பிறவி மர்மங்கள் – முகவுரை
“Many Lives Many Masters” – உண்மை நிகழ்வுகள் மட்டுமே கொண்ட ஒரு நூல். DR.Brian Weiss – என்ற பெயருடைய மன நல மருத்துவர் 1988-ல் எழுதி வெளிவந்தது. என்னால் முடிந்தவரை மொழி பெயர்க்க முயற்சி செய்கிறேன். இனி புத்தகத்திற்கு செல்வோம்.
முகவுரை
நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதாவது ஒரு காரணம் உண்டென்பது எனக்குத் தெரியும். ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்தால் அது ஏன் நடக்கிறது, பிறகு என்ன நடக்க போகிறது என்பதை புரிந்து கொள்ளும் அறிவு நமக்கு இல்லை. காலமும் பொறுமையும்தான் அதற்கான பதிலை தரமுடியும்.
அவள் பெயர் கேதரின். 1980-ல் முதன்முதலாக கேதரினை நான் சந்தித்தேன். அப்பொழுது அவளுக்கு வயது இருபத்தேழு. பதற்றம், தேவையில்லாத பயம், பதற்றத்தினால் மூச்சுத்திணறல், தலைசுற்றல், இது போன்ற பிரச்சனைகளுக்காக என் கிளினிக்கு வந்தாள். சின்ன குழந்தையிலிருந்தே இந்த பிரச்சனைகள் இருந்தாலும், கொஞ்ச காலமாக பிரச்சனை அதிகரித்தால் என் கிளினிக்கு வந்தாள். அதிக மனச்சோர்வுக்கு ஆளாகி இருப்பதும், பயந்து இருப்பதும் பார்ப்பதற்கு நன்றாகவே தெரிந்தது. அதிக மனத்தளர்ச்சியில் அனுதின வேலைகளை செய்வது கூட கடினமாக இருக்கிற நிலையில் என் கிளினிக்கு வந்தாள்.
ஆனால் அந்த நாட்களில் என் வாழ்க்கை அவள் வாழ்க்கைக்கு எதிர்மறையாக தெளிந்த நீரோடை போல இருந்தது. நிம்மதியான குடும்ப வாழ்க்கை, அழகான இரு குழந்தைகள், ஏறுமுகத்தில் தொழில். ஒரு கொடுப்பினையான வாழ்க்கை.
பிறந்தது முதல் என் வாழ்க்கை ஒரு சரியான பாதையிலேயே இருந்தது. அன்பான குடும்பம், சுலபமாக படிப்பில் நல்ல மதிப்பெண் பெறும் திறமை எல்லாம் இருந்தது. பட்டப்படிப்பில் மனநல மருத்துவம் படிக்க முடிவு எடுத்தேன். 1966-ல் கொலம்பியா யுனிவர்சிடியில் முதல் பட்டம் வாங்கினேன். அதன் பிறகு Yale University School of Medicine ல், நான் M.D படிப்பை முடித்தேன். New York University-Bellevue Medical Centre ல், house surgeon முடித்துவிட்டு, Psychiatry அனுபவ பயிற்சிக்கு Yale University திரும்பினேன். அதை முடித்து விட்டு University of Pittsburgh- ல் faculty ஆக சேர்ந்தேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு, University of Miami – ல் psychopharmacology division – க்கு தலைமை பதவியில் சேர்ந்தேன். அங்குதான் எனக்கு biological psychiatry and substance abuse – பிரிவில் தேசிய அங்கீகாரம் கிடைத்தது.
நான்கு வருடங்களுக்கு பிறகு மியாமி பல்கலைகழக மருத்துவமனையில், மனநல பிரிவுக்கு தலைமை பதவியேற்றேன். அந்த காலகட்டத்தில் முப்பத்தியேழு ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு இருந்தேன்.
தொடர்ந்து ஆராய்ச்சி பிரிவிலும், மன நல பிரிவிலும் – வேலை,படிப்பு இரண்டிலும் ஈடுபட்டதால், எனக்கு ஒரு நல்ல மருத்துவராகவும் அதே சமயத்தில் ஆராய்ச்சி மனப்பாங்கோடு பிரச்சனைகளை அணுகுவதும் இயல்பாகவே அமைந்திருந்தது. அதனால் ஆதாரமில்லாத கொள்கைகள்,ஆதாரமில்லாத தத்துவங்கள் எதனையும் என் மனது ஒத்துக்கொள்ள முடியாத நிலை இருந்தது. அந்த காலத்தில் parapsychology (மனித மனதுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் பற்றியது) பிரிவில் நிறைய ஆராய்ச்சிகள் பெரிய பல்கலைகழகங்களில் நடந்தது எனக்கு தெரியும். அப்பொழுது அதனை ஒரு பொருட்டாக நான் மதித்ததில்லை.
இந்த காலகட்டத்தில்தான் கேத்தரினை நான் சந்தித்தேன்.கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்கள் வழக்கமாக அனுசரிக்கும் ஆலோசனை முறை, சிகிச்சைகளை அவளுக்கு வழங்கினேன். அது எதுவும் பலனளிக்காத்தால் ஹிப்னடைஸ் செய்து குணப்படுத்த முயற்சி செய்தேன். அப்பொழுது கேத்தரின் அவளுடைய முற்பிறப்பில் நடந்த நிகழ்ச்சிகளினால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன்.
ஹிப்னடைஸ் பண்ணும்போது தேவதைகளின் தொடர்பு கொண்டு அவளால் முற்பிறவிக்கும் இப்பிறவிக்கும் இடையில் ஒரு நல்ல பாலமாக, ஒரு தொடர்பு கருவியாக செயல்பட ஆரம்பித்தாள். அதனால் இறப்புக்கும்,பிறப்புக்கும் உள்ள ரகசியங்கள் எனக்கு புரிய ஆரம்பித்தன. அவளுடைய இறப்புக்கும்,பிறப்புக்கும் முந்தைய பிறவிகளுக்கும் உள்ள ரகசியங்களை, அவள் ஹிப்னடைஸுக்கு உள்ளாகி இருக்கும்பொழுது அறிந்து கொண்டேன். அதன் பிறகு மிகவும் குறுகிய காலத்தில், சில மாதங்களில் அவளது உபாதைகள் குறைய ஆரம்பித்தன. அவளது வாழ்க்கை நிம்மதியாகவும்,முன்பை விட இன்பமாகவும் ஆகியிருந்தது.
நான் செய்த ஆராய்ச்சிகளோ, படித்த படிப்போ என்னை இந்த விதமான ஒரு அனுபவத்துக்குத் தயார் செய்யவில்லை. நடந்த நிகழ்ச்சிகளால் நான் பேராச்சரியத்துக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகியிருந்தேன்.
நடந்த நிகழ்ச்சிகளுக்கு விஞ்ஞான பூர்வமாகவோ, தர்க்க ரீதியாகவோ என்னால் எந்தவிதமான விளக்கங்களையும் கொடுக்க முடியவில்லை. மனித இதயம்,நம் விளக்க எல்லைகளுக்கு அப்பாற்பட்டதென்பதை உணர ஆரம்பித்தேன். ஹிப்னாடிஸ மயக்கத்தில் கேத்தரின் தன்னுடைய மனதில் உறங்கியிருக்கும் முற்பிறவி நினைவுகளை தட்டி எழுப்ப முடிந்தது. Psychoanalyst, Carl Jung சொன்னதுபோல், ஆழ்மனதில் உறங்கி கிடக்கக்கூடிய அனைத்து விவரங்களையும் அவளால் தொட முடிந்தது.
அறிவியலாளர்கள் இதற்கான காரணங்களை கண்டறிய முயற்சி செய்தார்கள். சமூகம் – ஆவி, மறுபிறவி, இறப்புக்குப் பிறகு மனிதனின் நிலை, இந்த பிறவியில் முற்பிறவியின் தாக்கம், போன்ற துறைகளில் செய்யக்கூடிய ஆராய்ச்சிகளினால் நல்ல பயனை அடைய வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் மனநல மருத்துவம், தத்துவம், இறையியல் போன்ற துறைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
இருந்தபோதிலும் அறிவியல் துணையுடன் கூடிய ஆராய்ச்சிகள் இந்த துறைகளில் இன்னும் துவக்க நிலையில்தான் உள்ளது. இந்த துறைகளில் ஆராய்ச்சிகள் செய்ய நல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், ஆராய்ச்சிகள் ஒரு எல்லையை தாண்ட முடியாத நிலைமையில்தான் உள்ளது. சாதாரண மக்களிடமிருந்தும், அறிவியலாளர்களிடமிருந்தும் வரும் எதிர்ப்புகள்தான் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம்.
மாற்றங்களுக்கும், புது எண்ணங்களுக்கும் எதிர்ப்புகள் இல்லாமல் இருந்ததாக சரித்திரம் கிடையாது, கலிலியோ ஜூபிடரை கண்டுபிடித்தபொழுது அவருக்கு எதிர்ப்புதான் இருந்தது. அப்பொழுது இருந்த அறிவியலாளர்கள் யாரும் அவருக்கு ஆதரவு தரவில்லை. அவர்களின் மனதில் பதிர்ந்திருந்த நம்பிக்கைகள்,கொள்கைகள் கலிலியோவின் கருத்துக்கு இடமளிக்கவில்லை.
இப்பொழுது உள்ள மனநலமருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தங்களது கொள்கைகளையும்’ நம்பிக்கைகளையும் விட்டு வெளிவந்து இது சம்பந்தமாக உள்ள ஆதாரங்களை முறையான ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். ஆனால் அந்த நாள் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை. பிறப்பு, மறுபிறப்பு, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை போன்ற ஆராய்ச்சிகளுக்கு இந்த புத்தகம் எனது சிறிய பங்களிப்பு.
இந்த புத்தகத்தில் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கற்பனையில்லாத உண்மை. மீண்டும் மீண்டும் நேரும் நிகழ்ச்சிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களின் அடையாளம் மாற்றப்பட்டுள்ளன. இந்த புத்தகம் எழுத எனக்கு நான்கு வருட அவகாசம் தேவைப்பட்டது. எனது படிப்புக்கும்,அறிவியலுக்கும் ஒத்து வராத இந்த கருத்துக்களை சொல்லக்கூடிய தைரியம் வர நான்கு வருடங்கள் தேவைப்பட்டது.
ஒரு நாள் இரவு குளித்துக்கொண்டிருக்கும்பொழுது என்னுடைய அனுபவங்களை எழுதி ஆவணப்படுத்த வேண்டுமென்று கட்டுப்படுத்த முடியாத உணர்வு தோன்றியது. என்னுடைய அனுபவங்களை சொல்ல வேண்டிய சரியான தருணம் வந்து விட்டதாக ஆணித்தரமாக நம்பினேன். இனிமேலும் என்னுடைய அனுபவங்களை மனதிற்குள் பூட்டி வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதே சமயத்தில் என்னுடைய அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமுள்ளது.
கேத்தரின் வழியாக என் அறிவுக்கு தெரிய வந்த விஷயங்கள் என் வழியாக உலகுக்கு தெரிய வேண்டும். குளியல் அறையிலிருந்து வந்த பிறகு கேத்தரின் சம்பந்தப்பட்ட அனைத்து ஆடியோ கேசட்டுக்களுடன் என்னுடைய மேசையில் அமர்ந்தேன். நள்ளிரவுக்குப் பிறகு என் தாத்தாவின் ஞாபகம் வந்தது. எனக்கு பதின்ம வயதிருக்கும்போது என் தாத்தா இறந்து விட்டார். அவர் ஹங்கேரியிலிருந்து வந்தவர்.அவர்தான் எனக்குத் தேவைப்படும்போது தைரியமூட்டுவார். அந்த நடுஇரவில் என் தாத்தா இந்த புத்தகம் எழுதச்சொல்லி தைரியமூட்டுவதை நான் உணர்ந்தேன்.
தொடரும்…