தங்கத் தண்டு – 1

……………………..கி.மு. ஐம்பதாம் வருடம்….

……………………..ஓம் தும்பிக்கையானே துணை.

சிறு குறிஞ்சி, ஙெமிலி, சீரொட்டும் ஊரன்பத்ரம்
நறியகல் நெய் நசித் தெண்ணில் ஒன்றாய்
ரசமூன்று கிளறி விசும்பின் மதியன்ன முகிழ்த்து
மெழுகி வைப்பின் இலையொழுகி இரும்பும் பொன்னாம்.

அம்பல சித்தர் தம் சீடர்கள் திருமுடியானுக்கும் சுதர்சனனுக்கும் விளக்கிக் கொண்டிருந்தார்.

சிறு குறிஞ்சி, ஙெமிலி, ஊரக்கோட்டான், மகேந்திர பத்திரம் இவற்றை சம அளவு எடுத்து இடித்து பாஷாணக் கல்லுடன் நீரும் எண்ணெயும் தெளித்து எட்டு பங்கு ஒரு பங்காகும் வரை காய்ச்ச வேண்டும். அதனுடன் மும்மடங்கு பாதரசம் சேர்த்து கிளறிக் கிளறி கை விடாது காய்ச்ச வேண்டும். சுண்டக் காய்ச்சி குளிர வைத்தால் பளபளப்பான நிலா உருண்டை பூமிக்கு வந்தாற் போலிருக்கும். தேவைப்படும் போது மெழுகை உருக்குவது போல் மெதுவாக உருக்கி, கல் கரண்டியால் எடுத்துப் பல முறை பூசி வாழையிலையால் மூடி மூன்று தினங்கள் காக்க, எந்த உலோகமும் பொன்னாகும்.

திருமுடியான் தன் நெற்றி முடியை பாம்பு விரலால் நீவி சுருட்டிக் கொண்டே கவனித்தான். தன்னோடு வேற்று நாட்டவனான சுதர்சனன் சமமாக அமர்ந்து கற்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

………………………………………………………………………………………………………………………………………………………………………..

சென்னை.

எழுபது வயதான நல்லம்மா வெள்ளை பட்டுப் புடவையில் கழுத்து நிறைய நகையுடன் குவாலிஸ் காரிலிருந்து இறங்கி அய்யனாரின் பங்களா முற்றத்திற்கு வந்தார். குழந்தைகளும் பெரியவர்களுமாய் குடும்பத்தின் மொத்தப் பேரும் அவருக்காகவே காத்திருந்தனர். சூட்கேஸ், தோள் பைகள் என சில பொருள்கள் பாக் செய்யப்பட்டு ஏதோ பயணத்துக்காக தயாராகி இருந்தன. வீட்டுக்குள் சிரமப் பரிகாரம் செய்து கொண்ட நல்லம்மா ஐப்பசி மாத தேய்பிறை பஞ்சமி எப்போது என்று தன் மகன் அய்யனாரிடம் கேட்டார். “நவம்பர் பதினொன்னாம் தேதி” என்ற அய்யனார், “இந்த வருஷம் நம்ம கூட உங்க பேத்தியும் வரப் போறா” என்றார்.

“அவ ஒரு நாஸ்திகையாச்சே! குல தெய்வம் கோயிலுக்குப் போய் கும்பிட திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிற கடலாடி போறோம். இவளும் வர்றேன்னாளா என்ன? ”

சொல்லி முடித்த நேரத்தில் சுரிதார் போட்ட குரங்காய்க் குதித்தாள் நல்லம்மாவின் பேத்தி. பெயர் சு…த…ர்…ச…னா. விளையாட்டு வீராங்கனை போல் தோற்றம். கன்னத்தில் லேட்டஸ்டாக பரு வாங்கியிருந்தாள். ஆர்க்கியாலஜிஸ்ட். மத்திய அரசுத் துறையில் வேலை பார்க்கும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்; புதுச்சேரியில் தாவரவியல் பூங்கா பக்கத்தில் பாண்டிச்சேரி மியூசியத்தில் ஆபிஸ். சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள்.

“ பாட்டி, நான் கோயில் பக்கம் போக மாட்டேன்; போனாலும் சாமி கும்பிட மாட்டேன்! ”

“ நீ அந்த இடத்துக்கு வந்து பாரு; தன்னால தரைல விழுந்து கும்பிடுவே! ”

“ சரி, ஐப்பசி மாச தேய்பிறை பஞ்சமியோட முக்கியத்துவம் என்ன? ”

நல்லம்மாவை முகம் பார்த்துக் கேட்கிற தைரியம் அந்த வீட்டில் அவளுக்கு இருந்தது. நல்லம்மா சுதர்சனாவை பூஜையறைக்கு அழைத்துச் சென்றாள். பாட்டிக்கும் பேத்திக்கும் அச்சில் வார்த்தாற் போல் ஒரே முகம், ஒரே உடற்கட்டு! ஒன்று வெள்ளைப் புடவையில் தள்ளாடியும், இன்னொன்று வயலெட் சுரிதாரில் நடனமாடியும் செல்கிறது.

இரும்புப் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட மரப் பேழையிலிருந்து ஒரு ஓவியத்தை எடுத்து நீட்டினாள் நல்லம்மா.

தங்க மரத்தண்டின் ஓவியம்……

சுதர்சனாவின் தொல் பொருள் ஆராய்ச்சிக் கண்கள் ஓவியத்தை அல்வாவாய்ச் சாப்பிட்டன. ஓவியமே இருநூறு வருஷம் பழமையானதாகத் தெரிகிறதே!

இந்த மரத்தண்டை இதற்கு முன் பார்த்திருக்கிறாளோ?

அடியில் பருத்து மேலே செல்லச் செல்ல குறுகி, கணுக்களோடு கூடிய மரத்தண்டு; எல்லா இடங்களிலும் காணக் கிடைக்கிற ஒன்றுதான்.

“சுதர்சனா!” அழைத்தாள் பாட்டி. “ இது பத்து பதினைந்து தலைமுறைக்கு முந்தின கதைம்மா. உங்க எள்ளுக்கு எள்ளுப் பாட்டனார் ஏழைக் குடியானவர். வறுமையில வாடிட்டிருந்தவர் கனவுல லட்சுமி தேவி வந்து, தான் ஒரு குழியில தங்கத்தண்டா மாறி நிக்கிறதாயும் தன்னை அழைச்சுட்டு போகும்படியும் சொன்னாளாம். அவரும் அலைஞ்சு திரிஞ்சு அந்த தங்கத் தண்டை கண்டு பிடிச்ச நாள்தான் இது. அந்த தண்டு கிடைச்ச இடத்தைத்தான் நாம குலதெய்வம் கோயிலா கும்பிடறோம். அந்த ஊர் ராஜா தங்கத்தண்டை ஏத்துக்கிட்டு அதுக்குப் பதிலா நிலம், நீச்சு, வேலையாள், நகை நட்டு எல்லாம் கொடுத்தாராம். அதிலேர்ந்து நம்ம பரம்பரை செழிப்பா இருக்கறதா நம்பிக்கை… ” சொல்லி முடித்தார்.

……………………………………………………………………………………………………………………………………………………………………..

சூரத்

ஐஏஎஸ் முடித்து சப் கலெக்டராக பணியாற்றிய பின் கலெக்டராக போஸ்டிங் வாங்கிய மகன் நரேனை தம் தந்தை மகாதேவரிடம் அழைத்து வந்தார் தீரஜ் குமார்.

“அப்பா, உங்க பேரன் எங்கே போஸ்டிங் வாங்கியிருக்கார், தெரியுமா? ”

வயோதிகம் காரணமாக படுக்கையில் சுருண்டிருந்த மகாதேவர் கண்களால் கேட்டார். “ எங்கே? ”

“ திருவண்ணாமலை…தமிழ்நாடு.. ”

கேட்டதுதான் தாமதம்… அவருள் ஆயிரமாயிரம் உயிர்ப்பு!! தடுமாறி எழுந்தார்… “ தீரஜ்…. தீரஜ்…. அந்தப் பட்டயம்!! ”

எதிர்பார்த்திருந்ததைப் போலவே மிக பத்திரமாக வைக்கப்பட்ட வெல்வெட் உறையை நீட்டினார் தீரஜ்.

பேரனை அருகில் அமர வைத்து பெருமையோடு தடவிப் பார்த்தார் தாத்தா; பேசினார்.
“ நீ ஆட்சியாளரா போற இடம் எது தெரியுமா? உன் எள்ளுக்கு எள்ளுப்பாட்டனார் ஆட்சி செஞ்ச இடம். இந்தியா முழுக்க ஆங்கிலேயனுக்கு அடிமையான போதும் அடிமையாகாத இடம் அந்த மாவட்டத்துல இருக்கு! ”

புரியாமல் திகைத்தான் பேரன். தாத்தாவை உன்னிப்பாக கவனித்தான்.

“ ஆமாம்ப்பா… இது பத்து பதினைந்து தலைமுறைக்கு முந்தின கதை… சோழர் ஆட்சி போய் கிருஷ்ண தேவராயர் வந்தார். உன் எள்ளுக்கு எள்ளுப்பாட்டனார் விஜய நகர வழித்தோன்றல். பேரு மானஸராயர். நிறைய போர்கள்ல ஈடுபட்டு, இழந்து, சேர்த்து கடைசியில சில மலைகளும், கிராமங்களுமா ராஜ்ஜியம் மிஞ்சியிருந்தது. இருந்த பகுதிகளுக்கு ஃபிரெஞ்சுக்காரனும் ஆங்கிலேயனும் அடிச்சுகிட்டான். ஆங்கிலேயன் ஜெயிச்சி திருவண்ணாமலை கோட்டை அவனுக்குப் போயிடுச்சு. இப்ப அந்த கோட்டை வேலூர்ல இருக்கு. உங்க எள்ளுப்பாட்டனார் ஆங்கிலேயனுக்கு ஒரு தங்கத்தண்டை தானமா கொடுத்து, தன் ராஜ்ஜியத்தை காப்பாத்திகிட்டார்.

அந்த தங்கத்தண்டு ஒரு குடியானவன் மூலமா அவருக்கு கிடைச்சுதாம். விலையுயர்ந்த அந்த தங்கத்தண்டை வாங்கிட்டு ஒப்பந்தம் போட்டான் இங்கிலீஷ்காரன்.. அதுப்படி அந்த ராஜ்ஜியத்தை அவன் ஆக்கிரமிக்கல. அதுக்கப்புறம் காலப்போக்குல பஞ்சம் வந்துச்சு. மக்களும் மன்னரும் சிதறிப் போயிட்டாங்க. அந்த ராஜ்ஜியம் பொட்டல் காடாயிடுச்சி. ஆனாலும் அது அடிமை தேசமாகல. அந்த ஒப்பந்தப் பட்டயம்தான் இது…. ”

பரவசத்தோடு வெல்வெட் உறையிலிருந்து செப்புப் பட்டயத்தை எடுத்துக் காட்டினார் தாத்தா.

கையகலத்தில் கெட்டியான சிவப்புத் தகடு. அந்தக் காலத்துத் தமிழிலும், ஆங்கிலத்திலும் பதியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்! வைஸ்ராய் என்ற இடத்தில் ஜான் மார்ஷல் என்கிற பேர் இருந்தது.

நரேன் பிரமித்தான்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் ஆதாரத்தோடு நிற்கிறது!

பட்டயமே இருநூறு வருஷம் பழமையானதாகத் தெரிகிறதே!

“ உன் மூதாதையர் ஆட்சி செய்த ஊருக்கு ஆட்சியாளரா போகப் போற! வாழ்த்துக்கள்! நல்லாயிரு! ”

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top