அன்று புதன் கிழமை. முகூர்த்த நாள். ஹோட்டல் அறைகள் எல்லாமே நிரம்பி வழிந்தன. அதிகாலை நான்கு மணியிலிருந்து நானும் என் குழுவினரும் பறந்து பறந்து ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தபோது என் பாஸ் ஜெகதீஷ் குமாரிடமிருந்து ஃபோன். வீட்டுக்கு வரச் சொன்னார். அவர் பங்களா ஹோட்டலிலிருந்து பத்து கிலோ மீட்டர். காரைக் கிளப்பிக் கொண்டு போனேன்.
இயற்கைக் காற்று சதிராடும் ஹால்…
“மூணு முக்கியமான விஷயம் சூரி’’ என்றார், மளமளவென்று ஷேவ் செய்த முகவாயை வருடிக் கொண்டே. நான் உள் வாங்கும் தோரணையில் கேட்டேன்.
“சொல்லுங்க சார்.. ”
“முக்கியமான விஷயம் நம்பர் ஒன்- மாப்பிள்ளை நவீன் மெட்ராஸ் வரார். நம்ம ஹோட்டல்லதான் தங்கப் போறார். நல்லாப் பார்த்துகங்க.
நம்பர் டூ- நவீனை கவனிச்சுக்க பலீனான்னு ஒரு மேடம் வராங்க. கேடரிங் டெக்னாலஜில டாக்டரேட். அவங்க சர்வீசை நம்ம ஹோட்டலுக்கும் சேர்த்து யூஸ் பண்ணிக்கங்க.
நம்பர் த்ரீ- மாப்பிள்ளைக்கு குடல்ல பிரசினை இருந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமே; அந்த பிரசினை திரும்ப வந்தா சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப கவனமா இருக்க வேண்டி வரும். அதனால தனக்கு மனைவியா வர்றவளுக்கு சமையல் ஞானம் இருக்கணும்னு எதிர்பார்க்கிறாரு. நீங்க கல்யாணப் பொண்ணுங்களுக்கு சமையல்ல டியூசன் எடுக்கிறீங்களாமே, அப்படியா? ”
“ஆமா சார். உதாரணமா பொண்ணு தமிழ்நாட்டை தாண்டி போயிருக்க மாட்டா. அவளுக்கு வெஸ்ட் பெங்கால்ல வரன் அமைஞ்சிருக்கும். அந்த ஊர் சமையல் ருசி இவளுக்குப் பழகணும். ஓரளவு அவங்க சமையல் தெரிஞ்சிருந்தா, போற இடத்துல கையை பிசைஞ்சிட்டு நிக்காம மாமியார் வீட்டுல நல்ல பேர் வாங்க முடியும். அதுக்காக என்கிட்ட வருவாங்க. அவங்க தேவைக்கேத்த மாதிரி மூணு மாசம் ஆறு மாசம்னு லெசன் பிளான் போட்டு கத்துக் கொடுத்துடுவேன். ”
“ம்…ம்.. விட்டா ஃபஸ்ட் நைட்டுக்கும் கோச்சிங் கிளாஸ் வந்துடும் போல… ”
அந்த கோச்சிங் எனக்குத் தெரியாது சார்.. ”
சட்டென்று சிரித்து சட்டென்று நிறுத்தியவர்,
“ எம் பொண்ணு பார்வதிக்கும் கொஞ்சம் சமையல் கத்துக் கொடுத்துடுங்க,” என்று சொல்லி விட்டு அடர் சிவப்பு நிற ஃபைலை என்னிடம் கொடுத்தார்.
“மாப்பிள்ளைக்கு என்னென்ன ப்ரசினை வந்தது, என்னென்ன மாதிரி டயட் கொடுத்தாங்க, பத்திய சாப்பாட்டோட மெனு, பிரிபரேஷன், ஃபுட் அலர்ஜி வந்தா எப்படி கண்டுபிடிக்கறது, என்ன பண்றதுன்னு எல்லா விவரமும் இதுல இருக்கு. இத வச்சு பார்வதிக்கு என்ன தெரியணுமோ அத கத்துக் கொடுத்துடுங்க…”
ஃபைலை வாங்கிக் கொண்டு தயங்கினேன், “சார், ”
“சொல்லுங்க சூரி.. ”
“ஒரு நாப்பத்தெட்டு மணி நேரம் டைம் தர்றீங்களா? நான் பிரிபேர் பண்ணணும்; ஹோட்டல்ல மத்த வேலைகளோட அட்ஜஸ்ட் பண்ணணும்… ”
“ஓ! ஷ்யூர்.. பார்வதி நார்த் இந்தியா டூர் போயிருக்கா.. சனிக்கிழமைதான் வருவா.. நீங்க அதுக்குள்ள ரெடியாயிடுங்க.. ”
“சார், பார்வதி என்ன படிச்சிருக்காங்க?”
“அவ பத்து வருஷமா சிங்கப்பூர்ல இருந்தவ. சிங்கப்பூர் காப்ளான் இன்ஸ்டிடியூட்ல படிச்சிருக்கா.. நீங்க கவலையே படாதீங்க.. அவளுக்கு பொறுப்புன்னா என்னன்னே தெரியாது; உங்களப் படுத்தி எடுத்துடுவா!”
விதியின் விபரீத விளையாட்டு என் தலையை உருட்டப் போவதை அறியாமல் வேறு சில விஷயங்களை பேசி விட்டு புறப்பட்டேன்.
தொடரும்…