அப்பாயணம் – 1

தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய செவ்வந்திப் பூக்களை பார்த்து கொண்டிருந்தேன். என் கண் முன்னே பூவின் இதழ்களை ஒவ்வொன்றாக பிய்த்து போட்டது காற்று. பார்க்க சகிக்காமல் உள்ளே வந்தேன்.

ஒரு மண் புழுவை துள்ள துடிக்க எறும்புக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. ஏன் எங்கு பார்த்தாலும் சித்ரவதையாக இருக்கிறது?

நெற்றிப்பொட்டை அழுத்தி கொண்டேன். தலையில் அழுத்தி விரல்களை எடுத்தபோது கொத்து முடி கையோடு வந்தது. அந்த காற்றைப் போல, எறும்புக் கூட்டத்தைப் போல என்னை சின்னா பின்னப்படுத்திக் கொண்டிருந்தது கல்லீரல் புற்றுநோய். மஞ்சள் பூத்த கண்கள், உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊடுருவும் வேதனை, தள்ளாட்டம், பத்து நிமிடம் போல் தொடரும் வலப்பக்க விலா எலும்புகளின் கீழ் வலி…

மூன்று நாட்கள் முன்பு தான் ஜனவரி பதினேழாம் தேதி உலகப் புகழ் பெற்ற கான்சர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஜான் லீவர்ட் அதை உறுதிப் படுத்தினார். அவருடைய கடைசி கேஸ் நானாகத்தான் இருப்பேன். ஏனெனில் டாக்டர் ஜனவரி பதினெட்டாம் தேதி காலை மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து மண்டை உடைந்து இறந்து விட்டார்.

நான்- சௌதாமினி. இருபத்தேழு வயது; ஹைதராபாத் பிஎஸ்எம் கல்லூரியில் எம்எஸ்ஸி பயோகெமிஸ்ட்ரி என்கிற உயிர் வேதியியல் படிப்பு முடித்தவள். தற்போது திருவனந்தபுரத்தில் பாட்டி வீட்டில் தங்கியிருக்கிறேன். திருவனந்தபுரத்திலும் பிஎஸ்எம் கல்லூரிக்கு கிளை உண்டு. அதில் பயோகெமிஸ்ட்ரி லெக்சரராக வேலை.

அம்மா பெயர் ஆனந்தி; அப்பா பாலகிருஷ்ணன் தென்னிந்தியா முழுமைக்கும் பேரெடுத்த சாய்ஜெகன் கம்பெனி நிறுவனர். காலை மாலை ஏரோபிக் எக்ஸசைஸ் செய்து புதினா சூப் அருந்தி புரோட்டீன் மிக்ஸ் சாப்பிடுகிற பிரகிருதி. காரியதரிசி நிழலாகத் தொடர என்னைத் தேடி வருவார். ‘ஹாய் சிண்ட்ரல்லா’ என்று என் செல்லப்பெயர் சொல்லி கூப்பிட்டு எண்ணி கால் மணி நேரம் பேசுவார். வீட்டை விட்டு வெளியே போனால் எப்போது வருவார் என்று சொல்ல முடியாது. இரவுகளில் அம்மா அப்பாவிடம் போனில் பேசியதை கேட்ட ஞாபகம். அம்மாதான் சகலமும். அப்பாவின் மடியில் புரண்டதாகவோ அவர் அணைப்பில் தூங்கியதாகவோ எந்த நினைவும் இல்லை.

நான் பிஎஸ்ஸி படித்துக் கொண்டிருந்த போது அம்மா காலமானார். இரண்டே மாதங்களில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் அப்பா. சித்தியாக வாய்த்தவள் என்னை விட மூன்று வயதே அதிகமான மாதங்கி, என் கல்லூரி சீனியர். ஏற்கெனவே அப்பாவிடம் ஒட்டுதல் இல்லாத எனக்கு அவள் வந்த பிறகு தோன்றிய இனம் தெரியாத வெறுப்பில் நான் அப்பாவையும் அவர் திரண்ட சொத்துக்களையும் விட்டு ஒதுங்கினேன்.

மாதங்கி ஒன்றும் மோசமானவள் இல்லைதான். இல்லினாய் யூனிவர்சிட்டி பற்றி என்னிடம் சொன்னவளே மாதங்கிதான். எம்பிபிஎஸ் பயோகெமிஸ்ட்ரிக்கு உள்ள மரியாதையும், வேலை வாய்ப்பும் எம்எஸ்ஸி பயோகெமிஸ்ட்ரிக்கு இல்லை. ஆனால் இல்லினாய் யூனிவர்சிட்டியில் இந்த இரண்டு தகுதிகளும் சமம். அவர்கள் வைக்கிற நுழைவுத் தேர்வுகளில் ஜெயிக்க வேண்டும். பிறகு இண்டர்வியூ. அதன் பிறகு ஸ்டைபண்டுடன் இரண்டு வருட பயிற்சி. அந்த ட்ரைனிங் முடித்தால் வாழ்க்கைத்தரம் எங்கேயோ போகும்- சொந்த உபயோகத்துக்கு ஃபோர்ட் ஐகான் கார், பெரிய ஓட்டல்களில் அறை, விமான டிக்கட், பிரத்யேக காரியதரிசி— வெளிநாட்டு வேலையை கம்யூட்டர், இண்டர்நெட் உதவியுடன் உள்நாட்டிலிருந்தே பார்க்கலாம். அவ்வபோது சிகாகோ போக வேண்டும். பணி புரியும் சூழல் நன்றாக இருக்குமாம்.

மாதங்கி எவ்வளவோ முயன்றும் இல்லினாய் யூனிவர்சிட்டி நுழைவுத் தேர்வில் ரேங்க் கூட வாங்க முடியவில்லையாம். வாழ்க்கை நல்லபடி செட்டில் ஆக வேண்டுமே என்று என் அப்பாவை ‘முயற்சித்து’ வெற்றி பெற்றிருக்கிறாள். இன்னும் மாதங்கி என்னென்னவோ சொன்னதில் இல்லினாய் யூனிவர்சிட்டி என் லட்சியமானது. மூன்று கட்ட நுழைவுத் தேர்வுகளில் முதலாவதாக வந்து இரண்டை ஜெயித்து விட்டேன். இன்னும் ஒன்று பாக்கி. அதற்குள் கல்லீரல் புற்றுநோய் கண்டு விட்டது!

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top