அப்பாயணம் – 2

‘‘உங்க அப்பாவோட பணத்துக்கும் பவருக்கும் நீ இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லையே, சௌதாமினி?’’ மாதங்கி ஒரு முறை கேட்டபோது நான் ஆத்திரத்தில் வெடித்து விட்டேன். ‘‘நான் அந்த ஆளோட பொண்ணு. உன்ன மாதிரி அவர… ’’ அதற்கு மேல் பேசவில்லை. ‘‘எங்க அம்மாவுக்கு இடமில்லாத மனசிலும் வீட்டிலும் எனக்கும் இடம் வேண்டாம்.’’

இங்கு அம்மாவின் அம்மாவோடு இருக்கிறேன். அம்மாவின் பூர்வீகம் கேரளாவில் செட்டிலான தமிழ் குடும்பம். பாலகிருஷ்ணன் மகள் என்கிற அடையாளம் துறந்து ‘ மல்லிகே சேச்சி’ யின் பேத்தியாக வளைய வருகிறேன். சொந்தக் காலில் நிற்கிறேன்; எளிய வாழ்க்கை.

இல்லினாய் யூனிவர்சிட்டியின் இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வை சென்னை சென்று எழுதினேன். எழும்பூரில் லாட்ஜில் தங்கினேன். அண்ணாநகரில் அப்பாவின் பங்களா; புறக்கணித்தேன். திரும்பி வந்ததும் உடல் முழுதும் மஞ்சள் நிறம் கண்டது. டாக்டர் ரங்கபாஷ்யத்தை தொடர்பு கொண்டேன். பரிசோதித்தார்; ஸ்கேன், இரத்த டெஸ்ட் எடுத்தார். சௌதாமினி… என்று இழுத்தார். தயங்கித் தயங்கி கல்லீரல் புற்று நோய் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக சொன்னார். அவர்தான் மும்பையிலிருக்கிற நம்பர் ஒன் கான்சர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஜான் லீவர்டிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி அனுப்பி வைத்தவர்.

டாக்டர் ரங்கபாஷ்யம் எம்டி பயோகெமிஸ்ட்ரி. மாதங்கியின் வயதுதான் இவருக்கும். லீடிங் ஆர்த்தோ டாக்டரின் ஒரே மகன். நல்ல பணம், அந்தஸ்து. கொஞ்ச நாள் முன்னாடி அப்பாவிடம் போய் என்னை பெண் கேட்டிருக்கிறார். என்னையும் நேரில் பார்த்தார். காதலிப்பதாகவும் சொன்னார். பட்டுப்புடவை எல்லாம் பரிசு கொடுத்தார். அவர் கொடுத்த பரிசை அவருக்கே திருப்பி கொடுத்தேன். இல்லினாய் யூனிவர்சிட்டியின் முதல் கட்ட நுழைவுத் தேர்வில் முதலாவதாக வந்திருந்தேன். இப்போது போய் காதல் கல்யாணமென்று கவனம் சிதற இஷ்டமில்லை.

டாக்டர் ஜான் லீவர்ட் இடக்கை பழக்கம் உள்ளவரென்று கேள்விப்பட்ட ஞாபகம். அது தவறு போலும். வலக்கையில்தான் எழுதினார். அவர் அறையில் ஏதோ கோந்து வாசம். அன்றைக்கு முக்கியமான கான்ஃபரன்ஸ் என்று எல்லா அப்பாயிண்ட்மெண்ட்டும் கேன்சல் பண்ணியிருந்தார். ரங்கபாஷ்யத்தின் பரிந்துரையால் என்னை மட்டும் பரிசோதித்தார். சின்ன குறுந்தாடியை தடவிக்கொண்டு என்னை வாயாரப் புகழ்ந்தார். நோயை பற்றி கூறினார். ‘‘இந்த லிவர் கான்சர் ஒரு டைம் பாம் மாதிரி. வெடித்தால் மரணம்தான். எப்போது வெடிக்கும் என்றுதான் தெரியாது. லிவர் கான்சரை வைத்துக் கொண்டு ஒருவர் முப்பது வருடம் வரை வாழலாம், அல்லது ஓரிரு மாதத்திலேயே போய் சேரலாம்.’’

‘‘டைம் பாம் வெடிக்க ஆரம்பித்து விட்டது என்று எப்படி தெரிந்து கொள்வது?’’

‘‘ஓ, தீவிர மஞ்சட்காமாலைதான். அதாவது வெள்ளைத் துணியிலோ பேப்பரிலோ கை வைத்தால் உங்கள் வியர்வையில் அந்த வெள்ளைத் துணி மஞ்சளாகும். வாயிலும் மூக்கிலும் ரத்தம் வழியும். அதிக பட்சம் இரண்டே வாரத்தில் மரணம் நேரிடலாம். கோமாவுக்கு போய் இறப்பதும் உண்டு.’’

‘‘வந்தால் ட்ரீட்மெண்ட் உண்டா?’’

‘‘என்ன செய்வது என்று யோசிப்பதற்குள்… ’’ தயங்கினார், ‘‘கதை முடிந்து விடும்.’’

ஒரு மாதத்துக்குரிய காப்சூல்களை என்னிடம் கொடுத்தார். ‘‘இரு வேளை தவறாமல் சாப்பிடுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். மனதுக்கு பிடித்ததை செய்யுங்கள். எதிலும் வெறியோடு ஈடுபடுவதைத் தவிருங்கள். ஆல் த பெஸ்ட்.’’

கேரளத்தின் வல்லிய காற்று ஆனந்தமாக வருடுவதற்கு பதில் குளிர் காய்ச்சலை உண்டாக்கியது.

காப்சூல்களை தொடர்ந்து சாப்பிட்டு கொண்டு தானிருக்கிறேன். கைகளை தேய்த்து கொண்டேன். நுழைவுத் தேர்வுக்காக படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு தாளாக புரட்டும்போது என் கண் முன்… என் கண் முன் வெள்ளைத்தாள் மஞ்சளானது!

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top