியாதாமே? அப்ப… அப்ப… நாமெல்லோரும் சா…சாகப் போறோமா? ’’
பதில் தோன்றாது எச்சிலை விழுங்கினார்கள்.
தொடரும்…