அன்று புதன் கிழமை.
இரண்டு மாதம் ஓடியது தெரியவில்லை. கேஸ் ஒரு வழியாக முடிந்தது. மிதுன் பாண்டேயுடனான பிசினஸ் தொடர்பு உள்ளிட்ட அனைத்து உறவுகளும் அற்றுப் போயின. நிலைமையை சரியாக்க நான் மிகவும் மெனக்கெட்டேன். கடைசியில் போலிஸ் இன்ஸ்பெக்டர் நான் நன்றாக ஒத்துழைத்ததாக பாராட்டுமளவு நடந்து கொண்டேன். கோர்ட்டில் நவீனுடைய கேஸ் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த நாளே தள்ளுபடி செய்யப்பட்டது! இங்கேயும் நவீனுடைய மரணம் டிஎன்ஏ தெரபியின் பக்க விளைவு என்று முடிவானது!
நவீனின் இறப்பு ஒரு கொலை என்கிற தீர்மானம் எனக்குள் உறுதியாய் இருந்தது. ஆனால் போலிஸின் பார்வை அப்படியில்லை என்பதை போகப் போக தெரிந்து கொண்டேன். சந்தேகப்படுவது அவர்கள் சுபாவம். ஆதாரங்கள் அடிப்படையில் முடிவெடுப்பதும் அவர்கள் சுபாவமே.
ஆரண்யா மேடம் என்னை அழைத்திருந்தார். பங்களாவுக்குள் நான் நுழைந்தபோது மாலை மணி ஏழு. விசுவாசமான பணியாளர்கள் சும்மா ஓரிருவர் தென்பட்டனர். பார்வதியின் கார் வெளியே நின்றிருந்தது. ஜெகதீஷ் சார் வெளியே போயிருக்கிறார் போலும்…
பொதுவாக அவர் அறைக்குள் நான் நுழைந்ததில்லை. அறை வாசலில் தயங்கினேன். அழைத்ததும் உள்ளே சென்றேன்.
விசாலமான அறை. இளஞ்சிவப்பு பெயிண்டிங். தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், கருநீலப்பூக்களுடன் ஹோட்டலில் நாங்கள் வைத்திருந்ததைப் போன்ற சிறுமியின் பொம்மை…
ஆரண்யா மேடம் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். என்னை உட்காரச் சொன்னார். சோபாவில் அமர்ந்ததும் கேட்டார்.
“ என்ன சூரி, நடுவுல சாமியார் மாதிரி இருந்தீங்க; இப்ப மறுபடி அழகாயிட்டீங்க?”
“ நீங்க சொன்னா சரிதான்…”என்றேன் சங்கோஜத்துடன்.
“பார்வதி மேல தப்பில்லேன்னு தெரிஞ்சதுல வந்த சந்தோஷம்னு நினைக்கிறேன்” -ஏதோ பொடி வைத்துப் பேசுகிறார்! நான் நிமிர்ந்தேன்.
“ பார்வதியை நீங்க கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?”-சட்டென்று கேட்டார்.
“ஏன் அப்படி கேக்கறீங்க மேடம்? ஊர்ல வரனுக்கா பஞ்சம்? ”
ஆரண்யா மேடம் விரல்களை மடித்து இடது புறங்கையால் கன்னத்தில் தாளமிட்டார்.
பார்வதி காடரிங் படித்தது மேடத்துக்கு தெரியும்; சாருக்குத் தெரியாது. பார்வதி அதை சர்ப்ரைஸாக வைத்திருந்து சொல்ல வந்திருக்கிறார். அதற்குள் நவீனுடன் கல்யாணமென்று அவளை மூட்-ஆவுட் ஆக்கி விட்டார் பாஸ். இரண்டு மாதத்துக்கு முன் நான் சமையலறையில் பார்வதியை சந்தித்த போது இதை என்னிடம் அவள்தான் தெரிவித்தாள். அதனால்தான் பார்வதி என்னிடம் கற்றுக் கொள்கிறாள்(?) என்றதும் மேடம் என்னை உட்கார வைத்துப் பேசியதும் இதே போல் ரசனையோடு கன்னத்தில் தாளமிட்டதும் நினைவில் வருகிறது.
“ காடரிங்ல டாக்டரேட் வாங்கின பொண்ணு உங்க கிட்ட டியூசன் படிக்கிறா.. பலீனாவா வேஷம் போட்டு உங்க கூட சுத்துறா.. பலீனாதான் பார்வதின்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் பலீனாவோட காமிரா பதிவுகளை நீங்க டெய்லி போட்டுப் பார்க்கிறீங்கன்னு நியூஸ் வருது.. அப்புறம் ஒரு பெண்ணோட அம்மாவா நான் என்ன கேட்கணும்? ”
நான் தூக்கி வாரிப் போட நிமிர்ந்தேன்.
“பார்வதிதான் பலீனான்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? ”
ஆரண்யா மேடம் தெரியாது என்பது போல் உதட்டைப் பிதுக்கினார். “ஹோட்டல்ல பவர்கட் ஆனதே.., அப்ப ஹோட்டல்ல வேலை செய்யற ஆம்பளைங்களை அவரும் லேடீஸை நானும் தனித்தனியா கூப்பிட்டு விசாரிச்சோம். பலீனாவையும் விசாரிச்சோம். அப்பத்தான் அவ பார்வதின்னு தெரிஞ்சுகிட்டேன். பாவம் பொண்ணு! சித்திரவதைபட்டா. அவ அப்பா கிட்ட நவீனை வேண்டாம் வேண்டாம்னு எவ்வளவோ சொன்னேன், கேட்டாதானே? பணம் கண்ணை மறைச்சுடுச்சு. இல்லைன்னா……..
சுற்றுமுற்றும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டார். குரல் தாழ்த்திச் சொன்னார்;
“ நவீனை நான் கொலை செய்யற நிலைமை வந்திருக்காது! ”
“ மேடம்… நவீ.. நவீனை நீங்களா…? ”
நான் அவரையும் சக்கர நாற்காலியையும் விழி பிதுங்கப் பார்த்தேன்.
ஆள் அரவம் கேட்டது. பாஸ் வந்து விட்டார் போலும்.
“நாளைக்கு வாங்க! இப்ப போங்க! ”
நான் வெளியேறினேன்.
தொடரும்…