Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 12

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 12

அன்று வியாழக் கிழமை.

நேற்றுப் போலவே பங்களாவில் வேலையாட்கள் இல்லை.

ஆரண்யா மேடம் களைப்பாகத் தெரிந்தார். சொல்லத் தொடங்கினார்.

“ பார்வதி தாய்லாந்து ஹோட்டல்ல ட்ரைனிங் எடுத்துட்டிருந்த போது நவீன் ஒரு சின்னப் பொண்ணை கற்பழிச்சு கொலை பண்ணியிருக்கான். நேரில் பார்த்த சாட்சியோ, ஆதாரமோ இல்ல. கொலைப் பழியை பொண்ணோட வந்த கிழவன் ஏத்துக்கிட்டான். பெண்ணோட உடம்புல கிழவனோட விந்தணுக்கள் கிடைச்சிருக்கு. கிழவனுக்கு மரண தண்டனை கிடைச்சது. கிழவனோட குடும்பம் மியான்மருக்கு போயிடுச்சு. அவங்களுக்கு எங்கிருந்தோ கட்டு கட்டா பணம் வந்துச்சி. இதை பார்வதி என் கிட்ட சொல்லி நவீனை கல்யாணம் பண்ணிக்க மறுத்தா. இதுல செத்துப் போன பொண்ணு இவ தோழியோட தங்கச்சியாம்…

நான் என் மகளை நம்பினேன், அவ அப்பா நம்பல. பார்வதி சொன்னத கன்பார்ம் பண்ண நினைச்சேன். ‘த சாட்’ பத்திரிக்கைல அந்தப் பொண்ணு ஜூவாலாவோட போட்டோ வந்திருந்தது. அத மாடலா கொடுத்து எட்டு பொம்மைகளை ஆர்டர் பண்ணேன். அதுங்க கையிலே கருநீல மலர்களை கொடுத்தேன். நவீன் வரதுக்கு பதினைஞ்சு நாள் முன்னமே அந்த பொம்மைகளை விஐபி ரூம்கள்ல வைக்க சொன்னேன். அப்படியே நீங்களும் செஞ்சீங்க. விஐபிஸ் வந்தாங்க, ரூம்ல தங்குனாங்க, போயிட்டாங்க.. நவீன் பொம்மைய பார்த்த மாத்திரத்துல மயக்கம் போட்டு விழுந்துட்டான். ஏன்னா அவன் குற்றவாளி!”

நான் ஆரண்யா மேடத்தை பிரமிப்புடன் பார்த்தேன்! அவர் அறையிலிருந்த பொம்மையையும் பார்த்தேன்! அவர் தொடர்ந்தார்.

“ நவீன் ஒரு அயோக்கியன்; அவன் கிட்ட இருந்து என் மகளை காப்பாத்த நினைச்சேன்.”

“அன்னைக்கு நவீன் டானிக்குல என் டானிக்கை கலந்துட்டேன்! நவீன் டானிக்குல பாதரசம் இருந்தது. என் டானிக்குல இருந்த செலினியம் பாதரசத்தை படிய வச்சிடுச்சு. ஐந்நூறு எம்மெல் டானிக்குல இருந்த ஒட்டு மொத்த பாதரசமும் பன்னெண்டு எம்மெல்லா அடியில தங்கிடுச்சி. ஐம்பது ஐம்பத்தி மூணு நாளா நவீன் டானிக் குடிச்சப்போ ஒரு இணுக்குப் பாதரசமும் அவனுக்குக் கிடைக்கல; கடைசி நாள் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி அவன் குடிச்ச அளவுக்கு அதிகமான பாதரசம் விஷமாகி அவன் உயிரை எடுத்துடுச்சி. அவ்வளவுதான்! …………………….”

“கிங் செக்! ஆட்டம் குளோஸ்.”

ஆரண்யா மேடம் வெட்டுகிற பாவனையில் வலக்கையை இடப்பக்கத்தில் இருந்து கீழாக வலப்பக்கம் கொண்டு வந்தார்!

நான் சிலிர்த்தேன்!

அந்த நாளை நினைத்துப் பார்த்தேன். அன்று ஆரண்யா மேடத்தின் டானிக், பாட்டிலில் பாதியளவு இருந்தது! நவீனுடைய டானிக் பாட்டிலின் வாய் வரை இருந்தது! பொதுவாக புது டானிக், பாட்டிலில் முக்கால் பாகம்தான் நிரம்பியிருக்கும். கால் பாகம் குலுக்குவதற்கு வசதியாக காலியாக விடப்பட்டு இருக்கும்.

‘செத்து ஒழியட்டும்’ என்று மருந்தைக் கலக்குபவர்கள் அளந்து கலப்பதில்லை. பாட்டில் கொள்ளுமளவு ஊற்றுவார்கள். அதனால்தான் பாட்டிலின் வாய் வரை டானிக் இருந்தது! அதுதான்.. என் கண்ணெதிரே சதி நடந்து விட்டது என்று என் உள்ளுணர்வு அனத்திக் கொண்டிருந்தது. உள்ளுணர்வுக்கு தெரிந்த விஷயம் என் புலனறிவுக்கு எட்டவில்லை! பாலில் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊற்றினால் பால் திரிந்து அடியில் தங்குவதைப் போல செலினியம் பாதரசத்தைப் படிய வைத்து விடும்; குலுக்கினாலும் கரையாது|

“ கருநீல மலர்களை ஏன் கொடுத்தீங்க? ”

“ நவீனுக்கு தாய்லாந்து பழக்கம் தெரியும். அவன் தன் சாவை எதிர்பார்க்கணும்! செத்துப் போனவனுக்கு ஏன் சாகறோம்னும் தெரியணும்! அவன் தெரிஞ்சிகிட்டான்னு நம்பறேன். ”

“ இடையில இந்த பார்வதி பழி வாங்குறேன்னு ஏதோ பண்ணியிருக்கா..அத நான் கண்டு பிடிச்சிட கூடாதுன்னு அவதி அவதியா போட்டோவை எரிச்சா. நவீன் ஜூவாலாவோட உருவப் பொம்மையை பார்த்து மயங்கி விழுந்து அவனோட தப்பை நிரூபிச்சுட்டான். அது அவளை சீண்டி விட்ட மாதிரி ஆயிடுச்சி. உங்க தங்கச்சிய இப்படி ஒருத்தன் நாசமாக்கினா நீங்க சும்மா இருப்பீங்களா? அவளால முடிஞ்சத அவ செஞ்சா.

அவளோட இரட்டை வேஷம் வெளில தெரிஞ்சா ஆபத்து..எல்லோரும் உங்களை மாதிரியா இருப்பாங்க? அதனால நவீன் இங்க வீட்டுக்கு வந்தப்ப அவன் கிட்ட ‘தனியா சமையல்காரி வச்சுக்கிறது நீங்க நோயாளிங்கிற இமேஜை கொடுக்குது’-ன்னு கொளுத்திப் போட்டேன். பார்வதியோட இரட்டை வேஷம் முடிவுக்கு வந்துடுச்சி. ”

பக்கா பிளான்! பிசிறு தட்டாத செயல் திறம்!

“ அப்புறம் சூரி, , ரகசியம் பேச கிச்சன் தோதான இடமே இல்ல! கிச்சன் சிம்னி என் பெட்ரூமை ஒட்டி ஓபன் ஆகுது. நீங்க பேசினா கேக்காது; கத்தினா கேக்கும். ”

“ ஐயையோ, நான் பார்வதி மேடம் கிட்ட என் மனத்தாங்கலைத்தான் சொன்னேன். ”

“ உங்க மனத்தாங்கலுக்கு பார்வதி கிட்ட என்ன வேலை? ”

ஆரண்யா மேடம் புன்னகைத்தார்.

“ நீங்களும் சரி. என் பொண்ணும் சரி. மனசை நல்லா கன்ட்ரோல்ல வச்சுகிட்டீங்க. ஆனாலும் உங்களை அறியாமலே வெளிப்படுத்தவும் செஞ்சிட்டீங்க.. அவர் கிட்டயும் அவ கிட்டயும் பேசிட்டுதான் உங்க கிட்ட கேக்கிறேன்”

“ கொலைகாரி மகளாச்சேன்னு பார்க்காதீங்க; அவளை கல்யாணம் பண்ணிக்கங்க. என் கடைசி ஆசைங்க இது! நான் சட்டத்தை கையில எடுத்தது தப்புதான். அதுக்காக எனக்கு நானே தண்டனைய கொடுத்துகிட்டேன். எந்த வழியில நவீனை மேலே அனுப்பினேனோ அதே வழியில நானும் சாக முடிவு பண்ணிட்டேன். செலினியம் கலந்த பாதரச டானிக் நாலு நாள் எக்ஸ்ட்ரா வருது. இன்னைக்கு ஐம்பத்தி நாலாவது நாள். அந்த டானிக்கோட கடைசி மடக்கை குடிச்சுட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல… ”

அவர் சொல்லி வாய் மூடவில்லை…குபுக்கென்று வாந்தி எடுத்தார்! ஒரு வித வீச்சத்தோடு சேலை நனைந்தது! பேதியாகிறது என்று புரிந்து கொண்டேன். நான் டாக்டரை கூப்பிட வெளியே ஓடிய சமயம் கனகம்மாள் அறைக்குள் விரைந்தாள்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top