அமரேசன் வீடு
“ ஆட்டையப் போட்டப்புறம் ஓடி ஒளிய இடமிருக்கு. இந்த வீட்டு ஆளுங்கதான் பிரசினை…… அந்தப் பெரியவர் அமரேசனோட பெண்டாட்டி, கௌரி- அந்தப் பாட்டி மட்டும்தான் எப்பவும் வீட்டுல இருக்கு. மத்தவங்க எப்ப போவாங்க, எப்ப வருவாங்க ஒண்ணும் மனசாகல; வீட்டுல நகையோ பணமோ வைக்கிறதில்ல. பாட்டி கிட்ட வாயைக் கிளறி எதுனாச்சும் தெரிஞ்சுக்கலாம்னா பொல்லாத கிழவி, “ ஏய் நீ வாசலோட; உள்ள வந்தா சீட்டு கிழியுங்கறா. பேரன் போஸ்டிங் வாங்கிட்டா நம்ம வண்டவாளம் தெரிஞ்சிரும்; பாண்டிச்சேரி மியூசியத்தில கொள்ளையடிச்ச பழைய திருடன் நான். எம் போட்டோ அவுங்க கம்யூட்டர்ல இருக்கு…. ”
பல வகை யோசனைகளோடு பசுத்தோல் போர்த்திய புலியாக நின்றிருந்தான் பெரியசாமி!
உள்ளே நல்லம்மா குடும்பத்தினரும் அமரேசன் வீட்டு மனிதர்களும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர், வர்ணாவும் அந்தரீசும் மிஸ்ஸிங். நகை வியாபாரி குடும்பமாகையால் பேச்சு நகை பற்றி இருந்தது.
“அப்ப, செம்பு கலக்காம எந்தத் தங்க நகையையும் பண்ண முடியாதுன்னு சொல்லுங்க! ”
“ அப்படித்தான் எங்க பழக்கம். ஆனா சுத்தத் தங்கத்துல பண்ண ஒரு பொருளை பார்த்திருக்கேன். அத எப்படி பண்ணாங்கன்னு இன்னைக்கு வரை எனக்குத் தெரியல! இத்தனைக்கும் அது எங்க வீட்டுலேயே இருக்கு… அது ஒரு தங்… ” சொல்ல வந்த அமரேசன் பேச்சு அந்தரீஸின் வரவால் தடைப்பட்டது. “இது என் பேரன்… ” அறிமுகப் படலத்துக்கு பேச்சு திரும்பி விட்டது!
கலெக்டரின் வளமனை
இரவு ஒன்பது மணிக்கு சாப்பிட வந்த கலெக்டருக்கு சாப்பாடு எடுத்து வைத்தாள் லாவண்யா. ஹெல்த் ப்ளஸ் தொண்டு நிறுவனத்தின் சித்தா டாக்டர். அவளை அங்கே எதிர்பார்க்காத கலெக்டர் கண்களாலேயே கேட்டார், “ சமையல்கார வேலாயுதம் எங்கே? ”
“ சார் நான் லாவண்யா ” என்று இன்னொரு முறை அறிமுகப்படுத்திக் கொண்ட லாவண்யா, “ எங்க மாமாதான் உங்க சமையல்காரர். அவரால வர முடியலேன்னு நான் வந்தேன். மாமாவை பாம்பு கடிச்சுடுச்சு ” என்றாள்.
“ ஐயையோ, அப்புறம்? ”
“ பாம்பு சீரியஸா இருக்கு! ”
வாய்க்குள் சிரித்துக் கொண்ட நரேன், “உங்க மாமா எப்ப வருவார்? ” என்று கேட்டான். “தெரியாது” என்று தலையசைத்தாள் லாவண்யா.
“ சரி மேடம், நீங்க வேலைய முடிச்சிடீங்கன்னா வீட்டுக்குப் போயிடலாம்! ”
“சார், என் வீடு கண்டமங்கலம்; இந்த நேரத்துக்கு மேல புறப்பட்டுப் போறது சிரமம்; நான் இங்கயே தங்கிட்டு காலைல போயிடறேனே? ”
லாவண்யாவின் கெஞ்சும் விழிகள் வீட்டில் தங்க மாத்திரம் அனுமதி கேட்கவில்லை!
பெண்களின் மனதைப் புரிந்து கொள்ளும் வித்தையை ஒண்ணாப்பு, ரெண்டாப்பு என்று பத்தாம் வகுப்பு வரை பிரித்தால் நரேன் எந்த வகுப்புத் தேறுவான்? ப்ளஸ் டூ வரை போவான்…!
திருவண்ணாமலை வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை; அதற்குள்ளேயேவா?
சில பெண்களுக்கு வாழ்க்கைத்துணை பற்றிய கற்பனை இருக்கும்; அந்தக் கற்பனைக்கு வடிவம் கொடுத்ததைப் போல ஒருவன் ரத்தமும் சதையுமாக நேரில் வந்து நின்று விட்டால், மனம் அவர்களுக்கு அடங்காது. வந்து நிற்பவனின் பேர், ஊர், தராதரம் எதுவும் கண்ணுக்குத் தெரியாது!
எனினும் பொறுப்பான பதவியில் இருக்கிற அவன் வேலை செய்ய வந்த இடத்தில் பெண் விவகாரத்தில் மாட்டிக் கொள்வது நல்லதல்ல. முதலில் எதையாவது உருப்படியாகச் செய்து மக்களின் அபிமானத்தைப் பெற வேண்டும். பிறகுதான் மற்றவை…
லாவண்யா எதிரில் அவளைப் பொருட்படுத்தாதது போலக் காட்டிக் கொண்டான்.
சாப்பாடு ருசியாக, சிரத்தையுடன் சமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஆபிசில் பத்தோடு பதினொன்றாகத் தெரிந்த லாவண்யா இப்போது தனியாகத் தெரிந்தாள். மாநிறத்தில் பூங்கொடியாக வளர்ந்திருந்தாள். கொஞ்சம் பக்கத்தில் விட்டால் படர்ந்து விடுவாளோ என்று பயமாக இருந்தது! ஸ்படிகம் போன்ற கண்கள்; நெளிநெளியான கூந்தல்! பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நெளிநெளிப்பு உண்டா?
நரேன் தாயை இழந்தவன். லாவண்யாவின் சூட்டிகையான கவனிப்பு அவனுக்கு இதமாக இருந்தது!
லாவண்யா போன பிறகு அவள் அறியா வண்ணம் உதவியாளரை அழைத்தான்.
“ சதாசிவம், லாவண்யா எங்கே தங்குவாங்க? ”
“ கிச்சன்லதான் சார் ”
“ ஒரு லேடியை கிச்சன்ல தங்க வைக்கிறது நல்லா இருக்காது. அவுட் ஹவுசுல தங்க வை. தண்ணீ, கொசு வர்த்திச் சுருள் எல்லாம் கொடுத்துடு. பில்லோ, பெட்ஷீட் சுத்தமா இருக்கணும். ரூமோட உள் தாழ்ப்பாள் நல்லா இருக்கான்னு பார்த்துக்கோ”
சதாசிவம் உள்ளுக்குள் முணுமுணுத்தான், “ ராத்திரி ஒரு மணி ரெண்டு மணிக்கு டார்ச் எடுத்துகிட்டு மலையில மூலிகை தேட முடிஞ்சவளுக்கு ஒம்போது மணிக்கு கண்டமங்கலம் போறது சிரமமாம்..அவ தான் அப்படின்னா இவருக்கு அவ மேல என்னா கரிசனம்!”
பாத்திரம் கழுவும் போது சதாசிவம் லாவண்யாவை வம்புக்கிழுத்தான்.
“ அடுத்த மாசம் கலெக்டர் ஊருக்குப் போறார்- ஏதோ பொண்ணு பார்த்து வச்சிருக்காங்களாம்…வரும்போது பெண்டாட்டியோட வருவார் ” கப்ஸா அடித்தான். லாவண்யா கையிலிருந்து பாத்திரங்கள் நழுவின- “பொடே…..ர் ”
சதாசிவத்தின் வம்பு நிற்கவில்லை. “ எம்மா லாவண்யா! உன்னை வீட்டுக்குள்ள விட்டதுக்கு சார் என்னை என்னா திட்டு திட்டுனார்ங்கறே? சமையல்காரன் இல்லாட்டி ஹோட்டல்ல சாப்பாடு வாங்க வேண்டியதுதானேங்கிறார். நீ காலங்கார்த்தால அஞ்சு மணிக்கே கிளம்பிடு. ” லாவண்யா ரகசியமாக விழி நீரைத் துடைத்துக் கொண்டது அவனுக்குத் திருப்தியாக இருந்தது!
அவர் எங்கே, நான் எங்கே? பாழும் மனதுக்குத் தெரியவில்லையே?
இருந்தும் காலை சமையல் முடித்து நரேன் புறப்பட்ட பிறகே அவள் தன் ஆபிசுக்குப் புறப்பட்டாள்-எதுவும் சாப்பிடாமலே!
நல்லம்மாவும் குடும்பத்தினரும் வந்த வேன் சென்னைக்குள் நுழைந்து அய்யனாரின் வீட்டை நோக்கி சீரான வேகத்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. இள வட்டங்கள் தூங்கி வழிய பெரியவர்கள் பேசிக் கொண்டு வந்தனர்.
நல்லம்மா தம் இரண்டாவது மகன் முருகேசனை பார்த்துக் கேட்டார், “ போன வாட்டி மாதிரி வழி தவறிப் போகாம கரெக்டா வந்துட்டியேப்பா, வழி ஞாபகம் இருந்ததா? ”
“ நான் எங்க வந்தேன்? சுதர்சனாதான் கூட்டிட்டு வந்தா… ”
“ அவ எப்படி? அவளும் இப்பத்தானே முதல் தடவை வர்றா… ”
“ இல்லையே, அவ நடந்து போன வேகத்தை பார்த்தா வருஷக் கணக்கா பழகின இடத்துக்குப் போற மாதிரி தெரிஞ்சுதே? ”
“ அம்மா! சுதர்சனா மலையில வித்தியாசமா நடந்துகிட்டா… ” இது அய்யனார்.
“ வயசுப் பொண்ணு வித்தியாசமா நடந்துகிட்டா மனசு பக்கு பக்குங்குது. தர்காவுல மந்திரிச்சு தாயத்து போடறேன் அத்தே ”,- இது அய்யனாரின் மனைவி கோமளா.
பாதி தூக்கத்தில் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த சுதர்சனா வள்ளென்று விழுந்தாள், “ தாயத்து கீயத்துன்னா தலையில போடுவேன்!… காட்டுப் பாதையில தீப் பிடிச்சா பரவாம இருக்க செடி கொடிங்களை வெட்டி மொட்டையடிச்சி விட்டுருப்பாங்க. அந்த வழியிலதான் கால்வாசி தூரம் சித்தப்பா போனார். அதே வழிய டிரேஸ் பண்ணி நான் மேலே ஏறினேன்.. ”
“ சுனை இருக்கற இடத்தை கரெக்டா சொன்னியே? ”
“ போகப் போக புழுக்கம் மாறி வடக்கு தெற்கா சில்லுன்னு காத்து வந்துச்சி. ஸோ, வடக்குப் பக்கம் சுனை இருக்குன்னு யூகிச்சேன். ”
சொந்தங்கள் மௌனமாயின.
நல்லம்மா பேத்தியை தன்னருகில் அழைத்தாள். பேத்தியின் கைகளை தம் கைகளுக்குள் சிறைப் படுத்திய பாட்டி, “ ஏம்மா, புதரைப் பார்த்து ஏன் கும்பிட்டே? ” என்று கேட்டாள்.
சுதர்சனாவின் கைகள் நடுங்கின. “ அதாம் பாட்டி என…எனக்குத் தெரியல! ”
சுதர்சனா தன்னெஞ்சறிய பொய் சொல்லாதவள். ஆஸ்திகையோ, நாஸ்திகையோ அதுதான் முக்கியம்.
“ சரி, சரி, கும்பிடுறது பெரிய தப்பில்லே… மனசைப் போட்டு அலட்டிக்காதே ”
இருவரும் அப்படியே தூங்கினர்.
தொடரும்…