Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பிறவி மர்மங்கள் – 26

பிறவி மர்மங்கள் – 26

இறுதி ஹிப்னாடிச அமர்வுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கேத்தரினிடமிருந்து ஒரு ஃபோன் வந்தது. ஒரு முக்கியமான விஷயம் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் கூறி கிளினிக்கில் அப்பாய்ன்மெண்ட் வாங்கிக் கொண்டாள்.

புதிய பெண்ணாக முழு உடல்நலத்துடன் அவதாரம் எடுத்திருக்கும் கேத்தரின், என் அலுவலகத்திற்கு வந்தாள். புன்னகையுடன் மகிழ்ச்சியான தோற்றத்துடன், மனதின் முழுஅமைதி அவள் தேகமெங்கும் பிரதிபலிக்க கேத்தரினைக் கண்டேன். ஒரு கணம், குறைந்த காலகட்டத்தில் கேத்தரினிடம் ஏற்பட்ட வியக்கத்தகுந்த முன்னேற்றத்தை எண்ணினேன்.

கடந்தகால நினைவுகளைக் கூறக்கூடிய “ஐரிஸ் சால்ட்ஸ்மேம்“ என்ற பெயர்பெற்ற ஆரூடம் கூறும் நிபுணரை கேத்தரின் சந்தித்திருக்கிறாள். தனக்கு நேர்ந்த அனுபவங்களை உறுதி செய்ய ஆர்வம் கொண்டு கேத்தரின் எடுத்த முயற்சி என்னை வியப்படையச் செய்தது. கேத்தரின் அவ்வாறு செய்வது அவள் மனோதிடத்தை பறைசாற்றுவதை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன்.

ஐரிஸ்-ஐப் பற்றி சிநேகிதர்களிடம் கேட்டறிந்த கேத்தரின், அப்பாயிண்மென்ட் வாங்கிக்கொண்டு ஐரிஸ்-ஐ சந்தித்திருக்கிறாள். ஐரிஸ்-இடம், தனக்கு ஹிப்னாடிசம் மூலமாக நிகழ்ந்தவைகள் எவற்றையும் அவள் கூறவில்லை.

ஐரிஸ் – கேத்தரினிடம் பிறந்த தேதி, நேரம், மற்றும் பிறந்த இடத்தையும் பற்றி மட்டுமே கேட்டிருக்கிறாள். அதிலிருந்து கேத்தரினுடைய சக்கரத்தை வரைந்து, தன்னுடைய ஆருடம் கூறும் திறமையையும் பயன்படுத்தி, கேத்தரினுடைய கடந்த காலங்களை கூறப்போவதாக ஐரிஸ் கூறியிருக்கிறாள்.

கேத்தரின் இத்தகைய ஆருடம் கூறுபவர்களிடம் இதுவரை சென்றதில்லை. ஐரிஸ்-தான் முதல் அனுபவம். அதனால் எப்படி எதிர்பார்க்கலாம் என்று கேத்தரினுக்குத் தெரியவில்லை. ஆச்சரியம் ஏற்படும் வகையில் ஐரிஸ், கேத்தரினுடைய ஹிப்னாடிச மயக்கத்தில் ஏற்பட்ட அத்தனை நிகழ்வுகளையும் கூறியிருக்கிறாள்.

நட்சத்திர சக்கரத்தின்வழி படிப்படியாக ஐரிஸ் முன்னேறியிருக்கிறாள். ஐரிஸ் ஒரு குறிப்பிட்ட வசிய நிலையை அடைந்தவுடன், மறுநிமிடமே கேத்தரின் பழைய பிறவியில் கழுத்து அறுபட்டு உயிரிழந்ததாக கூறியிருக்கிறாள். யுத்ததின் பொழுது அந்த நிகழ்ச்சி நடந்ததாகவும், அந்த சமயத்தில் அந்த கிராமமே பற்றி எரிந்ததாகவும், பல அழிவுகள் ஏற்பட்டிருந்ததாகவும் கூறியிருக்கிறாள். கேத்தரின் அந்த பிறவியில் ஒரு ஆண்மகனாக வாழ்ந்ததாகவும் ஐரிஸ்-இடமிருந்து செய்தி வந்தது.

அடுத்த நிகழ்ச்சியை கூறும்பொழுது ஐரிஸ்-ன் கண்கள் மின்னியதாக கேத்தரின் குறிப்பிட்டாள். கேத்தரின் ஒரு இளைஞனாக, கடற்படை வீரனுடைய சீருடையுடன், குட்டையான கால்சட்டை மற்றும் பழைய வடிவம் கொண்ட காலணிகளுடன் இருப்பதாக ஐரிஸ் கூறியிருக்கிறாள். திடீரென்று ஐரிஸ் இடது கையில் தாங்கமுடியாத வலியை உணர்ந்து துடித்திருக்கிறாள். மிகவும் கூரான ஏதோ ஒன்று கையில் குத்திவிட்டதாகவும், அது கையைக் காயப்படுத்தி மீளாத வடுவை ஏற்படுத்தியதாகவும் கூறியிருக்கிறாள். ஆங்கிலேய கடற்கரை அருகில் அந்த நிகழ்ச்சி நடந்ததாகவும், அதன் பிறகு மாலுமியாக வாழ்ந்ததையும் விவரித்திருக்கிறாள்.

கேத்தரினுடைய பழைய பிறவிகளின் ஞாபகங்களை, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஐரிஸ் தொட்டிருக்கிறாள். வறுமையில் மடிந்த சிறுவனைப் பற்றியும், ஆரூடம் பார்க்க விரும்பிய பிறவியையும், நீலநிற ஆபரணங்களை விரும்பியதையும் கூறியிருக்கிறாள். ஒரு பிறவியில் ஸ்பேனிய பெண்ணாக, வேசியாக வாழ்ந்ததையும் அப்பொழுது அவள் பெயர் “ ” என்ற எழுத்தில் துவங்கியதையும் அவளால் கூறமுடிந்திருக்கிறது. அச்சமயத்தில் ஒரு வயதானவருடன் வாழ்ந்ததையும் குறிப்பிட்டிருக்கிறாள்.

மற்றொரு பிறவியில் ஒரு செல்வந்தருக்கு முறைதவறி பிறந்த பெண்ணாக பிறப்பெடுத்திருந்ததாக ஐரிஸ் கூறியிருக்கிறாள். அந்த பிறவியில் கேத்தரினுடைய திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் கூறினாள். அச்சமயத்தில் கேத்தரினுக்கு விலங்குகளின் மீது அன்பு அதிகமாக இருந்ததாகவும், குதிரைகளை மிகவும் நேசித்ததாகவும் கூறினாள். மனிதர்களைவிட விலங்குகளை மிகவும் நேசித்ததாகக் கூறினாள்.

கேத்தரின் மொரோக்கோவில் சிறுவனாக பிறந்தது, எகிப்தில் மம்மிகளை பதப்படுத்தும் பிறவி, ஸ்விட்சர்லேந்தில் சர்ச்சில் வேலை செய்த பிறவி, ஃப்ரான்சில் குகைக்குள் வசித்த பிறவி, ஜெர்மனியில் போர்வீரனாக இருந்த பிறவி அத்தனையும் ஐரிஸினால் கூற முடிந்திருக்கிறது.

ஐரிஸ் நுணுக்கமாக, பிழையில்லாமல், பிறவிகளைப் பற்றிக் கூறியது என்னை வியப்புக்குள்ளாக்கியது. கேத்தரின் ஹிப்னாடிஸ நிலையில் கூறிய பழைய நினைவுகளின் திகைப்பிலிருந்தே நான் இன்னும் மீளவில்லை.

எப்படி இருப்பினும் ஐரிஸிடம் ஏற்பட்ட அனுபவத்தை நான் ஒரு அறிவியல்பூர்வமான நிரூபணம் என்று ஒத்துக்கொள்ள முடியாது. நடக்கும் நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் சக்தி எனக்குக் கிடையாது. ஆனால் இப்படி நடந்திருக்கிறது என்று கூறுவதற்காகத்தான் இந்த நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

ஐரிஸை காணச்சென்ற நேரத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. ஒருவேளை ஐரிஸுக்கு அடுத்தவர்களின் எண்ணங்களை படிக்கும் திறமை இருந்திருக்கலாம். அதன்மூலம் கேத்தரினுடைய மனதில் இருப்பதை அறிந்திருக்கலாம். அல்லது உண்மையிலேயே பழைய பிறவிகளை காணக்கூடிய சக்தி ஐரிஸ் பெற்றிருக்கலாம். எப்படி இருப்பினும் ஹிப்னாடிசம் மூலம் பெறப்பட்ட தகவல்களும், நட்சத்திர சக்கரம் மூலம் பெறப்பட்ட தகவல்களும் ஒத்துப்போகின்றன. அதாவது இரண்டு விதமான வழிகளில் பெறப்பட்ட தகவல்களும் ஒன்றாகவே இருக்கின்றன.

ஆனால் ஐரிஸின் திறமைகளை வெகுசிலரே பெற்றிருக்கின்றனர், ஜோதிடத்தில் திறமை இருப்பதாக கூறிக்கொள்பவர்களில், அதிகமானோர், மக்களிடம் இந்த மாதிரியான தெரியாத விஷயங்களில் உள்ள அச்சத்தையும், ஆர்வத்தையும் தங்களுடைய சொந்த அனுகூலங்களுக்காக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டதுபோல் கணிசமான மக்கள் இத்தகைய தொழில்களில் ஈடுபடுகிறார்கள். “ஷர்லி மெக்லைன்” எழுதிய “(           ) தொடர்ந்து கூட்டுக்கு வெளியே” புத்தகம் பிரபலமான பிறகு ஆவியுடன் பேசுபவர்கள் என்று கூறிக்கொண்டு வியாபாரம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. அத்தகையோர், கண்ணையும் கருத்தையும் கவரும் வார்த்தை ஜாலங்களுடன், சொந்த குரலில் பேசாமல் வேறொரு குரல் ஓசையுடன், மக்களை தம்வசப்படுத்த முயற்சிக்கிறார்கள் “இயற்கையோடு நீங்கள் இணைந்து வாழாவிட்டால், இயற்கையும் உங்களோடு இணைந்து வாழ விழையாது” போன்று அழகான வசனங்களுடன் தன்னிலை மறந்த தோற்றத்துடன் விளம்பரம் தருகிறார்கள். அவர்கள் தரக்கூடிய செய்திகள் மேலோட்டமானதாகவும், அனேகமாக அனைத்து மக்களுக்கும் ஒத்துவரக்கூடிய செய்திகளையும் தருகிறார்கள். அவர்கள் தரக்கூடிய செய்திகளும், ஆன்மீகமயமாக இருப்பதனால், அதன் உண்மையை மதிப்பீடு செய்வதும் சிரமமான காரியம். அத்தகைய களைகளை நீக்குவது இந்த துறை முன்னேற்றத்திற்கு மிகமுக்கியமானதொன்றாகும். இத்துறையில் விருப்பத்துடன் கடமையாற்றும் மனோதத்துவ நிபுணர்கள் மனோவியாதி உள்ளவர்களையும், பொருளீட்டுவதற்காக நடிப்பவர்களையும் சமூக நலனுக்கு எதிரான விளைவுகளைத் தருவதற்காக புறப்பட்டவர்களையும் கண்டறிந்து, கணித்து நீக்கவேண்டும். மருத்துவர்களும், புள்ளிவிபர நிபுணர்களும், மனோவியலாளர்களும் சேர்ந்து இந்த பணியினை மேற்கொண்டு முன்னுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த துறையை நெறிமுறைப்படுத்தி அறிவியல் முறைப்படி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது அவசியம். அறிவியலில் முதலில் ஒரு கொள்கை இருப்பதற்கு சாத்தியங்கள் இருப்பதாக யூகித்துக்கொள்வார்கள். அந்த கொள்கையை பிறகு சோதனைகள் மூலம் நிரூபித்து, கொள்கை சரியானதா அல்லது அதில் மாற்றங்கள் உள்ளனவா என்று உறுதி செய்வார்கள். ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் மீண்டும் சோதனைகளைச் செய்து சரியான கொள்கையை உறுதிபடுத்த வேண்டும்.

டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ஜோசப் பிரைன், வெர்ஜினியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அயன் ஸ்டீவன்சன், நியூயார்க் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஜெர்ட்ரூட் ஸ்கிமெய்ட்லர் மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய ஆராய்ச்சிகளை இத்துறையில் செயல்படுத்த முடியும் என்று நிரூபித்துள்ளார்கள்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top