கேத்தரின் நன்கு குணமாகிவிட்டாள். துன்பங்களைக் கொடுத்த அவளுடைய மனக்கலக்கங்கள் முற்றிலும் விலகிவிட்டன. ஹிப்னாடிஸ அமர்வின்பொழுது அவள் சென்றுவந்த பிறவிகள் திரும்பவும் வரஆரம்பித்தன. நாங்கள் ஒரு இறுதி நிலையை நோக்கிச் செல்வதை உணர்ந்தேன். ஐந்து மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் சிகிச்சை அடுத்த அமர்வோடு முடிந்து விடக்கூடும் என்று நான் நினைக்கவில்லை.
“சிற்பவேலைப்பாடுகளைக் காண்கிறேன்.” கேத்தரின் கூற ஆரம்பித்தாள். “சில பொன்னால் செய்யப்பட்டுள்ளன. களிமண்ணைப் பார்க்கிறேன். மக்கள் மண்பாண்டங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவை செந்நிறத்தில் உள்ளன. ஒருவகையான செம்மண்ணை உபயோகிக்கிறார்கள். பழுப்பு நிற கட்டிடத்தைக் காண்கிறேன். அங்குதான் நான் இருக்கிறேன்.”
“நீ கட்டிடத்திற்கு உள்ளே இருக்கிறாயா? வெளியே இருக்கிறாயா?” வினவினேன்.
“உள்ளேதான் இருக்கிறேன். நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கிறோம்.”
“உன்னைப் பார்க்க முடிகிறதா? உன்னைப் பற்றி விவரமாக கூறு. என்ன உடுத்தி இருக்கிறாய்? எப்படி இருக்கிறாய்?”
“சிவப்பு நிறத்தில் . . . . . சிவப்பு நிறத்தில் நீண்ட அங்கி போன்ற உடையணிந்திருக்கிறேன். வேடிக்கையான காலணி அணிந்திருக்கிறேன். பழுப்பு நிற முடியுடன் இருக்கிறேன். ஏதோ ஒரு உருவம் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு மனிதனின் உருவம். அந்த மனிதனின் கையில் நீண்ட தடியுள்ளது. மற்றவர்கள் உலோகத்தில் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள்.”
“அது ஒரு தொழிற்கூடமா?”
“இது கற்களால் கட்டப்பட்ட கட்டிடம்.”
“நீ உருவாக்கும் மனிதன், தடியை கையில் வைத்திருக்கும் மனிதன், யாரென்று உனக்குத் தெரிகிறதா?”
“இல்லை. அவன் கால்நடைகளைப் பராமரிப்பவன். . . . . . பசுக்களை பராமரிப்பவன். இங்கு நிறைய சிலைகள் உள்ளன. அதை செய்யும் மூலப்பொருள் வேடிக்கையாக உள்ளது. எளிதில் நொறுங்கிவிடுகிறது.”
“அந்த மூலப்பொருளின் பெயர் தெரியுமா?”
“தெரியவில்லை. சிவப்பு நிறத்தில் இருக்கிறது.”
“நீ சிலையை செய்து முடித்தபிறகு அதை என்ன செய்வார்கள்?”
“விற்றுவிடுவார்கள். சில சிலைகள் சந்தைக்குச் செல்லும். சில சிலைகளை அதிகாரிகளுக்கு பரிசளித்துவிடுவார்கள். மிகவும் நேர்த்தியான சிலைகளை மட்டும் பரிசாக அளித்துவிடுவார்கள். மற்ற சிலைகளை சந்தையில் விற்றுவிடுவார்கள்.”
“உனக்கும் அந்த சிலைகளுக்கும் தொடர்புகள் உண்டா?”
“இல்லை.”
“உனக்கு இந்த வேலை பிடித்திருக்கிறதா?”
“ஆமாம்.”
“நீண்டகாலமாக இந்த வேலையைச் செய்கிறாயா?”
“இல்லை.”
“உனக்கு இந்த வேலையில் நல்ல திறமை உள்ளதா?”
“அவ்வளவாக இல்லை.”
“உனக்கு இன்னும் அனுபவம் தேவையா?”
“ஆமாம். நான் இப்பொழுதுதான் இந்த வேலையைக் கற்றுக்கொள்கிறேன்.”
“நீ உன் குடும்பத்துடன் வசிக்கிறாயா?”
“தெரியவில்லை. பழுப்பு நிற பெட்டிகளைக் காண்கிறேன்.”
“பழுப்பு நிற பெட்டிகளா?”
“ஆமாம். அதில் சிறிய கதவு இருக்கிறது. பெட்டிக்குள் சிலைகள் உள்ளன. அவை மரத்தாலான சிலைகள். நாங்கள் பெட்டிக்குள் வைப்பதற்குதான் சிலைகள் செய்யவேண்டும்.”
“அந்த சிலைகள் எதற்காக செய்யப்படுகின்றன?”
“அவை மத சம்பந்தப்பட்ட சிலைகள்.”
“எந்த வகையான மதம்? . . . . . . எப்படிப்பட்ட சிலைகள்?”
“ஏகப்பட்ட விதமான கடவுள் சிலைகள். காக்கும் கடவுள்கள். . . . . . விதவிதமான கடவுள்கள். மக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். இங்கு நிறைய பொருட்களை செய்கிறார்கள். நாங்கள் விளையாட்டு பொருட்களையும் செய்வோம். . . . . . போர்டு விளையாட்டுகள். அவற்றில் துளைகள் இருக்கும். விலங்குகளின் தலையுள்ள பொம்மைகளை அந்த துளையில் வைத்து விளையாட வேண்டும்.”
“வேறு ஏதாவது பார்க்க முடிகிறதா?”
“இங்கு மிகவும் வெப்பமாகவும், தூசியாகவும் . . . . . மண்ணாகவும் இருக்கிறது.”
“அங்கு தண்ணீர் கிடைக்கிறதா?” வினவினேன்.
“ஆமாம். தண்ணீர் மலையிலிருந்து வருகிறது.” கேத்தரின் எடுத்திருக்கும் பிறவி எனக்கு முன்பே தெரிந்ததுபோல் இருக்கிறது.
“மக்கள் அஞ்சுகிறார்களா? ஏன்? அவர்களுக்கு மூடநம்பிக்கை அதிகமா?”
“ஆமாம்.” பதிலளித்தாள். “மிகவும் பயப்படுகிறார்கள். அனைவரும் பயப்படுகிறார்கள். எனக்கும் அச்சமாக உள்ளது. நாங்கள் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நோய் பரவிக்கொண்டிருக்கிறது. நாங்கள் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.”
“எந்தவிதமான நோய்?”
“ஏதோ மக்களை அழித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் மரணமடைந்துகொண்டிருக்கிறார்கள்.”
“தண்ணீர் மூலம் பரவுகிறதா?”
“ஆமாம். மிகவும் வெப்பமாக இருக்கிறது. நிலம் காய்ந்துபோய் கிடக்கிறது. கடவுளுக்கு எங்கள் மீது கோபம். எங்களை தண்டிக்கிறார்.” அவள் “டெண்ணிஸ்” என்ற மருந்து உட்கொண்ட பிறவிக்கு திரும்பியிருக்கிறாள். ஓசிரிஸ் மற்றும் ஹேதர் என்ற கடவுள்கள் என் நினைவுக்கு வந்தது.
“கடவுளுக்கு ஏன் உங்கள் மீது கோபம்?” பதில் தெரிந்திருந்தாலும் கேட்டேன்.
“நாங்கள் கடவுளது சட்டங்களை மதிக்கவில்லை. அதனால் கடவுள் கோபமாக இருக்கிறார்.”
“எந்த சட்டத்தை மீறிவிட்டீர்கள்?”
“மதிக்கப்படும் துறவிகளுக்குத் தரப்பட்ட சடங்குகளை சரிவர செய்யவில்லை.”
“நீங்கள் கடவுளை எப்படி திருப்திபடுத்துவீர்கள்?”
“நாங்கள் சிலபொருட்களை அணிந்து கொள்ளவேண்டும். சிலர் கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள். அவை சாத்தான்களிடமிருந்து எங்களைக் காக்கும்.”
“ஏதாவது ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு, மக்கள் அதிகம் பயப்படுகிறார்களா?”
“அனைத்து கடவுள்களுக்கும் அஞ்சுகிறார்கள்.”
“கடவுளின் பெயர் உனக்குத் தெரியுமா?”
“எனக்கு எந்த பெயரும் தெரியவில்லை. என்னால் பார்க்க மட்டுமே முடிகிறது. ஒரு கடவுளுக்கு மனித உடலும், மிருகத்தின் தலையும் உள்ளது. மற்றொன்று சூரியனைப்போல் உள்ளது. கருப்பு நிற பறவைபோல் ஒன்று காணப்படுகிறது. அவற்றின் கழுத்தில் ஏதோ கயிறு சுற்றப்பட்டிருக்கிறது.”
“நீ மட்டும்தான் உன் குடும்பத்தில் உயிருடன் இருக்கிறாயா?”
“ஆமாம் நான் இன்னும் மடியவில்லை.”
“ஆனால் உன் குடும்பத்தினர் இறந்துவிட்டனர் அல்லவா?” முன்பு ஒரு அமர்வில் அவள் கூறியதை நினைவுகூர்ந்தேன்.
“ஆமாம். என் தந்தையும், சகோதரனும் இறந்துவிட்டார்கள். என் தாய் உயிருடன் இருக்கிறாள்.”
“உன்னால் மட்டும் எப்படி பிழைக்க முடிந்த்து? நீ செய்தது ஏதாவது உன்னை பிழைக்க வைத்ததா?
“இல்லை.” அவள் சிந்தனை வேறு பக்கம் திரும்பியது. “எண்ணெய் உள்ள ஒரு பாத்திரத்தைக் காண்கிறேன்.”
“வேறென்ன காண்கிறாய்?”
“வெண்ணிறத்தில், பளிங்கினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய வாயுடைய பாத்திரம். அதனுள்ளே எண்ணெய் உள்ளது. அது தலையில் பூசிக்கொள்ளக்கூடிய ஒரு எண்ணெய்.”
“துறவிகள் பூசிக்கொள்ளவா?” பழைய உரையாடல்கள் நினைவுக்கு வந்தன.
“ஆமாம்”
“உன்னுடைய வேலை என்ன?” நீ எண்ணெய் பூசுவதற்கு உதவவேண்டுமா?”
“இல்லை. நான் சிலைகளை உருவாகுகிறேன்.”
“இது, அதே பழுப்புநிறக் கட்டிடமா?”
“இல்லை. . . . . அது அப்புறம். . . . ஒரு கோயில்.” என்ன காரணத்தினாலோ மிகவும் பரபரப்பாக, கலவரத்துடன் காணப்பட்டாள்.
“உனக்கு ஏதாவது பிரச்சனையா?”
“கோயிலில் யாரோ தவறு செய்திருக்கிறார்கள். அது கடவுள்களை கோபமாக்கிவிட்டது. எனக்குத்தெரியவில்லை. . . . .”
“நீ எதாவது தவறிழைத்துவிட்டாயா?”
“இல்லை. இல்லை. . . . சில துறவிகளைக் காண்கிறேன். கடவுளூக்கு பலி கொடுப்பதற்காக ஒரு செம்மறியாட்டைத் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய தலை நன்கு மழிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு முடி சிறிதளவு கூட இல்லை. தலையிலும், முகத்திலும் முடி தென்படவில்லை.” மௌனமானாள். நிமிடங்கள் கழிந்தன. திடீரென்று சுறுசுறுப்பானாள். எதையோ உற்றுக்கேட்பதுபோல் தோன்றியது. கரகரப்பான குரலில், வழிகாட்டி ஆவியாகப் பேச ஆரம்பித்தாள்.
“இந்தப் பரிமாணத்தில் ஆன்மாக்கள், சரீர நிலையில் உள்ளவர்களிடம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளமுடியும். ஆன்மாக்கள் திரும்பி வரமுடியும். . . . . . . கடமைகளையும், ஒப்பந்தங்களையும் முடிக்கமுடியாத ஆன்மாக்கள் மட்டுமே திரும்பி வரமுடியும். இந்த பரிமாணத்தில் ஆன்மாக்களுக்கும், சரீர நிலையில் உள்ளவர்களுக்கும் பேச்சு தொடர்பு உண்டு. ஆனால் வேறு பரிமாணங்களில் . . . . . . ஆன்மாக்கள் சரீர நிலையில் உள்ளவர்களிடம் மனதால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். அதற்கு பல்வேறுபட்ட வழிகள் உள்ளன.
சில ஆன்மாக்களுக்கு ஒளியாக தோன்றுவதற்கு அனுமதியுண்டு. சில ஆன்மாக்கள் பொருட்களை நகர்த்துவதால் தங்களைக் காட்டிக் கொள்ளமுடியும். தேவைப்பட்டால் மட்டுமே ஆன்மாக்கள் அந்த பரிமாணத்துக்குச் செல்லும். சரீர வாழ்வில் நிறைவேற்ற முடியாத ஒப்பந்தங்கள் இருந்தால் மட்டுமே இந்த பரிமாணத்துக்குச் சென்று, ஏதோ ஒரு விதத்தில் சரீர நிலையில் உள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள முடியும். ஒப்பந்தங்கள், கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்.
திடீரென்று எதிர்பாராத விதமாக சரீர நிலையை முடித்தவர்கள் இந்த பரிமாணத்துக்குச் செல்ல வாய்ப்புகள் உண்டு. சிலர் தங்களுக்கு நெருக்கமாக சரீர நிலையில் உள்ளவர்களைக் காண இந்த பரிமாணத்திற்கு வருவார்கள். ஆனால், சரீர நிலையில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள விருப்பப் படமாட்டார்கள். மானுடர்களுக்கு இது மிகுந்த அச்சத்தை அளிக்கும் நிகழ்ச்சி.“ கேத்தரின் மௌனமானாள். ஓய்வெடுப்பதுபோல் தோன்றியது. மீண்டும் மெதுவாக முணுமுணுக்க ஆரம்பித்தாள்.
“ஒளியைக் காண்கிறேன்.”
“சக்தியைத் தரும் ஒளியையா?”
“மீண்டும் தொடங்குகிறேன். . . . . . மீண்டும் பிறவி எடுக்கிறேன்.”
“சரீர நிலையில் உள்ளவர்கள் இந்த ஒளியை எப்படி உணரமுடியும்? அந்த ஒளியிலிருந்து எப்படி சக்தியைப் பெற்றுக்கொள்வது?”
“அவர்கள் மனதினால் முடியும்.” மென்மையாக கூறினாள்.
“அந்த மனநிலையை எப்படி அடைவது?”
“நன்கு தளர்ந்த ஓய்வுநிலையில் அவர்களால் அந்த மனநிலையை அடையமுடியும். இழந்த சக்தியைப் பெறமுடியும். ஒளியிலிருந்து சக்தியை மீட்டுக்கொள்ள முடியும். நன்கு ஓய்விலிருக்கும் நிலையில், சக்தியை உபயோகிக்காத நிலையில் இழந்த சக்தியை மீட்க முடியும். உறங்கும்பொழுது உனது சக்தி புதுப்பிக்கப்படுகிறது.” அவள் ஆழ்மனநிலையில் இருப்பது புரிந்தது. எனவே கேள்விகளை அதிகப்படுத்தினேன்.
“நீ எத்தனை பிறவிகள் எடுத்திருக்கிறாய்? அனைத்து பிறவிகளிலும் இந்த பூமிலிலேயே பிறந்திருக்கிறாயா? அல்லது வேறெங்கிலும் பிறந்திருக்கிறாயா?”
“இல்லை. அனைத்து பிறவிகளிலும் இந்த பூமியில்தான் பிறந்திருக்கிறேன்.”
“வேறெந்த பரிமாணங்களில், நிலைகளில் பூமியைத் தவிர வேறு இடங்களில் சஞ்சரித்திருக்கிறாயா?”
“இல்லை. இங்கு பூமியில் என் கடமை இன்னும் பூர்த்தியாகவில்லை. கடமைகள் முடியும்வரை, அனுபவங்கள் பூர்த்தியாகும்வரை பூமியில்தான் இருந்தாகவேண்டும். ஏகப்பட்ட பிறவிகள் . . . . . . எடுத்துக்கொண்டு கடமைகளையும், நேர்ந்த கடன்களையும் சரி செய்ய ஏகப்பட்ட பிறவிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.”
“உன்னால் அதில் முன்னேறி செல்ல முடிகிறதல்லவா?”
“நாம் அனைவரும் முன்னேறித்தான் செல்கிறோம்.”
“எத்தனை முறை இந்த பூமியில் பிறப்பெடுத்திருக்கிறாய்?”
“எண்பத்தாறு தடவைகள்.”
“எண்பத்தாறு தடவைகளா?”
“ஆமாம்.”
“உன்னால் அனைத்தையும் நினைவுகூற முடிகிறதா?”
“முடியும். ஆனால் எனக்குத் தேவையான நேரங்களில் நினைவுகூர முடியும்.”
இதுவரை கிட்டத்தட்ட பத்து, பன்னிரெண்டு பிறவிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக நினைவுக்குக் கொண்டுவந்திருக்கிறாள். சமீபத்தில் அதே பிறவிகள் நினைவில் மீண்டும் மீண்டும் வருவதுபோல் தோன்றுகிறது. அவளுக்கு மற்ற பிறவிகளின் நினைவுகள் தற்சமயம் தேவையற்றதுபோல் தோன்றுகிறது. அவளுடைய நோயின் உபாதைகளிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் மீண்டிருக்கிறாள். இனி அவளுடைய உடல்நிலை முன்னேற்றத்துக்கு, பழைய நினைவுகளை மீட்டெடுப்பது அவ்வளவாக உதவுமென்று நான் நினைக்கவில்லை. அவளது எதிர்கால முன்னேற்றத்துக்கு என்னுடைய உதவி எதுவும் இனி தேவைப்படாது என்று கருதுகிறேன். மீண்டும் மென்மையாக முணக ஆரம்பித்தாள்.
“போதைப்பொருட்களின் உதவியுடன் சிலர் ஆன்மாக்கள் இருக்கும் பரிமாணங்களை அடையமுடிகிறது. ஆனால் தான் எந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்று அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் அந்த பரிமாணத்தைத் தொட்டிருக்க அனுமதி கிடைத்திருக்கும்.” நான் போதைபொருட்களின் விளைவுகளைப் பற்றி அவளிடம் எதுவும் கேட்டதில்லை. அப்படி கேட்காமல் இருந்தபோதிலும், தானாகவே விழைந்து அவளிடமிருந்து அறிவுரைகளும், செய்திகளும் வருகின்றன.
“உன்னுடைய தற்போதைய சக்திகளின் துணையுடன் உன்னால், பிறவிகளில் முன்னேற முடியாதா? உன் ஆருடம் கூறும் திறமை அதிகரித்துக்கொண்டே வருவதுபோல் தோன்றுகிறது.”
“ஆமாம். அது முக்கியமானதுதான். ஆனால் அது மற்ற பரிமாணங்களில் இருப்பதுபோல் தற்போதைய பிறவியில் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது. இது வளர்ச்சியின் ஒரு பகுதியே.”
“உனக்கும் எனக்கும் முக்கியமானதா?”
“இல்லை. நம் அனைவருக்கும் இது முக்கியமானது.”
“நம்மால் எப்படி இந்த சக்தியைப் பெற முடியும்?”
“தொடர்புகளின்மூலம் பெறமுடியும். மிகுந்த சக்தி கொண்ட சில ஆன்மாக்கள், சிறந்த ஞானத்துடன் திரும்ப முடியும். அவைகளால் உதவியும், முன்னேற்றமும் தேவைப்படுபவ்ர்களுக்கு அளிக்க முடியும்.” மீண்டும் நீண்ட அமைதியில் ஆழ்ந்தாள். அடுத்த பிறவிக்குள் நுழைந்தாள்.
“பெரிய சமுத்திரத்தைக் காண்கிறேன். சமுத்திரத்தின் அருகே வெண்மையான வீட்டைப் பார்க்கிறேன். கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து செல்கின்றன. கடற்கரை மணத்தை உணர்கிறேன்.”
“நீ அங்கு இருக்கிறாயா?”
“ஆமாம்.”
“வீடு எப்படி காணப்படுகிறது?”
“சிறிய வீடு. அதன் மேற்புறத்தில் கோபுரம் உள்ளது . . . . . . சிறிய சன்னல்கள் இருக்கிறது. அதன்வழியாகக் கடலைப் பார்க்கலாம். அங்கு ஒரு தொலைநோக்கி உள்ளது. அது மரத்தாலும், செம்பாலும் உருவக்கப்பட்டுள்ளது.”
“நீ தொலைநோக்கியை உபயோகப்படுத்துகிறாயா?”
“ஆமாம். கப்பல்களைக் கவனிக்கிறேன்.”
“உன்னுடைய வேலை என்ன?”
“துறைமுகத்திற்கு வரும் எதிரி கப்பல்களைப் பற்றி செய்திகளைத் தரவேண்டும்.” கிறிஸ்டியன் என்ற பெயரில் அவள் இந்த பிறவி எடுத்திருந்ததை நினைவுகூர்ந்தேன். அப்பொழுது நடந்த போரில் அவள் கைகளை இழக்கவும் நேரிட்டது நினைவுக்கு வந்தது.
“நீ கப்பலில் வேலைசெய்யும் மாலுமியா?” உறுதி செய்ய விரும்பினேன்.
“தெரியவில்லை . . . . . இருக்கலாம்.”
“நீ என்ன உடை அணிந்திருக்கிறாய்?”
“வெள்ளை நிற சட்டையும், பழுப்பு நிற குட்டையான பேண்ட்டும் அணிந்திருக்கிறேன். காலணிகளும் அணிந்திருக்கிறேன். நான் என் வாழ்க்கையில் பிறகு மாலுமியாக இருந்திருக்கிறேன். ஆனால் நான் இன்னும் மாலுமியில்லை.” அவனால் (கிறிஸ்டியனால்) எதிர்காலத்தைப் பார்க்க முடிந்தது.
“நான் காயப்பட்டிருக்கிறேன்.” வலியில் துடித்தாள். “என் கையில் மிகவும் வலிக்கிறது.” அவள் “கிறிஸ்டியன்” என்ற பிறவிக்கு மீண்டும் சென்றிருக்கிறாள். கடற்போரில் காயப்பட்டிருக்கிறாள்.
“ஏதாவது குண்டு வெடித்திருக்கிறதா?”
“ஆமாம். . . . . . . வெடிகுண்டுகளின் மணத்தை நுகரமுடிகிறது.”
“உனக்கு சரியாகிவிடும்.” என்ன முடிவு நேருமென்று எனக்குத் தெரியும். அவளை ஆசுவாசப்படுத்தினேன்.
“நிறையபேர் இறந்துவிட்டார்கள். பாய்மரம் உடைந்துவிட்டது. துறைமுகம் சேதமடைந்துவிட்டது. பாய்மரத்தைச் சரிசெய்யவேண்டும்.” பதற்றத்துடன் காணப்பட்டாள்.
“உனக்கு சரியாகிவிட்டதா?” வினவினேன்.
“ஓரளவுக்கு சரியாகிவிட்டது. பாய்மரத்தில் உள்ள துணிகளை சரிசெய்வது மிகவும் கடினமாக உள்ளது.”
“உன்னுடைய கைகளால் வேலை செய்யமுடிகிறதா?”
“இல்லை. அடுத்தவர்கள் வேலைசெய்வதைப் பார்க்கிறேன். பாய்மரத்துணி மிகவும் தடிமனாக உள்ளது. தைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. என் கை மிகவும் வலிக்கிறது.”
“உன் கை குணமாகிவிடும். காலத்தில் முன்னோக்கிச் செல். மீண்டும் உன்னால் மாலுமியாக செயல்பட முடிகிறதா?”
“ஆமாம். இப்பொழுது சௌத்வேக்ஸ்-ல் இருக்கிறோம் எங்கள் கடற்கரையை நாங்கள் தற்காத்துக் கொள்ளவேண்டும்.”
“யார் உங்களுடன் போருக்கு வந்திருக்கிறார்கள்?”
“ஸ்பானியர்கள். அவர்களிடம் பெரிய கப்பல் உள்ளது.”
“அடுத்து என்ன நிகழ்கிறது?”
“கப்பலைப் பார்க்கிறேன். துறைமுகத்தைப் பார்க்கிறேன். கடைகள் உள்ளன. அங்கு மெழுகுவர்த்திகள் விற்கிறார்கள். புத்தகங்களும் உள்ளன.”
“நீ புத்தக கடைக்குச் செல்வாயா?”
“ஆமாம். எனக்கு புத்தகங்களை மிகவும் பிடிக்கும். புத்தகங்கள் அற்புதமானவைகள். சிவப்பு நிற புத்தகங்கள் வரலாறு சம்பந்தமானது. அதில் வரைபடங்கள் உள்ளன.” நான் அவளை பெயர் சொல்லி அழைத்தால் அவளது எதிர்வினை எப்படி இருக்குமென்று நினைத்தேன். “கிறிஸ்டியன்.” அன்புடன் அழைத்தேன்.
“சொல்லுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?” தயக்கமில்லாமல் பதில் வந்தது.
“கிறிஸ்டியன், உன்னுடைய குடும்பம் எங்கே உள்ளது?”
“பக்கத்து நகரில் உள்ளது. நாங்கள் இந்த துறைமுகத்திலிருந்துதான் பயணம் செய்யவேண்டும்.”
“உன் குடும்பத்தில் யாரெல்லாம் இருக்கின்றனர்?”
“எனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள். அவள் பெயர் மேரி.”
“உன் காதலி எங்கு இருக்கிறாள்?”
“எனக்கு காதலி கிடையாது. . . . . . . ஒரு மாது நகரத்தில் இருக்கிறாள்.”
“வேறு யாரும் முக்கியமானவர்கள் இல்லையா?”
“இல்லை. நான் நிறைய போரில் பங்கெடுத்திருக்கிறேன். ஆனால் நலமாக திரும்பிவிட்டேன்.”
“உனக்கு வயதாகிவிட்டதா?”
“ஆமாம். என் மகனும் ஒரு மாலுமி. ஒரு வளையம். வளையம் கொண்ட ஒரு கரத்தைக் காண்கிறேன். அந்த கரத்தில் ஏதோ ஒன்று உள்ளது.” கேத்தரின் திணற ஆரம்பித்தாள்.
“என்ன? என்ன நிகழ்கிறது?” வினவினேன்.
“கப்பலில் உள்ளவர்களுக்கு ஏதோ நோய் வந்துவிட்டது . . . . . . உணவிலிருந்து பரவிவிட்டது. கெட்டுப்போன உணவை உண்டுவிட்டோம். உப்பு கண்டமிட்ட பன்றி மாமிசம். அவள் திணறுவது தொடர்ந்தது. கிறிஸ்டியனுக்கு மாரடைப்பு வரும்வரை எனக்குத் தொடர விருப்பமில்லை. அதிகமாக களைப்படைந்து விட்டாள். அவளை சமாதி நிலையிலிருந்து மீட்டு அழைத்து வந்தேன்.
தொடரும்…