அப்பாயணம் – 7

அதே சமயம்..

கதவை உடைத்து அப்பாவும் டாக்டர் ஹென்றியும் போலீஸ் புடை சூழ உள்ளே நுழைந்தனர்.

டாக்டர் ஹென்றி என்னை ஆசுவாசப்படுத்த, அப்பா ரங்கபாஷ்யத்தின் மேல் புலிப் பாய்ச்சல் பாய்ந்தார். அவர் மாறி மாறி அடித்ததில் ரங்கபாஷ்யத்தின் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வடிந்தது. போலிஸ் அவனைக் கைது செய்து கொண்டு போனது.

அப்பா என் வாட்சை கழற்றினார். ‘‘இது ஒரு ரெகார்டிங் டிவைஸ்’’ என்றார். ஆடியோ, வீடியோ துல்லியமாக ரெகார்ட் ஆகும். என் பாதுகாப்புக்காகவும், அவனை ஆதாரத்தோடு பிடிப்பதற்காகவும் டாக்டர் ஹென்றி கொடுத்ததாம்.

போலிஸ் ஸ்டேசன் போய் சம்பிரதாய அலுவல்களை முடித்து விட்டுப் புறப்பட்டோம். நான் இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தேன். அப்பாவும் டாக்டர் ஹென்றியும் என்னை வாஞ்சையோடு கவனித்துக் கொண்டனர்; நிறையப் பேசினர்.

அன்றிரவு மகாபலிபுரம் போகிற வழியில் எங்களுக்குச் சொந்தமான காட்டேஜில் இரவு விருந்து. நான், அப்பா, சித்தி. டாக்டர் ஹென்றி, எங்கள் மானேஜர்- இவர்களோடு பாட்டியும்.

அப்பா கரை கடந்த சந்தோஷத்தில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்தார். என்னுள் சில கேள்விகள்.. காப்சூல் விவகாரம், இன்னும் டாக்டர் ஹென்றிக்கு ரங்கபாஷ்யத்தின் மேல் சந்தேகம் எப்படி வந்தது?

விருந்து முடிந்து அனைவரும் அமர்ந்ததும் டாக்டர் ஹென்றி பேசத் தொடங்கினார்.

‘‘சௌதாமினி, டாக்டர் ஜான் லீவர்ட் என் நண்பர். அவர் மனைவியும் ஒரே மகனும் எனக்கு நெருக்கமானவர்கள். ஜனவரி பதினாறாம் தேதி இரவு ஜான் லீவர்ட் தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் பயன்படுத்திய கயிறு இற்று விழுந்ததில் அவர் மண்டை பக்கவாட்டு மேஜையில் மோதி உடைந்து விட்டது. குடும்ப விவகாரம் வெளியில் வருவதை தவிர்ப்பதற்காக இதை வைத்து மிஸஸ் ஜான் லீவர்ட் தன் கணவரின் தற்கொலை விவகாரத்தை மறைக்க விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளை செய்து அவரின் தற்கொலையை ஜனவரி பதினெட்டாம் தேதி விபத்தாக மாற்றி வெளியுலகிற்கு தெரியப்படுத்தியதே நான்தான். இதனால்தான் ஜனவரி பதினேழாம் தேதி அவரது எல்லா அப்பாயிண்ட்மெண்ட்டும் கேன்சலானது.’’ அவர் நிறுத்தினார்.

என் ஒரு கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. ஜனவரி பதினாறாம் தேதி இறந்தவர் பதினேழாம் தேதி எப்படி என்னை பரிசோதிக்க முடியும்? ஆக, போலி ஜான் லீவர்ட்டாக யார் வந்திருக்க வாய்ப்பு அதிகம்? ஒன்று ரங்கபாஷ்யம் இல்லையெனில் அவன் கையாள் என்று ஊகித்திருக்கிறார் டாக்டர் ஹென்றி!

டாக்டர் ஹென்றி தொடர்ந்தார்.

‘‘இந்த விஷயம் எனக்கும் மிஸஸ் ஜான் லீவர்ட்டுக்கும், அவரது மகனுக்கும் மட்டுமே தெரியுமென்று நினைத்திருந்தேன். இன்னொருவனுக்கும் தெரிந்து அதை அவன் தவறாக உபயோகித்திருக்கிறான் என்பது உங்கள் மூலம் தெரிந்தது. ஆனால் சௌதாமினி, உங்கள் அதிஷ்டம் நான் வந்தேன். என்னைத் தவிர இன்னொருவர் உங்களை இண்டர்வியூ பண்ணியிருந்தால் என்னவாகி இருக்கும்? உங்கள் ‘நோயை’ உறுதி செய்திருப்பது ஜான் லீவர்ட்; உங்கள் பெயர் அவர் ஹாஸ்பிடல் ரெஜிஸ்டரில் இருக்கிறது; ரிபோர்ட்ஸ் கிடைக்காமல் போக காரணம் இருக்கிறது; நீங்களே முன் வந்து பயிற்சி வேண்டாம் என்கிறீர்கள்! ரங்கபாஷ்யத்துக்கு சான்ஸ் கிடைத்திருக்கும். பிற்பாடு உங்களுக்கு கான்சர் இல்லை என்று கண்டு பிடிக்கப்பட்டாலும் இல்லாத ஜான் லீவர்ட்டிடம் எப்படி நியாயம் கேட்க முடியும்? ரங்கபாஷ்யத்தின் பித்தலாட்டமும் வெளியில் வந்திருக்காது!’’

நான் உள்ளுக்குள் நடுங்கினேன். எப்பேர்பட்ட சதி வலையில் முட்டாள் தனமாக சிக்கியிருக்கிறேன்!

‘‘சார் அந்த காப்சூல் விவகாரம்?’’

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top