அதே மோதிரம் – 4

மணியின் கையில் இருக்கும் மோதிரம் மணியின் நிச்சயதார்த்த மோதிரம். தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டியவனுக்கு வந்த முதல் பொருள். அந்த மோதிரம், காதலி தனக்கு நிச்சயிக்கப்பட்ட விரலில் அணிவித்த அதே மோதிரம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என மணியின் ஆழ்மனதின் குரல் காதில் கேட்கத் தொடங்கியது. குழப்பம் மேலும் சூழலை குழப்பியது. மோதிரம், காதலி, சாலை குழி, மஞ்சல் முகம், விடுமுறையில் இருக்கும் மாறன், திடீரென்ற ஆனந்தனுடன் சந்திப்பு, கண்ணாடி பின்னால் நடந்த யாரோ, எல்லாவற்றுக்கும் மேலாக கழட்டிய மோதிரம் மீண்டும் கையில்…

மாடி படியில் ஒவ்வொரு அடியாக வைத்துக் கொண்டே செல்கிறான் மணி. நினைவுகள் மீண்டும் மீண்டும் நடந்ததைதே நினைக்க நிர்பந்தப்படுத்தின. மணி மட்டும்தான் படியேறிக்கொண்டிருக்கிறான். மோதிர கையை மூடியும் திறந்தும் செல்லும் மணியின் பின்னால் விழுந்தது நிழல். இதின் ஒன்றும் ஆச்சர்யமில்லை; விழுந்தது மணியின் நிழலாய் இருந்திருந்தால்.

மணியின் உயரத்தைவிடவும் ஒரு மடங்கு பெரியதாகவும், விரல்கள் நீளமாகவும் ஒரு நிழல். அது நிழலா..? எப்போதாவது தனியே நீங்கள் மாடிப் படியை ஏறிக்கொண்டிருக்கின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். நிசப்த்தம். நீச்சயம் நீங்கள் மட்டும்தான். விளக்குகள் இருந்தும் விளங்காத இருட்டு உங்கள் இதயத் துடிப்பை இரட்டிப்பாக்கிறது. இல்லாத பூனையின் வினோத சத்தம் கேட்டு திரும்புகிறீர்கள்.

பூனைக்கு பதில் புரியாத உருவம் போல உங்கள் நிழலே இரட்டிப்பாய் தெரிந்தால் என்ன செய்வீர்கள். உனக்கு வேற வேலை இல்லையா என என்னை திட்டவராதீர்கள். என் வேலை இதுதான். இதுதான் என்றால் எழுதுவது. அதுவும் மணியின் கைக்கு மோதிரம் வந்தபின்னால் அவன் கதையை எழுதுவது. சரி விடுங்கள் நான் இப்படித்தான். இனி மணி.

படிக்கு படி, வைக்கும் அடிகளுக்கு பின், மணியின் நிழலுக்கு பின் வந்துக் கொண்டிருக்கும் நிழலை, மணி கவனிக்கவில்லை. வீட்டில் வாசலுக்கு வந்தாகிவிட்டது. ஏனோ தெரியவில்லை. கதவை திறக்கும் போது கதவையோ தவறான சாவியையோ பார்க்காத மணி, பக்கத்து வீட்டில் ஏதாவது சத்தம் வருகிறதா என காதை உன்னிப்பாக்கினான். நினைவில் இருக்கிறதுதானே மணியின் பக்கத்துவீட்டு ஆசாமி ஆனந்தன். அவன் ஓர் அமானுஷ்யனாகவே எல்லோராலும் ஏறக்குறைய அப்படித்தான் அறியப்படுகின்றான். எனக்கென்னவோ மணியின் கைக்கு வந்திருக்கும் மோதிரத்துக்கும் இந்த ஆனந்தனுக்கும் தொடர்பு இருப்பதாகவேப் படுகிறது.

வீட்டிற்கு வந்த மணி என்ன செய்கிறான் அல்லது மோதிரம் அவனை என்ன செய்ய வைக்கிறது அல்லது வைக்கப்போகிறது.!

அனைத்து விளக்குகளும் பிரகாசமாய் எரிந்துக் கொண்டிருக்கின்றன. வீட்டு வரவேற்பறை. சின்ன வீடு. வீட்டுக்கு ஏற்ற பொருள்கள். நாற்காலியில் படுத்திருந்தவாரு மோதிரத்தை விரல்களால் வருடிக் கொண்டிருக்கிறான் மணி. கைபேசியும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காதலிதான் அழைக்கிறாள். எப்போதும் முதல் ஒலியிலேயே பதிலளித்திடுவான் ஆனால் இன்று.

மீண்டும் மீண்டும் மோதிரம்தான் காரணம் என்பதில் முழு நம்பிக்கையை வைத்தான் மணி. கணக்கில் அடங்கிடாத கைபேசி அழைப்பு மீண்டும் கேட்டது. காதலி. ஆவேசம் வந்தவன் போல கைபேசியை எடுத்தான். இனி அவர்களின் உரையாடல்;

“ஏய் அந்த மோதிரத்துல என்ன இருக்கு..?”

“ஹலோ…”

“கேட்கறேன்ல… சொல்றயா..?”

“என்னங்க ஆச்சி, என்ன கேட்கறிங்க.. புரியலையே…”

“ஒழுங்க சொல்லப் போறியா இல்லியா…”

“உங்களுக்கு என்ன ஆச்சி மணி”

“ஏய்….ஏய்…. லைன்ல இருக்கியா……”

“ஆ… அம்மா…..”

அவளின் அலறல் சத்தம் கேட்டது. அத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. வழக்கமாக மணியைப் பற்றியே பேசி வருகிறோம். இப்போது மணியின் காதலி குறித்தும் கொஞ்சம் பேசுவோமா.? விரும்புகிறவர்கள் தொடர்ந்து படையுங்கள். ‘எதுக்கு அதெல்லாம்’ என நினைப்பவர்கள் உங்கள் நேரத்தை மிச்சம் செய்திடுங்கள். தொடர்ந்து இரண்டு பத்திகளை வாசிக்காமல் மூன்றாவது பத்தி தாவி சென்று வாசியுங்கள். ஆனால் ஒன்று கதை குழம்புகிறது என சொல்லக் கூடாது. உத்திரவாதப் பெயரில் தாவுங்கள்.

இணையம் வழி அறிமுகமாகியவர்கள் மணியும் காதலியும். காதலியின் பெயர், பொம்மி. தொடர்ந்து முகத்தின் அறிமுகமின்றி செய்து வந்த கருத்து பறிமாற்றம்தான் காதலுக்கு அஸ்த்திவாரம். மணிக்கு பழைய காதலியும் உண்டு அவளால் வந்த வலியும் உண்டு இப்போது இருவரும் வேறுவேறு வழியில் இருக்கிறார்கள். கருத்து வேறுபாட்டால் பிரிந்த பின்னரும் சில இன்னல்களை மணி சந்தித்திருக்கிறான். வெளிப்படையான மணியின்  பேச்சு பொம்மியை ஈர்த்தது என்றே சொல்லவேண்டும். வருடக் கடைசியில் இவர்களுக்கு திருமணம் எனும்போதே இருவீட்டரின் சம்மந்தம் தெரிந்திருக்குமே.

இப்போது துண்டிக்கப்பட்ட கைபேசியின் காரணம் தெரியுமா.?கட்டிலில் படுத்துக் கொண்டே மணியுடன் பேசிக்கொண்டிருந்தாள் பொம்மி. தமிழ்ப்பட கதாநாயகி போல கவர்ச்சி உடையில், குப்புறப் படுத்து, இரு கால்களையும் முழங்கால் தெரிய தூக்கி, கழுத்தின் இரண்டு பட்டன்களையும் அவிழ்த்து இருக்கவில்லை. மீண்டும் சொல்கிறேன் இல்லை. மணியின் சம்பந்தமில்லாத பேச்சுக்கு இடையே ஏற்பட்ட திடீர் சிரிப்பு சத்தத்தில் கைபேசியை தூக்கி வீசி கத்திக் கொண்டு அறையை விட்டு வெளிவந்திருக்கிறாள். அந்த சிரிப்புச் சத்தம் மிக மிக அருகில் கேட்ட்தோடு மட்டுமின்றி ஏதோ ஒன்று அவள் கைபேசியை இழுத்ததாகவும் தன் தாயிடம் சொல்லி அழுத்துக் கொண்டிருந்தாள். பூஜையறை விபூதியை வைத்து, அம்மாவுடன் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

காதலி வீட்டில் நடந்தது தெரியவில்லை. கைபேசியின் திடிர் துண்டிப்பும் புரியவில்லை. மீண்டும் அழைக்காதது குறித்து சட்டை செய்யவில்லை. படுத்திருந்த நாற்காலியில் அதே நிலையில் படுத்துக் கோண்டே மோதிரத்தை தடவிக் கொடுக்கிறான் மணி. அலாவுதினுக்கு கிடைத்திருக்கும் விளக்கை தேய்த்தால்தானே பூதம் வரும். இப்போது தேய்க்கப்படும் மோதிரம் எந்த பூதத்தைக் கொண்டுவருமோ…? சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான்.

இரவு முடிந்தது. பகலாய் விடிந்தது. அலாரம் அலரவும் , ஆடையற்ற மணி கட்டிலில் இருந்து எழவும் சரியாக இருந்தது. எழுந்தவுடன் எதை செய்கிறானோ இல்லையோ கைபேசியில் ஏதாவது குறுந்தவகளோ பதிலளிக்க மறுத்த அழைப்புகளோ இருக்கிறதா என பார்ப்பது மணியின் வழக்கம்.

கைபேசியில் குறிஞ்செய்தி இருந்தது. எப்போதும் அழைக்கும் காதலி பொம்மி இம்முறை ஒரே ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பியிருந்தாள். திரும்ப பல முறை அழைத்தும் எந்த பதிலும் இல்லை. அந்த எண் உபயோகத்தில் இல்லை என்றே பதில் கிடைத்தது.

முதல் நாள் இரவு, பொம்மி பயத்தில் அலறி கைபேசியை வீசி எறிந்ததும் , கைபேசி உடைந்ததும் உங்களுக்கும் எனக்கும்தானே தெரியும். மணிக்கு அதெல்லாம் தெரியாதே. ‘கோல் மீ’ என வந்திருக்கும் குறிஞ்செய்தியை பொம்மி அனுப்பியிருக்கமாட்டாள். ஆனால் அவள் எண்ணில் இருந்துதான் மணிக்கு இந்த குறுஞ்செய்தி வந்திருக்கிறது. உடைந்த கைபேசியில் இருந்து இப்படியொரு குறுஞ்செய்தி வரிவது சாத்தியமா.? வந்திருக்கிறதே.!.எப்படி.??

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top