தங்கத் தண்டு – 19

தங்கத் தண்டு – 19

அம்பல சித்தர் குகையிலிருந்து வெளி வந்தனர் சுதர்சனாவும் நரேனும் அந்தரீஸும். விக்டர் மார்ஷலின் ஒரே நோக்கம் ரசவாத ரகசியம்தான். அது பத்திரமாக இருக்கிறது; அம்பல சித்தர் குகைக்கு மட்டுமல்ல; இரண்டு மலைகளுக்கிடையில் அவன் வந்ததற்கான அறிகுறியே இல்லை ! ஆனால் தனகிரிக்கு வந்திருக்கிறான்; காட்டுவாசிகளை கொன்றிருக்கிறான் ! ஏன்? இப்போது எங்கிருக்கிறான்? என்ன ஆனான்?

சுதர்சனா நரேனிடம் கேட்டாள், “சார், ரிது அகோரிகள் கிட்ட மாட்டிக்கிறதுக்கு முன்னாடி அவ கூட்டத்தோட எங்க தங்கியிருந்தா? ”

“தனகிரிக்குப் பின்பக்கம், கொஞ்சம் உயரத்தில்……பிச்சாடணர் கோயில் ! ”

“அப்ப, அங்க போவோம் !”

வழியில் வனத்துறை அதிகாரி ஒருவரைக் கண்டனர். அவரிடமிருந்த டிவைஸ் ரேடியோ அலைகளைப் பரிமாறியது! “ நாங்க ஸ்பெஷல் ஆபிசருங்க சார், இங்க மரங்களை வெட்டுறது, யானைகளைக் கொல்றதுன்னு நிறைய நடக்கும்… அதனாலதான் எங்களுக்கு இந்த டிவைஸ் கொடுக்கப்பட்டிருக்கு! ” வந்த அதிகாரி விளக்கினார்.

“ சமீபத்துல முப்பது காட்டுவாசிகள் செத்துப் போயிருக்காங்க! அது பற்றி ஏதாவது தெரியுமா? ”

“ இந்த இடத்துல அப்படி எதுவும் நடக்கலியே சார்! அப்படி இருந்தா போலிசோட கோ ஆர்டினேட் பண்ணிக்குவோம்” என்றவர் “ சார், இந்த காட்டாறு சரியான சறுக்கு மரம்; காட்டாறு வழியா தனகிரிக்குப் பின்பக்கமிருந்து இங்க வர ரெண்டு நாளாகும்! இங்கிருந்து தனகிரிக்குப் பின்பக்கம் போக பத்து பதினஞ்சு நாள் ஆயிடுமே? ஏன்னா சுத்தித்தான் போகணும் ! நம்ம காட்டாறு வழி ஒன்வே டிராபிக்! கொஞ்சம் இருங்க, பக்கத்து மாவட்டத்துல கேட்டு ஹெலிகாப்டர் அனுப்பச் சொல்றேன்! ”

“ உங்க டிவைஸ் அவ்வளவு பவரா? ”

அதிகாரி சிரித்தார், “ எங்க ஆபிசர் ஒருத்தர் காலைலதான் கிளம்பிப் போனார். நான் அவருக்கு ஃபோன் பண்ணுவேன்; அவர் இன்னொருத்தருக்கு ஃபோன் பண்ணி அப்படியே போகும்…. ”

“ மெசேஜ் கரெக்டா போய் சேருமா? ஹெலிகாப்டருக்கு பதிலா எலிப்பொறி அனுப்பிடப் போறாங்க! ”

“ அப்படியும் நடந்திருக்கு! உங்க அதிஷ்டம் எப்படின்னு பார்ப்போம் ! ”

“ ஹெலிபேட் இருக்கா இங்க? ”

“ பைபர் ஏணி விழும் சார், ஏறிப் போயிடலாம்; ”

“சரி, இங்கே அகோரிகள் நரபலி கொடுக்கிறாங்களே, நீங்க கண்டுக்கிறதே இல்லையா? ”

“அகோரிகள் அவங்க உண்டு, சுடுகாடு உண்டுன்னு இருப்பாங்க சார்; நரபலி கொடுத்த மாதிரி எந்த தகவலும் எனக்கு வரலியே? ஏன் சார், சமீபத்தில ஏதும் நரபலி கொடுத்தாங்களா? ”

“கொடுக்கல….. கொஞ்சம் விட்டிருந்தா இதோ, இந்தப் பெண்ணை பலி போட்டிருப்பாங்க! ”

“ஐயையோ, அப்ப இனிமே அதையும் நோட் பண்ணிக்கிறேன்…! அப்புறம், மிருகங்களை ஏதும் பலி கொடுத்துடலையே? ”

இல்லை என்று தலையசைத்தனர். “உங்க கவலை உங்களுக்கு! ”

அவர்கள் உரையாடல் நிறைவுற்ற நேரம் ஹெலிகாப்டர் வந்தது! நன்றி சொல்லி ஏறினார்கள் !

தனகிரிக்குப் பின்பக்கம் பிச்சாடணர் கோயில்…………

இருபதே நிமிடத்தில் வந்து விட்டார்கள்! அப்பால் மக்களே உங்கள் சமர்த்து என்று திரும்பியது ஹெலிகாப்டர்!

ரிதுவின் இடமென்பதால் ரிது சந்தோஷமாக இருந்தாள். நிறைய குடிசைகள் ஆளின்றிக் கிடந்தன. வயதான பெண்கள், முடியாத கர்ப்பிணிகள், சின்னக் குழந்தைகள்தான் கண்ணில் பட்டனர். ஆண்பிள்ளைகள் யாருமே இல்லையா? எல்லோரும் விக்டர் மார்ஷலின் ரத்த வெறிக்கு பலியாகி விட்டார்களா?

சட்டென்று ஏழெட்டு காட்டுவாசி ஆண்கள் அவர்களைச் சூழ்ந்தனர்!

நோவா கடவுள் சிற்பத்தை விட உயிருள்ள சிற்பமான ரிது அவர்களுடன் இருந்ததில் நல்ல அனுகூலம் ஏற்பட்டது. தாக்க வந்த காட்டு வாசிகள் ரிதுவைக் கண்டதும் நின்றார்கள். ரிது அண்ணா, மாமா என்றழைத்து ஏதேதோ பேசினாள். உடனே முகம் மலர்ந்த காட்டுவாசிகள் அவர்களை நன்றாகவே வரவேற்றனர். ரிதுவின் சொந்தக்காரர்களும் அங்கிருந்தனர். அவர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டாள் ரிது.

“ மன்னிச்சுக்கங்க! வெளியாட்களால எங்களுக்கு எப்பவுமே தொல்லை; அதனாலதான் உங்களை தாக்க வந்தோம்…. ”

“ புரியுது ” என்றபடி நடந்தனர் மூவரும். ரிது அவர்களோடு சங்கமமாகி விட்டாள்.

காட்டு வாசிகளின் விருந்தோம்பல் நன்றாக இருந்தது ! மெதுவாக விசாரணையை ஆரம்பித்தனர்….

“ அந்த வெளிநாட்டுக்காரன் உங்க தலைவர் கிட்ட ஏதோ கேட்டிருக்கான்; சுரங்கம் பத்தி விசாரிச்சிருக்கான்.. அந்த ரகசியம் அடுத்தவங்களுக்குத் தெரியக் கூடாதுன்னுதான் கொன்னுருக்கான்! அவன் இங்கே சுத்திகிட்டு இருந்தான்னா அவனை உடனே பிடிக்கணும் ! அவன் அப்படி என்னதான் பேசினான்? யாராவது எங்களுக்குச் சொல்ல முடியுமா? ”

எப்படி கேட்டாலும் பதில் இல்லை. சொல்லப் பயமா? உண்மையிலேயே தெரியாதா?

ஒரு வாலிபன் மனந்திறந்து பேசினான், “ அந்தாளு ஒரு நாலைஞ்சு பேர் கிட்ட மட்டும் ரகசியம் பேசியிருக்கான்; ராத்திரி சாராயம் கொடுத்திருக்கான். நாங்க அன்னைக்கு காட்டுக்கு வெளியே இருந்தோம்.. வந்து பார்த்தா பொணங்களை அடக்கம் பண்ற வேலைதான் எங்களுக்கு மிஞ்சியிருந்தது! அந்தாளு முகத்தைக் கூட நாங்க பார்க்கல… எந்த சுரங்கம் பத்தியும் எங்களுக்குத் தெரியல! ”

மூவரும் சோர்ந்தார்கள்…………….

நெருப்பை சுற்றி அமர்ந்திருந்தனர் மூவரும். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. ரிதுவின் சொந்தக்காரப் பெண்மணிகள் ரிதுவுக்கு மாற்றுடை அணிவித்து விட்டு அவளது பழைய ஆடையை துண்டு துண்டாக கிழித்து அதில் மஞ்சள் கிழங்கை முடித்து காட்டாற்றில் விட்டுக் கொண்டிருந்தனர். ரிது தங்களிடம் நலமாக சேர்ந்து விட்டதை அவள் தாய்க்கு தெரியப்படுத்துகின்றனராம்! ரிது அப்படியும் இப்படியும் ஓடிக் கொண்டிருந்தாள். அவள் சுதர்சனாவை “அக்கா” என்று கூப்பிட்டாள்; அந்தரீஸை “அண்ணா” என்று அழைத்தாள். நரேனை பேர் சொல்லி அழைத்தாள்.

“பெரியவங்களுக்கு மரியாதை தரணும்னு உங்கம்மா சொல்லலியா? ” என்று கேட்டாள் சுதர்சனா.

“சொல்லியிருக்காங்களே? ” என்றாள் ரிது.

“பின்ன சாரை ஏன் பேர் சொல்லி கூப்பிடுறே? ”

“நரேன் ஒண்ணும் பெரியவர் இல்லே ! பெரிய பையன்னா தாடி மீசை இருக்கணுமே? ”

மழமழவென்ற நரேனின் முகத்தை திரும்பிப் பார்த்து, சிரிப்பை அடக்க முயன்று முடியாமல் களுக்கென்று சிரித்தனர் சுதர்சனாவும் அந்தரீஸும்.

“ ஒரு வாரம் டைம் கொடு, தாடி மீசையோட ஜடாமுடியே வந்துடும் ! அப்ப கால்ல விழலே பொண்ணே, கைமா பண்ணிடுவேன் ! ” நரேன் அதட்ட ஓடினாள் ரிது…..

“ ப்ச் ! திருவண்ணாமலையிலேயே பிடிக்காம விட்டுட்டேன் ! ! இன்ஸ்பெக்டர் தன்ராஜ் எப்படி ஏமாந்தார்னே தெரியலியே? இன்னொரு சாமியார் தானா முன் வந்து ஒரு தகவல் சொன்னார், புது சாமியாரோட துணிப்பையில இருக்கக் கூடாத பொருளெல்லாம் இருக்குதுன்னார்… ரிவால்வர், பளபளன்னு தண்டு.. அப்பத்தான் அலர்ட் ஆனோம்! அதுக்குள்ள ஆள் தனகிரிக்குள்ள போயிட்டான்… ! ! ஒரு முப்பது பேர் செத்துப் போனது என்னாலதான்! இன்னும் எத்தனை பேர் செத்துப் போவாங்களோ? ” அந்தரீஸ் வருந்தினான்.

“ இல்லை, அதுக்கப்புறம் அசம்பாவிதம் நடந்த மாதிரி தெரியல! விக்டர் இருந்தா அசம்பாவிதம் நடக்காம இருக்காது ! அதனாலதான் விக்டர் இந்த சுற்று வட்டாரத்துலேயே இல்லைன்னு சொல்றேன்! ” இது நரேன்.

“ அதெப்படி சார்? தனகிரியை சுற்றி பதினோரு இடத்துல செக்போஸ்ட்! அவன் தனகிரியை விட்டுப் போகல சார் ! ….ஒரு வேளை செத்துப் போயிட்டானோ?”

“ எந்த சாமியாரும் செக்போஸ்டை க்ராஸ் பண்ணலியா? ” என்றாள் சுதர்சனா.

“ சாமியாரும் க்ராஸ் பண்ணல… மாமியாரும் க்ராஸ் பண்ணல ” என்றான் அந்தரீஸ் சற்றுக் கோபத்துடன்….

ரிது தானாக அவர்கள் உரையாடலில் புகுந்தாள், “ சும்மா சும்மா சுரங்கம் பத்தி பேசறீங்க? திருமுடியான் ஸ்வாமிகள் சுரங்கமா? ”

சுதர்சனா அதிர்ந்தாள். பரிச்சயமான பேராகத் தெரிகிறதே?? ! நரேன் சுதர்சனாவின் அதிர்வை உணர்ந்தான்! “ சுதர்சனா, ரிது கிட்டப் போய் பேசு ” என்றான்.

சுதர்சனா எழுந்து போனாள். அந்த நேரம் பார்த்து அந்தரீஸ் நரேன் அருகில் வந்தான், “சார், இந்த மேடம் அன்னைக்கு ….! ” என்றவன் குளத்து நீரில் சுதர்சனா தன்னைக் காப்பாற்றியதை கூறினான். “சார், உடல் இயக்கத்தை தற்காலிகமா நிறுத்தும் வலிமை யோகிகளுக்கு உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன்… இவங்களுக்கு இருக்கே?” பரம ஆச்சரியத்தோடு விளக்கினான் அந்தரீஸ். நரேனுக்கு அது ஒன்றும் ஆச்சரியமாய் இல்லை !

திரும்பி ரிதுவுடன் வந்த சுதர்சனா கையில் சட்டம் போட்ட படமொன்று இருந்தது! பூஜை செய்யப்பட்ட படம்; ரிது குடிசையிலிருந்து எடுத்திருக்கிறாள்………….!

படத்தில் பச்சை நிறத்தில் நீளமாக வளைந்து படுத்துக் கிடந்தது முதலை! முதலைக்கு இரண்டு தலைகள் ! ஒரு தலை மேல் அம்பல சித்தர் சமாதி நிலையில் இருந்தார். இன்னொரு தலையில் லிங்க வடிவில் பூதநாதர் கோயில் கொண்டிருந்தார். அம்பல சித்தர் சமாதிக்குக் கீழ் முதலையின் கழுத்துப் பகுதியில் இளந்துறவி யோக நிலையில் இருந்தார் ! முதலையின் வால் பகுதியில் தாமரை மலர்கள் இடம் பெற்றிருந்தன !

படத்தின் அடியில் பூதநாதர், அம்பல சித்தர், திருமுடியான் சுவாமிகள் என்று எழுதியிருந்தது.

“ இதுல கழுத்துப் பக்கம் இருக்கிறவர்தான் திருமுடியான் சுவாமிகள் ! ”

சுதர்சனா சொன்னதும் அந்தரீஸ் கேட்டான்,

“ இருந்துட்டு போறார் ! அது என்னங்க, அந்தப் பேரை அவ்வளவு பரவசமா சொல்றீங்க? போன ஜென்மத்துல உங்க கூட ஒண்ணா படிச்சவரா? ”

“ ம்க்கும்… என்னோட போன ஜென்மத்தை பற்றி எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது… யாருக்கும் தெரியாது! ஒருத்தருக்கும் தெரியாத விவகாரத்தை அப்படியே விட்டுடலாமே? எதுக்கு மூளையைக் குழப்பிக்கணும் ?.. ஏன்னா, இதைச் சொல்லியே நம்மளை மூளைச் சலவை பண்ணி ஏமாத்துற கும்பல் எப்போதுமே நிறைய பேர் உண்டு! அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது………. ! சில சமயம் கடந்த கால உண்மையை விட நிகழ்கால வாழ்க்கை முக்கியம்……………. ! ”

“ சரி, இந்த படத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? ”

“ அதத்தான் தெரிஞ்சிக்கணும் ” என்ற சுதர்சனா, “ சார், இங்க தாமரைப் பூக்கள் எங்க கிடைக்கும்னு கேளுங்க ! ” என்றாள் !

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top