அந்த வாரம் விரைவாக கழிந்தது. சென்ற வார சிகிச்சை டேப்பினை மீண்டும் மீண்டும் காதுகொடுத்துக் கேட்டேன். நான் எப்படி புதுப்பிக்கப்படும் நிலையை அடைகிறேன்? நான் எதுவும் ஞானம் பெற்றதாக உணரவில்லை. இப்பொழுது எனக்கு உதவி செய்வதற்காக ஆன்மாக்கள் மீண்டும் அனுப்பப்படும். ஆனால் நான் என்ன செய்யவேண்டும்? இது எனக்கு எப்பொழுது தெரியும்? எனக்கு செய்யக்கூடிய திறமை இருக்கிறதா? நான் பொறுமை காக்க வேண்டியது அவசியம் என்று எனக்கு புரிகிறது.
“பொறுமையும் தகுந்த நேரமும் . . . . . . அனைத்தும் வரவேண்டிய காலத்தில் தானாக வந்து சேரும். காலம் வரும்பொழுது உனக்கு அனைத்து வினாக்களுக்கும் விடை கிடைக்கும். இதுவரை தரப்பட்ட அறிவுரைகளை நன்கு உணர்ந்து ஒத்துக் கொள்வதற்கு உனக்கு போதுமான அவகாசம் கொடுக்கப்படும்.” அதனால் நான் காத்திருக்கவேண்டும்.
இந்த அமர்வின் ஆரம்பத்தில் கேத்தரின் சில நாட்களுக்குமுன் தான் கண்ட கனவை விவரித்தாள். அவள் பெற்றோருடன் தங்கியிருக்கிறாள். இரவு வீட்டில் தீப்பற்றிக்கொண்டது. கேத்தரின் வீட்டிலிருப்பவர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறாள். ஆனால் அவள் தந்தை எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்த இடத்திலேயே இருக்கிறார். கேத்தரின் அவரை வீட்டுக்கு வெளியே பாதுகாப்பாக அழைத்து வந்தாள். அவள் தந்தை அவளை வீட்டுக்குள் ஓடிச்சென்று ஏதோ விட்டுப்போன பொருளை எடுத்துவருமாறு கூறுகிறார். என்ன பொருளென்று கேத்தரினுக்கு ஞாபகமில்லை. நான் கேத்தரினுடைய அமர்வில் இந்த கனவுக்கு ஏதாவது விடைகிடைக்க வாய்ப்பிருக்கலாம் என்று நினைத்து, நானாக கனவுக்கு காரணம் கண்டுபிடிக்கும் எண்ணத்தை கைவிட்டேன்.
விரைவில் கேத்தரின் சமாதி நிலைக்குச் சென்றுவிட்டாள். “நான் முக்காடு அணிந்திருக்கும் ஒரு பெண்ணைக் காண்கிறேன். முக்காடு முகத்தை மறைக்கவில்லை. கூந்தலை மட்டும் மூடியிருக்கிறது.” மௌனித்தாள். “இப்பொழுது பார்க்கமுடிகிறதா?”
“இல்லை . . . . . கருப்பு வண்ண பட்டுத்துணியில் பொன்னிறத்தில் வேலைப்பாடுகளை பார்க்கிறேன் . . . . . ஒரு கட்டிடத்தைப் பார்க்கிறேன் . . . . . வெண்ணிறத்தில் உள்ளது.”
“எந்த கட்டிடம் என்று தெரிகிறதா?”
“இல்லை.”
“பெரிய கட்டிடமா?”
“இல்லை. அதன் பின்புறத்தில் பனிபடர்ந்த மலைகள் இருக்கின்றன. மலையின் கீழே புல்வெளி உள்ளது. நாம் அங்கே இருக்கிறோம்.”
“உன்னால் கட்டிடத்துக்கு செல்ல முடிகிறதா?”
“ஆமாம். கட்டிடம் ஒருவிதமான பளிங்கினால் கட்டப்பட்டுள்ளது. . . . தொடுவதற்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது.”
“அது கோவிலா? சமய சம்பந்தப்பட்டதா?”
“தெரியவில்லை. . . . . . சிறை என்று நினைத்தேன்.”
“சிறையா? உள்ளே மக்கள் தென்படுகிறார்களா? சுற்றிலும் மக்களைப் பார்க்கமுடிகிறதா?”
“ஆம். படைவீரர்கள். கருப்பு நிற சீருடை அணிந்திருக்கிறார்கள். சீருடையின் தோள்பட்டை பொன்னிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொன்னிற நூல்கள் அதில் தொங்குகின்றன. கருப்பு நிற தலைக்கவசமும் அணிந்திருக்கிறார்கள். அந்த கவசத்தின் மேல்புறத்தில் பொன்னிறத்தில் கூராக ஏதோ உள்ளது . . . . . இடுப்பிலும் சிகப்பு நிறத்துணியை கட்டியிருக்கிறார்கள்.”
“உன் அருகிலும் வீரர்கள் இருக்கின்றார்களா?”
“ஒன்றிரண்டுபேர் இருக்கிறார்கள்.”
“நீ அங்குதான் இருக்கிறாயா?”
“இங்குதான் இருக்கிறேன். கட்டிடத்துக்குள் இல்லை. பக்கத்தில் எங்கோ இருக்கிறேன்.”
“சுற்றிலும் பார். நீ எங்கே இருக்கிறாய் என்று தெரிகிறதா? மலை, புல்வெளி . . . . வெண்ணிற கட்டிடம். . . . . . எங்கே இருக்கிறாய்? பக்கத்தில் வேறு கட்டிடம் உள்ளதா?”
“பக்கத்தில் தென்படவில்லை. இது தனியாகத் தெரிகிறது. . . . . . பின்புறத்தில் பெரிய சுவர் தெரிகிறது.”
“அது கோட்டையாக இருக்குமா? அல்லது சிறைதானா?”
“இருக்கலாம். . . . . . ஆனால் இந்த கட்டிடம் தனிமையில் இருக்கிறது.”
“உனக்கு அந்த விஷயம் ஏன் முக்கியமாகப் படுகிறது? நீ எந்த ஊரில், எந்த நாட்டில் இருக்கிறாய்? வீரர்கள் எங்கிருக்கிறார்கள்?”
“நான் உக்ரேன் என்ற பெயரை மீண்டும் மீண்டும் காண்கிறேன்.”
“உக்ரேன்?” அவளுடைய பிறவிகள் ஓரிடம் அல்லாமல் உலகமனைத்தும் பரவியிருப்பது என்னை வியப்படையச் செய்தது.
“உன்னால் காலத்தைக் கணிக்கமுடிகிறதா? எந்த வருடத்தில் இருக்கிறாய்?”
“1717” தயக்கத்துடன் கூறினாள். “1758 . . . . . 1758. நிறைய படைவீரர்களைக் காண்கிறேன். எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நீண்ட வாள்கள் வைத்திருக்கிறார்கள்.”
“வேறு என்ன பார்க்க முடிகிறது?”
“ஒரு நீரூற்றைப் பார்க்கிறேன். குதிரைகளை அங்குதான் நீர் பருக அழைத்துச் செல்கிறார்கள்.”
“வீரர்கள் குதிரைகளில்தான் பயணம் செய்கிறார்களா?”
“ஆமாம்.”
“வீரர்கள் பெயர் சொல்லி அழைத்துக்கொள்கிறார்களா? எப்படி கூப்பிட்டுக் கொள்கிறார்கள்?”
“எனக்குக் கேட்கவில்லை.”
“நீ அங்குதான் இருக்கிறாயா?”
“இல்லை.” குழந்தையைப்போல ஓரிரு வார்த்தைகளில் பதில் கூற ஆரம்பித்துவிட்டாள். நான்தான் நன்கு கேள்விகள் கேட்கவேண்டும்.
“ஆனால் அவர்களை அருகில் உன்னால் பார்க்க முடிகிறதல்லவா?”
“ஆமாம்.”
“நீ அந்த நகரில்தான் வசிக்கிறாயா?”
“அப்படித்தான் நினைக்கிறேன்.”
“நல்லது. உன்னைப் பார்க்க முடிகிறதா? உன் வசிப்பிடத்தை கண்டுபிடிக்க முடிகிறதா?”
“கந்தல் துணிகளைக் காண்கிறேன். ஒரு குழந்தை. . . . . சிறுவன். பழைய கந்தல்களை அணிந்திருக்கிறேன். அவனுக்குக் குளிர்கிறது.”
“அவனுக்கு அந்த ஊரில் வீடு இல்லையா?”
“இருப்பதுபோல் தெரியவில்லை.” அவளுக்கு அந்த பிறவியில் தொடர்பு கொள்வது கடினமாக இருப்பதுபோல் தோன்றுகிறது. தொடர்ச்சி இல்லாமல் விட்டு விட்டு பதில் கூறுகிறாள். பதில்களும் மேலோட்டமாக, உறுதியில்லாததாகத் தோன்றுகிறது.
“சரி. அந்த சிறுவனின் பெயர் தெரியுமா?”
“தெரியாது.”
“அந்த சிறுவனுக்கு என்ன பிரச்சினை? அவனைத் தொடர்ந்து செல். என்ன நடக்கிறதென்று கவனி.”
“அவனுக்குத் தெரிந்த யாரோ சிறையில் இருக்கிறார்கள்.”
“நண்பர்களா? உறவினர்களா?”
“அவனுடைய தந்தை என்று நினைக்கிறேன்.” சுருக்கமாக பதில் வந்தது.
“நீதான் அந்த சிறுவனா?”
“தெரியவில்லை.”
“தந்தை சிறையில் இருப்பது பற்றி சிறுவன் கவலைப்படுவது உனக்குப் புரிகிறதா?”
“ஆமாம். . . . . தந்தையை கொன்றுவிடுவார்கள் என்று மிகவும் கலக்கமாக இருக்கிறான்.”
“அவனுடைய தந்தை என்ன குற்றம் புரிந்தார்?”
“படையினரிடமிருந்து எதையோ திருடிவிட்டார். ஏதோ ஆவணங்கள் போன்றவைகள்.”
“அந்த சிறுவனுக்கு என்ன நடக்கிறது என்று புரிகிறதா?”
“இல்லை. அவன், அவனுடைய தந்தையை இனி பார்க்கவே முடியாது.”
“பார்க்கவே முடியாதா?”
“ஆமாம்.”
“அவன் தந்தை எவ்வளவு நாட்கள் சிறையில் இருப்பாரென்று அவர்களுக்குத் தெரியுமா? அல்லது எவ்வளவு நாட்கள் உயிருடன் இருப்பாரென்று தெரியுமா?”
“இல்லை.” பதிலளித்தாள். அவள் குரல் நடுங்கியது. மிகவும் வருத்தத்துடன் கூறினாள். அவள் எதையும் விளக்கமாகக் கூறவில்லை. இருந்தாலும் நடந்த நிகழ்ச்சிகளைக் கண்ணுற்று, அவள் துயரத்துடன் இருப்பது கண்கூடாகத் தெரிந்தது.
“அந்த சிறுவன் என்ன நினைக்கிறான் என்று உன்னாலும் உணரமுடிகிறதா? அச்சம், பதற்றம் போல் உணர முடிகிறதா?”
“ஆமாம்.” மீண்டும் மௌனமானாள்.
“என்ன நிகழ்கிறது? காலத்தில் முன்னோக்கிச் செல். இது கடினம் என்று புரிகிறது. முன்னோக்கிச் சென்று நடப்பதை கவனி.”
“அவனது தந்தைக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டார்கள்.”
“இப்பொழுது சிறுவன் எப்படி இருக்கிறான்?”
“செய்யாத குற்றத்திற்கு தண்டனை கொடுத்து விட்டார்கள். மக்களுக்கு காரணமில்லாமல் தண்டனை கொடுப்பது அவர்கள் வழக்கம்.”
“அந்த சிறுவன் மனமுடைந்திருப்பான்.”
“அவனுக்கு நிகழ்பவைகள் புரியுமென்று நான் கருதவில்லை.”
“அவனுக்கு யாராவது இருக்கிறார்களா?”
“இருக்கிறார்கள். ஆனால் அவன் வாழ்க்கை இனி கடினமானதாக இருக்கும்.”
“அந்த சிறுவனுக்கு என்னதான் நடக்கப் போகிறது?”
“எனக்குத் தெரியவில்லை. அனேகமாக இறந்துவிடுவான்.” அவள் மிகவும் வருத்தத்துடன் கூறினாள். மௌனமாக நிமிடங்கள் கழிந்தன. அவள் அங்கும் இங்கும் பார்ப்பது தெரிந்தது.
“என்ன காண்கிறாய்?”
“ஒரு கை . . . . . கையில் ஏதோ இருக்கிறது. வெண்மையாக இருக்கிறது, என்னவென்று தெரியவில்லை.” மீண்டும் மௌனமானாள். சிறிது நேரத்திற்குப் பிறகு “வேறென்ன பார்க்க முடிகிறது?” வினவினேன். இருநூறு வருடங்களுக்கு முன்பு உக்ரேனில் வருத்தத்துடன் இருந்த சிறுவனை விட்டு விலகி வந்திருக்கிறாள். “ஒன்றுமில்லை . . . . .இருளாக இருக்கிறது.” அவள் அந்த பிறவியில் இறந்திருக்கக் கூடும்.
“அந்த சிறுவனை விட்டு விலகி வந்துவிட்டாயா?”
“ஆமாம்,” முணகினாள். ஓய்வு நிலையில் இருக்கிறாள். “அந்த பிறவியில் என்ன கற்றுக்கொண்டாய்? அதற்கு ஏன் அத்தனை முக்கியத்துவம்?”
“மக்களை ஆராயாமல் அவசரப்பட்டு கணிக்க முற்படக்கூடாது. அடுத்தவர்களிடம் பாரபட்சமின்றி இருக்க வேண்டும். ஆராயாமல் எடுக்கும் முடிவுகளால் பல உயிர்கள் கஷ்டத்துக்கு உள்ளாகின்றன.”
“அந்த சிறுவன் முழுமையாக வாழாமல் இருந்ததற்கும், கஷ்டப்பட்டதற்கும் காரணம் . . . . . . அவன் தந்தைமேல் ஆராயாமல் தரப்பட்ட தண்டனைதானா?”
“ஆமாம்.”
“வேறு ஏதேனும் பார்க்க முடிகிறதா? ஏதாவது கேட்க முடிகிறதா?”
“இல்லை.” மீண்டும் சுருக்கமாக பதில் கூறிவிட்டு மௌனமானாள். என்ன காரணத்தினாலோ, இந்த பிறவியில் அவளால் விளக்கமாக பதில் கூற முடியவில்லை. அவள் ஓய்வெடுப்பதற்கு ஆணைகளைப் பிறப்பித்தேன்.
“முற்றாக ஓய்வெடுத்துக்கொள். அமைதியை உணர். உன் உடல் தானாகவே நல்ல சுகமான நிலையை அடைகிறது. உன் ஆன்மா ஓய்வெடுத்துக்கொள்கிறது. . . . . . நலமாக உணர்கிறாயா? ஓய்வாக உணர்கிறாயா? அந்த சிறுவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது உண்மைதான். மிகவும் கஷ்டம். ஆனால் நீ இப்பொழுது அமைதியாக இருக்கிறாய். உனது மனம் வேறு இடங்களுக்குச் செல்கிறது. வேறு காலகட்டங்களுக்குச் செல்கிறது. . . . . . வேறு நினைவுகளை நோக்கிச் செல்கிறது. அமைதியாக உணர்கிறாயா?”
“ஆமாம்.” நான் தீப்பிடித்த வீட்டிலிருந்து தப்பித்து வெளியே வரக்கூட நினைவில்லாமல் அவள் தந்தை இருந்ததாகக் கூறிய கனவுக்கான காரணத்தை அறிய விரும்பினேன்.
“நான் தீப்பிடித்த வீட்டைப்பற்றி நீ கூறிய கனவு குறித்து கேட்க விரும்புகிறேன், உன்னால் அந்த கனவை நினைவுகூற முடிகிறதா? நீ உன் ஆழ்மனதைத் தொடர்பு கொள்ள முடிகிறது. நீ பாதுகாப்பாக இருக்கிறாய். உனக்கு கனவினை நினைவுகூற முடிகிறதா?”
“ஆமாம்.”
“நீ அந்த வீட்டிற்குச் சென்று, உன் தந்தைக்காக ஏதோ பொருளை மீட்டு வந்தாய். என்ன பொருள் என்று கூறமுடியுமா?”
“ஆமாம். அது ஒரு இரும்புப்பெட்டி.”
“தீக்கிரையாகும் வீட்டுக்குள் சென்று உயிரை பணயம் வைத்து எடுத்துவரும் அளவுக்கு அப்படி அந்த பெட்டியில் என்னதான் இருந்தது?”
“அவருடைய நாணயம் மற்றும் ஸ்டாம்ப் சேகரிப்புக்கள் இருந்தன.” பதிலளித்தாள். நனவுலகில் அந்த கனவு அவளுக்கு அரைகுறையாகத்தான் ஞாபகம் இருந்தது. ஆனால் சமாதி நிலையில், அதற்கு எதிர்மறையாக, துல்லியமான விவரங்களை அவளால் கூற முடிகிறது. ஹிப்னாடிசம் என்பது மிகவும் சக்திவாய்ந்தது. ஆழ்மனதில் உறங்கிக்கிடக்கும் நினைவுகள் அனைத்தையும் தட்டியெழுப்புவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் விளக்கமாகவும், துல்லியமாகவும் கொடுக்கக்கூடியதாக உள்ளது.
“அந்த நாணயங்களும், ஸ்டாம்ப்களும் அவருக்கு அவ்வளவு முக்கியமானவைகளா?”
“ஆமாம்.”
“ஆனால் உன் உயிரை பணயம் வைக்கும் அளவுக்கு முக்கியமானவைகளா?”
“அவர் என் உயிருக்கு ஆபத்தில்லை என்று நினைத்தார்.” என்னை இடைமறித்தாள்.
“தீப்பிடித்த வீட்டிக்குள் சென்று எடுத்துவரும் அளவுக்கு பாதுகாப்பாக இருந்ததாக நினைத்தாரா?”
“ஆமாம்.”
“அந்தபட்சத்தில் ஏன் அவரே செல்லவில்லை?”
“என்னால் விரைவாக சென்று எடுத்துவர முடியுமென்று நினைத்தார்.”
“ஆனால் உனக்கு ஆபத்துதானே?”
“ஆமாம். அப்பொழுது அதை நான் உணரவில்லை.”
“அந்த கனவுக்கு வேறுஏதேனும் அர்த்தங்கள் உள்ளதா? உனக்கும் உன் தந்தைக்குமான உறவு தொடர்பாக?”
“எனக்குத் தெரியவில்லை.”
“அவர் அந்த வீட்டைவிட்டு வெளியேற அவசரப்பட்டதாகத் தெரியவில்லை.”
“ஆமாம்.”
“ஏன் அவர் தீயைப்பற்றி எந்த கலக்கமும் கொள்ளவில்லை. ஆபத்தை உணர்ந்து நீங்கள் தப்பிக்க முயற்சித்தீர்களே?”
“அவர் பொறுப்புகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ள விரும்புகிறார்.”
நான் இந்த பதிலிலிருந்து கேத்தரின் கண்ட கனவின் காரணத்தை யூகிக்க விழைந்தேன்.
“ஆமாம். இப்படி இருக்கக்கூடும். நீ தீப்பிடித்த வீட்டிலிருந்து பெட்டியை எடுத்து வருவதைப் போல, அவருக்கான காரியங்களை செய்கிறாய். தீப்பிடிப்பது என்பது எதற்கும் நேரம் அதிகமில்லை என்று வைத்துக்கொள்வோம். ஆபத்தை உணர்ந்து நீ செயல்படுகிறாய். ஆனால் அவர் ஆபத்தை உணரவில்லை. வீணாக அவர் பொழுது போக்கிக்கொண்டிருக்கும்பொழுது, நீ அவருக்காக தீப்பிடித்த வீட்டில் உதவி செய்கிறாய். நேரத்தை வீணாகக் கழிக்கும் அவருக்கு, உன்னால் நிறைய கற்றுக்கொடுக்க முடியுமென்று நினைக்கிறேன். ஆனால் கனவில் அவருடைய செயல் அவர் கற்றுக் கொள்ள விருப்பமில்லாததுபோல் தோன்றுகிறது.”
“ஆம். அவருக்கு விருப்பமில்லை.”
“நான் அந்த கனவை அப்படித்தான் பார்க்கிறேன். ஆனால் நீ அவரை கட்டாயப்படுத்த முடியாது. அவரே அதனை உணரவேண்டும்.”
“ஆமாம்.” அவள் கரகரப்பான குரலில் அழுத்தத்துடன் பேச ஆரம்பித்தாள். “நமக்குத் தேவையில்லாதபொழுது நம் உடல் தீக்கிரையாவது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை.” வழிகாட்டி ஆன்மா திடீரென்று நுழைந்து கனவுக்கு புதிய அர்த்தத்தை கொடுத்தது, என்னை வியப்புள்ளாக்கியது.
“நமது உடல் தேவையில்லையா?”
“ஆமாம். நாம் பல நிலைகளைக் கடந்து இங்கு வந்திருக்கிறோம். ஒரு குழந்தையின் உடலைவிட்டு பதின்ம உடலை எடுக்கிறோம். அதிலிருந்து வளர்ந்த உடலையும் பிறகு வயோதிக உடலையும் பெறுகிறோம். இன்னும் ஒரு படி கடந்து வயோதிக உடலிலிருந்து ஆவி நிலையை அடைவதில் என்ன பிரச்சினை? நாம் அதைத்தான் செய்கிறோம். நாம் வளர்ச்சி அடைவதை நிறுத்துவதில்லை. தொடர்ந்து வளர்கிறோம். வேறு வேறு நிலைகளில் வளர்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் சரீர நிலையின் முடிவில் முற்றிலும் களைத்துவிடுகிறோம். பிறகு களைப்பிலிருந்து மீளும் நிலை, கற்கும் நிலை, முடிவெடுக்கும் நிலை ஆகியவற்றைக் கடக்க வேண்டும். நாம் மீண்டும் பிறவி எடுக்க விழையும்பொழுது எப்பொழுது, எங்கு, என்ன காரணத்துக்காக பிறக்க வேண்டும் என்று முடிவெடுக்க முடியும். சிலர் திரும்பி வர விருப்பமில்லாமல் இருப்பார்கள். அவர்கள் அடுத்த நிலைக்காகக் கற்றுக்கொள்ள செல்வார்கள். ஆவி நிலையில் சிலர் அதிக நாட்கள் இருப்பார்கள். வளர்ச்சியும், கற்றலும் தொடர்ச்சியாக இருந்தபடியே இருக்கும். சரீரம் என்பது ஆன்மாவை எடுத்துச் செல்ல கூடிய ஒரு வாகனம். நமது ஆன்மா மட்டுமே நிலையானது. சரீரம் நிலையானது அல்ல.”
எனக்கு இந்த குரல் பரீச்சயமானதாக இல்லை. ஒரு புதிய வழிகாட்டி ஆன்மா, முக்கியமான அறிவுரைகளைத் தந்திருக்கிறது. நான் மேலும் இத்தகைய ஆன்மீக கருத்துகளைக் கேட்க விரும்பினேன்.
“சரீர நிலையில் கற்றல் விரைவாக இருக்குமா? மக்கள் ஸ்தூல நிலையிலேயே தொடராமல் இருப்பதற்கு என்ன காரணம்?”
“இல்லை. ஸ்தூல நிலையில் கற்பதுதான் மிகவும் விரைவானதாக இருக்கும். நாம் என்ன கற்றுக்கொள்வது என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். உறவுகளைப் பற்றி கற்றுக்கொள்ள விரும்பினால், சரீர நிலையை அடைய வேண்டும். கற்று முடிந்தவுடன் ஸ்தூல நிலைக்குச் செல்லலாம். ஸ்தூல நிலையில் இருக்கும்பொழுது, விருப்பப்பட்டால் சரீர நிலையில் உள்ளவர்களைத் தொடர்புகொள்ள முடியும். முக்கியமான காரணத்திற்காக மட்டுமே தொடர்பு கொள்ளலாம் . . . . . அவர்கள் முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகள் இருந்தால்மட்டுமே தொடர்பு கொள்ளலாம்.
“நீங்கள் எப்படி தொடர்பு கொள்வீர்கள்? எப்படி செய்திகள் கிடைக்கும்?”
பதில் கிடைக்குமா என்று சந்தேகத்துடன் காத்திருந்தேன். கேத்தரினிடமிருந்து பதில் கிடைத்தது. “சில சமயங்களில் அந்த மனிதனுக்கு முன் காட்சியளிப்போம் . . . . . முன்பு சரீர உருவில் எப்படி இருந்தோமோ அப்படியே தோன்றுவோம் . . . . . சில சமயங்களில் மனதின் ஊடாக தொடர்பு கொள்ளுவோம். சில சமயங்களில் குறியீடுகளாக செய்திகளைத் தருவோம். யாருக்கு செய்திகள் சென்று சேர வேண்டுமோ அவர்களுக்கு செய்திகள் புரிந்துவிடும். டெலிபதி போன்று மனதுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வோம்.”
“உனக்கு இப்பொழுது தெரிந்திருக்கும் இந்த விஷயங்கள் மிகவும் முக்கியமானவைகள். ஆனால் உன்னுடைய இயல்பான நிலையில் இருக்கும்பொழுது, இந்த உண்மைகளை ஏன் உன்னால் உணர முடியவில்லை?” மீண்டும் வினவினேன்.
“எனக்குப் புரியாது என்று நினைக்கிறேன். உணர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்குத் திறமைகள் இல்லை.”
“என்னால் உனக்கு கற்பிக்க முடியுமென்று நம்புகிறேன். நீ அறிந்து கொண்டால் உனக்கு இவைகளைப் பற்றிய அச்சங்கள் எதுவும் இருக்காது.”
“ஆமாம்.”
“நீ மேல்நிலை ஆன்மாக்களிடமிருந்து அறிவுரைகளைப்பெற்று இங்கு கூற முடிகிறது. உன்னால் முடிந்தவரை தகவல்களைப் பகிர்ந்துகொள்வது மிகவும் நன்மை பயக்கும்.” கேத்தரின் இந்த நிலையில் பெற்றிருக்கக்கூடிய ஆன்மீக உண்மைகள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.
“ஆமாம்” மென்மையாகப் பதிலளித்தாள்.
“இந்த விளக்கங்கள் உன் மனதிலிருந்து வருகிறதா?”
“ஆனால், அந்த உண்மைகளை அவர்கள் அங்கு பதிய வைத்திருக்கிறார்கள்.” வழிகாட்டி ஆன்மாக்களுக்கு அந்த அங்கீகாரத்தைக் கொடுத்தாள்.
“ஆமாம்” நானும் ஒத்துக்கொண்டேன். “நான் எப்படி உனக்கு கற்பித்து உன்னுடைய அச்சங்களையும், பதற்றத்தையும் போக்கமுடியும்.”
“நீங்கள் அந்த வேலையை முடித்துவிட்டீர்கள்.” மென்மையாக பதிலளித்தாள். அவள் உண்மையைத்தான் கூறுகிறாள். ஹிப்னாடிச சிகிச்சையை அவளுக்குத் தொடங்கிய பிறகு, திகைப்பூட்டும் அளவுக்கு அவளது நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது கண்கூடு.
“இன்னும் எந்தவிதமான விஷயங்களை நீ கற்றுக்கொள்ளவேண்டும்? இந்தப் பிறவியில் உனக்கு கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்ன? இன்னும் மேல் நிலையை அடைய, இப்பிறவியில் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?”
“நம்பிக்கை.” விரைவில் பதில் வந்தது. அவளுடைய முக்கியமான பணி என்னவென்று புரிந்தது.
“நம்பிக்கை?.” மீண்டும் கூறினேன். அவ்வளவு விரைவில் பதில் வந்தது என்னை வியப்புக்குள்ளாக்கியது.
“ஆமாம். எனக்கு நம்பிக்கை உண்டாகவேண்டும். எனக்குப் பிடிக்காதவர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை வேண்டும். அனைவரும் எனக்கு தீங்கு செய்ய எண்ணுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதனால் நான் மக்களிடமிருந்தும், பிரச்சனைகளிருந்தும் விலகியிருக்கிறேன். இந்தச் சூழலைவிட்டு மீண்டுவர நான் நம்பிக்கை வைக்கவேண்டும். நான் பிரிந்து செல்ல நினைப்பவர்களிடம் நம்பிக்கை வைக்கவேண்டும்.”
ஆழ்மனநிலையில் அவளுடைய உள்ளுணர்வின் நீட்சி வியக்கத்தக்கவகையில் உள்ளது. அவளுடைய பலமும், பலவீனமும் அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தான் எந்தவிதமான விஷயங்களில் பலவீனமாக இருக்கிறோம் என்று புரிந்திருக்கிறது. மேலும் அந்த பலவீனங்களை நீக்கும் வழிமுறைகளையும் அவள் அறிந்துள்ளாள். இதில் உள்ள முக்கியமான பிரச்சனை, ஆழ்மனநிலையில் இருக்கும் இந்த எண்ணங்களை, அவளுடைய இயல்பு நிலை மனதுக்கு எடுத்துசென்று நடைமுறைப்படுத்துவதுதான். ஆழ்மனநிலையில் இருக்கும் புரிந்துணர்வு மனதை ஈர்த்தாலும், ஒருவரிடம் மாற்றங்களை ஏற்படுத்த அந்த புரிந்துணர்வு மட்டும் போதுமானதல்ல. அதனை இயல்பு மனதுக்கும் எடுத்துச்சென்று புரியவைத்து நடைமுறைப்படுத்தவேண்டும்.
தொடரும்…