Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » அப்பாயணம் – 8 இறுதி அத்தியாயம்.

அப்பாயணம் – 8 இறுதி அத்தியாயம்.

‘‘சார் அந்த காப்சூல் விவகாரம்?’’

டாக்டர் ஹென்றியும் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவர் பார்வையும் பாட்டி மேல் படர்ந்தது. பெரிய மனிதர்கள் முன் வரவே தயங்கும் பாட்டி இப்போது ஏக கூச்சத்துடன் முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டார்.

ஹென்றி கூறத் தொடங்கினார்.

‘‘இதற்கு நீங்கள் உங்கள் பாட்டிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் உண்மையில் சாப்பிட்டது மூன்று காப்சூல்கள்தான். அதற்கே தீவிர மஞ்சகாமாலை வந்து விட்டது. அந்த காப்சூல் உங்களை பாதிப்பதை துல்லியமாக கண்டு பிடித்து, காப்சூல்களின் ஜெலாடின் உறையை பிரித்து மருந்தை வெளியே கொட்டியது உங்கள் பாட்டி!’’

நான் ஆச்சரியத்தில் உறைந்து போனேன்.

அப்பா இடைமறித்தார்,
‘‘அந்த ஜெலாடின் உறையை ஜான்சன் பட்ஸ் போட்டு க்ளீன் பண்ணிட்டு சிவன் கோயில் விபூதி ரொப்பி வச்சது நம்ம பாட்டி! நேற்று டாக்டர் ஹென்றி காப்சூலுக்குள்ளே கார்பன் தூள் இருக்குதுன்னார். பாட்டி கிட்ட பக்குவமா போன்ல பேசினேன். பாட்டி சொல்லிட்டாங்க.’’

நான் பாட்டீ’’ என்றபடி ஓடிப்போய் அவர் காலில் விழுந்து எழுந்தேன். அன்றொரு நாள் பாட்டியிடம் தென்பட்ட விபூதி தீற்றலின் ரகசியம் இதுதானா?

‘‘ஒரிஜினல் மருந்தின் வீரியம் உங்கள் உடம்பை விட்டு நீங்க மூன்று நாட்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அதன் பிறகு நீங்கள் சாப்பிட்டதென்னவோ அந்த விப்… வாட் ஈஸ் தட்? விபூதியைத்தான். அது மட்டுமல்ல, பாட்டி கொடுத்த நாட்டு மருந்து உங்கள் கல்லீரலை குணமாக்கியிருக்கிறது!’’ டாக்டர் ஹென்றி பாட்டிக்கு ஏக மரியாதை கொடுத்தார்; நாங்களும்தான்.

‘‘சௌதாமினி, எனக்கு ரங்கபாஷ்யத்தின் மேல் சந்தேகம் இருந்தது; ஆதாரமில்லை. நீங்கள் பார்ப்பதற்கு அப்பாவியாய் பூனைக்குட்டி போல் இருக்கிறீர்கள். உங்களை தன்னந் தனியாய் அந்த வெறி பிடித்தவன் முன் கொண்டு போய் நிறுத்தினால் அவனே ஆத்திரத்தில் உண்மையை கக்கி விடுவான் என்று எதிர் பார்த்தேன். உங்கள் கையில் ஒரு ரெகார்டிங் டிவைஸ் கட்டி அவன் அறைக்கு அனுப்பி விட்டு வெளியில் காத்திருந்தோம். முன் கூட்டியே அவனிடம் துப்பாக்கி போன்ற நொடியில் உயிர் பறிக்கும் கொடிய சாதனங்கள் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டோம். நான் எதிர் பார்த்தபடி அவன் மாட்டிக் கொண்டான். அறைக்குள் நடந்த அனைத்தும் டிவைஸ் மூலம் என் டாப்லெட்டில் சுடச்சுட பதிவாகி விட்டது!’’

டாக்டர் ஹென்றி எழுந்து கொண்டார். ‘‘இன்று ஜனவரி இருபத்தொன்பது; பிப்ரவரி நான்காம் தேதி உங்களை இல்லினாய் யூனிவர்சிட்டியில் சந்திக்கிறேன்.’’ புறப்பட்டுச் சென்றார்.

அப்பா அவரே இல்லினாய் யூனிவர்சிட்டி மெம்பராகி விட்டதைப் போல் மொபைல் போனில் வாழ்த்துக்களை பெறுவதிலும், பேசுவதிலும் பிஸியாக இருந்தார். சித்தி என் நெற்றியில் முத்தமிட்டு ஒரு பெரிய சூட்கேஸை காட்டினார். பயிற்சி காலத்தில் எனக்குத் தேவைப்படுகிற ஹேர்கிளிப் முதற்கொண்டு அத்தனை விஷயங்களும் அதில் இருந்தன!

நிலவு மேகத்தை துரத்தியடித்து விட்டு தன் இருப்பை முழுமையாகக் காட்டியது. மேஜைக்கு மேஜை விளையாடிக்கொண்டிருந்தது தென்றல். திடீரென்று நான் அழ ஆரம்பித்தேன். அப்பா ஓடி வந்தார்.

‘‘என்னம்மா? ’’

‘‘உங்களை விட்டுட்டு எப்படிப்பா ஃபாரின் போவேன்? ’’
அழுகையோடு சொன்னேன்.

இதுவரை எந்த உணர்ச்சிக்கும் ஆட்படாமல் அமைதியாக இருந்த பாட்டி, இதைக் கேட்டதும் தன்னை மறந்து சிரித்து விட்டார்!

முற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top