பெரியசாமி சொல்ல ஆரம்பித்தான்
”அண்ணே… நம்ம சங்கர்… நம்ம சங்கர் செத்துப் போயிட்டாண்ணே… அவனை பேய் அடிச்சு கொன்னுடுச்சி… நம்ம பசங்க எல்லாம் பயந்து போய் இருக்கானுங்கண்ணே… சங்கர் செத்துப் போன தகவலை சொல்லிட்டு வர சொன்னாங்க. அதான் வேகமாக போயிட்டிருக்கேன்…” என்று திக்கித் திணறி சொல்லி விட்டு, மூச்சிரைக்க நின்றான் பெரியசாமி.
இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நவநீதனுக்கு, அதிலிருந்து மீள்வதற்கு சில மணித்துளிகள் பிடித்தது.
பெரியசாமி சொன்னதைக் கேட்டு மயக்கம் போட்டு விழுந்த கார்த்திக்கை நவநீதன் தட்டி எழுப்பினான். அவன் எழுந்திருக்காமல் போகவே… அருகிலிருந்த டீக்கடைக்கு அவனை இருவரும் தூக்கிக் கொண்டு போனார்கள்.
சோடா ஒன்றை வாங்கி அவனது முகத்தில் சோடா நீரை தெளித்து எழுப்பவும், கார்த்திக் மெல்ல எழுந்தான். எழுந்ததும் அவன் கண்கள் பீதியில் வெளிறிப்போக, ”அண்ணா… நான் அப்பவே சொன்னேன்ல… என்னை பேய் வந்து அமுக்குச்சின்னு… பாருங்க… சங்கர் செத்துப் போயிட்டார். அவரை பேய் அடிச்சி கொன்னுடிச்சி… அடுத்து நானா..?” என்று அழ ஆரம்பித்தான்.
”டேய் லூசு மாதிரி உளறாத… அப்படி எல்லாம் ஒண்ணும் இருக்காது. நீ பயந்து சாவாத… வாடா போவோம்” என்றான் நவநீதன்.
”நான் வரலண்ணே… நான் மாகாளி கோயிலுக்கு போயிட்டு வந்திருக்கேன். எனக்கு கோயில் பூசாரி மந்திரிச்சி கொடுத்த தாயத்து இருக்கு… எனக்கு ஒண்ணும் ஆகாது… நான் எங்க வீட்டுக்கு போறேன்…” என்று புலம்பியபடி கார்த்திக் அவனது வீட்டிற்கு கிளம்பிச் சென்றான் என்பதை விட ஓடிப்போனான் என்பதே உண்மை.
பெரியசாமியும் கிளம்பிப் போகவே, நவநீதன் நேரே சங்கரின் வீட்டிற்கு சென்றான். அங்கே சங்கர் செத்துக் கிடந்தான். அவனை சேரில் உட்கார வைத்து, அவனது உடலுக்கு மாலைகள் சார்த்தப்பட்டிருந்தன. கொடூரமாய் செத்துப்போயிருந்த சங்கரின் உடலை மாலைகள் மறைத்துக் கொண்டிருந்தன. சங்கரின் உடலை பார்த்த போது உருக்குலைந்த எலும்புக் கூடு ஒன்று தோலாடை போர்த்தியது போன்று இருந்தது. நவநீதன் சங்கரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நவநீதனைப் பார்த்த வேதாசலம், வெடித்து விம்மி அழத் தொடங்கினார்…
”அப்பா சங்கரு… உன் பிரெண்டு நவதீநன் வந்திருக்கான். பாருப்பா…அவன்கிட்ட பேசுப்பா… நாளைக்கு ஞாயித்துக்கிழமை… கிரிக்கெட் விளையாட போவணுமில்ல… எழுந்திரிப்பா…” என சொல்லியபடி தலையலடித்துக் கொண்டு அழுதார்.
நவநீதன் அருகே வந்த வேதாசலம் ”நவநீ… நீயாச்சும் சொல்லுப்பா… அவனை பேசச் சொல்லுப்பா… சொல்லுப்பா… தவமிருந்து பெத்த புள்ளைப்பா…”
கமலம்மாள் பெருங்குரலெடுத்து கத்தத் தொடங்கினார். ”அடி மாரியாத்தா… உனக்கு கண்ணே இல்லையாடி… என் புள்ளையை காப்பத்த உன்னால முடியலையா… அடி தலைவாசல் மாகாளி… உன் கோயிலுக்கு மாசா மாசம் வந்து பூசை செஞ்சேனே… இப்படி பேயடிச்சு எம்புள்ளைய கொன்னுபோட வச்சிட்டீங்களே…” என்றபடி மார்பிலடித்துக் கொண்டே அழுதவர், அப்படியே மயங்கிச் சரிந்தார்.
”ஐயோ சங்கரு… உங்கம்மா மயங்கிட்டாடா… இப்பயாச்சும் எழுந்து பாருடா… பாருடா… பாருடா…” என்று சங்கரின் சித்தி கதறினார்.
மரணம் ஒரு குடும்பத்தை எப்படி கதறிச் சிதற வைக்கும் என்பதை அன்றுதான் நவநீதன் உணர்ந்து கொண்டான். அவர்களின் அழுகுரல் அந்த வீதியெங்கும் ஒலித்தது. இடையிடையே சங்குச் சத்தமும் தன் பங்கிற்கு ஒப்பாரி வைத்தது.
சங்கரின் உறவினர்கள் வரவே, அவர்களுக்கு கை கொடுத்து, அழ ஆரம்பித்தார் வேதாசலம்.
ஒரு மூலையில் சங்கரின் தம்பி மோகன் அழுது கொண்டிருந்தான். அவனை சைகை காட்டி இங்கு வா என கூப்பிட்டான் நவநீதன்.
அழுதபடியே வந்த மோகனிடம், ”என்னடா ஆச்சி… நேத்து நைட்டு பாய் வீட்டுக்கு போயிட்டு வந்தப்ப, அவனுக்கு சரியாயிடும் பயப்படாதீங்கன்னாங்க… நேத்து பார்த்ததை விட இன்று எலும்புக்கூடாய் போயிட்டானே… என்னடா ஆச்சி… எப்படிடா நடந்துச்சி…” என்றான் நவநீதன்.
”காலைல இருந்து அண்ணன் எதுமே சாப்பிடல… தண்ணியாச்சும் குடிப்பான்னு பார்த்தா, தண்ணிய கண்டாவே பயந்து நடுங்கினான்… மதியம் 12.00 மணி இருக்கும்… ஊளைச்சத்தம் அவனிடமிருந்து பயங்கரமா வர ஆரம்பிச்சுது… எல்லோரும் பயந்து போய் அண்ணனை எழுப்பிப் பார்த்தோம்… ஊளைச் சத்தம் மெல்ல மெல்ல ஆரம்பித்து… அஞ்சு நிமிஷத்துல அதிகமா ஊளையிட ஆரம்பிச்சிட்டான். அவன் கண்ல இருந்து கண்ணீர் வந்துச்சு… எச்சில் ஒரு பக்கம் ஒழுதுகிட்டே இருந்திச்சி… உடம்பை எல்லாம் அவனாவே தன் நகங்களால கீறிக்கிட்டான்… அவன் கையெல்லாம் ஒரே ரத்தம்… ஊளை சத்தம் மெல்ல மெல்ல அடங்கிச்சு… அப்படியே… அண்ணனும்…. துடிதுடிச்சி…. அடங்…..” அதற்கு மேல் மோகனால் சொல்ல முடியவில்லை. அவனது அழுகையும் உச்சத்திற்குப் போனது.
எல்லாவற்றையும் கேட்ட நவநீதன், சங்கரின் அருகே சென்று பார்த்தான்… அவன் முகம் வற்றிப்போய், கண்கள் எல்லாம் உள்ளே சென்று இருந்தது. அவன் மூக்கில் ரத்தம் வடிந்திருந்ததற்கான அறிகுறியும் தென்பட்டது.
அவனை தொட்டுக் கும்பிட்டு விட்டு, ஒரு நண்பனை, நல்ல கிரிக்கெட் வீரனை இழந்து விட்டோமோ என்ற கவலையோடு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான்.
சங்கரின் மரணத்திற்கு பேய் காரணமல்ல என்பதை அவன் முன்பே உணர்ந்திருந்தான். ஆனால் இந்த மரணத்திற்கு வேறு காரணம் இருக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், இதுகுறித்து பேசுவதற்கு இது சரியான நேரமல்ல என்பதால் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அன்று மாலை கிரிக்கெட் விளையாடும் அவனது டீம் ஆட்கள் அனைவரும் ஒன்று கூடினர். பெரியசாமி, கார்த்திக் உள்ளிட்ட அத்தனைபேரும் அங்கே ஆஜராகியிருந்தார்கள். ஒவ்வொருவரும் பயந்து போயிருந்தனர். கார்த்திக் மிகவும் பயந்து போயிருந்தான்.
”நவநீ அண்ணா… சங்கரோட மாமா பேயா வந்து அவரை கொன்னுட்டதா சொல்றாங்க… அப்போ அவரும் நம்ம ஊர்ல இருக்குற யாரையாவது பிடிச்சுக்குவாரா..? இனிமே நம்ம ஊர்ல யாரும் நடமாட முடியாதா?. சனிப்பொணம் தனியா போகாது… கூட ஒரு ஆளோடதான் போகும்னு சொல்றாங்க… சங்கர் நம்ம கூடதான் விளையாடுவார்… அப்போ அவரும் பேயா வந்து நம்மளை பிடிச்சிக்குவாரா.. சொல்லுண்ணா?” என்றான் சதீஷ்
இவனையடுத்து கார்த்திக் வாயைத் திறந்தான். ”நேத்து நைட்டுதான் என்னை ஒரு பேய் அமுக்கி கொல்லப் பார்த்துச்சி… சங்கர் வேற பேயடிச்சி செத்துட்டாரு… நாம அவ்ளோதான்…” என்று பயந்து நடுங்கினான்.
பிளஸ் டூ வகுப்பில் சயின்ஸ் குரூப் எடுத்துப் படித்தவன் நவநீதன். அதுமட்டுமின்றி பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவன். ஆதலால் எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணம் அவனிடம் இருந்தது. கிரிக்கெட் விளையாடும் பசங்களின் பயம் தேவையில்லாதது என அவனுக்கு அப்பட்டமாய் தெரிந்தது.
அவர்களின் பயத்தை போக்க வேண்டியது தன் கடமை என்று உணர்ந்து கொண்டு, பேச ஆரம்பித்தான்.
”எல்லோரும் கேட்டுக்கோங்கடா… சங்கர் பேயடிச்சி ஒண்ணும் சாகல… அவன் செத்துப் போனதற்கு வேற ஏதோ காரணம் இருக்கு… அந்த காரணம் என்னான்னு சீக்கிரமா கண்டுபிடிச்சி சொல்றேன். பேய் பிசாசுன்னு பயப்படாதீங்க… அப்படி எல்லாம் ஏதும் இல்ல. உங்களை விட அவன்தான் எனக்கு ரொம்ப நெருக்கமான பிரெண்டு. அப்படி பிடிக்கறதா இருந்தா அவன் என்னை முதல்ல பிடிக்கட்டும். நான் அவனை பாத்துக்கறேன்.” என்று விட்டு அவர்களைப் பார்த்தான் நவநீதன்.
எல்லோரும் நவநீதன் சொல்வதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தனர். மீண்டும் பேச ஆரம்பித்தான்.
”பேய் பிசாசு என்ற மூடநம்பிக்கை எல்லாம் படிப்பறிவில்லா கிராம மக்களை ஏமாத்தும் வேலைடா. இதே படிச்ச மக்கள் இருக்குற சிட்டில பேயிருக்குன்னு பிசாசு இருக்குன்னு யாராச்சும் சொல்லி இருக்காங்களா..? உதாரணத்துக்கு சென்னையை எடுத்துக்கோங்க… அங்க தினமும் ஆக்சிடெண்ட்ல, ஹாஸ்பிடல்ல எத்தனை பேர் சாவறாங்க தெரியுமா? அவங்க எல்லாம் பேயாவா திரியிறாங்க…
இதுக்கு வேற ஏதோ ஒரு காரணம் இருக்குன்னு நினைக்கறேன். எல்லோரும் பயப்படாம இருங்க.. ஒரு வாரத்துல என்ன காரணம்னு கண்டுபிடிச்சி சொல்றேன்” என்றான்.
ஆயிரம் சமாதானம் சொன்னாலும் அந்த பசங்களுக்கு தைரியம் வந்ததாய் தெரியவில்லை. இருப்பினும், நவநீதனுக்காக ”சரிண்ணே… நாங்க பயப்படல” என்றனர்.
சங்கர் இறந்து போவதற்கு முன் அவனுடைய செய்கைகள், அவன் நடந்து கொண்ட விதம் போன்றவைதான் நவநீதனுக்கு சந்தேகத்தை எழுப்ப காரணமாய் இருந்தது. அத்துடன் அவர்களது சந்திப்பும் முடிந்தது.
ஒரு வாரம் போன பிறகு, கல்லூரி விட்டு வீட்டிற்கு வரும் வழியில் சங்கரின் தம்பி மோகனை சந்தித்து பேசினான் நவநீதன்.
”என்னடா மோகன் எப்படி இருக்கீங்க…”
”வீடே சோகத்துல இருக்குண்ணே… அப்பா மனசு உடைஞ்சி போயிட்டார். அம்மா ஒரு வாரமா சாப்பிடாம இருக்காங்க… மாமான்னு நினைச்சோம்… அந்தாளு செத்து எங்க அண்ணனுக்கு எமனா ஆயிட்டான்…”
”கவலைப்படாதடா… பிறந்துட்டோம்னா.. என்னைக்காவது ஒரு நாள் செத்துப் போகத்தான் போறோம். ஆனா இந்த வயசிலேயே சங்கர் இறந்திருக்க கூடாது. இருந்தாலும் இயற்கையை நம்மால மீற முடியாதுடா… திடமா இருங்க… சங்கர் எங்கயும் போகல… நம்ம கூடவே இருக்கான்னு நினைச்சுக்கோங்க…” என்று ஆறுதல் கூறிவிட்டு ”சரி
ஒரு விஷயம் கேக்கறேன். பதில் சொல்றியா?”
”கேளுங்கண்ணே…”
”சங்கர் பணம் வசூல் பண்றதுக்கு எப்பெல்லாம் போவான்?”
”எப்பவும் சாயந்திரமாத்தான் போவான்…”
”எப்ப வீட்டுக்கு வருவான்..?”
”சாயந்திரமா போனா, பணத்தை எல்லாம் வசூல் பண்ணிட்டு நைட்டு 9 மணிக்கு மேல வீட்டுக்கு வந்துடுவான்.”
”அப்படி போற இடத்துல நாய், பூனை, எலி இப்படி ஏதாச்சும் கடிச்சிதாடா..?”
”இல்லண்ணே…”
”நல்லா யோசிச்சு சொல்லு… இப்ப இல்ல… மூணு நாலு மாசத்துக்கு முன்னாடியா கூட இருக்கலாம்.”
ஆழ்ந்து யோசித்த மோகன், ”ஆமாண்ணே… சுந்தராபுரத்தில் பண வசூலுக்குப் போனப்ப ரோட்டுல ஓடிக்கொண்டிருந்த நாய், அண்ணனை கடிச்சிருச்சி. ரெண்டு நாள் கழிச்சு கொத்தாம்பாடியில போய், நாய்கடிக்கு சுட்டுகிட்டு வந்துட்டான்.”
நவநீதனுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிய ஆரம்பித்தது. ”சரி மோகன்… உடம்ப பாத்துக்கோ… வீட்டுல இருக்கிற ஒரே ஆம்பள பையன் நீதான். பாத்து கவனமா நடந்துக்கோ…” என்றுவிட்டு நேரே வீட்டுக்கு வந்தான் நவநீதன்.
தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு குன்றத்தூரிலேயே பெரிய டாக்டர் என பேரெடுத்திருக்கும் சாந்தாராம் வீட்டிற்கு சென்றான்.
நவநீதன் குடும்பத்திற்கே சாந்தாராம்தான் மருத்துவம் பார்ப்பார். மருத்துவம் சார்ந்த சந்தேகம் எதுவாகினும் நேரே அவரிடம் போய்விடுவான். அவரும் சளைக்காமல் அவனுக்கு விளக்கம் கொடுப்பார்.
”டாக்டர் உங்ககிட்ட பேசணும்.”
”ஏதேனும் பிரச்சினையா..? இல்ல வழக்கம் போல சந்தேகமா..?”
”சந்தேகம்தான் சார்…” என்று விட்டு சங்கருக்கு நடந்ததை ஆரம்பம் முதல் முடிவு வரை சொல்லி முடித்தான்.
”எனக்கு சந்தேகமெல்லாம்… சங்கர் ரேபிஸ் நோயால செத்திருப்பான்னு நினைக்கறேன். பிளஸ் டூ – ல ரேபிஸ் பத்தி படிச்சிருக்கேன். நான் நினைச்சது சரியா டாக்டர்?”
”நிச்சயமா உனது யூகம் சரிதான். ரேபிஸ்ங்கறது வெறிநாய் கடிச்சதால வரக்கூடிய உயிர்கொல்லி நோய். நாய் கடிச்சதுமே தடுப்பு ஊசி போட்டுக்கணும். இல்லன்னா அடுத்த மூணு மாசத்துல ஆளையே காலி பண்ணிடும்.”
”இந்த நோயோட அறிகுறிகள் எப்படி இருக்கும் டாக்டர்..?”
ரேபிஸ் நோய் தாக்கினவங்க எப்பவும் இருட்டுலயேதான் இருக்க விரும்புவாங்க. தண்ணிய கண்டா பயப்படுவாங்க. அதை ஹைட்ரோபோபியான்னு மருத்துவம் சொல்லுது. வாயிலிருந்து எச்சில் ஒழுதுகிட்டே இருக்கும். நாய் மாதிரி குரைப்பாங்க.. ஊளையிடுவாங்க… ரேபிஸ் நோய் நேரே மூளையை தாக்கி ஆளையே எலும்புக்கூடாக்கி சாகடிச்சுடும்.
நீ சொன்னதெல்லாம் ரேபிஸைத்தான் உறுதிப்படுத்துது. நாட்டு வைத்தியம்ங்கற என்ற பேர்ல ஒரு வேதி உப்பை நாய்கடிச்ச இடத்துல விட்டு ஒரு அமிலத்தை ஊத்துவாங்க… அது பொங்கி வந்து அந்த கடிபட்ட இடத்தை சுத்தப்படுத்தற மாதிரி செய்யும். அது அந்த இடத்தில் உள்ள கிருமியைத்தான் அழிக்குமே தவிர, ரத்தத்தில் கலந்த கிருமியை அழிக்காது. அது சரியான வழிமுறையும் இல்லை. ரேபிஸ் வைரஸ் ரத்தத்துல கலந்துடும். அதை தடுத்தாதான் உயிர் பிழைக்க முடியும். அதால்தான் நாட்டு வைத்தியம் எப்பவும் சரிவராதுன்னு நாங்க சொல்லுவோம்” என்றார்.
”அந்த பாய் வீட்ல அவன் 2 நிமிஷம் நல்லா பேசினானே சார் அது எப்படி சாத்தியம்?”
மருத்துவத்துல ‘ஹிஸ்டீரியா ட்ரீட்மெண்டு’ன்னு சொல்லுவாங்க. அதாவது புத்தி பேதலித்து இருப்பவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அவனை சகஜ நிலைக்கு கொண்டு வரலாம். அந்த அதிர்ச்சி வைத்தியத்தை நீங்களோ, நானோ கூட செய்யலாம். அதை அந்த பாய் தன்னுடைய வருமானத்துக்காக பேய்னு சொல்லியிருக்கார். அதான் விஷயம்.”
”ஆட்டோவில வரும் போது வேதாசலம் ஏன் டாக்டர் பல்லை நறநறவென்று கடித்தபடி தன்னை சாமி என்று சொன்னாரே..? அது எப்படி சாத்தியம்?”
தன்னை அவர் கடவுளாக நினைத்துக் கொண்டு, அவரை சார்ந்தவர்களை திருப்திப்படுத்த அவர் அப்படி செய்திருப்பார். சாமி ஊர்வலம் ஊர்வலம் வருகையில் சில பெண்கள் வேண்டுமென்றே சாமியாடுவதில்லையா அதுபோலத்தான் இதுவும்” என்றார்.
சாந்தாராமின் தெளிவான பதில்கள், நவநீதனின் மனக்குழப்பங்களை போக்கியது.
”என் சந்தேகம் தீர்ந்தது. ரொம்ப நன்றி டாக்டர். என்று இந்த மக்களிடம் இருந்து அறியாமை நீங்குதோ அன்றுதான் பேய் பிசாசு போன்ற மூடநம்பிக்கைகளிடமிருந்து விடுதலை கிடைக்கும்.” என்று அவன் சொல்லி முடிப்பதற்கும், டாக்டரைப் பார்க்க நோயாளி ஒருவர் உள்ளே வருவதற்கும் சரியாக இருக்கவே, அவரிடம் இருந்து விடைபெற்று வெளியே வந்தான்.
சங்கரின் அறியாமையாலே, அவனது ஆயுளை இழந்து விட்டது நவநீதனுக்கு வருத்தத்தை தந்தது. இன்னும் இதுபோல் எத்தனை சங்கர்கள் இருப்பார்களோ? என எண்ணியவாறு தனது சைக்கிளை ஓட்டத் துவங்கினான்.
சங்கர் வெறிநாய்கடியால்தான் இறந்து போனான் என்பதை நம்ம பசங்ககிட்ட விரிவா எடுத்து சொல்லணும். அப்பதான் அவனுங்க புத்தி தெளியும்’ என்று நினைத்தவாறு வீட்டிற்கு கிளம்பினான் நவநீதன்.
முற்றும்.