சுரங்கத்தின் மறு பாதை தனகிரி தாண்டிப் போகும். அங்கிருந்து புதுச்சேரி போய், சுற்றி வளைத்து கடல் மார்க்கமாய் இலங்கை சென்று தப்பித்த விக்டர் மார்ஷல் இப்போது தனியார் விமானத்தில் ஜூடி பக்லே என்ற விமானியுடன் பசிபிக் கடலிலுள்ள எரிமலைத் தீவுக்கு போய்க் கொண்டிருக்கிறான்.
நூற்று இருபது கிலோ எடையில் ராட்சசன் போல் இருந்த ஜூடி பக்லே கள்ளமறியாதவன். பணத்துக்காக விக்டர் மார்ஷல் ஏவிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். விக்டர் எரிமலைக் குழம்பு வருகிற வழியில் பள்ளம் வெட்டச் சொன்னான்; ஜூடி வெட்டினான்.
காத்திருந்தார்கள்.
எரிமலை வெடித்து லாவா குழியில் சேகரமானது! லாவா ஆறியதும் விக்டரின் உத்தரவுப்படி வெப்பத்தை தாங்கும் பிரத்யேக ஆடையணிந்து மூலிகைக் கவளங்களை ஒவ்வொன்றாகக் கலக்கினான் ஜூடி.
காத்திருந்தார்கள்…..! காத்திருந்தார்கள்…………………………!
காத்திருந்தார்கள்…………………………………………………!
பச்சை நிறம் தோன்றவே இல்லை!
விக்டர் மார்ஷல் மூளை கொதித்து பைத்தியம் பிடிக்கிற நிலைமைக்குப் போயிருந்தான். ஜூடி நாடோடிப் பாடல் பாடிக் கொண்டிருந்தான். அவன் கவலையெல்லாம் உணவும் தண்ணீரும் தீரப் போகிறது! இன்னும் எத்தனை நாள் இந்த “இஸ்திரிப் பெட்டிக்குள்” இருப்பது?
எதிர்பாராத நேரத்தில் பச்சை நிறம் தோன்றியது!
விக்டர் பரபரத்தான். இனி தொட்டதெல்லாம் தங்கம்! உலகத்தின் நம்பர் ஒன் கோடீஸ்வரன் அவன்! இனி சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாலும் தங்கத்தால் அடித்து தப்பித்து விடலாம்!
ஆமாம், லாவாவில் எதை இடுவது?
சுற்றிலும் சின்ன சின்ன கற்களை தவிர எதையும் காணோம்! வெயிட்டாக இட வேண்டுமே! லாவா சும்மா சும்மா கிடைக்குமா என்ன?
எதிரில் ஜூடி பக்லே! நூற்று இருபது கிலோ எடை!
ஜூடியின் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து ஜூடியையே சுட்டான் விக்டர். ஜூடி அலறி குழிக்கு வெளியே விழுந்தான் ! குழியில் விழ வேண்டுமே !அவன் கால்களைப் பிடித்து இழுத்தான் விக்டர்.
ஜூடி தன் துப்பாக்கியில் டம்மி தோட்டாக்களைத்தான் போட்டிருந்தான். ஆனாலும் வெடி சத்தம் பயங்கரமாக கேட்கும்- வன விலங்குகளை பயமுறுத்துவதற்காக அப்படி வைத்திருந்தான். இப்போது அந்த சத்தத்தில் அவனே பயந்து விழுந்து விட்டான். சட்டென்று தன் கால்கள் இழுக்கப்பட்டதால் அனிச்சையாக அப்படியே உதைத்தான்….
தலை குப்புற குழிக்குள் விழுந்தான் விக்டர் மார்ஷல் !
அப்பாவியான ஜூடி விக்டரை இழுத்துப் போட்டான். மருத்துவ உதவி தேவைப்படலாம் ! உடனடியாக விக்டரை அள்ளிப் போட்டுக் கொண்டு விமானத்தை கிளப்பினான். விக்டர் லேசான மயக்கத்தில் இருந்தான். மற்றபடி பெரிதாய் ஒன்றுமில்லை.
ஜூடிக்குள் ஒரு கேள்வி- “ இவன் ஏன் என்னை சுட்டான்? ”
எரிமலை வெப்பத்தால் சில பாகங்கள் பழுதாகியிருந்த விமானம் நடுவானில் தாறுமாறாக இயங்கியது!
விக்டர் மார்ஷல் ஒருபுறமும், ஜூடி மணற்பாங்கான கடற்கரையிலும் வீசியெறியப்பட்டனர். ஜூடி லேசான காயத்துடன் தப்பித்தான். விக்டர் கடலுக்குள் விழுந்திருக்கலாம்.
———————————————————————————————————————————————————-
இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு………..
மிஸ் சுதர்சனா அணுக்கரு பிளவை மற்றும் அணுக்கரு சேர்க்கையை தூண்டும் கிரியா ஊக்கிகளை கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு வாங்கினார்………..
இவர் தனது வீட்டில் சுகுமார் என்கிற எட்டு வயது அனாதைச் சிறுவனை பராமரித்து வந்தார். யாரோ ஒரு சிறுவன் ரயிலிருந்து இறங்கும் போது சுவாசக்கோளாறு ஏற்பட்டு ரயிலடியில் விழுந்து விட்டான். இவனது ஒரு கையையும் காலையும் துண்டித்து ஓடிய ரயில் பையனை வீசி எறிந்தது சுதர்சனாவின் மடியில்…!- அப்படித்தான் அவன் சுதர்சனாவிடம் சேர்ந்தான். அவனுக்குப் பிறவியிலேயே தசைகளை பலவீனப்படுத்தும் மயாஸ்தீனியா என்ற அரிய வகை நோய் இருந்தது. அதனாலேயே அவனால் விளையாட முடிய வில்லை; படிக்க முடிய வில்லை; அந்த நோய் இவனது சுவாசத் தசைகளை பலவீனப்படுத்தி அவனைப் பலமுறை அதாவது அவன் வயதை விட நான்கு மடங்கு அதிகம் தடவை சாவின் விளிம்பில் நிறுத்தி இருந்தது. அடிக்கடி உடம்பெல்லாம் நீலம் பாய்ந்து வாயில் நுரை தள்ளி விடும்….! செயற்கை சுவாசம் தரும் வென்டிலேட்டரை அவ்வபோது இணைத்து அவன் உயிரைப் பிடித்து வைக்க வேண்டியிருந்தது ! இதற்காகவே தொண்டையில் நிரந்தரமாகத் துளை போடப்பட்டிருந்தது ! சில சமயம் ஷாக் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வான். தசையெல்லாம் ஏதோ மிருகம் குதறிப் போட்டாற் போல் வலிக்கும்….!
வாழ்க்கையின் எந்த சுகத்தையும் அறியாமல் சுதர்சனாவை மட்டும் தன் உலகமாகக் கொண்டிருந்த சிறுவனின் கபடமற்ற சிரிப்பும், குழந்தைத் தனமான பேச்சும், பேரமைதி தவழும் கண்களும் சுதர்சனாவை அப்படியே உருக வைக்கும்! மரணத்தைப் பற்றிய சுதர்சனாவின் கண்ணோட்டம் அவன் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி இருந்தது ! நோயின் தீவிரம் குறைந்து இப்போதுதான் படிக்கத் தொடங்கியிருந்தான் ! இடபக்கம் கையும் காலும் இழந்த நிலையில் மரக்காலை பொருத்திக்கொண்டு சுதர்சனாவிடம் வந்தான். தொண்டையிலுள்ள துவாரத்தை பிளாஸ்டிக் அடைப்பானால் மூடிக் கொண்டவன், சுதர்சனாவை கால் தொட்டு வணங்கி விட்டு வாசிக்க ஆரம்பித்தான்:
“அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணா ரமுதக் கடலே போற்றி! உமைக்குப் பாதி உடலையும், அடியவர்க்கு முழுமையாகத் தன்னையும் அளித்த வள்ளல் மோன நிலையில் தனித்து அமர்ந்தபோது அம்மை என்ன ஆனாள்? ஞானாம்பிகையாக வெளிப்பட்டாள்……. ! ”
அவ்வபோது தன் நெற்றி முடியை பாம்பு விரலால் நீவி சுருட்டிக் கொள்வது அவன் வழக்கம்….. !
அந்தரீஸும், நரேனும் தலைமைச் செயலகத்தில் பொறுப்பான பதவிகளில் இருந்தார்கள். அந்தரீஸின் சாதனைகள் புத்தகமாகவே வெளி வந்திருந்தன. அந்தரீஸ் வீட்டு தங்கத்தண்டும், நரேன் வீட்டுப் பட்டயமும் தேசிய உடைமையாகி இருந்தன. நரேன் தொடர்ந்து ஆறு முறை முதலமைச்சர் விருது வாங்கியிருந்தார்.
சமீபத்தில் நரேன் தாத்தாவாகி இருந்தார். பேத்தி நெளிநெளியான முடியுடனும், ஸ்படிகம் போன்ற கண்களுடனும் பிறந்திருந்தாள். லாவண்யா என்று பெயரிட்டார்கள். விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்ட தாத்தா பேத்தியை கவனிப்பதும், கொஞ்சுவதும், மனதைப் பறி கொடுப்பதுமாக ஒரு நிமிடம் பிரிய மறுத்தார். பேத்தியும் தாத்தாவிடம் அப்படி ஒட்டிக் கொண்டிருந்தாள். பாலருந்தக் கூட தாயிடம் போகாமல் நினைத்த நேரம் தாத்தாவின் மார்பில் படுத்துத் தூங்கினாள். இதில் விந்தை என்னவெனில் குழந்தை தூங்கி விட்டதும் குழந்தையின் அப்பா தாத்தாவின் மார்பிலிருந்து குழந்தையை தூக்க முனைவார்… உடனே வீல் என்று அழ ஆரம்பிப்பாள் குழந்தை….! பேத்தி அழுதால் தாத்தாவுக்கு கண்ணீர் முட்டி விடும். இத்துனூண்டு சின்ன மூளைக்கு தாத்தா எப்படி பரிச்சயமானார் என்று மூக்கில் விரலை வைத்தது சுற்றம்!
குழந்தையின் இடது தொடையில் சிறுத்தை பல் பதித்தாற் போல மச்சமொன்று இருந்தது!
பசிபிக் பெருங்கடலின் தீவுப் பகுதியில் தூண்டில் போட்ட மீனவருக்கு எதுவோ பெரிதாக மாட்டியது. விசித்திரமான பொருள் அது! மார்பு வரை சொக்கத் தங்கத்தால் செய்யப்பட்ட கனவானின் உருவம், மார்புக்குக் கீழே எலும்புக் கூடாக இருந்தது! எப்படி இது சாத்தியம்? இடுப்பெலும்பில் மாட்டிக் கொண்டு இருந்தது ஏதோ உலோக அடையாள அட்டை… என்ன அது? மீனவர் படித்தார்…..
“வி….க்….ட….ர்…..மா….ர்….ஷ…..ல்….!”
முற்றும்.