Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 10

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 10

அன்று சனிக் கிழமை.

மிதுன் பாண்டேயின் வற்புறுத்தலால் போலிஸ் கேஸாகி, நவீன் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யபட்டது. நவீனின் வயிறு கழுவி விட்டாற் போல் காலியாக இருந்ததாம். வாந்தி பேதி சாம்பிளும் கிடைக்காத நிலையில் அவன் இறப்பு உணவில் விஷம் கலந்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது டிஎன்ஏ தெரபியின் பக்க விளைவாகவும் இருக்கலாம் என்றது ரிப்போர்ட். எங்கள் ஹோட்டலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக இருந்ததால் இறப்பு டிஎன்ஏ தெரபியின் பக்க விளைவு என்று முடிவானது!

நான் கண்களில் எரிச்சலும் முகத்தில் தாடியுமாய் அகோரி போல் மாறியிருந்தேன். ஹோட்டலுக்கும், வீட்டுக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்குமாய் அலைந்து விரக்தியில் இருந்தேன். ஏனெனில் பார்வதி மேல் உள்ள ஆசையால் நான்தான் நவீனை கொன்றிருப்பேன் என்கிற சந்தேகம் போலிசுக்கு இருந்தது. இப்போது பார்வதியைப் பார்க்க பங்களாவுக்குள் நுழைகிறேன். அவளிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன!

பார்வதி சமையலறைக்கு வந்தாள், “ ஸாரி மாஸ்டர், ரொம்ப கஷ்டபட்டுட்டீங்க” என்றாள்.

நான் பணியாட்கள் யாருமில்லை என்பதை உறுதி படுத்திக்கொண்டு தானியங்கி கதவை மூடினேன்.

“க்ளாஸை கன்டினியூ பண்ணலாமா? ” என்றேன்.

என்னை விசித்திரமாகப் பார்த்தவள் “உங்க இஷ்டம் மாஸ்டர், ” என்றாள்.

“சரி, நான் ஒரு டெஸ்ட் வைக்கிறேன்; அதுல நீங்க பாஸானா க்ளாஸை கன்டினியூ பண்ணலாம்”

என்னிடமிருந்த பேப்பரை நீட்டினேன். “இதுல உள்ள அயிட்டங்களை சமைங்க, பார்க்கலாம்! ”

பார்வதி அயிட்டங்களை வாசித்தாள், “ஸ்ட்ப்டு பாஸ்தா, கெண்டகி சிக்கன், சான்டோம்.. ”

“என்ன மாஸ்டர், இதை எல்லாம் நீங்க சொல்லியே தரலியே?”

“ நான் சொல்லித் தரணுமா என்ன? சிங்கப்பூர் காப்ளாங் இன்ஸ்டிடியூட்ட பாதியில விட்டுட்டு தாய்லாந்து காடரிங் டெக்னாலஜில டாக்டரேட் வாங்கின பார்வதி அலையஸ் மிஸ் பலீனா.. ”

பார்வதி அடிபட்டது போல் பின்னுக்கு நகர்ந்தாள்.

“ எப்படித் தெரியும்னு பார்க்கறீங்களா? எல்லாரையும் எப்பவும் முட்டாளாக்க முடியாது. உங்களுக்கு பியூட்டி கோர்ஸ் தெரியும். கண்ணுக்கு லென்ஸ், தலைக்கு விக்கு, வயித்துல பேட்… அத வச்சி மேக்கப் போட்டு குரலை மாத்தி ஏமாத்தினீங்க அங்கே கலகலப்பு, இங்கே கமுக்கம்… பிரமாதம்! நீங்க நார்த் இந்தியா போனது மிதுன் பாண்டேயை இம்ப்ரஸ் பண்ண. துர்க்கையம்மன் கோயிலுக்குப் போறதா சொல்லிட்டு பார்வதியா இங்க வந்து என் கிளாஸை அட்டெண்ட் பண்ணீங்க! அன்னைக்கு தெரியாத்தனமா உங்க மேல ரூம் ஃப்ரெஷ்னர் அடிச்சுட்டேன். அந்த மருக்கொழுந்து வாசம் பலீனா மேல வந்துச்சு. நீங்க பலீனாவா மாறியிருந்தப்ப என் பேனாவை எடுக்க குனிஞ்சீங்க. உங்க புறங்கழுத்தில நீங்க பார்க்க முடியாத இடத்துல தீப்புண் இருந்தத நான் பார்த்தேன். அதுக்கு மேல ஏமாற நான் முட்டாளில்ல.. ”

“ மாஸ்டர்.. நான்.. ”

“ நீங்க எதுக்கு வேஷம் போட்டீங்க எனக்குத் தெரியும்.. நவீனை கொல்லத்தானே? அந்த ஷாட் சர்க்யூட் உங்க கைங்கரியம்தானே? நவீனை கொல்லக் காரணம் ஜூவாலாதானே? கடைசியிலே நீங்க நினைச்சத சாதிச்சிட்டீங்க. ஆனா போலிஸ் என்னை சந்தேகப்படுது தெரியுமா? ஒரு சப்போர்ட் உங்க சைடுலேர்ந்து எனக்கு வரலே…நான் அதை எதிர்பார்க்கவும் இல்ல. ”

“ ஆனா உங்க பணக்கார புத்திய காமிச்சிட்டீங்க இல்ல, செஞ்சோற்றுக்கடன்– உங்க ரெட்டை வேஷத்தை நான் போலிஸ் கிட்ட சொல்லல. என்னை மாதிரி அனாதைங்களுக்கு உள்ள பெருந்தன்மை உங்களுக்கெல்லாம் ஜென்மத்துக்கும் வராது.. ”

கழுத்து நரம்பு புடைக்கக் கத்தினேன்.

“ மாஸ்டர்… ” பார்வதி திகைத்தாள். “நான் வேஷம் போட்டது நிஜம். ஷாட் சர்க்யூட் என்னோட முயற்சிதான். நவீனோடதான் என் கல்யாணம்னு அப்பா முடிவு பண்ணிட்டார். மிதுன் பாண்டே வில்லங்கமான ஆளு; அவரைப் பகைச்சுக்கிறது நல்லதில்லேன்னுட்டார். நவீனை தீர்த்துக் கட்ட ஒரு தரம் நான் முயற்சி செஞ்சேன். அதுல தோத்துப் போனேன். ஒருத்தனை தீர்த்துக் கட்டுறது அவ்வளவு சுலபமா? நியாயத்துக்கும், நவீனுக்கும் இடையில நான் மாட்டிகிட்டு சித்திரவதை அனுபவிச்சுட்டு இருந்தேன். அப்ப நவீன் செத்துப் போனது டிஎன்ஏ தெரபியால இல்லையா? ”

“ அப்ப நவீனை நீங்க கொல்லலையா? ”

இருவரும் மலங்க மலங்க விழித்தோம்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top