மிஸ்டர் ஜெகதீஷ் குமார்: வயது ஐம்பத்து மூன்று. ஹோட்டல் கோல்டன் பாலஸ் ஓனர். என் முதலாளி. கோடிஸ்வரர்; வருமான வரியெல்லாம் கட்ட மாட்டார்.
மிஸஸ் ஆரண்யா: ஜெகதீஷ் குமாரின் மனைவி; பிரபல ஆயுர்வேத வைத்திய நிபுணரான வால்மீகியின் மகள். வயது ஐம்பது. சமூக சேவை, மாதர் சங்கம் என்று வீடு தங்காத பெண்மணியை கடந்த ஆறு மாதமாக ஒரு கார் விபத்து சக்கர நாற்காலியில் முடக்கிப் போட்டது. இடுப்பெலும்பு சேதமுற்றவர். உலோக இடுப்பு பொருத்தி இருந்தாலும் தொடர்ந்து பத்தடி நடக்க மாட்டார்.
திருமதி கனகம்மாள்: ஆரண்யா மேடத்தின் நம்பிக்கைக்குரிய வேலைக்காரி. வீட்டு நடப்பு, நாட்டு நடப்பு, ஹோட்டல் நடப்பு – அனைத்தையும் அறிந்து அவரிடம் சொல்பவர்.
மிஸ் பார்வதி: ஜெகதீஷ் குமார்- ஆரண்யா தம்பதியரின் ஒரே மகள். இவளுக்கு வரன் பார்த்திருக்கிறார்கள். ஒரு முக்கிய கான்ட்ராக்ட் விவகாரம் நல்லபடி முடிந்தபின் தான் திருமணம் என்ற மாப்பிள்ளை வீட்டாரின் நிபந்தனையால் கல்யாண வேலைகள் தொடங்கவில்லை. ஒரு வகையில் என் மாணவி. எனவே ஒரு மனக் கட்டுப்பாட்டுக்காக இவளை வர்ணிப்பதை தவிர்க்கிறேன்.
மிஸ்டர் நவீன்: பார்வதிக்குப் பார்த்திருக்கும் டெல்லி மாப்பிள்ளை. கோடிஸ்வர மிதுன் பாண்டேயின் மகன். கவலைப்படாமல் உலகம் சுற்றி அப்பாவின் சொத்தைக் கரைத்து வித விதமான அனுபவங்களைச் சேர்த்தவன். எஞ்சினியரிங் படித்து பிசினஸ் செய்பவன். அதோடு கண்ணில் பட்ட படிப்புகளை படித்து பாதியில் விட்டவன். நியூக்ளியார் பிசிக்ஸ் எனப்படும் அணு இயற்பியல் படித்தபோது இவனது அஜாக்கிரதைத் தனத்தால் இவனது ஜீனில் பிறழ்வு (mutation) ஏற்பட்டு குடலின் நரம்பு முடிச்சுகள் படிப்படியாக வலுவிழந்தன. இரண்டு வருடங்களுக்கு முன் அதற்காக தாய்லாந்தில் டிஎன்ஏ தெரபி எடுத்துக் கொண்டவன். தாய்லாந்தில் இவன் தங்கியிருந்த போது இவனுக்குப் பிரத்யேகமாக சமைத்துப் போடவே ஒரு டீம் நியமிக்கப்பட்டிருந்தது. இப்போது இவன் ஆரோக்கியமாக இருக்கிறான்.
மிஸ் பலீனா: நவீனுக்காக மிதுன் பாண்டேவால் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட தமிழ் தெரிந்த ருஷ்யன் செஃப். ஏறத்தாழ என் வயது. என்னை மிகவும் கவர்ந்தவர்.
நான், சூரிய ப்ரகாஷ்: ஹோட்டல் கோல்டன் பாலஸின் தலைமை செஃப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் (பப்ளிக் ரிலேஷன் ஆபிசர் – பிஆர்ஓ). இரண்டு வருடமாய் இங்கிருக்கிறேன். சர்வ தேச கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஹோட்டல் மானேஜ்மெண்ட் அறிந்தவன். வயது முப்பத்து நான்கு. இருந்த ஓரிரண்டு சொந்த பந்தங்கள் தூரப் போய் விட்டனர். இன்னும் திருமணமாக வில்லை.
ஹோட்டல் கோல்டன் பாலஸ் முட்டுக்காட்டிலிருந்து மகாபலிபுரம் போகிற ரூட்டில் நிறைய ரிசார்டுகளுக்கு மத்தியில் ஒரு நீலப் பெட்டகமாக அமைந்திருந்தது. மந்திரிகள், ஐஏஸ், ஐபிஎஸ் ஆபிசர்கள், தொழிலதிபர்கள் குடும்பத்தோடு தங்குகிற ஹோட்டல். தரத்துக்கு வழங்கப்படுகிற ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ், பாதுகாப்புக்கு ஸ்டேட் லெவல் சர்ட்டிபிகேட், சொகுசுக்கு டபிள் ஸ்டார் அந்தஸ்து என அத்தனையும் பெற்றது. சுத்தமான தரைகள், சுவர்கள். வாங்குகிற தானியங்கள், காய்கறிகள், மாமிசம்- எல்லாவற்றிலும் தரம். மளிகைச் சாமான்களை ஜாரில் லோட் பண்ணி ஷெல்ப்பில் வைக்க மாட்டோம். நேரிடையாக ஷெல்ப்பில் லோட் பண்ணுவோம். ஷெல்ப்போடு இணைந்த விதவிதமான திருகுகள் ஒரு தடவைக்கு ஒரு சிட்டிகையிலிருந்து பத்து கிலோ வரை டெலிவரி கொடுக்கும்.
வரவேற்பறையிலும், வராண்டாவிலும் க்ளோஸ் சர்க்யூட் காமிராக்கள், மின் பாதுகாப்பு சாதனங்கள், எப்போதும் கிடைக்கிற மாதிரி தயாராயிருக்கும் டாட்டா சுமோ, டிரைவர், ஒரு எலெக்டீசியன், ஒரு டாக்டர்..
விஐபி அறைகள் எல்லாமே சவுண்ட் ப்ரூப். பாத்ரூமில் குளித்துக் கொண்டே ஹாலிலுள்ள டிவி பார்க்க வசதியாக கண்ணாடிச் சுவர். ஹாலிலிருந்து பாத்ரூமுக்குள் பார்க்க முடியாது!
பத்துப் பேர் தாராளமாகப் படுக்கக் கூடிய மெத்து மெத்தென்ற படுக்கை; சுவிட்ச்சுகளை போட்டு படுக்கையை மெதுவாக சுற்ற வைக்கலாம்; மேலும் கீழும் தொட்டில் போல் ஆட்டலாம். அப்படியே டெஸ்க்காகவும் எழுப்பி லாப்டாப் வைத்து வேலை செய்யலாம். படுக்கைக்குக் கீழ் எமர்ஜென்சி அலாரம்.
இந்த அறைகளில் மின்விளக்குகளும், ஏசியும் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிக்க முடியாது. நீங்கள் உள்ளே வந்தால் அறை வெளிச்சமாகும்; எல்லோரும் வெளியே போனால் இருண்டு விடும். ஏசியும் தானே நின்று விடும். சென்சார் பொருத்தப்பட்டது. ரிமோட் கண்ட்ரோலில் கூடக் குறைய வைத்துக் கொள்ளலாம். இருபத்து நான்கு நிறங்களில் லைட்டிங் அமைத்துக் கொள்ளலாம்.
தானியங்கி கதவு. கதவுக்கு வெளியே ஒருவர் நின்று காலிங்பெல் அழுத்தினால் வாசலின் சிசி காமிரா டெக்னிக் அவரின் போட்டோவை உள்ளே அனுப்பி ஸ்க்ரீனில் ‘அனுமதிக்கலாமா’’ என்று பர்மிஷன் கேட்கும். நீங்கள் ‘யெஸ்’ என்று வாயால் சொன்னால் போதும். கதவு தானாகத் திறக்கும்.
ஹோட்டலின் பின்புறம் அமைந்த நவீன சமையலறையில் பிரியாணி தயாராகிக் கொண்டிருந்தது. இந்தோனேஷியாவிலிருந்து பெறப்பட்ட ஒரு வித மரக்கட்டைகள் பாய்லரில் இடப்பட்டிருந்தன. இந்த மரக்கட்டைகளின் வாசம் பாசுமதி அரிசியுடன் இணைந்து புது ருசியைக் கொடுக்கும். காய்கறிகளைச் சேர்த்ததும் பாய்லரின் இன்டிகேட்டரை கவனித்து மசாலாவை மிதமாகச் சேர்க்கச் சொன்னேன். காய்கறி தீய்கிறதா? இன்டிகேட்டர் காட்டிக் கொடுத்து விடும். முப்பது சதவீதத்துக்கு மேல் பி காம்ளக்ஸ் விட்டமின் அழிகிறதா, இன்டிகேட்டரில் தெரியும். இவற்றையெல்லாம் கவனித்து ஒருமுறை புரோக்ராம் பண்ணி விட்டால் அது பாட்டுக்கு ஓடும்.
இன்டிகேட்டர் இருக்கட்டும். உங்கள் வீட்டில் சாதம் குக்கரில் வேகிறது. அது எந்த பக்குவத்தில் வேகிறது என்று உங்களால் பார்க்க முடியுமா? இங்கு முடியும். பாத்திரத்தின் ஒரு ஸ்விட்சை தட்டினால் ஒரு திறப்பில் ஒரு டீஸ்பூன் அளவு சாதம் பௌச்சில் சேகரமாகும். தங்க முலாம் பூசப்பட்ட பைபர் மூடியுள்ள பாத்திரங்களில் எப்படி வேகிறது என்பதை நேரடியாகவே பார்க்கலாம்.
அடுத்த அரைமணி நேரத்தில் பிரியாணி அலங்கரிக்கப்பட்டு பரிமாறத் தயாராக இருந்தது.
இரண்டு நிமிடத்துக்குள் சீருடை அணிந்த தரக் கட்டுப்பாட்டு அலுவலர் உணவு மாதிரிகளை எடுத்துக்கொண்டு பாத்திரத்தை சீல் வைத்தார்.. இயந்திரத்தனமாக அவர் அடையாள அட்டையை பரிசோதித்து விட்டு உணவு மாதிரி அடங்கிய பாக்கெட்டுகளில் கையெழுத்திட்டேன். அடுத்த பத்தாவது நிமிடம் மானிட்டரில் ரிசல்ட் வந்துவிடும். அந்த ரிசல்ட் சின்ன ஸ்லிப்பில் பிரிண்டாகும். அந்த ஸ்லிப் சீலோடு இணைக்கப்பட்ட பிறகு உணவுப் பாத்திரம் சர்வீஸ் செக்சனுக்குப் போகும். அங்கு சீல் பிரிக்கப்பட்டு உணவு வாடிக்கையாளருக்குப் போகும். இதில் வாடிக்கையாளர் விஐபி என்றால் அவர் சாப்பிடுகிற எல்லா வகை உணவும் அவர் வாய்க்குப் போகிற ஒரு நிமிடத்துக்கு முன்பாக சாம்பிள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும். அது வீடியோவிலும் ரெகார்டாகும். அநேகமாக மூன்றாவது கவளம் அல்லது மிடறு விழுங்குவதற்குள் ரிசல்ட் கிடைத்து விடும்.
இவ்வளவையும் ஏன் சொல்கிறேன்?
இப்பேர்பட்ட காவலும் கட்டமைப்பும் உள்ள ஹோட்டலின் சொகுசு அறை ஒன்றில் ஒருவர் இறந்து கிடந்து, அவர் இறப்பு உணவில் விஷம் கலக்கப்பட்டு நேர்ந்திருக்கலாம் என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்…?
இன்னும் இறந்தவர் யாரென்று தெரிந்தால்….?
தொடரும்…