அன்று வியாழக் கிழமை.
கருமேகம் போர்த்திய வானம் எந்நேரமும் மழையை கொட்டி விடுவேன் என்று பயமுறுத்தியது. அவ்வபோது இடியும் மழையும் வேறு. வழக்கப்படி மாலை ஏழு மணிக்கு வகுப்பு முடிந்து சமையலறை விட்டு வெளியே வந்தேன். வரவேற்பறையின் மத்தியில் டீபாய் மேல் சின்ன அட்டைப் பெட்டி இருந்தது.
வண்டி உருளும் சத்தம் கேட்டுத் திரும்பினேன். ஆரண்யா மேடம் சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டு அறையிலிருந்து வெளிப்பட்டார்.
“குட் ஈவினிங் மேடம், ” என்றேன். “ஏதாவது உதவி வேண்டுமா? ”
“ஓ சூரிய ப்ரகாஷ்… என்ன இந்தப் பக்கம்? ” புன்னகைத்துக் கேட்டார்.
“நம் மாப்பிள்ளைக்காக பார்வதிக்கு சமையல் டியூசன் எடுக்கிறேன்.”
“பார்வதிக்கா? சமையல் டியூசனா? ” விரல்களை மடித்து இடது புறங்கையால் கன்னத்தில் தாளமிட்டார்.
“கத்துக்கறாளா? ”
“ஓ”
சோபாவைக் காட்டி உட்காரச் சொன்னார். என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி அவர் கேட்க, நான் பதில் சொன்னேன்.
“ப்ரகாஷ், ஒரு உதவி செய்யுங்களேன். அந்த அட்டை பாக்ஸ்ல ரெண்டு டானிக் இருக்கு. ஒண்ணு என்னோடது; இன்னொண்ணு மாப்பிள்ளையோடது. கொரியர் சர்வீஸ் பையன் ரெண்டையும் இங்க வச்சிட்டுப் போயிட்டான். இதுல நான் என்னோட டானிக்குன்னு மாப்பிள்ளையோட டானிக்கை ஓப்பன் பண்ணிட்டேன். மாப்பிள்ளையோட டானிக்கை ஹோட்டலுக்கு எடுத்துட்டுப் போயிடுங்களேன். அவர் கிட்ட நான் தெரியாத்தனமா ஓப்பன் பண்ணிட்டேன், ஸாரி கேட்டேன்னு சொல்லிடுங்களேன்… ”
நான் அட்டைப் பெட்டியைத் திறந்தேன். இரண்டு டானிக் பாட்டில்களும் தேன் கலரில் ஒரே உயரத்தில் இருந்தன. யாருக்கும் குழப்பம் வரத்தான் செய்யும்.
“இதுல மாப்பிள்ளையோடது எது? ”
“என்னோடது வெறும் சத்து டானிக்தான் சூரி. யார் வேணுமானாலும் குடிக்கலாம்.
மாப்பிள்ளையோடதும் சத்து டானிக்தான்; ரசகந்தகம் கலந்தது. ”
“அப்படீன்னா? ”
“நரம்புத் தளர்ச்சி வந்தவங்களுக்கும் பாரிசவாயு வந்தவங்களுக்கும் பாதரசத்தையும் கந்தகத்தையும் கலந்து சித்த வைத்தியத்துல கொடுப்பாங்க. பாதரசத்தை சிவனுக்கும் கந்தகத்தை சக்திக்கும் ஒப்பிடுவாங்க. தனித்தனியா கொடுக்கும் போது அவ்வளவு பயன் தராத இந்த இரண்டு பொருள்கள் காம்பினேஷனா வரும்போது நல்ல குணம் கொடுக்கும். இது கூட இன்னும் சில மூலிகைகள்…….. மாப்பிள்ளை இந்த டானிக்கைத்தான் ரெண்டு வருசமா சாப்பிடுறார்…ஒரு டானிக் ஐம்பது நாள் வரும். ”
“தாய்லாந்து அது இதுன்னாங்க, கடைசீல நம்மூர் சமாச்சாரம் தானா? ”
“நம்மூர் சமாச்சாரத்தை நம்மள விட ஃபாரினர்தான் அதிகமா யூஸ் பண்றாங்க. ” மேடம் கம்பீரமாகச் சிரித்தார்.
நான் ஒரு டானிக்கை எடுத்தேன். “சிங்க், செலினியம், அயன்.. இது மேடத்தோடது. ஒரு குலுக்கு குலுக்கினேன். அப்படியே தளும்பி பாட்டிலை பாதியளவு நிறைத்தது டானிக். அதை ஆரண்யா மேடம் கையில் கொடுத்து விட்டு அவர் அறைக்குள் செல்ல உதவினேன்.
இன்னொன்று விட்டமின் சி, மெர்குரி, சல்ஃபர்… இது சாரோடது. சீல் உடைக்கிற வேலை பலீனா மேடத்துக்கு மிச்சம்.
அன்றிரவு நவீனிடம் டானிக்கை கொடுத்து விட்டு ஆரண்யா மேடம் சொன்னதைச் சொன்னேன்.
“ஓப்பன்தான் பண்ணாங்களாமா? கொஞ்சம் எடுத்து குடிக்கவும் குடிச்சிருக்கலாமே? அலட்டிக் கொள்ளாமல் சொன்ன நவீன் பாட்டிலின் வாய் வரை நிரம்பியிருந்த டானிக்கிலிருந்து பத்து எம்மெல் (ml) எடுத்து என்னிடம் நீட்டினார். “குடிங்க”
“வ…வ்…வேண்டாமே”
“அட குடிங்க சூரி ” முதல் ‘குடிங்க‘ வில் இருந்த மென்மை, நாகரிகம் இரண்டாவது ‘குடிங்க‘ வில் இல்லை.
“ஏய், குடிடா! ”
இவர் போன்றவர்கள் விரும்பியது கிடைக்கும் வரை எதற்கும் துணிவார்கள்! கிடைக்கவில்லை என்றால் வெறி பிடித்து அழிப்பார்கள்! முதன் முதலாக நவீனிடம் பயம் வந்தது.
குடித்து விட்டேன்!
“நரம்புக்கு நல்லது.” கண்ணடித்தார். “கல்யாணமாயிடுச்சா? ”
“இல்லையே”
“ஐயையோ, ” முக பாவனையில் ஏமாற்றத்தை காட்டினார். டானிக் காரமாக தொண்டையைக் கடந்தது.
அன்றிரவு உடல் முழுக்க அனல் தகித்து வேர்த்தது. தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்தால் பவர்கட்!
சொகுசு ஹோட்டலில் பவர்கட்டா?
ஹெட் லைட்டும் டூல் பாக்ஸுமாக வந்த சீனியர் எலக்ட்ரீஷியனுடன் சேர்ந்து கொண்டேன். எங்கேயோ ஷாட் சர்க்யூட்டாம். இருநூற்று ஐம்பது வோல்ட் வர வேண்டிய இடத்தில் ஆயிரம் வோல்ட் வந்து ஃப்யூஸ் போய் விட்டிருக்கிறது.
“வாங்க எந்த இடம்னு போய் பார்ப்போம்”
மோட்டார் அறையில் ஒவ்வொரு இடமாகப் பார்த்து அரை மணி நேரத்துக்கு மண்டையைப் போட்டு உடைத்து, கண்டு பிடித்த பிறகு சொன்னார், “சார் தேட் ஃப்ளோர்.. ”
மூன்றாம் தளத்துக்குப் போய் ஒரு மொகலாய ஓவியத்தை கீறித் திறந்தார்-அதுதான் ஜங்க்ஷன் பாக்ஸ்-சொன்னார், “சார் நம்ம சார் ரூம்.. ”
நவீன் வெளியே வந்து நின்றிருந்தார். அவரிடம் சொல்லி விட்டு அவர் ரூமுக்குள் நுழைந்தோம். சற்று நேரத்தில் எலக்ட்ரீஷியன் சொன்னார், அதுவும் காதோடு, “சார் இவர் கட்டிலுக்கு அடியில இருக்கற சுவிட்சுலதான் ஷாட் சர்க்யூட் ஆகியிருக்கு. நம்ம எலக்ட்ரிக் சிஸ்டம் தானா கட்டாகி இருக்கு. இல்லன்னா நவீன் சார் ஷாக்கடிச்சு மேலே போயிருப்பார்! ”
தொடரும்…