ஸ்தனகிரி
குகை முழுக்க ரத்த எழுத்துக்களும், சிறுத்தைகள் பிய்த்து போட்ட மிச்சமும்… ரத்த வாடை இன்னமும் அடித்துக் கொண்டிருந்தது. மண்டையோடு பிய்ந்து வந்த கொத்து முடி குகைக்கு வெளியே செடியில் மாட்டியிருந்தது. நரேன் நிதானமிழந்து குகையின் சுவரை கைகளால் குத்தி தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். கைகளில் புள்ளி புள்ளியாய் ரத்தம்!
அவன் லாவண்யாவை நேசித்தான்; மனமார நேசித்தான். எத்தனை முறை அவளை மனதுக்குள் கட்டித் தழுவி இருப்பான், எத்தனை முறை சின்ன உதடுகள் கரைந்து போகுமளவு முத்தமிட்டிருப்பான்; எதையுமே வெளிக்காட்டிக் கொண்டதில்லையே? ஆசையாக ஒரு கையெழுத்துக் கேட்டாள்; பணி நீக்கம் செய்யப்பட்ட தனது கையெழுத்து என்ன பயனை தரப் போகிறது என்று நினைத்து அவன் போடவில்லை. அது அவளை பாதித்திருந்தது. நல்ல நேரத்துக்காக காத்திருந்தான்……இப்படி ஆகுமென்று தெரிந்திருந்தால் அவள் நெஞ்சிலேயே கையெழுத்துப் போட்டிருப்பானே!
“லாவண்யா… லாவண்யா…. என்னை காதலித்த பாவத்துக்கு இத்தகைய கொடூர மரணமே தேவலாம் என்று போய் விட்டாயா? ”
அந்தரீஸ் நரேனின் துக்கத்தை உள் வாங்கி சிலையென நின்றான். சுதர்சனா நரேனின் தோளை அழுத்தமாகப் பிடித்தாள். “சார், உங்க மேல தப்பில்லே. உங்க நிலையில லாவண்யா இருந்தாலும் அப்படித்தான் செஞ்சிருப்பா.. அவளுக்கு உங்க மனசு புரியும் சார். கல்யாணமாகிற வரைக்கும் காதலிக்கிற பெண்களுக்கு சந்தேகமும் அவநம்பிக்கையும் வர்றது சகஜம். ஆனாலும் அவங்களுக்குப் பிரியம் புரியும்! புரியாமலா இப்படி குகை முழுக்க ரத்தத்தில எழுதியிருப்பாங்க?”
“ஆனா சுதர்சனா…” நரேன் அதற்கு மேல் சொல்ல முடியாமல் தவித்தான்.
தன் காதலின் ஆழம் லாவண்யாவுக்குத் தெரியாமலே போயிருக்குமோ?
ஒரு வேளை தான் அவளைக் காதலிப்பதை தெரிவித்திருந்தால் இந்த கொடூர மரணத்துக்கு தன்னை ஒப்புவித்திருக்க மாட்டாளோ?
விடை தெரியாத இந்தக் கேள்வி நரேனின் மனதை கத்தியால் அறுத்ததைப் போல வேதனை கொடுத்தது.
லாவண்யாவின் மரண வாக்குமூலம் மிகத் தெளிவாக, முழுமையாக இருந்தது. தன் தாகம் தீர்ந்து விட்ட ஆத்மாவின் திருப்தி அதில் வெளிப்படுவது நரேனின் குழம்பிய மனதுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
அந்தரீஸ் கவனித்தான். “சார்” என்றான். ”இந்த லேடியை நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு, சார்… வேலையெல்லாம் முடிச்சுட்டு உயிர் நண்பனுக்காக காத்திருக்கிறது மாதிரி இவங்க மரணத்தை எதிர்பார்த்து காத்திட்டு இருந்தாங்க போல…
“ இப்ப எல்லாமே முடிஞ்சிடுச்சே ! ” என்றான் நரேன்.
சுதர்சனா மறுக்கும் பாவனையில் தலையசைத்தாள்.
“ உடம்புத் தேவை, உடம்புக்கு வர்ற உபாதை, உடல் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகள், உறவுகள்- இதெல்லாம் மரணத்தோட முடிஞ்சிடும். உடம்பையும் மீறிய விஷயங்கள்- தூய அன்பு, கற்ற வித்தை, தன்னலமற்ற சேவை, உண்மையை தேடற முயற்சிகள்- இதுங்களை மரணம் தடை செய்யாது; ஒத்தாசைதான் செய்யும்… ”
சுதர்சனா மென்மையாகத் தொடர்ந்தாள்…
“ கர்ப்பப்பைல இருக்கற குழந்தைக்கு கருப்பையை தாண்டி ஒரு உன்னத வாழ்க்கை இருக்கிறது தெரியாது. கருப்பையை தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறபோது கல்லறையைத் தாண்டி வாழ்க்கை இருக்காதா? நம்ம புலனறிவுக்கு எட்டலேங்கிறதால உண்மைகள் இல்லேன்னு ஆயிடுமா? நீங்க யாரையும் இழக்கல நரேன்! எழுந்திரிங்க! ”
அந்தரீஸின் போலிஸ் பார்வை குகையின் ஓரத்தில் படபடத்துக் கொண்டிருந்த காகிதத்தின் மேல் நிலைத்தது! என்ன அது?
மலைகளின் ஏரியல் வியூ!
“ சார்..! சுதர்சனா…! உன் கவிதைக்கு விடை! ”
சுரமுனீசுரர் பள்ளத்தாக்கு
ஜீப்பை நிறுத்தி விட்டு பதினெட்டு கிலோ மீட்டர் நடந்தே வந்தனர் நரேன், அந்தரீஸ், சுதர்சனா மூவரும்.
விக்டர் மார்ஷல் தனகிரியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இரண்டாயிரத்து ஐந்நூறு அடி உயரத்தில் எத்தனை நாள்தான் பதுங்கியிருக்க முடியும்? ஒன்று அல்லது இரண்டு நாள்?..கண்ணில் பட்ட அடுத்த கணம் சுடுகிற வெறியில்தான் போலிசார் இருந்தனர். ஆயினும் கும்பலாகப் போவதை தவிர்த்தனர். அதனால் காட்டின் அமைதி பாதிக்கப்படலாம்… காட்டு விலங்குகள் ஊருக்குள் புக நேரலாம்! அந்நியர்களை ஏற்காத காட்டுவாசிகள் இன்னொரு பிரசினை. அதனால் தேர்ந்தெடுத்த ஒரு சிலர் சிறு குழுக்களாக அங்கங்கு அனுப்பப் பட்டிருந்தனர்!
நரேன், அந்தரீஸ், சுதர்சனா மூவரும் தங்கத்தண்டு ஓவியத்தின் பின்னாலிருந்த கவிதைப்படி இரண்டு மலைகளுக்கு இடையில் பயணம் செய்தனர். ஆபத்து நிறைந்த காட்டுப்பகுதி என்பதால் சுதர்சனாவை அழைத்துப் போக அந்தரீஸ் தயங்கினான். ஆயினும் நரேனின் வற்புறுத்தலை தட்ட முடியவில்லை. விக்டரை கைது பண்ணவும், ரசவாத ரகசியத்தை விக்டருக்கு முன் தெரிந்து கொள்ளவும் இந்த மூவர் ஒரு குழுவாக காட்டுக்குள் போக முடிவானது.
காலுக்கு கீழ் சில்லிட்டு ஓடியது சுரமுனீசுரர் சுனை. காட்டில் ஆங்காங்கே வைரங்கள் மின்னத் தொடங்கின – காட்டு மிருகங்களின் கண்கள்.
“சார், இதுக்கு மேலே போறது நல்லதில்லே. பாதுகாப்பா ஏதாவது மரத்தில தங்கிக்கலாம்”
தங்கினார்கள்.
விசித்திரமான ஓசை கேட்டது! காட்டு வாசிகளின் கும்பல்! குத்தீட்டிகள் அவர்களை நோக்கிப் பாய்ந்தன.
“அந்தரீஸ், நான் முதல்ல குதிச்சு அவங்களை வேற பக்கம் கூட்டிட்டு போயிடறேன்; நீ சுதர்சனாவோட எதிர் திசைக்குப் போயிடு, போற பாதையில அடையாளம் பண்ணி வைக்கிறேன் ! ” நரேன் குதித்தான்.
ஓரிருவர் தவிர மீதி காட்டு வாசிகள் நரேனைத் தொடர்ந்து ஓடினர். சிலர் மரமேற முற்பட்டனர்.
சுதர்சனாவுடன் அந்தரீஸ் எதிர் திசையில் ஓடினான்.
கையிலிருந்த கத்தியால் காட்டுச் செடிகளை ஒரு திசை பார்த்து வெட்டியபடியே ஓடிய நரேனை ஒரு எல்லைக்கு மேல் காட்டு வாசிகள் துரத்தவில்லை. திரும்பிப் போயினர்.
அவன் நின்ற இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் உள் தள்ளி அகோரிகள் எனப்பட்ட விசித்திரமான மக்கள் கும்பலாகக் கூடி பேசிக் கொண்டிருந்தனர்.
விடிந்தால் காலபைரவிக்கு நரபலி கொடுக்க வேண்டும்! யாரைக் கொடுப்பது?
பெண் சுகம் காணாத பிரம்மச்சாரி பசங்களை பலி கொடுக்கக் கூடாது. உடலளவில் ஒருவனுக்கு சொந்தமான பெண்களையும் பலி தரக் கூடாது.
ரிது என்ற பதினைந்து வயதுப் பெண்ணை தேர்ந்தெடுத்திருந்தார்கள். ரிதுவின் தாய் கை கூப்பி கெஞ்சிக் கொண்டிருந்தாள். “ஐயா, நாங்க காட்டு வாசிங்க.. நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்தோம். எவனோ வெள்ளைக்காரன் நோவா கடவுளை எங்க தலைவர் கிட்ட காட்டினான். தலைவர் அவனுக்கு வேண்டிய வசதி செஞ்சு தந்தார். அவன் என்னவோ மது பாட்டிலை கொடுத்தான். என்னத்தை கலந்தானோ, குடிச்சவங்க அத்தனை பேரும் உடனே செத்துப் போயிட்டாங்க. பரிமாறின கையை வாயில வச்ச பொம்பளைங்களும் செத்துப் போனாங்க. மிஞ்சிக் கிடந்த நாங்க ஏதோ பில்லி சூனியமோன்னு பயந்துட்டு காட்டாறு வழியா உங்களை நம்பி வந்துட்டோம். நம்பி வந்த என் பொண்ணை பலி கொடுக்கணும்னு சொல்றீங்களே, இது உங்களுக்கே நல்லாயிருக்கா? ”
நல்லாயில்லைதான். என்ன செய்யலாம்?
அப்போதுதான் நரேனைப் பிடித்து இழுத்து வந்தனர். நரேனிடம் அந்தரங்கக் கேள்விகள் கேட்ட தலைவன் சற்று யோசித்தான். “சரி, இன்னைக்கு ராத்திரி எங்க விருந்தினரா இங்க தங்கிக்கங்க. உங்களுக்குப் பரிசா இந்தப் பெண்ணைக் கொடுக்கறேன். நல்லா அனுபவிங்க. ”
ரிதுவின் தாய் திடுக்கிட்டுப் போய் நரேனைப் பார்த்தாள். அகோரி தலைவனின் சூழ்ச்சி அவளுக்குப் புரிந்தது. ரிதுவுக்குப் பதிலாக புதியவனை பலி கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறான். திமிறும் ஆண் மகனிடம் இரவில் பருவப் பெண்ணை அனுப்பி வைத்தால் அவன் சும்மா விட்டு விடுவானா? ஆயின் தன் மகள் இப்படி கீழ்த்தரமாக இறங்கித்தான் தன் உயிரை காத்துக் கொள்ள வேண்டுமா? அவள் எதிர்காலம் என்ன ஆவது? புதியவன் பலியானால் ரிது விதவையாக வாழ கட்டாயப் படுத்தப்படுவாளா?
ஆனால் இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை. வேண்டிக்கொண்டது அவள்; வாய்ப்பளிக்கிறான் தலைவன். இனி மாற்றிப் பேசினால் தண்டனை கொடுத்து விடுவான்… எப்போ, எப்போ என்று காத்துக் கிடக்கும் அகோரி ஆண்கள் கையில் ரிதுவை தள்ளி விட்டால் என்ன ஆவது? ஏதோ முடிவுக்கு வந்தவளாக நரேனையே ஊடுருவிப் பார்த்தாள்.
நரேன் மறுத்தான்.
“எங்க பரிசை மறுத்து எங்களை அவமானப்படுத்தினா தலையிருக்காது. ” நாக்கை துருத்தி மிரட்டினான் தலைவன். “என்ன பண்ணணும், எப்படி நடந்துக்கணும்னு உன் பொண்ணு கிட்ட சொல்லு” ரிதுவின் தாயிடம் கண்ணடித்துக் கூறிய தலைவன் கூட்டத்தை முடித்தான்.
இது எதுவும் அறியாத நரேனை அறைக்குள்ளே வந்த ரிது வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். “உன்னை எப்படி கூப்பிடணும்? ” நரேன் தன் பெயரைச் சொன்னான். வந்தவளுக்கு பெரிய கண்கள். பாதி கண்ணில் தொடங்கிய மை காதளவு நீண்டது. காட்டுப் பெண்ணல்லவா, காட்டு மலரைப் போலவே வஞ்சனையற்ற பருவ வளர்த்தி. வஞ்சனையற்ற மனது! வெளியே கும்பலாக நின்றிருந்தபோது பாவாடை தாவணி அணிந்திருந்தாள். இப்போது அறைக்குள் இறுக்கமான சிவப்பு சட்டையும் அரைப்பாவாடையும் போட்டிருக்கிறாள். சிவப்பு சட்டையில் அதென்ன ஈரம்? கால்களில் அவளைப் போலவே சிணுங்கும் கொலுசு. கொஞ்ச நேரத்தில் அவளுக்கு நரேனை பிடித்துப் போய் விட, சகஜமாக பேசத் தொடங்கினாள்.
இந்தப் பக்கம் அந்தரீஸையும் சுதர்சனாவையும் நாட்டு துப்பாக்கி சகிதம் ஓட ஓட விரட்டினர் காட்டு வாசிகள். வழியில் நீர் தளும்பி நின்ற குளத்தைக் கண்ட அந்தரீஸ் சுதர்சனாவிடம் சில உத்தரவுகளை பிறப்பித்து விட்டு அவளோடு குளத்தில் குதித்தான்.
நல்ல ஆழமான குளம்! வெளிச்சம் விழாத ஆழத்தில் மூச்சடக்கிக் காத்திருந்தனர் இருவரும். ஆனால் முப்பது பேர் நாட்டுத் துப்பாக்கியோடு குளத்தை சுற்றி உட்கார்ந்து கொள்வர் என்று இருவரும் எதிர்பார்க்கவில்லை.
அந்தரீஸுக்கு நிலைமை புரிந்தது. இவர்கள் இப்போதைக்குப் போகப் போவதில்லை. தங்கள் தலை தெரிந்த அடுத்த நிமிடம் சுடப் போகிறார்கள். நீருக்குள்ளேயே நிறைய நேரம் இருந்தாலும் ஜலசமாதிதான்.
நேரம் போய்க் கொண்டிருந்தது.
அந்தரீஸ் சுதர்சனாவின் நாடியை உணர முயற்சித்தான். இல்லாதது போல் தெரிந்தது! இதயம் கனத்து துக்கம் பரவியது. போலிஸ்காரனாகிய தன்னாலே மூச்சடக்க முடியவில்லை. சாதாரண பெண் என்ன செய்வாள்?
அந்தரீஸுக்கும் மூச்சுத் திணறியது. நிலத்தில் போட்ட மீனாகத் திணறி முடித்தான். அவன் வாய் திறக்க முயற்சித்த அதே விநாடி…
தொடரும்…