Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பிறவி மர்மங்கள் – 8

பிறவி மர்மங்கள் – 8

ஹிப்னடைஸ் சிகிச்சை நடந்துகொண்டிருக்கிறது. கேத்தரின் ஒரு கோவிலுக்கு எதிரில் இருந்த பச்சை நிற சிலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறாள். நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவள் மிகப் பழைய கால கட்டத்தில் ஆசியாவில் ஏதோ ஒரு பகுதியில் இருக்கிறாள். அவளுடன் வழிகாட்டி ஆவிகள் (மேல் நிலையில் உள்ள ஆவிகள்) உள்ளன. என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நம்பவே முடியவில்லை. அவள் முற்பிறவிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறாள். அதே நேரத்தில் வழிகாட்டி ஆவிகளிடமிருந்து செய்திகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறாள். அவள் ஒரு முழு பிறவியையும் கடந்த பிறகே, இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட நிலையை அடைய முடியுமென்று உணர்ந்தேன். அவளால் இந்த நிலைக்கு நேரடியாக வர முடியாது. இந்த இடைப்பட்ட நிலையில் மட்டுமே அவளால் வழிகாட்டி ஆவிகளைக் காணமுடியும்.

“பெரிய கோவிலின் எதிரே பச்சை நிற சிற்பங்கள் இருக்கின்றன.” மென்மையாக முணகினாள். “பெரிய கட்டிடம். பழுப்பு நிற கோளத்தின் மீது கூம்புகள் (கோவில் கலசம் போல) உள்ளன. கோவிலுக்கு முன் பதினேழு படிகளும், படிகளின் முடிவில் ஒரு அறையும் உள்ளது. ஊதுபத்தி எரிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் பாதங்களில் செருப்பு அணியாமல் இருக்கிறார்கள். அவர்களின் தலை மழிக்கப் பட்டிருக்கிறது. வட்ட வடிவான முகத்துடனும், கரிய கண்களுடனும் காணப்படுகிறார்கள். உடலும் கரிய நிறத்தில் உள்ளது. நான் அங்கு இருக்கிறேன். என் காலில் அடிபட்டுள்ளது.

உதவிக்காக அங்கு சென்றிருக்கிறேன். கால் மிகவும் வீங்கியுள்ளது. காலை ஊன்றி நடக்க முடியவில்லை. காலில் ஏதோ உள்ளது. வினோதமான இலைகளை காலில் வைத்து இருக்கிறார்கள். ஏதோ பச்சிலை. கால் முதலில் கழுவிவிடப்படுகிறது. இறைவனுக்கு முன் செய்யும் சடங்கு போல் இருக்கிறது. காலில் விஷம் ஏறியுள்ளது. எதன்மீதோ காலை வைத்துவிட்டேன். முழங்கால் முட்டியும் வீங்கியுள்ளது. கால் மிகவும் கனமாக இருப்பதுபோல் உணர்கிறேன். கால்நரம்பு மிகவும் புடைத்துள்ளது. பாதத்தில் துளையிட்டு சூடான திரவத்தை ஊற்றுகிறார்கள்.

கேத்தரின் வலியில் துடிக்கிறாள். மிகவும் கசப்பான மருந்தை உட்கொண்டதைப் போல முகத்தைச் சுளிக்கிறாள். மஞ்சள் நிற பச்சிலையிலிருந்து தயாரிக்கப் பட்ட மருந்தை குடித்திருக்கிறாள். அவளுக்கு கால் சரியாகிவிட்டது. ஆனால் கால் இயற்கையாக இருந்த நிலைக்கு வரவில்லை. நான் அவளை காலத்தில் முன்னோக்கி அழைத்து வந்தேன். அவள் மிகவும் வறுமையால் பீடிக்கப்பட்ட சூழலையே பார்க்கிறாள். அவளுடைய குடும்பத்துடன் அறையே இல்லாத ஒரு குடிசையில் வசிக்கிறாள். அங்கு ஒரு மேஜை கூட இல்லை. அரிசி போன்று ஏதோ தானியத்தை உண்கிறார்கள்.

இருந்தாலும் எப்பொழுதும் பசியிலேயே காலத்தை கழிக்கிறார்கள். வறுமையிலிருந்து மீளாமல், சீக்கிரத்தில் வயோதிக நிலையை அடைந்து இறந்து விடுகிறாள். கேத்தரின் மிகவும் களைப்பாக காணப்பட்டாள். நான் காத்திருந்தேன். நான் அவளை ஹிப்னாடிஸத்திலிருந்து வெளிக்கொணரும் முன்பு “ராபர்ட் ஜெராட்” – க்கு என் உதவி தேவைப்படுவதாக கூறினாள். “ராபர்ட் ஜெராட்” யாரென்றே எனக்குத் தெரியவில்லை. எப்படி உதவ வேண்டுமென்றும் எனக்கு தெரியவில்லை. அதற்குப்பிறகு அவளிடமிருந்து செய்திகள் எதுவும் இல்லை.

கேத்தரின் ஹிப்னாடிஸத்தில் இருந்து வெளிவந்தாள். அதற்குப் பிறகும் மிகவும் நுணுக்கமான தகவல்களை அவளால் நினைவுக்கு கொண்டுவர முடிந்தது. ஆனால் அவளுக்கு இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட நிலையில் நிகழ்ந்தவைகள் சிறிது கூட நினைவில் இல்லை. வழிகாட்டி ஆவிகளைப் பற்றியோ, அவைகள் தரும் தகவல்கள் பற்றியோ சிறிதுகூட அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.

நான் அவளிடம் “கேத்தரின், நீ வழிகாட்டிகள் என்ற வார்த்தையை எப்படி புரிந்து கொள்கிறாய்” என்று கேட்டேன். அவள் அதனை ஒரு கோல்ஃப் விளையாட்டு என்று நினைத்தாள். கேத்தரினின் மனநிலை, உடல்நிலை நன்றாக முன்னேறியுள்ளது. இருந்தாலும் அவளுக்கு மறுபிறவி என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. அது அவளுடைய மதக் கொள்கைகளுக்கு ஒத்துவராத விஷயமாக இருந்தது. எனவே அவளிடம் வழிகாட்டி ஆவிகள் பற்றி எதுவும் கூறவேண்டாமென்று முடிவெடுத்தேன்.

மேலும் கேத்தரின் மேல்நிலை வழிகாட்டி ஆவிகளிடமிருந்து அற்புதமான தகவல்களை கொண்டுவரும் ஒரு திறமை மிக்க ஊடகமாக செயல்பட்டு வருகிறாள். ஆனால் அவளுக்கே வழிகாட்டி ஆவிகளைப் பற்றி தெரியவில்லை. இந்தக் கட்டத்தில் நான் எப்படி அவளிடம் இந்த மேல்நிலை (வழிகாட்டி) ஆவிகளைப் பற்றி கூறமுடியுமென்று எனக்குத் தெரியவில்லை.

கேத்தரின் அடுத்த ஹிப்னாடிஸ சிகிச்சையின்பொழுது எனது மனைவியையும் அழைத்துவருவதற்கு சம்மதித்தாள். என் மனைவி கரோல் ஒரு சமூக சேவகி. அதிலும் திறமை வாய்ந்த மனோவியல் சமூக சேவகி. நிகழ்ந்து கொண்டிருக்கும், நம்புவதற்கு கடினமான நிகழ்ச்சிகளைப் பற்றி அவளது கருத்துகளை தெரிந்து கொள்ள விரும்பினேன். எனது தந்தையையும், மகனையும் பற்றி கேத்தரின் கூறியவைகளை எடுத்துக் கூறியவுடன், கரோல் எங்களுக்கு உதவி செய்ய விரும்பினாள். கேத்தரின் ஹிப்னடைஸ் நிலையில் இருக்கும்பொழுது கூறியவைகளை குறித்துக் கொள்வது எனக்கு கடினமாக இல்லை. ஆனால் மேல்நிலை ஆவிகள் கூறியவைகள், மிகவும் வேகமாக இருந்தன. நான் குறிப்பெடுத்துக்கொள்ள சிரமப்பட்டேன். எனவே, அவற்றை டேப்பில் பதிவு செய்து கொள்ள முடிவெடுத்தேன்.

ஒரு வாரத்திற்குப் பிறகு கேத்தரின், அடுத்த அமர்வுக்கு வந்தாள். அவள் உடல் மற்றும் மனநிலையில் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்பட்டது. பதற்றமும், மூச்சுத்திணறலும் குறைந்துவிட்டது. அவள் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டாலும், ஏன், எப்படி முன்னேற்றம் அடைகிறாள் என்று எனக்கு விளங்கவில்லை. அரோண்டாவாக தண்ணீரில் மூழ்கி இறந்ததும், ஜோகனாக கழுத்து அறுபட்டு இறந்ததும், லூசியா-ஆக இருந்தபொழுது தண்ணீரில் பரவும் கொள்ளைநோயில் இறந்ததும், ஏனைய அதிச்சி தரும் சம்பவங்களும் அவளுக்கு நினைவில் இருந்தன. வறுமையையும், கொடுமையான நிகழ்வுகளையும் மீண்டும் மீண்டும் அனுபவித்திருக்கிறாள்.

முற்பிறவி நினைவுகள் அவளுடைய முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம். வேறுவிதமாக இருக்கவும் சாத்தியமுள்ளது. அதாவது ஆன்மீக அனுபவங்கள் அவளுக்கு உதவி உள்ளதா? மரணத்தைப்பற்றிய அறிவு, அவளுக்கு பயத்தைப் போக்கி, அவளுக்கு அமைதியை தந்துள்ளதா? நினைவுகள் மட்டுமல்லாமல், இந்த முழு ஹிப்னாடிஸ சிகிச்சையும் அவளுக்கு உதவி இருக்கிறதா?

கேத்தரினின் ஆரூடம் சொல்லும் திறமை வளர்ந்து கொண்டே வந்தது. அவளுடைய உள்ளுணர்வும் அதிகம் செயல்பட ஆரம்பித்தது. அவளுக்கு ஸ்டுவர்டிடம் பிரச்சனைகள் அதிகம் இருந்தன. ஆனால் இப்பொழுது அவள் தன்னால் பிரச்சனைகளை நன்றாக சமாளிக்க முடியுமென்ற நம்பிக்கையுடன் இருந்தாள். அவள் கண்களில் ஒளி அதிகரித்தது. அவளுடைய தேஜஸ் வளர்ந்துகொண்டே வந்தது. அந்த வாரத்தில் அவளுக்கு ஒரு வினோதமானக் கனவு வந்ததாகக் கூறினாள். ஆனால் அதில் ஒரு பகுதி மட்டுமே நினைவில் இருப்பதாகக் கூறினாள். மீனின் துடுப்பு அவள் கைகளில் பதிந்திருப்பதாகக் கனவு வந்தது என்று கூறினாள்.

இந்த முறையும் கேத்தரின் விரைவில் சுலமாக மயக்கத்தில் ஆழ்ந்தாள். “நான் மலைமுகடுகளைப் பார்க்கிறேன். ஒரு மலைமுகட்டில் நிற்கிறேன். நின்றபடி கீழே பார்க்கிறேன். நான் கப்பலைக் கண்காணிக்க வேண்டும். அது என்னுடைய வேலை. . . . . . நான் நீலநிற பேண்ட் அணிந்திருக்கிறேன். குட்டையான பேண்டும், வினோதமான செருப்புகளும் அணிந்திருக்கிறேன். . . . . . . கருப்பு நிற செருப்புகள். . . . . . அவை வினோதமாக இருக்கின்றன. கண்ணுக்கெட்டியவரை கப்பல்கள் எதுவும் தெரியவில்லை.” முணகினாள். அவளை வேறு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளை நோக்கி செல்லுமாறு கூறினேன்.

“நாங்கள் மது அருந்திக் கொண்டிருக்கிறோம். மதுக்கோப்பைகள், மிகவும் பழைய கோப்பைகள். அவை கம்பிகளால் சுற்றப்பட்டுள்ளன. இந்த இடம் மிகவும் நாறுகிறது. ஒரே சத்தமாக இருக்கிறது. மக்கள் கூட்டமாக இருக்கிறார்கள்.” யாராவது அவளை கூப்பிடுகிறார்களா? என்று அவளைக் கேட்டேன். அவள் பெயரை தெரிந்துகொள்வதற்காகக் கேட்டேன்.

“கிறிஸ்டியன். . . . . . கிறிஸ்டியன் எனது பெயர். “ மீண்டும் ஆணாக இருக்கிறாள். “நாங்கள் மாமிசம் சாப்பிட்டுக்கொண்டும், மது அருந்திக் கொண்டும் இருக்கிறோம். மது கருப்பாகவும், கசப்பாகவும் இருக்கிறது. அதில் உப்பும் சேர்த்திருக்கிறார்கள்.”

அவளால் வருடத்தை கணிக்க முடியவில்லை. “ஏதோ யுத்தத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். போர்க்கப்பல்கள் துறைமுகத்தை முற்றுகை இட்டுள்ளதாகப் பேசிக்கொள்கிறார்கள். எங்கே முற்றுகை என்று என் காதில் விழவில்லை. சிறிது சத்தம் குறைவாக இருந்தால் கேட்கமுடியும். ஆனால் மிகவும் சத்தமாகக் கத்திக்கொண்டிருக்கிறார்கள்.”

நான் அவளிடம் எங்கே இருக்கிறாள் என்று கேட்டேன். “ஹேம்ஸ்டட். . . . . . வேல்சில் ஒரு துறைமுகம். அவர்கள் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.” அவள் மீண்டும், கிறிஸ்டியன் கப்பலில் இருந்த நேரத்துக்குச் சென்றாள். “என்னால் ஏதோ நுகர முடிகிறது. தாங்கமுடியாத நாற்றம். மரம் எரிகிறது. மற்றொன்றும் எரிவதுபோல் தெரிகிறது. என்னெவென்று தெரியவில்லை. என் மூக்கில் எரிச்சல் தாங்கமுடியவில்லை. தூரத்தில் ஏதோ எரிகிறது. பீப்பாய் எரிவதுபோல் தெரிகிறது. நாங்கள் பொருட்களை ஏற்றிக்கொண்டிருக்கிறோம். வெடிமருந்துகளையும், வேறு பொருட்களையும் ஏற்றிக்கொண்டிருக்கிறோம்.” கேத்தரின் குழப்பத்தில் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

“வெடிமருந்துகளுடன் வேறு ஏதோ பொருட்களையும் சேர்த்து ஏற்றிக்கொண்டிருக்கிறோம். அது கருப்பாக இருக்கிறது. கைகளில் ஒட்டிக் கொள்கிறது. நாங்கள் வேகமாக ஏற்றவேண்டும். கப்பலில் பச்சை நிறக்கொடி பறப்பதுபோல் தெரிகிறது. அது பச்சை மற்றும் மஞ்சள் நிறக்கொடி. அதில் மூன்று புள்ளிகளைக் கொண்ட கிரீடம் உள்ளது.” திடீரென்று கேத்தரின் வலியில் துடித்தாள். வேதனைப்படுவது தெரிந்தது. “அஹ்” உறுமினாள். “கை வலிக்கிறது. கை வலிக்கிறது. ஏதோ மெட்டல். மிகவும் கொதிக்கின்ற மெட்டல் என் கையை சுடுகின்றது. அஹ்”

அவள் கையில் சிவப்பு நிறத்துடுப்புடன் கனவு வருவதாக கூறியது என் நினைவுக்கு வந்தது. நான் அவள் வலியை நிறுத்தினேன். அவள் இன்னும் முணகிக்கொண்டிருந்தாள்.

“கூரான மெட்டல் குத்திவிட்டது. . . . . . .நாங்கள் இருந்த கப்பல் அழிந்துவிட்டது. . . . . . .துறைமுகத்துக்கு அருகில் இருக்கிறோம். தீயை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். அதிகமானோர் இறந்துவிட்டார்கள். நான் தப்பிவிட்டேன். . . . . . . . . . . ஆனால் என் கை இன்னும் வலிக்கிறது. காலப்போக்கில் குணமாகிவிடுகிறது.” நான் அவளை காலத்தில் முன்னோக்கி அழைத்து வந்தேன். குறிப்பிடதக்க சம்பவம் நிகழும் காலகட்டத்துக்கு செல்லுமாறு பணித்தேன்.

“ஒரு அச்சகத்தைப் பார்க்கிறேன். புத்தகம் அச்சிட்டு பைண்ட் பண்ணுகிறார்கள். புத்தகத்துக்கு தோலிலான அட்டைகள் வைக்கிறார்கள். புத்தகத்தை தோலினாலான நூலைக் கொண்டு பைண்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். சிவப்பு நிற புத்தகம். ஏதோ சரித்திர புத்தகம். புத்தகத்தின் பெயரைப் பார்க்க முடியவில்லை. இன்னும் அச்சடித்து முடியவில்லை. புத்தகம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. புத்தகத்தின் அட்டை தொடுவதற்கு மென்மையாக இருக்கிறது. புத்தகத்திலிருந்து மிகவும் கற்றுக்கொள்ள முடியும்.

கிறிஸ்டியன் தொட்டு பார்த்து மகிழ்ச்சியடைவது தெரிந்தது. புத்தகத்தைப் படிப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து வைத்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் கிறிஸ்டியன் படிப்பறிவில்லாதவன்போல் காணப்பட்டான். அவனை பிறவியின் இறுதிக்கட்டத்துக்கு அழைத்து வந்தேன். “நதியின் மேல் பாலத்தைப் பார்க்கிறேன். எனக்கு வயதாகிவிட்டது. மிகவும் வயதாகி விட்டது. . . . . நடப்பதற்கே சிரமமாக இருக்கிறது. பாலத்தில் நடந்து கொண்டிருக்கிறேன். . . . . . அடுத்த பக்கம் செல்ல வேண்டும். நெஞ்சை வலிக்கிறது. . . . . . . வலி தாங்க முடியவில்லை. . . . . . ஆஹ்” மூச்சு திணறி மாரடைப்பு ஏற்படுவதுபோல் கேத்தரின் சத்தங்கள் எழுப்பினாள். கிறிஸ்டியனுக்கு பாலத்தில், மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுபோல் தெரிகிறது. அவள் மூச்சு விடும் வேகம் அதிகரித்தது.

மேலோட்டமாகவும் இருந்தது. அவள் முகமும், கழுத்தும் மிகவும் வியர்த்துவிட்டது. இருமத்தொடங்கினாள். மூச்சுவிடத் திணறினாள். நான் அவளுக்காக வருத்தப்பட்டேன். பழைய பிறவியில் நிகழ்ந்த மாரடைப்பை இப்பொழுது உணர்கிறாளா? இது முற்றிலும் புதியது. யாரும் அறிந்திராதது. யாராலும் விளக்கம் அளிக்க முடியாதது. கிறிஸ்டியன் வாழ்வு ஒரு முடிவுக்கு வந்தது. கேத்தரின் அமைதியானாள். மூச்சு விடுவது நிலைப்பட்டது. நானும் நிம்மதியாக பெருமூச்செறிந்தேன்.

“நான் சுதந்திரமாக உணர்கிறேன். . . . . . இருட்டில் மிதக்கிறேன். . . . . . . பிரகாசமான ஒளியை நோக்கிச் செல்கிறேன். என்னைச் சுற்றி ஆவிகள், வேறு மனிதர்கள் இருக்கிறார்கள்.” கேத்தரின் முணகினாள்.

நான் அவளிடம், கிறிஸ்டியன் பிறவியில் நிகழ்ந்தவைகள் ஏதாவது நினைவிலிருக்கிறதா என்று கேட்டேன்.

“நான் நிறைய விட்டுக்கொடுத்து மன்னித்து வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் நான் அப்படி வாழவில்லை. எனக்கு பிறர் செய்த பிழைகளை, மனதிலேயே வைத்திருந்தேன். யாரையும் மன்னித்ததில்லை. மன்னித்திருக்க வேண்டும். நீண்ட காலங்கள் மற்றவர் பிழைகளை மனதில் சுமந்துவிட்டேன். . . . . . . நான் கண்களைக் காண்கிறேன். . . . . . கண்கள்”

“கண்கள்?” பதிலளித்தேன். வழிகாட்டி ஆவிகளை மனதில் உணர்ந்தேன். “என்ன மாதிரியான கண்கள்?” “வழிகாட்டி ஆவிகளின் கண்கள். ஆனால் நான் காத்திருக்க வேண்டும். எனக்கு சிந்திப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.” கேத்தரின் முணகினாள். நிமிடங்கள் இறுக்கமாக கழிந்தன.

“அவர்கள் தயாராக இருப்பது உனக்கு எப்படி தெரியும்?” அமைதிகாக்க பொறுமையில்லாமல் கேட்டேன்.

“என்னை அழைப்பார்கள்” பதிலளித்தாள். இன்னும் பல நிமிடங்கள் கழிந்தன. திடீரென்று தலையை பக்கவாட்டில் அசைக்க ஆரம்பித்தாள். அவள் குரல் கரகரப்பாக, உறுதியான குரலாக மாறியது. மாற்றம் தோன்றியதற்கு அறிகுறி.

“இந்த பரிமாணத்தில் பல ஆன்மாக்கள் உள்ளன. என்னைப்போல் பலரும் உள்ளனர். நாம் பொறுமையாக இருக்கவேண்டும். எனக்கு கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. . . . . . . இங்கும் பல்வேறுபட்ட நிலைகள் உள்ளன.” நான் அவளிடம் “அங்கு சென்றிருக்கிறாயா? வெவ்வேறு பிறவிகள் எடுத்திருக்கிறாயா?” என்று கேட்டேன்.

“வேறு வேறு காலக்கட்டங்களில், வேறு வேறு பரிமாணங்களில் இருந்திருக்கிறேன். ஒவ்வொரு பரிமாணமும் வேறு வேறு உணர்வு நிலையைக் கொண்டது. எந்த பரிமாணத்தில் இருக்கிறோமென்பது, நாம் எந்த அளவு முன்னேறியிருக்கிறோம் என்பதைப் பொறுத்தது.” மீண்டும் அமைதியானாள். நான் முன்னேறுவதற்கு என்ன மாதிரியான விஷயங்கள் கற்றுத் தேர்ந்திருக்கவேண்டுமென்று கேட்டேன். உடன் பதில் வந்தது.

“நாங்கள் எங்களுடைய ஞானத்தை அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். எங்களது சக்தியின் எல்லை மிகவும் அதிகம். ஆனால் அதன் எல்லையை நாங்கள் உணரவில்லை. சிலருக்கு ஞானம் அடையும் பாக்கியம் சீக்கிரம் கிடைத்துவிடுகிறது. இந்த நிலைக்கு வருவதற்கு முன் தத்தம் பாவங்களைக் களைந்திருக்கவேண்டும். இல்லையேல் பாவங்களை அடுத்த பிறவிக்கு சுமக்க நேரிடும். சரீர நிலையில் இருக்கும்பொழுது சேர்த்துவைத்த பாவங்கள் அனைத்தையும் களைய வேண்டும். வழிகாட்டி ஆன்மாக்கள், நமக்காக அதனைச் செய்ய இயலாது. நீங்கள் இப்பிறவியில் பாவங்களை கழிக்க முயலாவிட்டால், மறுபிறவிக்கு சுமந்து செல்வீர்கள். சுற்றியுள்ள பிரச்சனைகளிலிருந்து, பாவங்களை சேர்க்காமல் எப்பொழுது உங்களைத் தற்காத்துக்கொள்ள முடிகிறதோ, அப்பொழுதுதான் பாவங்கள் அடுத்த பிறவிக்குச் செல்லாமல் தடைபடுகின்றன.

நாம் நமது சிந்தனைகள் ஒத்துப்போகும் மனிதர்களிடம் மட்டும் பழகுவதைத் தவிர எல்லோரிடமும் பழகுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரே அலைவரிசையில் எண்ணங்கள் இருப்பவர்களிடம் மட்டுமே பழகுவது இயல்பான ஒன்று. ஆனால் அது தவறான செயல். சிந்தனை அலைவரிசைகள் ஒத்துப்போகாதவர்களிடமும் நாம் பழகவேண்டும். இது முக்கியமான ஒன்று. அப்படிப்பட்டவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.

எங்களது உள்ளுணர்வு, மரபைப் பின்பற்றுவதற்கு உணர்த்துகிறது. அதனை நாங்கள் எதிர்க்காமல் பின்பற்றவேண்டும். எதிர்ப்பவர்கள் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். நாங்கள் வேறு வேறு பரிமாணங்களுக்கு அனுப்பப் படுகிறோம். ஒவ்வொரு பரிமாணங்களிலும் பலதரப்பட்ட சக்தி நிலையில் உள்ள ஆன்மாக்கள் உள்ளன. சில ஆன்மாக்கள் மிகவும் அதிக சக்தியுடையவர்கள். முற்காலங்களில் அதனைப் பெற்றிருப்பார்கள். மனிதர்களில் வேறுபாட்டுடன் படைக்கப்பட்டது போல், இங்கும் வேறுபாடுகள் உள்ளது. ஆனால் அனைத்து ஆன்மாக்களும் இறுதியில் சமமான ஆற்றல் உள்ள நிலைக்கு சென்றடைந்துவிடுவோம்.”

காத்தரின் நிறுத்தினாள். எண்ணங்களும், சொற்களும் காத்தரினிடமிருந்து வந்தவைகளல்ல என்பது எனக்குத் தெரியும். சரீர நிலை, ஸ்தூல நிலை பற்றிய அறிவு அவளுக்குக் கிடையாது. வேறுபட்ட பரிமாணங்கள், சிந்தனை அலைவரிசைகள் எதுவும் அவளுக்கு பரிச்சயமானதல்ல. இப்படிப்பட்ட எண்ணங்களும், வார்த்தைகளும் காத்தரினுடைய திறமைகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. இவ்வளவு தெள்ளத்தெளிவாக, கவிதை நயத்துடன் அவள் பேசியது கிடையாது. காத்தரினை மீறிய ஏதோ சக்தி, காத்தரின் வழியாக பேசுவதை எண்ணால் உணர முடிந்தது. பேசியது, நிச்சயமாக காத்தரின் கிடையாது.

அவளுடைய குரல் அசரீரி போல் ஒலித்தது. “கோமா நிலையில் மக்கள் இருப்பது தற்காலிக நிலை. அது அவர்கள் அடுத்த பரிமாணத்தை அடைவதற்கு தயாராகாத நிலை. அடுத்த பரிமாணத்தை அடைய அவர்கள் முடிவடுக்காத நிலை. அவர்கள்தான் அந்த முடிவை எடுக்கவேண்டும். சரீர நிலையில் கற்றுக்கொள்ள எதுவும் இல்லையென்று அவர்கள் நினைத்தால்,…… அவர்கள் அடுத்த பரிமாணத்துக்கு செல்லலாம். அவர்கள் கற்றுக்கொள்ள தேவையிருப்பின், அவர்கள் விரும்பாவிட்டாலும், சரீர நிலைக்கே சென்றுவிடநேரிடும். கோமா நிலையிலிருக்கும் நேரம், அவர்களுக்கு ஓய்வு நேரம். சக்திகள் சற்று ஓய்வெடுக்கும் நேரம்.”

கோமா நிலையில் இருப்பவர்கள், சரீர நிலையில் நீடிக்கவேண்டுமா, ஸ்தூல நிலைக்கு செல்லவேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யமுடியும். அது சரீர நிலையில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியவைகளைப் பொறுத்து அமைகிறது. சரீர நிலையில் கற்றுக்கொள்ள எதுவுமில்லை என்று எண்ணினால் நேரடியாக ஆவி நிலைக்கு செல்லலாம். நவீன மருந்துகள் இதனைத் தடுக்க முடியாது. இறப்புக்கு அருகில் உள்ளவர்கள் சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளும், இந்தத் தகவலும் மிகவும் ஒத்துப்போகிறது. மேலும் ஏன் சிலர் உயிர் மீண்டு வருகிறார்கள் என்பதும் இந்தத் தகவல்களால் புரிகிறது. மற்றும் சிலருக்கு அவர்கள் விருப்பப்படி வாழலாமா, அடுத்த நிலைக்குச் செல்லலாமா என்று தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் உள்ளதால் சரீர நிலைக்கு திரும்ப வேண்டியக் கட்டாயம் உள்ளது.

கிட்டத்தட்ட மரணத்தை தொட்டவர்களிடம், எடுக்கப்பட்ட பேட்டியில், அநேகமாக அனைவருடைய அனுபவங்களும் ஒத்துப்போகிறது. அவர்கள் இறக்கும் தருவாயில், உடலைவிட்டு பிரிந்து மேலே சென்று, கீழே நடப்பவைகளைக் கவனிக்க முடிந்திருக்கிறது. பிரகாசமான ஒளியையோ, மின்னக்கூடிய ஆவிகளையோ தூரத்தில் கண்டு கொண்டிருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் செல்லும் பாதையில் இறுதியில் ஒளியைப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் யாவரும் வலியை உணர்ந்திருக்கவில்லை. பூமியில் தங்களுக்குள்ள கடமைகளை நினைவுபடுத்தியவுடன், சரீரத்துக்கு திரும்பியிருக்கிறார்கள். அதன் பிறகே உடல் உபாதைகளை அவர்களால் உணர முடிந்திருக்கிறது.

நான் இறப்பு நிலைக்கு சமீபம்வரை சென்ற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்திருக்கிறேன். மிகவும் வெற்றிகரமான தென்அமெரிக்க தொழிலதிபர் ஒருவரை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கேத்தரினுடைய சிகிச்சை முடிந்து, இரண்டு வருடங்களாக நான் அந்த தொழிலதிபர், ஜேக்கப் என்பவருக்கு மனநல சிகிச்சை அளித்திருக்கிறேன். பலமுறை எனது கிளினிக்கில் அவருக்கு ஹிப்னடைஸ் செய்து சிகிச்சை அளித்திருக்கிறேன். 1975-ல் ஹாலந்தில், ஜேக்கப் ஒரு மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளாகி, தன் உணர்வை இழந்திருக்கிறார். அப்பொழுது அவர் தன் உடலை விட்டு மேலே மிதந்து, கீழே நடப்பவைகளை நன்றாக கவனிக்க முடிந்ததாக கூறினார்.

விபத்து நிகழ்ந்த இடத்தையும், ஆம்புலன்ஸ் வாகனம், சிகிச்சை அளிக்கும் டாக்டர், கூட்டம் போட்ட மக்கள் அனைத்தையும் மேலே மிதந்தபடி அவரால் கவனிக்க முடிந்திருக்கிறது. பிரகாசிக்கும் பொன்னிற ஒளியைத் தூரத்தில் கண்டதாகவும், அந்த சமயத்தில் காவிநிற உடையணிந்த துறவி ஒருவர் ஜேக்கப்பிடம் “உனக்கு சரியான நேரம் இன்னும் வரவில்லை; நீ உடலுக்கு திரும்பவேண்டும்.” என்றும் கூறியிருக்கிறார். ஜேக்கப் அந்த துறவியின் சக்தியையும், ஞானதிருஷ்டியையும் தன் வாழ்வின் பிற்காலங்களில் வேறு வேறு சூழல்களில் உணரமுடிந்தது என்றும் கூறினார். ஜேக்கப் தன் உடலுக்கு திரும்பியபோது, ஹாஸ்பிடல் படுக்கையில் இருப்பதை உணர்ந்தார். விபத்துக்குப் பிறகு முதன்முதலாக உடல் வலியையும் அனுபவிக்க ஆரம்பித்தார்.

ஜேக்கப் யூத மதத்தைச் சார்ந்தவர். 1980-ல் இஸ்ரேலில் ஹெப்ரான் என்ற இடத்தில் உள்ள குகைக்கு சென்றிருந்தார். அந்த குகை யூதர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் புனித தலம். ஹாலந்து அனுபவத்திற்குப் பிறகு, ஜேக்கப் ஆன்மீகத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவராக மாறிவிட்டார். அடிக்கடி பிராத்தனைகள் செய்யவும் ஆரம்பித்தார். ஹெப்ரானில் இருந்த பள்ளிவாசல் ஒன்றில் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து பிராத்தனையில் ஈடுபட்டார். பிராத்தனை முடிந்ததும் வெளியேர ஆரம்பித்தார்.

அப்பொழுது ஒரு இஸ்லாமிய முதியவர், அவரிடம் “நீங்கள் மற்றவர்களைவிட வித்தியாசமாக இருக்கிறீர்கள். அவர்கள் எங்களுடன் பிராத்தனையில் ஈடுபடமாட்டார்கள்.” என்றார். பிறகு, ஜேக்கப்பை உற்றுப் பார்த்துவிட்டு “நீங்கள் அந்த துறவியை சந்தித்திருக்கிறீர்கள். அவர் கூறியதை மறந்துவிடாதீர்கள்.” விபத்து நிகழ்ந்து, ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் சுயநினைவிழந்த நிலையில் சந்தித்த துறவியை, ஒரு முதியவருக்கு எப்படித் தெரியவந்தது?

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top