கேத்தரினுடைய சிகிச்சையின்பொழுது ஏற்பட்ட நம்பமுடியாத அனுபவங்களுக்குப் பிறகு நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. அந்த அனுபவங்கள் எங்களது வாழ்க்கை முறைகளை முற்றிலுமாக மாற்றிவிட்டது. கேத்தரின் சிலசமயங்களில், சாதாரணமாக எங்கள் அலுவலகத்துக்கு வந்து நலன் விசாரித்துச் செல்வாள். ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் பகிர்ந்துகொள்வாள். மீண்டும் பழைய நினைவுகளை பற்றித் தெரிந்துகொள்ள அவள் விரும்பியதில்லை. எங்களது பணி முடிந்துவிட்டது.
வாழ்க்கையை உற்சாகத்துடன் கேத்தரின் எதிர்நோக்க ஆரம்பித்திருக்கிறாள். அவளை பீடித்திருந்த மனநோய் முற்றிலுமாக விலகிவிட்டது. தற்பொழுது அவளுக்கு இருக்கும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அவள் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை. இப்பொழுது உடல்நலத்தைப் பற்றியோ, மரணத்தைப் பற்றியோ அவள் கவலை கொள்வதும் கிடையாது. ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று உணர்ந்து, மனதுக்கிசைந்து இணக்கமாக வாழ்கிறாள். அனைவரும் விரும்பினாலும் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் மனநிம்மதி அவளுக்கு கிடைத்திருக்கிறது. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருக்கிறாள்.
கேத்தரினைப் பொறுத்தவரை நடந்ததெல்லாம் உண்மைதான். அவளுக்கு அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தானும் உலகின் ஒரு அங்கமாக இருப்பதை உணர்ந்து ஒத்துக்கொள்கிறாள். ஆரூடம் கற்றுக்கொள்ள இப்பொழுது அவள் விரும்பவில்லை. ஆரூடம் புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்வதல்ல என்று எண்ணுகிறாள். மரணத்தில் விளிம்பில் இருப்பவர்களும், அந்த நிலையில் உள்ளவர்களின் குடும்பத்தினர்களும் அவளிடம் பேசவிரும்பியிருக்கிறார்கள். அவர்களை அவள் காந்தம்போல் கவர்ந்திருக்கிறாள். அவர்களுடன் அமர்ந்து அவள் உரையாடுவது அவர்களுக்கு நிம்மதி அளிக்கிறது.
என் வாழ்க்கையும், கேத்தரினுடைய வாழ்க்கையைப்போல் திசைமாறிவிட்டது. என் உள்ளுணர்வை அதிகமாக உபயோகப்படுத்துகிறேன். மறைந்திருக்கும் உண்மைகள் எனக்குப் புலனாகின்றன. எனது நோயாளிகள், நண்பர்கள் மற்றும் சகஊழியர்களின் மறைந்திருக்கும் பிரச்சினைகளை அறிந்து உதவ முடிகிறது. அவர்களைப்பற்றி, தேவை ஏற்படுவதற்கு முன்பே நான் அறிந்துள்ளவனாக இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் இலக்குகள், மனித நேயம் வழி மாறிவிட்டன. பொருட்களை சேமிக்கும் எண்ணங்கள் விட்டொழிந்தன.
ஆரூடம் சொல்பவர்கள், ஆவியுடன் பேசுபவர்கள் போன்றவர்களுடன் என் தொடர்பு அதிகமாகிவிட்டது. அவர்களுடைய தகுதியையும் திறமையையும் கணிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்த பணியில் என் மனைவி கரோலும் என்னுடன் சேர்ந்துகொண்டாள். மரணமடையும் தருவாயில் உள்ளவர்களுக்கு கருத்துரை மற்றும் புத்திமதிகள் வழங்குவதில் அவள் திறமை அதிகரித்துள்ளது. தற்சமயம் எய்ட்ஸ் மூலம் இறப்பவர்களுக்காக உதவி செய்யும் ஒரு குழுவை ஏற்படுத்தி நடத்திவருகிறாள்.
தற்சமயம் ஹிந்துக்கள் மற்றும் சிவப்பிந்தியர்களிடம் மற்றுமே பழக்கமாக இருக்கும், முன்னோருடன் பேசுதல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டுவருகிறேன். கேத்தரினிடமிருந்து பெற்று கற்றுக்கொண்ட விஷயங்கள் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. மரணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று உணர்ந்ததாலும் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டதாலும் இப்பொழுதெல்லாம் மிகவும் பொறுமையைக் கடைபிடிக்கிறேன். அன்பும், மனித நேயமும் என் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. என் செயல்களில் உயர்ந்தவைகள், தாழ்ந்தவைகள் அனைத்துக்கும் நானே பொறுப்பேற்கிறேன். அனைத்து செயல்களுக்கும் நான் பதில்கூறியாகவேண்டும். நற்செயல்களோ, தீயசெயல்களோ, நாம் செய்யும் செயல்கள் யாவும் நம்மிடமே மீண்டும் வந்து சேரும் என்பது உண்மை.
நிபுணர்களின் ஆய்வரங்குகளில் நான் அறிவியல் கட்டுரைகளை, இன்றளவும் சமர்ப்பித்துக்கொண்டு வருகிறேன். மனோதத்துவப் பிரிவையும் தலைமையேற்று நடத்திவருகிறேன். இருவேறுபட்ட உலகங்களில் வாழ்கிறேன். நமது ஐம்புலன் களால் அறியப்படும் இந்த உலகிலும், ஆன்மாக்களினால் மட்டுமே உணரப்படும் ஆன்மீக உலகிலும் வாழ்கிறேன். இரண்டு உலகங்களும் சக்தியால் பிணைந்திருப்பதை நான் அறிவேன். இருப்பினும் இரண்டுக்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக உள்ளது. இந்த இரண்டு உலகங்களுக்கும் அறிவியல் மூலம் ஒரு பிணைப்பினை உறுதி செய்ய வேண்டியது என் கடமை.
எனது குடும்பமும் வளர்ந்துவிட்டது. எனது மனைவி கரோலும், மகள் ஏமியும் ஆருடம் சொல்வதில் சராசரியைவிட குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியிருக்கிறார்கள். விளையாட்டுபோல் அவர்கள் அந்த திறமையை இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். மகன் ஜோர்டன், கவர்ந்திழுக்கக்கூடிய சக்தியுடைய பதின்மவயதினனாக வளர்ந்துவிட்டான். இயற்கையாகவே ஆளுமை குணத்தைப் பெற்றிருக்கிறான். நான் வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக்கொள்வது குறைந்துவிட்டது. சில சமயங்களில் விசித்திரமான கனவுகள் என்னை ஆட்கொள்கிறது.
கேத்தரினுடைய சிகிச்சை முடிந்து பல மாதங்களுக்குப் பிறகு, தூங்கும் நேரத்தில் ஒரு வினோதமான பழக்கம் எனக்குள் ஒட்டிக்கொண்டது. ஒரு ஆசிரியரிடம் நான் கேள்விகள் கேட்பதுபோன்று தெளிவான கனவு தோன்றும். அந்த ஆசிரியரின் பெயர் ஃபிலோ. விழித்தபிறகு அந்த கனவுகளில் தோன்றுபவைகளையும், விளக்கங்களையும் எழுதிவைக்க முற்பட்டேன். சில உதாரணங்களைத் தருகிறேன். அந்த கனவுகள் எனக்கு வழிகாட்டி ஆன்மாக்களின் செய்திகளை நினைவுறுத்தின.
“ஞானம் பெறுவது பொறுமையாக நடைபெரும் செயல். அறிவு பூர்வமாக பெற்றுக்கொள்வது, உணர்வு பூர்வமாக ஆழ் மனதுக்குச் செல்ல வேண்டும். ஆழ்மனதுக்குச் செல்லும் விஷயங்கள் நிரந்தரமாகப் பதிந்துவிடும். பழக்கங்களே இத்தகைய நிரந்தர பதிவுக்கு வினையூக்கி. செயல்முறைபடுத்தப்படாத எந்த விஷயங்களும் மறைந்துவிடும். நினைவில் நிற்காது. செயல்முறை வடிவம் பெறாத எந்தவிதமான ஏட்டுக்கல்வியும் பயனளிக்காது.”
சம நிலையும், அமைதியும் இன்றைய வாழ்வில் ஒத்துக்கொள்ளப்படுகின்றன. முக்தி பெற அதுவே அடிப்படை. ஆனால் அனைத்து செயல்களும் தேவைக்கு அதிகமாகவே நடத்தப்படுகின்றன. உண்பது கூடியதால் உடல் எடை அதிகமாகிறது. அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அல்லது அதிகமாக ஓய்வெடுக்கிறார்கள். மக்களிடம் இரக்கத்தன்மை குறைந்துவிட்டது. மது, மாது, புகை,போதைப்பழக்கம், தேவையில்லாமல் பேசுதல், கவலைகள் அதிகமாகிவிட்டன. நடுநிலை தவறியவர்கள் மற்றவர்களுடைய கருத்துக்களை சிந்திக்க மறுக்கிறார்கள். இக்கரை அல்லது அக்கரை என்று வாழ்கிறார்கள். இது இயற்கைக்கு மாறானது.
“இயற்கை சமநிலையைக் கொண்டது. உயிரினங்கள் சிறிய அளவில் அதனை சலனப்படுத்துகின்றன. அவை சுற்றுச்சூழலை முற்றிலுமாக மாற்றிவிடமுடியாது. தாவரங்கள் உணவாகி அழிகின்றன. மீண்டும் வளர்கின்றன. வாழ்வாதார உணவுகள் உண்ணுவதால் குறைந்தாலும் மீண்டும் நிரப்பப்பட்டுவிடுகிறது. மலர்கள் ரசிக்கப்படுகிறது. பழங்கள் உண்ணப்படுகிறது. ஆனால் வேர்கள் பாதுகாக்கப்படுகிறது.”
“மனித இனம் சமநிலையை உணரவும் இல்லை; அதனால் நடைமுறைப்படுத்தவும் இல்லை. பேராசையாலும், அச்சத்தாலும் அவர்களுடைய இலட்சியங்கள் வழிநடத்தப்படுகிறது. இது அவர்களைத் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள காரணமாகிவிடும். ஆனால் தாவரங்கள் அழியாது. இயற்கை மாறப்போவதிலை.”
“எளிமையே மகிழ்ச்சியின் வேர்கள். தேவைக்குமேல் தோன்றும் எண்ணங்களும், செயல்களும் ஆனந்தத்தைக் குறைத்துவிடும். பேராசை வாழ்வுக்கு அடிப்படையான சிந்தனைகளை மூடி மறைத்துவிடும். அடுத்தவர்களிடம் இரக்கம் கொண்டு, ஈந்து வாழ்வதற்கு இதயமானது அன்பு மற்றும் நம்பிக்கையால் நிறைந்திருக்க வேண்டுமென்று ஆன்மீகவாதிகள் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் கூறுவது உண்மையே. அத்தகைய நற்குணங்கள் சமநிலைக்கும், இணக்கமாக வாழும் நிலைக்கும் நம்மை எடுத்துச் செல்லும். அனைவரும் அத்தகைய கூட்டு மனநிலையை அடைய வேண்டும். இன்றைய சூழலில் மனிதன் ஒரு மாறுபட்ட மனநிலையில் இருக்கிறான். இயற்கை நிலையிலிருந்து பிறழ்ந்து வாழ்வதுபோல் உள்ளது. அன்பு, ஈகை, எளிமை போன்ற புனிதமான எண்ணங்களினால் மட்டுமே அச்சத்தை நீக்கி நிறைவான நிலையை அடைய முடியும்.”
“அத்தகைய நல்ல நிலையை ஒருவர் எப்படி அடைவது? அப்படி அடைந்தாலும், எப்படி அந்த நிலையைத் தக்கவைத்துக் கொள்வது? இதற்கான தீர்வு மிகவும் சுலபமானது. அது அனைத்து மதங்களும் கூறக்கூடிய பொதுவான கொள்கையே. மனிதனின் ஆன்மா அழிவற்றது. கற்றுக்கொள்ளவே நாம் இங்கு வந்திருக்கிறோம். நாம் அனைவரும் பாடசாலையில் பயில வந்திருக்கிறோம். அழிவற்ற நிலையில் நம்பிக்கை கொண்டால் அந்த நிலையை அடைவது எளிதாகும்.”
“மனிதனின் ஆன்மா அழிவற்றதென்றால் ஏன் நமக்கே நாம் தீங்கிழைத்துக்கொள்கிறோம்? சுயலாபத்துக்காக அடுத்தவர்களுக்கு தீங்கிழைத்தால், உண்மையில் நாம் கற்க வந்தவைகளில் தோல்வி அடைவதாக அல்லவா இருக்கிறது! நாம் அனைவரும் சென்று சேருமிடம் ஒரே இடம். ஆனால் வேறு வேறு வேகத்தில் செல்கிறோம். ஒருவரைவிட மற்றவர் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை.”
“கற்றுணர்ந்தவைகளை நினைத்துப் பாருங்கள். நமக்குத் தேவையான அறிவார்ந்த பதில்கள் எப்பொழுதுமே நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் செயல்கள் மூலமே அவற்றை நாம் மெய்யாக்க முடியும். செயல்முறைப்படுத்துதலே ஆழ்மனதில் நல்லெண்ணங்களைப் பதியவைக்கும் திறவுகோல். நினைவில் நிறுத்துதல் மட்டுமே போதுமானது கிடையாது. செயல்முறைப்படுத்தாமல் உதட்டளவில் மட்டுமே இருப்பது எதற்கும் உதவாது.”
“அன்பு, ஈகை, நம்பிக்கைகளைப் பற்றி பக்கம் பக்கமாக படித்தலும், பேசுதலும் மிகவும் எளிது. ஆனால் அவற்றை உணர்வதற்கும், செயல்முறைபடுத்துவதற்கும் நாம் மேன்பட்ட மனநிலையை அடையவேண்டும். உணர்வுகளுக்கு வசப்பட்ட நிலையில் செய்வதோ, மதுவினாலோ, போதை மருந்துகளாலோ அத்தகைய நிலையை அடைவது வேண்டதக்கதல்ல. புரிந்துணர்வினாலும், அறிவினாலும் மட்டுமே அத்தகைய நிலையை அடைய முடியும். நடைமுறையில் செயல்படுத்துவதன் மூலமே அந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளமுடியும். அனுதினமும் அத்தகைய நல்லெண்ணங்களை பழக்கமாக்கிக் கொள்வது மனிதனை மேன்பட்ட நிலையில் நிறுத்த உதவும்.”
“ஒருவரைவிட மற்றவர் உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை என்று புரிந்துகொள்ளுங்கள்; உணர்ந்துகொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு உதவுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் ஒரே தோணியில் துடுப்பிட்டுப் பயணிக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்து துடுப்பைச் செலுத்தாவிட்டால், நாம் அழிந்து நம் கலன் மட்டும் தனித்துவிடப்பட்டுவிடும்.”
மற்றொரு இரவு, வேறொரு கனவில் நான் கேள்வியை எழுப்பினேன். “மக்கள் அனைவரும் எப்படி சமமானவர்கள் என்று கூற முடியும்? கண்ணுக்குத் தெரியும் முரண்பாடுகள் அத்ற்கு எதிராகக் கூறுகின்றனவே. வேறுபட்ட திறமைகள், குணநலன்கள், கோபதாபங்கள், அறிவுக்கூர்மை என்று எண்ணற்ற வேறுபாடுகள் பார்த்தாலே தெரிகின்றனவே.”
பதில் ஒரு உருவகமாக வந்தது. “ஒவ்வொருவரிடமும் ஒரு பட்டை தீட்டப்படாத வைரம் ஒளிந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். வைரத்தின் ஒவ்வொரு முகத்தையும் பட்டைதீட்டி ஒளிரச்செய்வதே ஆன்மாவின் பணி ஆகும்.”
“வைரத்தின் சில முகங்கள் பட்டை தீட்டப்பட்டிருக்கலாம்; சில முகங்கள் பட்டை தீட்டப்படுவதற்காகக் காத்திருக்கலாம்; எப்படியிருப்பினும் ஒவ்வொருவரிடமும் மாசற்ற வைரம் உள்ளது. ஆனால் அனைத்து வைரங்களும் ஒரே மாதிரியானவை.”
“அனைத்து முகங்களிலும் பட்டைதீட்டப்பட்ட வைரம், ஒளி ஊடுருவும்பொழுது ஒவ்வொரு முகங்களிலும், ஒளிக்கற்றைகளைச் சிதறடித்துப் பிரகாசிக்கிறது. பிரகாசமான ஒளியை மட்டுமே இறுதியில் காண முடிகிறது. உண்மையான சக்தி வானவில்போன்ற பிரகாசமான ஒளியில் இறுதியில் கிடைக்கிறது. அந்த ஒளியில் ஞானமும், முக்தியும் அமைந்திருக்கிறது.”
சில சமயங்களில் விடைகளைவிட வினாக்களே சிக்கல் மிகுந்தவைகளாக அமைந்துவிடுகின்றன.
கனவில் என் கேள்விகளைத் தொடர்ந்தேன். “நான் என்ன செய்யவேண்டும்? என்னால் நோயாளிகளைக் குணப்படுத்தமுடியும். அவர்களுடைய வலிகளைப் போக்கமுடியும். என்னால் கவனிக்க முடியாத எண்ணிக்கையற்ற நோயாளிகள் வருகிறார்கள். நான் களைப்படைந்துவிடுகிறேன். என்னால் கவனிக்கமுடியாது என்று கூறமுடியுமா?”
“உங்களுடைய பங்கு பாதுகாவலனாக இருப்பது கிடையாது.”
ஒருநாள் காலை ஆறுமணிக்கு கனவிலிருந்து விழித்தெழுந்தேன். கனவில் மனோதத்துவ நிபுணர்கள் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கிறேன். அந்த உரையினைக் கீழே கொடுத்துள்ளேன்.
“மனித குலத்தின் நோய்களை அறிந்துகொள்ளும் விஷயத்தில் உயர்தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் யாவும் அற்புதமாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால் அந்தத் தொழில்நுட்பம், மனிதப் பண்புகளைக் கொண்ட மருத்துவர்களுக்கு மாற்று கிடையாது. அது ஒரு கருவி மட்டுமே. மனநல மருத்துவப்பிரிவில் இன்னும் திறம்பட செயல்படமுடியும். நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்பவர்கள். இந்த நிலையிலிருந்து நாம் பிறழ்ந்துவிடக்கூடாது.”
சில சமயங்களில் என்னை அந்தக் கனவுகள் தொடர்கின்றன. தேவையான நேரங்களில் கனவுகளிலிருந்து பிரச்சனக்குத் தீர்வுகள் கிடைக்கின்றன. அந்தத் தீர்வுகள் என்னுடைய சிகிச்சைகளிலும் பலனளிக்கின்றன. என் உள்ளுணர்வுகளால் கிடைக்கும் தீர்வுகள் என்னை மனம் நெகிழச்செய்கின்றன. என்னைப்பொறுத்தவரை நான் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன் என்று அந்தத் தீர்வுகளின் முடிவுகள் எனக்குத் தெரியப்படுத்துகின்றன.
என்னுடைய உள்ளுணர்வுகளையும் நான் கவனித்துப் பார்க்கிறேன். அதன் வழி செயல்படும்பொழுது, அவை சரியான விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இல்லையேல் நான் விரும்பாத விளைவுகளைச் சந்திக்கிறேன்.
இன்னும் என்னைச் சுற்றி வழிகாட்டி ஆன்மாக்கள் இருப்பதாக உணர்கிறேன். என்னுடைய கனவுகளும், உள்ளுணர்வுகளும் அவைகளுடைய உந்துதலால் ஏற்படுகின்றனவா என்று எனக்குத்தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் இருக்குமென்று நான் நம்புகிறேன்.
தொடரும்…