Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பிறவி மர்மங்கள் – 14

பிறவி மர்மங்கள் – 14

மூன்று வாரங்களுக்குப் பிறகு, அடுத்த ஹிப்னாடிஸ அமர்வு நிகழ்ந்தது. அதற்கு முன் என்னுடைய விடுமுறை காலத்தில், இனிமையான கடற்கரை மணலில் படுத்திருந்தேன். கேத்தரினின் சிகிச்சையிலிருந்து எனக்கு மறைமுகமாக தெரிவிக்கப்பட்டத் தகவல்களைக் குறித்து சிந்திக்க எனக்கு போதுமான அவகாசமும், பொறுமையும் இருந்தது. ஹிப்னடைஸ் மூலம் வாழ்வில் பின்னோக்கிச் சென்று, முற்பிறவியில் கண்ட பொருட்கள், உண்மைகள், வாழ்க்கை முறைகளைப் பற்றி, நுணுக்கமான பார்வையுடன் துல்லியமான விவரங்கள், விளக்கங்கள் இவற்றை கேத்தரினால் மீட்டெடுக்க முடிந்திருக்கிறது. இந்த தவகல்களை இயல்பான நிலையில் அவள் அறிந்திருக்கவில்லை.

பதினெட்டு மாதங்களாக, வழக்கமாகத் தரப்படும் மனநல சிகிச்சை முறைகளால் அவள் உடல் நிலையிலோ, மனநிலையிலோ எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஆனால் ஹிப்னடைஸ் சிகிச்சைக்குப் பிறகு அவள் நோய் கிட்டத்தட்ட குணமாகிவிட்ட நிலைக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இறப்புக்குப் பிறகான அனுபவங்களாக அவள் கூறிய துல்லியமான உண்மைகள், ஆவி நிலையில், அவள் வழியாக, ஆனால் அவளே அறியாத அறிவுரைகள், கவித்துவமான மொழிவளமை, இறப்புக்குப் பிறகு உள்ள பரிமாணத்தில் கூறிய அறிவுரைகள், மீண்டும் மீண்டும் பிறக்கும் நிகழ்ச்சிகள் கேத்தரினிக்குத் தெரியாத, அவளுடைய அறிவுக்கும், திறமைக்கும் மேற்பட்ட நிலையில், ஞானத்துடன் விளக்கமளித்த வழிகாட்டி ஆன்மாக்கள்; சிந்திப்பதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.

நீண்ட வருடங்களாக, நூற்றுக்கணக்கான, இல்லை ஆயிரக்கணக்கான மனநல குறையுள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் செய்திருக்கிறேன். அனேகமாக எல்லாவித மனநல குறையுள்ள நோயாளிகளுக்கும் மருத்துவம் செய்திருக்கிறேன். நான்கு முக்கியமான மருத்துவ கல்லூரிகளுக்கு, உள்நோயாளிகளுக்கான தலைமை பொறுப்பை ஏற்றுப் பணிபுரிந்திருக்கிறேன். மனநல, அவசரகால சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகளின் பிரிவு, மற்றும் அனைத்து பிரிவுகளிலும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்திருக்கிறேன். மனப்பிறழ்வு, கண்ணால் பார்க்காத விஷயங்களை பார்த்ததுபோல் உணரும் நோய் போன்ற குறைபாடு உடையவர்களுக்கும் சிகிச்சை செய்திருக்கிறேன்.

இயல்பாக நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கும், ஹிஸ்டீரியா இருப்பவர்களுக்கும், தன்னுள்ளே வேறு வேறு மனிதர்கள் இருப்பதாக கற்பனை செய்பவர்களுக்கும் மருத்துவம் செய்து, குணப்படுத்திய அனுபவம் எனக்கு உண்டு. தேசிய போதைமருந்து தடுப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கல்லூரியில் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறேன். அதனால் போதைப் பொருட்கள் மூளையில் ஏற்படுத்தும் தாக்கத்தினையும் நன்கு அறிவேன்.

ஆனால், மேற்கூறப்பட்ட நோய்களுக்கான எந்தவிதமான அறிகுறிகளும் கேத்தரினிடம் காணப்படவில்லை. அவள் எந்தவிதமான மனநோயினாலும் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை. உண்மை நிலையையும், கற்பனை நிலையையும் வேறுபாடு அறியாமல் கேத்தரின் குழப்பிக்கொண்டது கிடையாது. பொய்யான நம்பிக்கையில் அவள் உழன்றதும் இல்லை. பார்க்காதவற்றைப் பார்ப்பது போலவும், கேட்காத வார்த்தைகளை கேட்பதுபோலவும் அவளுக்கு பிரம்மை ஏற்பட்டது கிடையாது.

கேத்தரினுக்கு போதைப் பழக்கமும் கிடையாது. சமுதாயத்தோடு ஒத்துப்போகாத மனநிலையும் இல்லை. சமயங்களில் தன்னிலை இழந்துவிடுபவளும் அல்ல. அவளுக்கு எப்பொழுதும் தான் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்ற இயற்கையான உணர்வுகள் உண்டு. தன்னை மறந்து, தற்செயலாக செயல்களை அவள் செய்தது கிடையாது. பல்வேறு நிலைப்பட்ட மனநிலையைக் கொண்டவளாகவும் அவள் செயல்பாடுகள் இருந்தது இல்லை. அவள் ஹிப்னாடிஸ சமாதி நிலையிலிருந்து தரக்கூடிய செய்திகள், அவள் இயல்புநிலை திறமைகளுக்கு அப்பாற்பட்டவைகள். அந்த மொழி வளமோ தத்துவங்களோ அவளுடைய இயல்பான நிலையில் அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு உயரிய நிலையில் இருந்தது.

ஆருடம் போல் அவள் என்னையும் என் தந்தையையும் பற்றிக் கூறிய தகவல்கள், குறிப்பிடத்தக்க அளவு அவளது பெற்றோர்கள் பற்றிய, அவளுக்கு முன்பே தெரியாத உண்மைகள் போன்றவற்றை சமாதி நிலையில் மட்டுமே அவளால் பெற முடிந்திருக்கிறது. அவளது நிகழ்காலப் பிறவியில் பெறமுடியாத, அறியமுடியாத தகவல்களை அவளால் வெளிக்கொணர முடிந்திருக்கிறது. கிடைக்கப்பெற்ற தத்துவங்களும், அனுபவங்களும் அவள் வளர்க்கப்பட்ட கத்தோலிக்க மதத்தின் சாரத்துக்கும், நம்பிக்கைக்கும் முற்றிலும் வேறுபட்டிருக்கிறது.

கேத்தரின் ஒரு எளிமையான, நேர்மையான பெண். அவள் அதிகம் படித்தவளல்ல. அவ்வளவு தத்துவங்களையும், உண்மைகளையும் அவளுடைய அறிவால் சிந்தித்து கண்டுபிடித்திருக்க முடியாது. வரலாற்று நிகழ்ச்சிகள், விளக்கங்கள், கவிதையாக புலமை மிக்க மொழிநடை எதுவும் கேத்தரினுடைய இயல்பான நிலையில் சாத்தியப்படாது. ஒரு மனநல மருத்துவராக, ஒரு அறிவியலாளராக கேத்தரினிடமிருந்து பெறப்பட்ட செய்திகள், தகவல்கள் அவளுடைய உணர்வுநிலைக்கு அப்பாற்ப்பட்ட ஆழ்நிலை மனதிலிருந்து உதித்தவைகள் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். இது சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை. கேத்தரின் ஒரு திறமையான நடிகையாக இருந்திருந்தால்கூட, அவளால் சமாதி நிலையில், அவ்வளவு நிகழ்ச்சிகளையும் நடித்திருக்க முடியாது. அவள் தெரிவித்த தகவல்கள் யாவும் துல்லியமான உண்மைகள்.

கேத்தரினுடைய முந்தைய பிறவிகளின் நினைவுகள், எவ்வாறு அவளைக் குணப்படுத்தியிருக்கின்றன என்று ஆராய்ந்தேன். முந்தைய பிறவி என்னும் புதிய வாசலில் நுழைந்தவுடன், மருந்து எதுவும் இல்லாமலே கேத்தரின் விரைவில் குணமடைந்திருக்கிறாள். அந்த புதிய வாசலில் மிகவும் சக்திவாய்ந்த ஏதோ ஒரு ஆற்றல், ஒரு விசை வழக்கமான சிகிச்சை மற்றும் நவீன மருந்துகளைவிட நன்கு செயல்பட்டு, குணப்படுத்தியுள்ளது. அந்த சக்தியானது எப்பொழுதோ நடந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து, குணப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் தினசரி வாழ்வில் நமது உடலுக்கும், உள்ளத்துக்கும் ஏற்படக்கூடிய துயரங்கள், உதாசீனங்கள், எண்ணங்கள், அகங்காரங்கள் போன்றவைகளையும் நினைவில் நிறுத்தி நல்வழிப்படுத்தவல்லது.

வாழ்வில் ஏற்படக்கூடிய பல்வேறுபட்ட நோய்களைப் பற்றியும் ஆராய்ந்தேன். நீண்ட நாட்களாக நீடிக்கும் மனதை நோகடிக்கும் நிகழ்வுகள் உடலளவில் பாதிப்பை ஏற்படுத்தும் துன்புறுத்தல்கள், வறுமை, பசிக்கொடுமைகள், நோய்வாய்ப்படுதல், தொடர்ச்சியான ஏமாற்றங்கள், தவறான எண்ணங்கள் அனைத்தையும் பற்றி சிந்தித்தேன். மனதில் எக்காலமும் முள்ளாக தைத்துக்கொண்டிருக்கும் எதிர்பாராத அசம்பாவிதங்கள், முக்கியமாக மயிரிழையில் உயிர்தப்பும் விபத்துக்கள், கற்பழிப்புகள், பூகம்பம் போன்ற பேரழிவுகள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி ஆராய்ந்தேன். அதாவது மனதில் நிரந்தரமான வடுவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தினேன்.

இது மனநல மருத்துவர்கள் வழக்கமாக குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளை மீட்கொணர்ந்து குணப்படுத்த முயற்சிப்பது போன்றதுதான். ஆனால் கால அளவில்தான் மாற்றம் ஏற்படுகிறது. வழக்கமான சிகிச்சைகளில் பத்திலிருந்து, பதினைந்து வருடங்கள் பின்னோக்கி செல்வோம். கேத்தரினுடைய சிகிச்சையின்பொழுது ஆயிரக்கணக்கான வருடங்கள் பின்னோக்கிச்செல்லும் நிலைமையும், வாய்ப்பும் ஏற்பட்டது. இவ்வாறு செய்வதனால், வழக்கமான சிகிச்சையைவிட மிகவும் நேரடியான விளைவுகள் ஏற்படுவதை அறிந்துகொண்டேன். இந்த வழக்கத்துக்கு மாறான முயற்சியில் வெற்றி கண்கூடாகத்தெரிகிறது. கேத்தரின் நினைத்ததைவிட மிகவும் விரைவாக குணமடைந்திருக்கிறாள். அவளுக்குப் பிறகு, ஹிப்னாடிஸ முறையில் மிகவும் பின்னோக்கிச் சென்று நான் சிகிச்சை அளித்தவர்களும் விரைவில் குணமடைந்திருக்கிறார்கள்.

ஆனால் கேத்தரினின் முன்பிறவி நினைவுகளுக்கு ஏதேனும் விளக்கங்கள் இருக்கின்றனவா? அவளுடைய நினைவுகள் அவளுடைய மரபணுக்களில் தொடர்ந்து செல்கின்றனவா? அறிவியல் வழி ஆராய்ந்தால், அவ்வாறு தொடர சாத்தியங்கள் கிடையாது. மரபணுக்கள் தொடர, மரபணுக்களை எடுத்துச் செல்ல உடல் போன்ற தொடர்ச்சியான ஒரு கடத்தியின் தேவை மிகவும் அவசியம். கேத்தரின் புவியில் வாழ்ந்து, ஒவ்வொரு முறை இறந்தவுடன் அவளுடைய மரபணு, அடுத்த பிறவிக்கு உடல்வழி எடுத்துச் செல்வது தடைபட்டு விடுகிறது. குழந்தையுடன் வெள்ளத்தில் இறந்திருக்கிறாள்; குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறாள்; இளமையில் கொல்லப்பட்டிருக்கிறாள். எப்படியும் அவளது மரபணுக்கூறு ஒவ்வொரு முறையும் அடுத்த பிறவிக்கு செல்லும் முன் தொடர்பு விட்டுப் போயிருக்கிறது.

இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட நிலையில் எப்படி இருந்திருக்கிறாள்? அது ஒரு சரீரமற்ற நிலை. எனவே அங்கே மரபணுக்களுக்கு சாத்தியமில்லை. ஆனால் அவள் நினைவுகள் தொடர்திருக்கின்றன. எனவே மரபணுக்கள் வழியாக மட்டுமே நினைவுகள் தொடர்கிறது என்பது சரியான கூற்று இல்லை.

பிரபலமான மனநல ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜங் (Jung) கூறுவதைப் பார்ப்போம், அவரது கூற்றுப்படி, மனிதனின் ஆழ்மனதில் அனைத்து நினைவுகளும் அனுபவங்களும் பூட்டிவைக்கப்பட்டிருக்கின்றன. பலவகையில் வேறுபட்ட அனைத்து சமூகங்களுக்கும் குறியீடுகள், கனவுகளில் ஒற்றுமை இருக்கிறது. அவரின் கொள்கைப்படி, ஆழ்மனதில் உள்ள எண்ணங்கள் நாம் கற்றுத் தேர்ந்தவைகள் அல்ல. எப்படியோ அவைகள் நமது மூளையில் பரம்பரையாக பதியப்பட்டுள்ளன. வழிவழியாகத் தொடரும் பழக்கவழக்கங்களை நம்பாமல் தனிப்பட்ட நோக்கங்களைக் கொண்டு புதிய கோணங்களில் அவை பரிமளிக்கின்றன.

ஆனால் கேத்தரினுடைய நினைவுகள் ஒவ்வொன்றும், அவளுடைய சொந்த அனுபவங்களாகவே இருந்தது. அவளுடைய நினைவுகள் எந்தவிதமான தனிப்பட்ட நோக்கமின்றியும், எந்தவித குறியீடுகள் இல்லாமலும், அனைவருக்கும் பொதுவானதாக இல்லாமலும் இருந்தது. அவள் குறிப்பிடத்தக்கவகையில் ஆட்களையும், இடங்களையும் பற்றிய நுணுக்கமான விவரங்களை அளித்தாள். எனவே, இங்கு டாக்டர் ஜங், பொதுவில் கூறும் கொள்கைகள் மிகவும் தெளிவற்று காணப்படுகிறது. மேலும், இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட நிலையையும் இங்கு நாம் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், மறுபிறவி கொள்கை என்பதே மிகவும் ஒத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

கேத்தரின் கூறிய தகவல்கள், துல்லியமான விளக்கங்களுடன், நுணுக்கமாகவும் இருந்தது மட்டுமல்லாமல் அவளுடைய இயல்பான திறமைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அவளது தகவல்கள் ஒரு நூலைப் படித்துவிட்டு, எடுத்துரைத்துவிட்டு பிறகு மறந்துவிடுவதுபோல் சுலபமானது கிடையாது. அல்லது இளம்பிராயத்தில் கற்றுத்தேர்ந்துவிட்டு பிறகு மறந்த, ஆழ்மனதில் மட்டும் உறைந்தவிட்ட நினைவுகளும் கிடையாது.

வழிகாட்டி ஆவிகளும், அவை கூறிய அறிவுரைகளையும் பற்றி என்ன கூறமுடியும்? அந்த அறிவுரைகளும் கேத்தரின் வழியாகத்தான் வந்தன. ஆனால் கேத்தரினுடைய எண்ணங்களோ, அனுபவங்களோ கிடையாது. கேத்தரின் கற்றுத்தேர்ந்த திறமைகளும் அவள் நினைவில் தேங்கியிருந்தது. வெண்ணெய் கடைவது எப்படி, போன்ற செயல்களும் அதில் பிரதிபலித்தது. அவள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைகள் என்று என்னால் உணர முடிந்தது.

பல வருடங்களாக மக்களின் மனதைப் பற்றி ஆராய்வதாலும் அவர்களது நினைவுகள், எண்ணங்கள், மனோபாவங்கள், செயல்பாடுகள் குறித்து ஆராய்ச்சிகள் செய்வதாலும் மட்டுமல்லாமல், எனக்குள் இருக்கும் என் உள்ளுணர்வு எனக்கு இதனை உண்மையென உணர்த்துகிறது. என்னுடைய தந்தை மற்றும் மகன் வரவுக்கு முன்பே நான் உண்மைகளை உணர ஆரம்பித்துவிட்டேன். வருடக்கணக்கில் நான் பெற்ற அறிவியல் வழிமுறைகள், நடப்பவை உண்மையென்று எனக்கு எடுத்துரைக்கின்றன. என் உள்ளம், உயிர், நரம்பு, நாடி அனைத்துக்கும் இவை தெரியும்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top