அன்று சனிக்கிழமை.
காலையில் நானும் பலீனா மேடமும் சமையலறையில் மேற்பார்வை செய்து கொண்டிருந்தோம்- பலீனா மேடம் என்னை ஜாலியாக வம்பிழுத்துக் கொண்டிருந்தார்.
பணியாளர்கள் காய்கறியில் பூக்கள் செய்து கொண்டிருந்தனர். ஒருவர் மஞ்சள் குடை மிளகாயில் பூ செய்து பெண் பணியாளரிடம் நீட்ட, அவர் வேறு பக்கம் சென்று விட்டார்.
“கல்யாணமான பெண்ணுக்கு மஞ்சள் பூ கொடுத்தால் வாங்குவாளா?” என்றார் பலீனா வேடிக்கையாக.
“என்னவாம்” என்றேன் நான்.
“ஜீ, அதெல்லாம் காதலிக்கிறவங்களுக்கு தெரிய வேண்டிய சமாச்சாரம். உங்கள மாதிரி ஹோட்டல கட்டிட்டு அழறவங்களுக்கு தேவையில்லாதது.”
“சரி, சொல்லாட்டி போங்க ”
“ஓகே! சிவப்பு பூ காதலுக்கு சம்மதம்னு அர்த்தம். வெள்ளைப்பூ நோ, மஞ்சள் பூ கல்யாணத்தை
குறிக்கும்! ”
ஏதோ நினைவில் கேட்டேன்.
“கருநீலப் பூக்கள் எதற்கு? ”
பலீனா ஒரு நிமிட மௌனத்துக்குப் பிறகு சொன்னார், “மரணம்!”
வேலைகளை முடித்து விட்டு சீக்கிரமே வெளியில் வந்தேன். நண்பன் ஒருவன் ஆபிசில் உட்கார்ந்தேன். “ரெண்டாயிரத்தி பத்தாம் வருஷத்து த சாட் பேப்பர் வேணுமே” என்றேன். “ரொம்ப அவசரம்.”
“எதுக்கு” என்றவனிடம் ஜூவாலா பற்றி சொன்னேன். அன்னிகா அவள் அக்காவாம். பெற்றோர்களால் கைவிடப்பட்டு கிறிஸ்துவ மடாலயத்தில் வளர்ந்தவர்களாம். இந்தச் செய்தி அந்த வருடத்திய ‘த டைம்ஸ்’ நாளிதழில் வந்ததாம். அந்த பத்திரிக்கையும் வேண்டும் என்றேன்.
அப்படியே சிசி காமிரா பதிவுகளை கவனித்தேன். யூனிஃபார்ம் அணிந்த பணியாளர்கள் இயக்கத்தில் இருந்தனர். பலீனா மேடத்தின் யூனிஃபார்ம் வித்தியாசமானது. ஹோட்டல் முழுக்க சுற்றி வருகிறார்..கையில் எதையோ எடுத்துக்கொண்டு மொட்டை மாடியில் ஏறுகிறார். ஓ, காக்கைகளுக்கு சோறு வைக்கிறார்.. அதை ஒளிந்திருந்து ரசித்துப் பார்க்கிறார்..
நவீனின் அறைக்குள் ஒருவர் வந்திருக்கிறார். ஜோசப்! நவீனின் தொழில்முறை எதிரி!
இரவுப் பதிவுகள் தெளிவாயில்லை. மோட்டார் அறைக்குப் பக்கத்தில்…. பலீனாவை ஒத்த ஒரு உருவம்..! மணி நள்ளிரவு ஒன்று பத்து. மீண்டும் அந்த உருவம் வெளிப்பட்டபோது.. மணி ஒன்று நாற்பது.
திரும்பவும் ஹோட்டலுக்கு போனபோது பலீனா மேடம் மாவு பிசையும் எந்திரத்தில் மாவு பிசைந்து கொண்டிருந்தார். எந்திரம் ஓவர்லோடு ஆகியிருந்தது. எந்திரத்தின் லிவர் முக்கி முணகிச் சுற்ற, பலீனா மேடம் லிவரின் தண்டைப் பிடித்து கையால் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார்.
“ பலீனா மேடம், நீங்க ஓனர் மாதிரி வேலை செய்றீங்க ,” என்றேன்.
“செஃப்ஜி, திட்டாதீங்கஜி, அரை கிலோதான் அதிகம். இன்னும் நாலு சுத்துல எடுத்துடறேன். இனிமே இந்த தப்பை பண்ண மாட்டேன்.. ”
“ குட் ” நான் வேறு பக்கம் பார்வையை திருப்ப, “இதை விட பெரிய தப்பா பண்றேன் ” என்று முணுமுணுத்தார்.
“ மேடம், ராத்திரி மோட்டார் ரூம்ல உங்களுக்கு என்ன வேலை? ” டக்கென்று கேட்டேன்.
“ எந்த ஃப்ளோர்ல கரண்ட் அதிகமா செலவாகுதுன்னு பார்த்தேன். ராத்திரி நம்ம லைனுக்கு வர்ற கரண்டைதானே பக்கத்து காட்டேஜ்காரங்க கொக்கி போடுறாங்க! ”
பக்கத்து காட்டேஜ் காலியாகி ஒரு வாரமாகிறது! பேச்சை மாற்றினேன்.
“மேடம், உங்க பாஸோட வியாதி எப்படிபட்டது? ”
“அவர் குடல் பலவீனமாயிடுச்சி. ”
“அப்படீன்னா? ”
“அப்படீன்னா… டாக்டர் என்கிட்ட என்ன சொன்னாரோ, அதை அப்படியே உங்களுக்குச் சொல்றேன். ஒரு கழுதை இருக்குன்னு வச்சுகுங்க. அடடா, உங்களைச் சொல்லலஜி, உதாரணம்.. ”
“ஒரு கழுதை இருக்குன்னு வச்சுகுங்க. அது ஒரு நாளைக்கு நூறு கிலோ பொதி சுமக்கும்னு வச்சுகுங்க. அப்படி செஞ்சாதான் ஓனர் நல்லா இருப்பார், ஓகேயா; அந்தக் கழுதை பலவீனமாயி ஒரு நாளைக்கு ஒரு கிலோ பொதிதான் சுமக்குதுன்னா ஓனர் என்னாவான்? ஒரு கிலோவுக்கு மேல கால் கிலோ பொதி அதிகமா ஏத்தினாலும் கழுதை எல்லாத்தையும் தள்ளி விட்டுட்டு ஃப்ரீயா நின்னுடுதுன்னு வச்சிக்குவோம். அதே கதைதான் இங்கேயும்.
“ஒரு குறிப்பிட்ட கஞ்சாம்பட்டி அளவு ஆகாரம்தான் குடல் ஏத்துக்கும். அதுக்கு மேல ஒரு கவளம் உள்ளே போனாலும் வாந்தி பேதிதான்! அரை மணி நேரத்துல குடல் காலியாயிடும்! ”
“காலரா மாதிரியா? ”
“காலராவுல வாந்தி பேதி தொடர்ந்து இருக்கும். நீர்ச்சத்து குறைஞ்சி உயிருக்கு ஆபத்தா முடியும். இதுல குடலை காலி பண்ணிட்டு வாந்தி பேதி நின்னுடும். அதுக்கப்புறம் நீங்க பாதி சப்பாத்தியோ, அரை கிளாஸ் சூப்போ குடிக்கலாம்.. ஒண்ணும் ஆகாது. ஆனா அளவு தாண்டுனா திரும்ப உவ்வாதான்; அதுதான்.. ”
“வியாதி திரும்ப வர சான்ஸ் உண்டா? ”
“வியாதி வர சான்ஸ் இல்லன்னுதான் சொல்றாங்க. ஆனா டிஎன்ஏ தெரபியோட பக்க விளைவுகள் மூணு வருஷதுக்குள்ள எப்ப வேணுமானாலும் வரலாமாம். ஆனா இது வரை அவர் நல்லாத்தான் இருக்கார்; ரெண்டரை வருஷம் ஓடிப்போச்சு. ”
“ஆனாலும் இதுவும் மோசமான வியாதிதான், யோசிச்சிப் பாருங்க. ஒரு பிசினஸ் மீட்டிங் நாலு பேருக்கு எதிர்ல பேசும்போது ஒரு டீ வரும்… கொக்ககோலா வரும்.. பிஸ்கட் வரும்… ஒரு விள்ளல் அதிகமானாலே வாந்தி பேதின்னா….ஹாரிபிள்! ”
“அந்தரங்கத்துல செஞ்ச பாவம் பப்ளிக்கா உயிரை எடுக்குது! ”
“மேடம்! ”
“ஓகே ஓகே கூல்! இப்பத்தான் சரியாயிட்டாரே! ”
மௌனமாக லிவரைச் சுற்றினார். போய் விட்டார்.
மாவு எடுத்ததும் லிவரைப் பார்த்தேன். உறுதியான லிவர் வளைந்திருந்தது..!
தொடரும்…