அந்த தலையில்லாத உருவம் அங்கு இல்லை. மணி அதிர்ச்சியானது நண்பன் ஆனந்தனைப் பார்த்து. இந்த நண்பன் மணியின் பக்கத்துவீடு. நினைவு இருக்கின்றதா..? தொடக்கத்தில் கீழே விழுந்தும் பின்னால் வாந்த கனரக வாகனம் மோதம் சென்றதே. ஆம் ‘எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ; கடவுளுக்கு என் மீது அதிகம் நம்பிக்கை இருக்கிறது’ . இந்த வாசகம் ஒட்டியிருக்கும் மேஜைக்கு சொந்தக்கார். பக்கத்து வீடுதான் என்றாலும் மணியும் ஆனந்தனும் இப்படி முகத்துக்கு முகம் சந்திப்பது இப்போதுதான். அதுவரை மணி ஆனந்தனைப் பற்றி கேள்விப்பட்டதெல்லாம் சுவையான ‘பயமூட்டிகள்’.
ஆனந்தன் என்ன வேலை செய்கிறான் என யாருக்கும் தெரியாது. இரவு சில சமயம் வீட்டில் அழுகை குரல் கேட்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் வீட்டில் இருந்து காகிதக்கட்டோடு வெளிவருவான். குப்பையில் போட்ட அந்த காகிதங்கள் இரவானதும் காற்றில்லாமலே சொந்தமாக தொட்டியில் இருந்து வெளிவந்து உள்செல்லும். யாருடனும் பேசுவது கிடையாது. சிரிப்பதும் இல்லை. தினமும் கறுப்பு ஆடையுடன்தான் இருப்பான்.
முகத்துக்கு முகம் மணியை சந்தித்தான் ஆனந்தன். முதன் முதலாக சிரித்தான். அந்த சிரிப்பின் அர்த்தம் மணிக்கு புரியவில்லை. எழுதும் எனக்கும்தான் புரியவில்லை. இன்னொன்றை சொல்லிவிடுகிறேன். ஆனந்தன் என்பது அவனது உண்மை பெயரா என்பதும் யாருக்கும் தெரியாது. அவனைப் பற்றி சொல்லப்படும் பல தகவல்களில் இந்த பெயரும் ஒன்று. கறுப்பு ஆடையுடன் உருண்டி திரண்டு இருந்த உருவத்தை சட்டெனப் பார்த்த திகில் இருந்தது. ஆனால் ஆனந்தனின் முகத்தில் இருந்த சிரிப்பு திகிலையும் தாண்டி ஏதோ சொல்ல வந்தது. மணிக்கு அதன் அர்த்தம் புரிய இன்னும் நேரம் வரவில்லை என்பதனை ஆனந்தன் அறிந்திருந்தான். எப்போதும் இரவில் மட்டுமே காகிதக் கட்டுகளை எடுத்துச் செல்பவன், இன்று முதன் முதலாக காலை பொழுதில் காகிதக் கட்டுடன் இருந்தான்.
ஆனந்தன் வந்ததும் ; சிரித்ததும் ; போனதும் கனவு போல இருந்தது. இப்போது யாரும் இல்லை. கைபேசி மட்டும் கேமரவுக்கு பதில் வீடியோவைத் திறந்து வைத்திருந்தது. சட்டெனக் காதலியின் முகம் நினைவில் வந்தது. புது கைபேசியில் தன்னைத் தானே படமெடுத்தான். உடன் அதை தன் காதலிக்கு அனுப்பும் முன், ‘படம் கிடைக்குதானு பாரு’ என எழுதியிருந்தான். படகுறுஞ்செய்தி மணியின் காதலியை நோக்கி பயணிக்கலானது.
தனது புகைப்படத்தினை அனுப்பிய திருப்தியில் வேலைக்கு கிளம்பினான். மோட்டாரின் பயணிப்பது மணிக்கு விருப்பமான ஒன்று. ஒவ்வொரு முறையும் இப்படி மோட்டரில் பயணிக்கும் போது தனக்குத்தானேப் பாடுவான். அதிலும் எங்கோ யாருடனோ பேசயிருக்க வேண்டிய வசனங்களை உணர்ச்சிப்பூர்வமாக பேசுவான். மணிக்கு மட்டுமல்ல பலருக்கு இது போன்ற பழக்கம் உண்டு. சாலையில் நீங்கள் செல்லும் போது கவனியுங்களேன். மோட்டரில் தனியே போகின்றவர்களில் சிலர் கைவிரலை ஆட்டியாட்டி தலையையும் அசைத்தவாரே பயணிப்பார்கள்.
பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் வாய்மூடி இருந்ததால்; தனியே இருக்கும் நேரம் விழிக்கும் மனசாட்சியில் செயலாக் கூட இருக்கலாம். மணிக்கும் அந்த சந்தர்ப்பம் அடிக்கடி வாய்க்கும். தன் பக்கம் நியாயம் இருந்தாலும் பெரும்பாலும் வாய் மூடியே இருப்பான். எல்லாவற்றையும் உள் வாங்குகின்றேன் என்கிற பேர்விழிகளில் இவனும் ஒருவன். ஆனால் அப்படி பாத்தில் ஒன்றாக மணியை சொல்லிவிட முடியாது. அப்படி சொல்லி ஒதுக்கிவிட்டால் இக்கதைக்கு அவசியம் இருக்காது.
எப்போதும் அலுவலகம் செல்லும் வழியில்தான் இப்போதும் சென்றான். அந்த சமிக்ஞ்சை விளக்கைக் கடக்கும் போது இருக்கும் குழி மணிக்கு புதியது அல்ல. இன்று மட்டும் ஏனோ அந்த குழியில் மணியின் மோட்டாரின் முன் சக்கரம் மாட்டியது. கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பினான் எனறே சொல்லலாம். குழியில் மாட்டியச் சக்கரத்தால் வண்டி மேலும் நகராமல் நின்றது. பின்னே வந்துக் கொண்டிருந்த பள்ளி பேருந்து ஒன்று லேசாக உரசியதோடு வேறு எதையும் செய்யாமல் சென்றது.
காலையில் வீட்டில் இருந்து இறங்கிவரும் சமயம் சந்தித்த ஆனந்தன்; வழக்கமான குழி, வழக்க மற்ற மோட்டார் சக்கர தடுமாற்றம் என ஒவ்வொன்றையும் நினைத்து மனதில் முடிச்சிபோட முயன்றான். மேற்சொன்ன இரண்டு முடிச்சிகள் போதாதென்று மூன்றாவது முடிச்சியோடு வந்தது காதலியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.
குழப்பத்துடன் பேசினான். அவளின் குழப்பம் மணியை கண்களை விரியச் செய்தது.
மூன்றாவது முடிச்சாக வந்தது தொலைபேசி அழைப்பு. அழைத்தது மணியின் காதலி.
“ஏன்..என்னா .. ஆச்சி உங்களுக்கு உடம்பு சரியில்லையா..?”
“இல்லையே நல்லாதான் பேசறே…கொஞ்சம் வேலை அதான் குரல் ஒரு அசதியா தெரியிது
போல…
“இப்போ உங்க குரலைப்பத்தி யார் கேட்டா..?”
“அப்பறம்….ஏன் இந்த கேள்வி…நான் நல்லாதானே இருக்கேன்”
“இல்ல..காலையில் நீங்க அனுப்பின போட்டோவை எப்போ புடிச்சிங்க…?”
“காலையில்தான் புடிச்சி அனுப்பினேன்…”
“ம்.. அந்த போட்டோவை நீங்க பார்த்திங்களா…?”
“இல்லை. பார்க்கலை. வேலைக்கு மணியாசின்னு போட்டோவை பிடிச்சதும் உனக்கு அனுப்பிட்டு கிளம்பிட்டேன்…..ஏன்… படத்தில் உடம்பு சரியில்லாத மாதிரியா இருக்கேன்…”
“உடம்பு இல்லை.. உங்க முகம்தான்…”
“ஏன் என் முகத்து என்ன ஆச்சி….படம் ஆடியிருந்தாகூட சில சமயம் முகம் சரியா விழுவாதுன்னு உனக்கு தெரியாதா…?”
“ஐயோ அதில்லை…. படம் நல்லாதான் இருக்கு…..ஆனா உங்க முகம்தான்”
“முகம்தான்…முகம்தான்னு எத்தனை தடவைதான் சொல்லுவ நீ…விசியத்தை சொல்லவே மாட்டியா…… காலையிலேயே ஏன் நீ வேற என்னை படுத்தற…..”
“உடனே வந்திடுமே உங்களுக்கு… கடவுளே…. உங்களை; சரி சொல்றேன். நீங்க அனுப்பின படம் நல்லாதான் இருக்கு ஆனா உங்க முகம்தான் ஒரே மஞ்சளாக இருக்கு..”
“நான் என்ன மஞ்சளையா பூசறேன்…”
“ஹலோ அதை நான் கேட்கனும்….காஞ்சனா படத்தில் லாரன்ஸ் செய்ற மாதிரி ஏதாவது….”
“அடிப்பாவி…”
“அய்யோ எனக்கு பயமா இருக்கு…. என்னன்னு பாருங்க…”
“புது போன் தானே.. அதான் செட்டிங்ல தவறா ஏதாவது தட்டியிருப்பேன். அப்படியெல்லாம் ஒன்னுமில்லை..நீங்க குழம்பி என்னை குழப்பிடாதே…நான் காஞ்சனாவும் இல்ல கீஞ்சனவும் இல்ல…”
“அப்படியா…நான் பயந்தே போய்ட்டேன். சரிங்க நீங்க வேலை செய்யுங்க. நாம அப்பறம் பேசுவோம்.”
“அப்பறம் பேசுவோம்னு சொல்லிட்டு; வழக்கம் போல சண்டை போட்டாக்கா அப்பறம் காஞ்சனாதான்.. ”
“இருங்க இருங்க ‘காஞ்சனாவா’ உங்க அப்பகிட்ட சொல்லறேன்…”
“ச்சே… ச்சே….சும்மாதான். சரி அப்பறம் பேசுவோம்.”
பேசி முடித்ததும் மணிக்கு காலையில் நடந்த ஒவ்வொன்றும் நினைவுக்கு வந்தது. இப்போது தொலைபேசி அழைப்பு; அதற்கு முன் சாலை குழி; அதற்கும் முன் புகைப்படம் எடுத்தான். ஆம்…ஆம்.. ஆன்ந்தனை காலையில் சந்தித்தை மறந்தே போயிருந்தான், இப்போதுகூட மணியான் அந்த சந்திப்பை உறுதி செய்ய முடியவில்லை. உண்மையில் அந்த சந்திப்பு நிகழ்ந்ததா..? இல்லை பிரம்மையா..? யார் கண்ணிலும் படாதவனாயிற்றே அந்த ஆனந்தன்.! எப்படி அவனை பார்த்தேன். அதும் காலையில்…?
தான் 2 ஆண்டுகளா வசித்துவரும் நான்கு அடுக்குமாடி வீட்டில் இதுவரை அவன் குறித்து தகவலைத்தவிர வேறு எதும் இருந்ததில்லையே. பக்கத்துவீடு என்றாலும் ஆள் இருப்பதற்கான சத்தம் கேட்குமே தவிர ஆட்கள் யாரையும் பார்த்ததில்லை. இந்த வீட்டுக்கு யாரும் குடிவராத காரணத்தை இதுவரையில் மணி யாரிடமும் கேட்கவில்லை. வேலை வீடு; வீடு வேலை என இருந்ததால் சிலவற்றை கேள்விபட்டதோடு சரி. யாரிடமும் நெருங்கி பழகியதில்லை.
தன் கைபேசியை எடுத்து, காலையில் பிடித்த புகைப்படத்தினைப் பார்த்தான். தன் காதலி சொன்னது சரிதான். முகம் மட்டும் மஞ்சள் நிறமாக இருந்தது. உடனே கழிவறைக்கு சென்றான். பயந்து அல்ல. அங்கிருக்கும் நிலைக்கண்டாடியின் முன் கைபேசியை நீட்டியவன் கண்ணாடியில் தெரியும் தன் முகத்தை படம் பிடிக்கலானான். கைபேசியை திருப்பி பார்த்தான். கண்ணாடியில் வழக்கமாக தெரிந்த முகம் படத்தில் மஞ்சளாகத் தெரிந்தது. மறுபடியும் படத்தினை பிடித்தான். அதுவும் அப்படியே இருந்தது.
எங்கிருந்து வந்தான் என தெரியவில்லை. மாறன் கழிவறையில் மணியை கவனித்தான்.
“என்ன மணி. உடம்பு சரியில்லையா… இப்படி வேர்த்து போய்ருக்கு….”
“இல்லைடா… தலை வலி அதான்….”
“தலை வலியா இல்ல…..கல்யாண பயமா மணி… நிச்சயத்திற்கு பிறகே இப்படின்னா கல்யாணம் செய்த பிறகு என்னென்ன ஆகுமோ உனக்கு…. சரி கொஞ்சம் வேலை இருக்கு அப்பறம் பார்ப்போம் மணி…”
நிச்சயம். ஆம் நிச்சயம் . மாறன் சொன்னதும் தன்னை அறியாமல் நிச்சயம் நடந்த போது காதலி கொடுத்த மோதிரத்தைப் பார்த்தான். அதனைக் கழட்டி வைத்தான். இப்போது மீண்டும் படம் பிடித்தான். என்ன ஆச்சர்யம் முகம் அப்படியேதான் பதிவாகியிருந்தது. அப்படின்னா…? இந்த மோதிரம்தான் முகத்தை மாற்றிக்காட்டுதா என தனக்குத்தானே கேள்வி கேட்டான். கழட்டிய மோதிரத்தை எடுத்து கையில் அணிய முற்படும் போது சட்டென பின்னால் யாரோ ஓடியதை கண்ணாடியில் கவனித்து திரும்பினான். யாரும் இல்லை. இப்போது கண்ணாடியைப் பார்க்கும் போது போடுவதற்காக எடுத்த மோதிரம் விரலில் பழையபடி இருந்தது. உறுதியாகத் தெரியும் மணி அந்த மோதிரத்தை போடவில்லை. குருட்டுத் துணிச்சலில் இந்த முறை தன்னைத்தானே படம் எடுத்தான்.
நீங்கள் நினைப்பது சரிதான். முகம் மஞ்சலாக இருந்தது. முன்பு வந்து பேசிய நண்பன் ஆனந்தனிடம் இதைப் பற்றி பேச நினைத்தான். கழிவறையில் இருந்து, அலுவலகம் வந்தான். ஆனந்தனின் இடத்தில் யாரும் இல்லை. ஆனந்தனைப் பற்றி சக பணியாளர்களிடம் விசாரிக்க….
“ரவி…. ஆனந்தன் எங்க… இப்பதான் பார்த்தேன்…”
“மணி; என்ன கனவா..?”
“ஏன்…”
“ஆனந்தன் இன்னிக்கு வேலைக்கு வரலை… உடம்பு சரியில்லைன்னு காலையிலேயே போன்ல சொல்லிட்டான்… நீ என்னமோ அவனைப் பாத்தேன்னு சொல்ற… அதை கனவுன்னு சொல்லாமா என்ன சொல்லட்டும்… ”
“என்ன ரவி சொல்ற….?”
ஆனந்தன் இன்று விடுமுறை என்றால்; கழிவறைக் கண்ணாடிக்கு முன் யாருடன் பேசியிருப்பான் மணி. யார் தான் கழட்டிய மோதிரத்தை மீண்டும் விரலில் மாட்டியிருப்பார்….? அந்த மோதிரம் எப்படி மணியின் கைக்கு வந்திருக்கும்….?
தொடரும்….