கேத்தரின் அவளுக்கிருந்த பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டாள். பிரச்சனைகள் எதுவும் மீண்டும் தலைகாட்டுவதில்லை. நான் என்னுடைய நோயாளிகளுக்கு இத்தகைய சிகிச்சையை கொடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். பழைய முற்பிறவி நினைவுகளைத் தூண்டும் சிகிச்சையை நான் கீழ்கண்ட நோயாளிகளுக்கே பரிந்துரைக்கிறேன் – நோயாளிகளுக்கு பிறசிகிச்சைகள் அளிக்கும் பலன்கள், அவர்களின் நோயின் அறிகுறி, சிகிச்சைக்கு நோயாளிகளுடைய ஒப்புதல், எளிதில் ஹிப்னாடிஸத்தில் சமாதி நிலையை அவர்கள் அடையும் தன்மை, மற்றும் என்னுடைய உள்ளுணர்வின் தாக்கம் முதலியவற்றைக் கண்டு ஆராய்ந்த பிறகே, நோயாளிகளுக்கு இத்தகைய சிகிச்சை தேவையா இல்லையா என்று தீர்மானிக்கிறேன்.
கேத்தரினுக்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு முற்பிறவி நினைவுகளைத் தூண்டி குணப்படுத்தியிருக்கிறேன். இந்த நோயாளிகளில், எவரும் நடவாத ஒன்றை நடந்ததாக நினைத்துக் கூறுபவர்களோ, மனநிலை பிறழ்ந்தவர்களோ, ஒருவரே பல்வேறுபட்ட மனிதர்களாக நினைத்துக்கொள்பவர்களோ கிடையாது. அனைவரும் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்தனர்.
குணமான பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளும், விதவிதமான சூழ்நிலைகளை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் மியாமி கடற்கரைப் பகுதியிலிருந்து வந்த யூதப்பெண்மணி. அவள் பழைய பிறவியில் ஏசு மறைந்த சில வருடங்களில் சில ரோமானிய சிப்பாய்களால் கெடுக்கப்பட்டிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில், நியூஓரிலினில் ஒரு விடுதியை நடத்தியிருக்கிறார். ஐந்து முதல் பத்தாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஃப்ரான்சில் சர்ச்சில் இருந்திருக்கிறார். ஒரு பிறவியில் ஜப்பானில் பிறந்து கடினவாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.
கேத்தரினைத் தவிர ஒரே ஒருவர் மட்டும், இறப்புக்கும் பிறப்புக்கும் இடையில் உள்ள காலத்தில் செய்திகளை அளித்திருக்கிறார். அவரது செய்திகள் ஆரூடம் கூறுவதுபோல் அமைந்திருந்தன. அவரும் அதிகமாக தன்னுடைய கடந்த காலங்களைப் பற்றியே கூறினார். அவரால் எதிர்காலத்தைப் பற்றியும் சரியாகக் கணிக்கமுடிந்தது. அவரிடமிருந்து கிடைத்த செய்திகள், ஒரு குறிப்பிட்ட ஆன்மாவிடமிருந்தே வந்தன. தற்சமயம் அவருடைய அமர்வினை கட்டுரைகளாகத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். நான் இன்னும் ஒரு அறிவியலாளர்தான். அவர் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் தொகுத்து, சோதனை செய்து உண்மைகளை வகைப்படுத்த வேண்டும். அவரைத் தவிர மற்றவர்கள் உடலைவிட்டு வெளியே மிதந்து பிரகாசமான ஒளியைக் கண்டதைத் தவிர வேரெந்த விஷயங்களையும் கூற இயலவில்லை. மற்றவர்களிடம் இறப்புக்கும், மறுபிறப்புக்கும் இடைப்பட்ட நிலையில் எனக்கு எந்தவித தகவல் பரிமாற்றங்களும் நிகழவில்லை.
ஆனாலும் அனைவரும் தங்களுடைய பழைய பிறவிகளைப் பற்றித் தெளிவாக நினைவு கூறினார்கள். ஒரு திறமையான பங்குத்தரகர், இங்கிலாந்தில் ஒரு இனிமையான ஆனால் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்திருந்தார். கலை சம்பந்தமான ஒருவர் ஸ்பானிய சிப்பாய்களால் கொடுமைப் படுத்தப்பட்டிருந்தார். ஒரு உணவு கடை உரிமையாளர், எப்பொழுதும் சுரங்கப்பாதை வழியாகக் கார் ஓட்டுவதற்கு அச்சம் கொண்டிருந்தார். அவர் பழைய பிறவியில் உயிருடன் புதைக்கப்பட்டிருந்தார். ஒரு இளம்மருத்துவர் கடலில், படகில் தத்தளித்திருந்தார். தொலைக்காட்சியில் வேலை செய்யும் ஒருவர் 600 வருடங்களுக்கு முன் பயங்கர வேதனைக்கு உள்ளாகியிருக்கிறார். நோயாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.
இந்த நோயாளிகள் தங்கள் பிரச்சனைக்குரிய பிறவியைத் தவிர மற்றப் பிறவிகளையும் நினைவு கூர்ந்தார்கள். அவர்கள் பிரச்சினைக்குரிய பிறவி நினைவு வந்ததும், அவர்களுடைய பிரச்சனைகள் அவர்களை விட்டு விலகிவிட்டன. அவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் முற்பிறவிகளில் வாழ்ந்ததாக இப்பொழுது ஒத்துக்கொள்கிறார்கள். மீண்டும் அவர்களுடைய பிறவிகள் தொடரும் என்றும் நம்புகிறார்கள். மரணத்தைப் பற்றிய அவர்களுடைய பயம் குறைந்து விட்டது.
ஒவ்வொருவருக்கும், பழைய பிறவிகளூக்குச் செல்லும் சிகிச்சை அளிக்கப் படவேண்டுமென்று அவசியம் இல்லை. தாங்க முடியாத பிரச்சனைகளைக் கொண்டவர்கள் மட்டும், விரும்பினால் இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஏனையவர்கள் திறந்த மனதுடன் இருந்தால் மட்டுமே போதுமானது. வாழ்க்கை என்பது நாம் கண்களால் காண்பது மட்டும் கிடையாது. அது நமது ஐம்புலன்களையும் தாண்டிச் செல்கிறது. அனுபவங்களையும் அறிவையும் நோக்கிச் செல்லுங்கள். ஞானத்தின் மூலம் இறைவனை அடைவது நம்முடைய பணி.
இந்த நூல், என்னுடைய மருத்துவ தொழில்முறையில் எனக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தினாலும் இனி எனக்குக் கவலையில்லை. நான் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் அதைவிட முக்கியமானவை. இந்த செய்திகள் அனைவரையும் அடைந்தால் அது நான் இங்கு நோயாளிகளுக்குப் பணிசெய்வதைவிட அதிக பலனைத் தரக்கூடியது.
வாழ்வில் மரணத்தைப் பற்றிய அச்சத்தைப் போக்குவதற்கு இந்த நூல் உங்களுக்கு உதவியிருக்கும் என்று நம்புகிறேன். வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து அடுத்தவர்களிடம் அன்புகாட்டி, மனஅமைதி பெற்று, இணக்கத்துடன் முழுமையாக வாழ்வதற்கு தரப்பட்ட செய்திகள் உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என்று நம்புகிறேன்.
முற்றும்.